இந்தியாவின் பெண் விவசாயிகளுக்கான உரிமைகள், நீதி மற்றும் செயல்பாடுகள் -சௌமியா சுவாமிநாதன், எலிசபெத் ஃபௌர்

 இந்தியாவில் விவசாயம் என்பது அதிகளவில் பெண்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதால், பெண் விவசாயிகளைத் தகுதியுடையவர்களாக மாற்றுவது, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, பல்லுயிர் பெருக்கம் மிக்க மற்றும் ஊட்டச்சத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விவசாய முறைகளை மேம்படுத்த உதவும் என்கின்றனர். 


வருகின்ற மார்ச் மாதம் 8-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்குரிய சம உரிமைகளைக் கோரியும், அந்த உரிமைகளைச் செயல்படுத்தவும், பயன்படுத்தவும் மற்றும் அனுபவிக்கவும் தேவையான சமமான நீதியை வலியுறுத்தியும் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட உள்ளனர். இந்த ஆண்டின் மகளிர் தினக் கருப்பொருள், 2026-ஆம் ஆண்டினை 'சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு' (International Year of the Woman Farmer 2026) என அனுசரிப்பதோடு நெருங்கிய தொடர்புடையதாக அமைந்துள்ளது.


பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்குவது போன்ற சட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், நடைமுறையில் அவை பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான கிராமப்புறக் குடும்பங்களில், நிலமும் சொத்துக்களும் இன்றும் ஆண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்படுகின்றன. சமூகக் கட்டுப்பாடுகள், தந்தைவழி வாரிசு உரிமை முறை, போதிய சட்ட விழிப்புணர்வு இன்மை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் போன்ற காரணங்களால் பெண்களின் பெயர்கள் நிலப் பதிவேடுகளில் இடம்பெறுவதில்லை. இதன் விளைவாக, அன்றாட விவசாயப் பணிகளை மேற்கொண்டு, அதற்கான உள்ளீட்டுப் பொருட்கள் வழங்குவோர் மற்றும் தொழிலாளர்களை நிர்வகிக்கும் பெண்கள், நில உரிமை வழங்கும் சட்டப்பூர்வ அதிகாரம் ஏதுமின்றியே அந்தப் பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.


நில உரிமைப் பத்திரங்களோ அல்லது விவசாயிகளுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரமோ இல்லாத காரணத்தால், வங்கி உரிமம், பயிர் காப்பீடு, பாசனத் திட்டங்கள், வேளாண் விரிவாக்க சேவைகள், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட பல அரசுத் திட்டங்களைப் பெறுவதில் பெண்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தகுதியானது ஒருவரிடம் உள்ள சொத்துகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்போது, அந்தச் சொத்துகள் சொந்தமாக இல்லாத பெண்களுக்கு அத்திட்டங்களின் பலன்கள் கிடைக்காமல் போவது என்பது இந்த அமைப்பின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.


சமூக, சட்ட மற்றும் கலாச்சாரக் காரணங்களால் விளைநிலங்கள் மீதான பெண்களின் அணுகுமுறையும் கட்டுப்பாடும் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் அவர்களின் உழைப்பும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படாமலும் குறைத்து மதிப்பிடப்பட்டும் இருக்கின்றன. விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தபோதிலும், அவர்கள் முறையாக "விவசாயிகள்" என்று அங்கீகரிக்கப்படாத இந்த இடைவெளி, அவர்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அடிப்படை மற்றும் கட்டமைப்புக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.


வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற வேளாண்மையில் பெண்களின் பங்களிப்பு 


ஆண்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு இடம்பெயர்வதால், விவசாயம் என்பது அதிகளவில் "பெண்மயமாக்கப்பட்டு" (Feminised) வருகிறது. பயிர் சாகுபடி, இடர் மேலாண்மை மற்றும் குடும்பத்திற்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றில் பெண்கள் முன்பைவிட அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர். இந்த கூடுதல் பொறுப்பு பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த உதவும் என்று கருதப்பட்டாலும், நடைமுறையில் நிலைமை மாறாக உள்ளது. கடினமான விவசாயப் பணிகள், உடல் உழைப்பைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள் கிடைக்காமை மற்றும் குடும்பத்தைப் பராமரிக்கத் தேவையான ஆதரவு அமைப்பு இல்லாதது போன்றவை பெண்களைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன. இதனால் அவர்கள் விவசாய வேலைகளையும் வீட்டுப் பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

விவசாயப் பணிகளின் முக்கிய பருவகாலங்களில் அதிக பணிச்சுமையை எதிர்கொள்ளும் பெண்கள், கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கும் நுண்ஊட்டச்சத்து குறைபாட்டிற்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு இன்னும் மிக அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, குழந்தை பெறும் வயதிலுள்ள பெண்களிடையே தொடர்ந்து காணப்படும் இரத்த சோகை (Anaemia) மற்றும் பரவலான நுண்ஊட்டச்சத்து குறைபாடுகள் ஒரு அவசரநிலையை உருவாக்கியுள்ளன.


பெண்களுக்கு ஏற்படும் இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகள் அடுத்த தலைமுறையையும் நேரடியாகப் பாதிக்கின்றன. குறிப்பாக, தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்றவை குழந்தைகளுக்குப் பிறப்பின்போது எடை குறைவு, வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மந்தமான வளர்ச்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பல கிராமப்புற வீடுகளில், இன்றும் தானியங்கள் மட்டுமே உணவில் பிரதானமாக உள்ளன. பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி உணவுகள் போதிய அளவில் கிடைப்பதில்லை. இந்தத் தேசத்திற்கு உணவளிக்கும் உழைக்கும் பெண்கள், தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் தேவையான விதவிதமான மற்றும் சத்தான உணவைப் பெறுவதில் இன்றும் பெரும் சவால்களைச் சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.  


கடந்த பத்து ஆண்டுகளில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) அடிப்படையில் இந்தியா ஒரு லட்சியப்பூர்வமான உணவு உரிமை அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டமானது மானிய விலையிலான தானியங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் மகப்பேறு நலத்திட்ட உதவிகளை உறுதி செய்கிறது; மேலும், பல மாநிலங்கள் தங்களது உணவுத் திட்டங்களில் உள்ளூர் உணவுகள், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட முக்கிய உணவுப் பொருட்களைச் சேர்த்துள்ளன. இருப்பினும், பெண்களின் ஊட்டச்சத்து நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மாநிலங்களுக்கு இடையே சீரற்றதாகவே உள்ளன. குறிப்பாக, இரத்த சோகை பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைக்குரியதாகவே நீடிக்கின்றன.


உரிமைகளும் சலுகைகளும் தொடக்க நிலையிலேயே நின்றுவிடும்


சட்டத்திற்கும் நிதர்சனமான வாழ்க்கை முறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், பாலின மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட (gender-transformative) அணுகுமுறைகள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக, வேளாண்-உணவுத் திட்டங்களில் பெண்களின் நிலை மேம்பட வேண்டுமானால், சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பாலின சமத்துவமின்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது மிக முக்கியமாகும்.


பெண்களுக்குப் பாதுகாப்பான நில உரிமைகள், வளங்கள், தொழில்நுட்பம், கடன் வசதிகள் மற்றும் ஆதரவு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது, அவர்கள் விவசாய முறைகளை மேம்படுத்தவும், ஊட்டச்சத்தான உணவு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களது பங்கை வலுப்படுத்தவும் வழிவகுக்கிறது. விவசாயத்தில் பெண்களுக்கான இத்தகைய உரிமைகளை மேம்படுத்துவது, சமூகத்தில் சமநிலையை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.


பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், விவசாய-உணவுச் சங்கிலியில் பாதுகாப்பு, சாகுபடி, நுகர்வு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்திலும் பெண்களுக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இருப்பினும், நடைமுறையில் உள்ள திட்டங்கள் பெரும்பாலும் முழுமையடையாமல் இருக்கின்றன. உதாரணமாக, பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)) முக்கியமாக தானியங்களிலேயே கவனம் செலுத்துகிறது. ஆனால், பருப்பு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இதில் சீராகச் சேர்க்கப்படுவதில்லை. மேலும், பணிச்சுமை மிகுந்த முன் களப்பணியாளர்களால் திட்டத்தின் தரமும் சமூக விழிப்புணர்வும் பாதிக்கப்படுகின்றன. டிஜிட்டல் கருவிகள் ஓரளவிற்கு உதவினாலும், இணைய வசதி, முறையான ஆவணங்கள் அல்லது டிஜிட்டல் பயன்பாட்டுத் திறன் இல்லாதவர்களை ஒதுக்கிவிடுகின்றன. இதன் விளைவாக, உணவுக்கான உரிமை என்பது ஒரு வரம்பிற்குள்ளேயே நின்றுவிடுகிறது. குறிப்பாகப் பெண் விவசாயிகள் போன்ற பல பெண்கள் இந்தத் திட்டங்களை முழுமையாக அணுகவோ, கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றால் பயனடையவோ முடிவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார். 


இந்தியாவில் உள்ள எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (M.S. Swaminathan Research Foundation (MSSRF)) மற்றும் உலக உணவுத் திட்டம் (World Food Programme (WFP)) ஆகியவற்றின் கண்ணோட்டத்தில், 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் அர்த்தமுள்ளதாகவும் ஆழமானதாகவும் அமைய வேண்டுமானால், நான்கு முன்னுரிமைப் பணிகளுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்.


முதலாவதாக, பெண் வேளாண் தொழிலாளர்கள் சட்டம், தரவு மற்றும் கொள்கை ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கு பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்ட விரிவான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது அவசியமாகும். மேலும், விவசாயக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் தேசிய விவசாயிகள் கொள்கையை (National Policy for Farmers (NPF)) பின்பற்றி அமைய வேண்டும். இக்கொள்கை ஒரு வேளாண் தொழிலாளரை நில உரிமையின் அடிப்படையில் வரையறுக்காமல், அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையிலேயே வரையறுக்கிறது. இதில் பெண் நில உரிமையாளர்கள், நிலமற்ற சாகுபடியாளர்கள், குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள், பங்குதாரர்கள், பழங்குடியினர், வனப் பொருட்களைச் சேகரிப்பவர்கள் மற்றும் வேளாண் சார்ந்த பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் என அனைவரும் அடங்குவர்.


 இரண்டாவதாக, நிலம் மற்றும் நீர், கடன் போன்ற உற்பத்தி ஆதாரங்களில் பெண்களின் உரிமைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்குச் சமமான வாரிசு உரிமையை நிலைநாட்டல், கணவன்-மனைவி பெயரில் கூட்டுப் பட்டாக்களை ஊக்குவித்தல், பெண்களின் பெயரில் நிலம் மற்றும் வீடு பதிவு செய்வதை அதிகரித்தல், வருவாய்த்துறைப் பதிவுகளைப் பாலின உணர்வுடன் மாற்றுதல் மற்றும் பொது நிலங்கள் மற்றும் நீர் மேலாண்மையில் பெண்களின் பங்கை மேம்படுத்துதல் போன்றவை அவசியமாகும். மேலும், பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளுக்குள் நிலம் மற்றும் சொத்துரிமை தொடர்பான உரிமைகளை ஒருங்கிணைப்பது, அவர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது




ஊட்டச்சத்து சார்ந்த இலக்குகளை கவனத்தில் வைத்திருத்தல்


மூன்றாவதாக, உணவு முறைகளும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் ஊட்டச்சத்து இலக்குகளை அடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் விவசாயக் கொள்கைகள் மூலம் சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிப்பதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், இவை அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிக் சத்துணவுத் திட்டங்கள் மூலம் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், வீட்டுத் தோட்டம், பெண்கள் நடத்தும் விதை வங்கிகள் மற்றும் உள்ளூர் உணவுத் திட்டமிடல் போன்ற சமூக முன்னெடுப்புகள், உணவு முறையையும் விவசாய நடைமுறைகளையும் மேம்படுத்துவதில் பெண்களின் பங்கை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர். 


நான்காவதாக, பெண் விவசாயிகள் தங்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் விரிவாக்கச் சேவைகள்  தேவைப்படுகிறது. உடல் உழைப்பைக் குறைக்கும் கருவிகள் கடினமான வேலைப்பழுவைக் குறைப்பதோடு, நேரத்தைச் சேமிக்கவும் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. அதேபோல், விரிவாக்கச் சேவைகளை ஆண்களுக்கு நிகராகப் பெறுவதன் மூலம் பெண்களுக்குச் சரியான நேரத்தில் பயிற்சி, தகவல்கள் மற்றும் சந்தை அறிவு கிடைக்கின்றன. முறையான திறன்களும் கருவிகளும் இருந்தால், பயிர்த் தேர்வு, நிலையான விவசாய முறைகள் மற்றும் வளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் பெண்களால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என்றும் இது உற்பத்தித்திறன், சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் குடும்பத்தின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் ஆய்வுகள், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. பெண்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, உரிமைகள் மற்றும் முறையான ஆதரவு கிடைக்கும்போது, அவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, பல்லுயிர் பெருக்கம் கொண்ட மற்றும் சத்துணவு சார்ந்த வேளாண்மையை முன்னின்று நடத்துகிறார்கள் என்பதை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சுட்டிக்காட்டுகிறது. மேலும், உலக உணவுத் திட்டம் (WFP) இந்தியாவிலும் உலகளவிலும் மேற்கொண்டு வரும் பணிகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பெண்களை மையப்படுத்துவது, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கும் பெரும் நன்மைகளைத் தருகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.


இந்த சர்வதேச மகளிர் தினத்தில், "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமியருக்கான உரிமைகள், நீதி மற்றும் செயல்பாடு" (“Rights. Justice. Action. For All women and girls”) என்ற முழக்கம் வெறும் அடையாளமாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்றும் பெண்களை வேளாண் தொழிலாளர்களாக அங்கீகரிப்பதும், அவர்களின் நிலம் மற்றும் வளங்களுக்கான உரிமைகளை உறுதி செய்வதும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறுவதை எளிதாக்குவதும் அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும் நிறைவேறினால் மட்டுமே இந்தியா மிகவும் வலிமையான மற்றும் ஆரோக்கியமான நாடாக உருவெடுக்க முடியும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


சௌம்யா சுவாமிநாதன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும், எலிசபெத் ஃபோர், இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் இயக்குநராக உள்ளனர்.


Originala article : Rights, justice, action for India’s women farmers -Soumya Swaminathan,Elisabeth Faure

Share: