அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான ‘நியூ ஸ்டார்ட்’ (New START) ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிந்துவிட்டது. -ரோஷ்னி யாதவ்

 அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்களின் போர்த்திறன் சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை ஏவும் கருவிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட 'புதிய உத்திமுறைஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்' (New Strategic Arms Reduction Treaty (New START)) தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடைமுறையில் இருந்த கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இதுவே ஆகும். இந்தச் சூழ்நிலையில், இந்த ஒப்பந்தத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.




முக்கிய அம்சங்கள்:


1. START என்பது 'உத்திமுறை ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தின்' (Strategic Arms Reduction Treaty (START-I)) சுருக்கமாகும். இது 1991-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கும் (United States of Soviet Russia (USSR)) இடையே கையெழுத்தானது. பின்னர், 1994-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 


2. இரு நாடுகளும் வைத்திருக்க வேண்டிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 6,000-ஆகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் (Intercontinental Ballistic Missiles (ICBMs)) எண்ணிக்கையை 1,600-ஆகவும் கட்டுப்படுத்திய ஸ்டார்ட்-I (START-I) ஒப்பந்தம் 2009-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு, முதலில் உத்திமுறை தாக்குதல் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமும் (Strategic Offensive Reductions Treaty (SORT)) (மாஸ்கோ ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது), அதன் பின்னர் ‘New START’ ஒப்பந்தமும் நடைமுறைக்கு வந்தன.


3. அதிகாரப்பூர்வமாக 'உத்திமுறைத் தாக்குதல் ஆயுதங்களைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் நியூ ஸ்டார்ட் (New START) ஒப்பந்தம், பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.


4. இரு நாடுகளும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி, 2018-ஆம் ஆண்டுக்குள், முக்கிய போர் ஆயுதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. மேலும், அந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரை அந்தக் கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளேயே செயல்படவும் ஒப்புக்கொண்டன. பின்னர், அமெரிக்காவும் ரஷ்யக் கூட்டமைப்பும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டன. 


5. அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள நியூ ஸ்டார்ட் (New START) ஒப்பந்தப் பக்கத்தின்படி, அமெரிக்காவும் ரஷ்யாவும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி, 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அந்த ஒப்பந்தத்தின் முக்கியக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:


* கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Intercontinental Ballistic Missiles (ICBMs)), நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் (submarine-launched ballistic missiles (SLBMs)) மற்றும் அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் கனரகப் போர் விமானங்கள் என மொத்தம் 700 தயார் நிலையில் இருக்கலாம். 

* தயார் நிலையில் உள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் (SLBMs) மற்றும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய கனரக போர் விமானங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 1,550-ஆக இருக்க வேண்டும். (இதில் ஒவ்வொரு கனரக போர் விமானமும் ஒரு அணு ஆயுதமாகவே கணக்கிடப்படும்).


* அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய நிலையில் தயார் நிலையில் உள்ள மற்றும் தயார் நிலையில் இல்லாத 800 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளங்கள் (ICBM launchers), நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை ஏவுதளங்கள் (SLBM launchers) மற்றும் கனரக போர் விமானங்கள் ஆகியன இருக்கலாம் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


6. குறிப்பாக, இந்த ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. மிக சமீபத்தில் 2023-ஆம் ஆண்டில், உக்ரைன் போருக்கு மத்தியில் 'நியூ ஸ்டார்ட்' (New START) ஒப்பந்தத்தின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுப் பணிகளை ரஷ்யா நிறுத்தி வைத்தது, மேலும், கடந்த செப்டம்பர் மாதம், இந்த ஒப்பந்தத்தை ஓராண்டு காலத்திற்குத்  நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்தார்.


7. "உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், 'நியூ ஸ்டார்ட்' (New START) ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்த மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்கின்றனர். 



அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்


1. 1968-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு, 1970-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்த சர்வதேச ஒப்பந்தமானது, அணு ஆயுதங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் பரவுவதைத் தடுப்பதையும், அணுசக்தியை சரியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அணு ஆயுதக் குறைப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. இந்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 1967-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே அணு ஆயுதத்தையோ அல்லது அணு ஆயுதக் கருவிகளைத் தயாரித்து, அதனை வெடித்துச் சோதித்த ஒரு நாடுதான்' அணுசக்தி நாடாக (Nuclear State) வரையறுக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் (தற்போதைய ரஷ்யா) மற்றும் சீனா ஆகியவையே அணு சக்தி நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. 


3. இந்த ஒப்பந்தத்தில் இதுவரை 191 நாடுகள் இணைந்துள்ளன. இந்தியா 1974-ஆம் ஆண்டில் தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. மாறாக, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் 'அனைவருக்கும் சமமான விதிமுறை' இருக்க வேண்டும் என்ற கொள்கையையே இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்குவதாலும், அவர்களுக்குச் சாதகமாக ஒரு குறிப்பிட்ட தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்திருப்பதாலும், இந்த ஒப்பந்தம் ஒரு 'பாரபட்சமான'  ஒப்பந்தம் என்று விமர்சிக்கப்படுகிறது.




Share: