இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்ட நெறிமுறைகளின் வீழ்ச்சி -ஃபைசான் முஸ்தபா, ஆஷாங்க் திவைவேதி

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை வலுவிழக்கச் செய்வதற்கு, உயர்நீதிமன்றங்கள் துணை போவதாகத் தெரிகிறது.


ஆரவல்லி மலைத்தொடர் முதல் சதுப்புநிலக் காடுகள் (Mangroves) வரை, இந்தியா இன்று ஒரு தார்மீகச் சவாலை எதிர்கொள்கிறது. அமிதவ் கோஷின் 'The Hungry Tide’ நாவலில் வருவது போல: 'சட்டங்கள் எதை உதாசீனப்படுத்துகிறதோ, அதை இயற்கை நினைவில் வைத்திருக்கும்.' வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழல் நீதி தொடர்ந்து பலவீனமடைந்தால், சுற்றுச்சூழல் அழிவிற்கு நமது அரசியலமைப்புச் சட்டம் ஒரு மௌன சாட்சியாக மட்டுமே இருக்க நேரிடும் என்றும் அதன் விளைவுகள் பின்னாளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 


டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு, நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கான விதி மாற்றப்பட்டது. அதன்படி, இனி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment (EIA)) அறிக்கை பெறுவதற்கு முன்னதாகவே நிலத்தைக் கையகப்படுத்த முடியும். மேலும், திட்டத்தின் இருப்பிடம் அல்லது அதன் அளவு குறித்த தெளிவான விவரங்கள் இல்லாமலேயே அந்த மதிப்பீட்டைச் செய்ய முடியும். அதேசமயம், 'வனசக்தி Vs இந்திய ஒன்றியம்' (Vanashakti vs Union of India) வழக்கில் 2025-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை தளர்த்தியுள்ளது. இதற்கு முந்தைய தீர்ப்பானது, முறையான அனுமதியின்றி தொடங்கப்பட்ட திட்டங்களுக்குப் பின்னாளில் அனுமதி வழங்குவதை தடை செய்திருந்தது. ஆனால், அடுத்த ஐந்து மாதங்களுக்குள், அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு அந்தத் தீர்ப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.


மலைகள் முதல் சதுப்புநிலக் காடுகள் வரை


சமீபத்திய நிகழ்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மெதுவான ஆனால் நிலையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து (Suo motu) நடவடிக்கை எடுத்து, அந்த சர்ச்சைக்கரிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். இது நீதிமன்றத்தின் நற்பெயரைக் காக்க உதவியது. இருப்பினும், ஆரவல்லி மலைத்தொடர் குறித்த விவாதம் என்பது வெறும் வரையறைகள் சார்ந்த தொழில்நுட்ப ரீதியான சிக்கல் மட்டுமல்ல என்றும் இது வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் அரசின் அரசியலமைப்பு கடமைகள் ஆகியவை எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதில் ஏற்பட்டுள்ள ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 


அதேபோல், மகாராஷ்டிராவின் ராய்காட்டில் அதானி சிமெண்டேஷன் (Adani Cementation Limited) நிறுவனத்திற்காக 158 சதுப்புநிலக் காடுகளை (Mangroves) அழிப்பதற்கு நீதிமன்றம் அளித்த அனுமதி மற்றும் இமயமலையில் உள்ள சார் தாம் (Char Dham) நெடுஞ்சாலை போன்ற சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய திட்டங்கள் ஒரு ஆபத்தான போக்கைக் காட்டுகின்றன. பெருநிறுவனங்களுடன் அரசாங்கம் நெருக்கமான உறவு வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியமாக இருந்தாலும், அந்த நெருக்கத்தினால் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மேலும் சீரழிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் (Economic Survey) தனியார் துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.


வடமேற்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் முதுகெலும்பாகக் கருதப்படும் ஆரவல்லி மலைத்தொடர், பாலைவனமாதலைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைப் பெருக்குவதிலும், உள்ளூர் காலநிலையைச் சீராக்குவதிலும் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நீதிமன்றமே இதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. எம்.சி. மேத்தா vs இந்திய ஒன்றியம் (2004) (M.C. Mehta vs Union of India (2004)) என்ற வழக்கில், ஆரவல்லி பகுதியில் சுரங்கத் தொழிலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.


2010-ஆம் ஆண்டு வரையிலான பிந்தைய நீதிமன்ற உத்தரவுகள், முறைப்படுத்தப்படாத சுரங்கத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அங்கீகரித்தன. மேலும், ஆரவல்லி மலைத்தொடரை வெறும் அதன் உயரத்தை மட்டும் வைத்து வரையறுக்கும் முயற்சிகளையும் நீதிமன்றம் நிராகரித்தது. குறிப்பாக, 100 மீட்டருக்கு மேல் உயரமாக உள்ள நிலப்பகுதிகள் மட்டுமே அந்த மலைத்தொடரின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும் என்ற வரையறைக்கான முன்மொழிவையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


சட்டத்தை மிகத் தீவிரமாக (நேரடியாக) அப்படியே பின்பற்றினால், சூழலியல்ரீதியாக முக்கியமான பல நிலப்பரப்புகள் விடுபட்டுப்போகும் என்றும், அது சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கே முரணாகிவிடும் என்றும் நீதிமன்றம் கருதியது. இதனால்தான், 2010-ஆம் ஆண்டில் சூழலியல் காரணங்களுக்காக '100 மீட்டர் விதி' ரத்து செய்யப்பட்டது. குறைந்த உயரமுள்ள மலைகளும் மலைத்தொடர்களும் வறண்ட நிலப்பகுதிகளில் நிலத்தடி நீரையும் மண்ணையும் பாதுகாக்க உதவுகின்றன. ஆரவல்லி மலைத்தொடர் என்பது தனித்தனியான சிகரங்கள் அல்ல, அவை ஒன்றோடொன்று இணைந்த ஒரு நிலப்பரப்பு அமைப்பாகும். இருப்பினும், சமீபத்திய 'உயரத்தை அடிப்படையாகக் கொண்ட வரைமுறை', நீர்நிலைகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலியல் தொடர்புகள் போன்ற முக்கிய காரணிகளைப் புறக்கணிக்கிறது. இத்தகைய குறுகிய பார்வையைத் தவிர்க்க, 'வேலூர் குடிமக்கள் நல மன்றம் மற்றும் இந்திய ஒன்றியம்' (1996) (Vellore Citizens’ Welfare Forum vs Union of India (1996)) வழக்கில், நீதிமன்றம் 'தற்காப்பு முன்னெச்சரிக்கை கொள்கையை' பின்பற்றியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எந்தவொரு செயற்கையான எல்லைகளையும் ஏற்க மறுத்துவிட்டது.


ஆனால், ஆரவல்லி மலைத்தொடர் வரையறை குறித்த வழக்கு (2025) (In Re: Issue Relating to Definition of Aravalli Hills and Ranges (2025)) என்பதில், உச்சநீதிமன்றம் 100 மீட்டர் உயரத்தை ஒரு எல்லையாக ஏற்றுக்கொண்டது. 2010-ஆம் ஆண்டு நீதிமன்றம் எடுத்திருந்த முடிவிலிருந்து இந்த முடிவு மாறுபட்டதாகும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள நிலப்பகுதியை மட்டும் பாதுகாப்பதன் மூலம், ஆரவல்லி மலையின் பெரும் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பூர்வ பாதுகாப்பை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த மாற்றமானது கடுமையான அரசியலமைப்பு ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். 


இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவுடன் தொடர்புடைய 'சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கான உரிமை' என்பது இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பாடுபட வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு 48A, சட்ட விளக்கங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு அனுமதி அளிக்கும்போது அர்த்தமற்றதாகிவிடுகிறது. அதே நேரத்தில், பசு வதை (பிரிவு 48) மற்றும் பொது சிவில் சட்டம் (பிரிவு 44) போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். 


வெறும் உயரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிலத்தைப் பாதுகாப்பது என்பது, சூழலியல் இலக்குகளோடு தொடர்பில்லாத ஒரு பிரிவினையை உருவாக்குகிறது. உயரமான மலைகளை மட்டும் பாதுகாத்துவிட்டு, அதைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேதமடைய அனுமதிக்கும் இந்தச் சட்ட விளக்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின் மையக்கருவான 'தன்னிச்சையாகச் செயல்படாமை'' (Non-arbitrariness) எனும் கொள்கையை மீறுவதாகக் கூறப்படுகிறது. 


மென்மையான போக்கு


சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் ஆரவல்லி மலைத்தொடரில் மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, 'பாதிப்புகளைக் குறைப்போம்' என்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நீதிமன்றங்களும் ஒழுங்குமுறை அமைப்புகளும் அனுமதி அளித்து வருகின்றன. இந்த நிலைமை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) நடைமுறைகள் சிதைக்கப்படுவதிலும், நீதிமன்ற எச்சரிக்கைகளுக்குப் பின்னரும் விதிமீறல்களுக்குப் பிந்தைய கால அனுமதி வழங்கப்படுவதிலும் தெளிவாகத் தெரிகிறது. 'காமன் காஸ் vs இந்திய ஒன்றியம்' (2017) (Common Cause vs Union of India (2017)) வழக்கின்போது, சட்டவிரோதச் சுரங்கப் பணிகளையும் சுற்றுச்சூழல் மீறல்களையும் பின்னாளில் முறைப்படுத்த முடியாது என்றும், சுற்றுச்சூழல் சட்டம் என்பது தவறு செய்பவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. இருப்பினும், நடைமுறைத் தவறுகள் குறித்துப் பிற்காலத்தில் நீதிமன்றங்கள் காட்டிய மென்மையான போக்கு, இந்தப் பாதுகாப்புக் கொள்கையை வலுவிழக்கச் செய்துவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். 


இந்த விதிமுறைகளின் தளர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் கடலோர நகர்ப்புறங்களில், குறிப்பாக மும்பையின் சதுப்புநிலக் காடுகளில் (Mangroves) தெளிவாகத் தெரிகின்றன. சதுப்புநிலக் காடுகள் என்பவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, கார்பனைச் சேமிப்பது மற்றும் பல்லுயிர்களைக் காப்பது போன்ற பணிகளைச் செய்யும் ஒரு சிக்கலான உயிர்ச்சூழல் மண்டலமாகும். இவை புயல் மற்றும் கடல் சீற்றங்களிலிருந்தும் நிலத்தைப் பாதுகாக்கின்றன. இருப்பினும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சுமார் 34,000 சதுப்புநில மரங்களை வெட்டவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளன. 'ஈடுசெய்யும் காடு வளர்ப்பு' (Compensatory afforestation) என்ற வாக்குறுதியை நம்பி இத்தகைய அழிவை அனுமதிப்பது, சூழலியல் அறிவியலையும் அரசியலமைப்பு கடமையையும் புறக்கணிப்பதாகக் கருதப்படுகிறது. முழுமையாக வளர்ந்த சதுப்புநிலக் காடுகள் உருவாவதற்குப் பல ஆண்டு காலங்கள் ஆகும் என்றும்  அவற்றை வேறொரு இடத்தில் மரம் நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை  ஈடுசெய்துவிட முடியாது என்றும் எச்சரிக்கின்றனர். 


மற்றொரு உதாரணம், உத்தரகாண்டில் உள்ள 'சார் தாம்' (Char Dham) நெடுஞ்சாலைத் திட்டமாகும். ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இந்தச் சாலை அமையும் பாதையில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள 811 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இமயமலைப் பகுதியின் சூழலியல் மிகவும் பலவீனமானது. எனவே, அங்கு பெரிய அளவில் சாலைகளை அகலப்படுத்துவது நிலச்சரிவுகளுக்கும், ஆறுகளின் வழித்தடம் மாறுவதற்கும் வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


சிட்டிசன்ஸ் ஃபார் கிரீன் டூன் vs இந்திய ஒன்றியம் (2021) (Citizens for Green Doon vs Union of India (2021)) வழக்கின் தீர்ப்பில், அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை நீதிமன்றம் அங்கீகரித்தது. இருப்பினும், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சாலைகளை விரிவுபடுத்த அனுமதி அளித்தது. உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இந்த 'சமநிலைப்படுத்தும் நடவடிக்கை' குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. தற்போதைய உட்கட்டமைப்பு விரிவாக்கத்தின் விளைவுகள் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்றும் குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 48A மற்றும் பிரிவு 51A(g) ஆகியவற்றின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரசாங்கம் மற்றும் குடிமக்களின் கடமை என்பதை இது தெளிவுபடுத்துகிறது.


ஆதிக்கம் செலுத்துவோரும் சமத்துவமின்மை குறித்த சிக்கல்களும்


சுரங்கம், நெடுஞ்சாலைகள் அல்லது நகர மறுசீரமைப்பு போன்ற பெருநிறுவன மற்றும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி, பெரும்பாலும் மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது. பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டாலும், அவை மிகச் சுருக்கமாகவே முடிக்கப்படுகின்றன; மக்களின் எதிர்ப்புகள் வெறும் தடைகளாகவே பார்க்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றுவது என்பது வெறும் சடங்காக மாறிப்போகிறது. இது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்துப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. பொருளாதார ரீதியாகப் பலம் வாய்ந்தவர்களுக்கு அதிகச் சலுகைகள் கிடைக்கும்போது, சுற்றுச்சூழல் நிர்வாகத்தின்மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைகிறது. இது அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள சமத்துவத்தையே சிதைப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். 


இத்தகைய சூழலில் நீதித்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. பொதுவாக, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அரசியலமைப்பின் விளக்கங்களை விரிவுபடுத்துவதன் மூலம், நீதிமன்றங்கள் சுற்றுச்சூழல் உரிமைகளைப் பாதுகாத்து வந்துள்ளன. எம்.சி. மேத்தா vs கமல்நாத் (1996) (M.C. Mehta vs Kamal Nath (1996)) வழக்கில், இயற்கை வளங்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை என்றாலும், அவை மக்களின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்ட ‘பொது அறக்கட்டளை’ (போன்றது என்றும், அவற்றை ஒருபோதும் தனிநபர்கள் தங்கள் சுயலாபத்திற்காகச் சுரண்ட முடியாது என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. சுற்றுச்சூழல் சீரழிவிற்கு வழிவகுக்கும் முடிவுகளுக்கு நீதிமன்றங்களே ஒப்புதல் அளிப்பது, அவை தங்களின் சொந்தக் கொள்கைகளையே மீறுவதாகும். உச்சநீதிமன்றத்தின் 'பசுமை அமர்வு' வழக்கமாகச் செயல்பட வேண்டும். அதே போன்ற அமர்வுகள் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். தொழில் தொடங்குவதை எளிதாக்குவது என்பது, சுற்றுச்சூழலை அழிப்பதை எளிதாக்குவதாக அமைந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர். 


ஃபைசான் முஸ்தபா, ஒரு சட்ட அறிஞர் மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார். ஆஷாங்க் திவேதி, சோனிப்பட்டில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக உள்ளார்.



Share: