இது ஒரு அரசியல் தீர்வைக் கோருகிறது, நிர்வாக நடைமுறையை அல்ல.
அரசியல் ரீதியாக எழுந்த கடும் எதிர்ப்புக்குப் பிறகு, சண்டிகர் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் 240-வது பிரிவின்கீழ் கொண்டுவரும் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. 240-வது பிரிவானது, தங்களுக்கெனச் சொந்த சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு விதிகளை உருவாக்கும் அதிகாரங்களைக் குடியரசுத் தலைவருக்கு அளிக்கிறது. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசு அதிகப்படியாகத் தலையிட முயற்சிக்கிறதா என்ற ஒரு முக்கியமான கேள்வியை இந்த நடவடிக்கை எழுப்புகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
நவம்பர் மாதம், சட்டப்பிரிவு 240-ன் கீழ் சண்டிகரை கொண்டுவர ஒன்றிய அரசு முன்மொழிந்தது. நாடாளுமன்ற அறிக்கைகளின்படி, டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில், அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2025-ஐ அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டது. சண்டிகரின் சட்டமன்றம் கலைக்கப்பட்டாலோ அல்லது இடைநிறுத்தப்பட்டாலோ, அதை அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, மற்றும் புதுச்சேரி போன்ற சட்டமன்றம் இல்லாத பிற யூனியன் பிரதேசங்களைப் போலவே நடத்துவதே இதன் நோக்கமாகக் கருதப்படுகிறது.
பஞ்சாபிலிருந்து எதிர்வினை விரைவாகவும் தீவிரமாகவும் இருந்தது. இந்த கூட்டத்தொடரில் மசோதாவை அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் பின்னர் தெளிவுபடுத்தியது. எந்தவொரு கட்டமைக்கப்பட்ட உரையாடலுக்குப் பதிலாக, பாராளுமன்ற அறிக்கைகள் மூலம் இந்த நடவடிக்கை குறித்து உறுப்பினர்கள் அறிந்திருப்பது, புதுதில்லியில் அதிகாரத்தை குவிப்பதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்ச அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொதுத் தலைநகரான சண்டிகர், 1966-ஆம் ஆண்டின் பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம் அமலானதிலிருந்து ஒரு உணர்ச்சிமிக்க பிரச்சனையாக இருந்து வருகிறது. பஞ்சாப் ஆளுநரே சண்டிகரின் நிர்வாகியாகவும் செயல்படுகிறார். முழு சண்டிகர் தலைநகர் பகுதியும் பஞ்சாபிற்குச் செல்லும் என்று 1970-ஆம் ஆண்டு ஒப்பந்தம் தெளிவாகக் கூறியதைக் குறிப்பிட்டு, சண்டிகரை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று பஞ்சாப் நீண்டகாலமாக கோரி வருகிறது. 1985-ஆம் ஆண்டின் ராஜீவ்-லாங்கோவால் ஒப்பந்தமும் சண்டிகர் பஞ்சாபிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பஞ்சாப் - ஒன்றிய அரசுகளுக்கு இடையே தொடர்ந்து வெறுப்பையும் நம்பிக்கை இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இதற்கு முன்பு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அமைப்பை மாற்ற மத்திய அரசு முயன்றபோது கடும் எதிர்ப்பு வந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது சண்டிகரில் பாராளுமன்ற அறிவிப்பு மூலம் இதே போன்ற மாற்றங்களைச் செய்வது, ஒன்றிய அரசின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஆலோசனை, ஒருமித்த கருத்து, பகிர்ந்து முடிவெடுக்கும் முறை ஆகியவற்றுக்கு ஒன்றிய அரசு எந்த மதிப்பும் தரவில்லை என விமர்சகர்களும் எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பின்னர் உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது, இந்த திட்டம் சண்டிகரின் நிர்வாகத்தையோ அல்லது நிர்வாக கட்டமைப்பையோ மாற்ற முயற்சிக்கவில்லை என்று கூறியது. "சண்டிகரின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து உறுப்பினர்களுடனும் போதுமான ஆலோசனைகளுக்குப் பிறகுதான் பொருத்தமான முடிவு எடுக்கப்படும்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், பகைமை பாராட்டும் பாகிஸ்தானுடன் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும், 1980களின் நடுப்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் இடையில், பயங்கரவாதத்தின் அதிர்ச்சிகரமான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கிறது. அதன் புவிசார் அரசியல் இயல்புநிலையைப் புறக்கணிக்க முடியாது. இதனால்தான் பஞ்சாபை மிகவும் உணர்வுபூர்வமாக கையாள வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இருப்பினும், சண்டிகர் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒன்றிய அரசின் சமீபத்திய முடிவுகள், அரசியல் ஆலோசனையைப் புறக்கணித்து, கூட்டாட்சி தத்துவங்களைக் கவனத்தில் கொள்ளாமல், நிர்வாக அல்லது அதிகாரத்துவ அளவில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இத்தகைய வன்முறை வரலாற்றைக் கொண்ட ஒரு எல்லை மாநிலத்திற்கு இது போன்ற அணுகுமுறை ஒரு ஆபத்தான அணுகுமுறை ஆகும். பல்லாண்டுகள் பழமையான சண்டிகர் பரிமாற்றப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள், சண்டிகர் மீதான அதன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
சண்டிகர் பற்றிய முக்கிய முடிவுகள் இப்போது புது டெல்லியில் இருந்து எடுக்கப்படுவதால், பல அரசியல்வாதிகள் மற்றும் பிறர் பிராந்திய அரசியல் மற்றும் பிராந்திய நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனர். இந்த மறுப்பும், ஒன்றிய அரசால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்படும் இந்த அணுகுமுறையும் பஞ்சாபில் பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் விவகாரத்திற்கு வெறும் நிர்வாக நடவடிக்கை மட்டும் போதாது. மாறாக, அதற்கு ஒரு அரசியல் தீர்வு தேவை. பஞ்சாபின் அடையாளம் அல்லது அதன் நிலப்பரப்பு உரிமைகோரல்களைப் பாதிக்கும் எந்தவொரு முடிவும், வெறும் அரசாங்க அறிவிப்புகளிலிருந்து வராமல், உண்மையான அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் உடன்பாட்டின் மூலம் வரவேண்டும். சிக்கலான கடந்தகாலத்தைக் கொண்ட ஒரு எல்லை மாநிலத்தைப் பொறுத்தவரை, இத்தகைய நடவடிக்கைகள் – மற்றும் அவை ஏற்படுத்தும் தோற்றங்கள் – சாதாரண நிர்வாகத்திற்கு அப்பாற்பட்ட தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர்.
Original link: