நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது அறுபது ஆண்டுகள் பழமையான சட்டவிதிகளுக்குப் பதிலாக புதிய விதிகள் மசோதாவை வெளியிட்டது. புதிய சட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் இங்கே :
புதிய விதைகளுக்கான மசோதாவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில், விதைகளின் வகைகளை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும், விதிமீறல்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் நவம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட இந்த வரைவுச் சட்டம், இயற்றப்பட்டவுடன் 1966-ஆம் ஆண்டின் விதைகள் சட்டத்திற்குப் (Seeds Act, 1966) பதிலாக அமலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
புதிய விதை மசோதா ஏன் தேவைப்படுகிறது?
தற்போதுள்ள சட்டம் அறிவிக்கப்பட்ட விதைகளை (பொது சாகுபடிக்காக அரசாங்கத்தால் 'அறிவிக்கப்பட்ட' புதிய வகைகள்) மட்டுமே ஒழுங்குபடுத்துகிறது. மேலும், விதைகளை பதிவு செய்வது கட்டாயமில்லை. பசுந்தாள் உர விதைகள், வணிகப் பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய சட்டத்தின்கீழ் உள்ள அபராதங்கள் குறைவாக உள்ளன, அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த இடைவெளிகள் நீண்டகாலமாக ஒரு புதிய சட்டத்திற்கான கோரிக்கையைத் தூண்டியுள்ளன.
இதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டில் ஒரு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது, அப்போது டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி மாநிலங்களவையில் ஒரு மசோதா
அறிமுகப்படுத்தப்பட்டது. இது டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி, 2004-ஆம் ஆண்டு ஒரு நாடாளுமன்றக் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது, ஆனால் ஒருபோதும் சட்டம் ஆக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலி மற்றும் தரமற்ற விதைகளின் பிரச்சினை எந்த அளவுக்குப் பெரியது?
சந்தையில் தரமற்ற விதைகள் இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதை விவசாயத் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர், கடந்த மூன்று ஆண்டுகளில் (2022-25) 43,001 விதை மாதிரிகள் "தரமற்றவை" எனக் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார். இத்தகைய விதைகளில் 62 சதவீதம் (26,603) மேற்கு வங்காளத்திலும், அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் (4,448) மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் (3,517) இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி மூன்று ஆண்டுகளில் (2022-23 முதல் 2024-25 வரை), மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மொத்தம் 5,27,814 உர மாதிரிகளைப் பரிசோதித்தன. அவற்றில் 28,303 மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டன. அதேபோல், 5,97,859 விதை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, அவற்றில் 43,001 மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில், மாநிலங்கள் 12,287 எச்சரிக்கைகளை விடுத்தன, 12,915 விற்பனையை நிறுத்தும் உத்தரவுகளை பிறப்பித்தன, 1,914 வழக்குகளைத் தாக்கல் செய்தன, மேலும் 164 பறிமுதல்களைப் பதிவு செய்தன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு ஆண்டுதோறும் எவ்வளவு விதை தேவைப்படுகிறது?
வேளாண்மை அமைச்சகத்தின்படி, 2024-25-ஆம் ஆண்டில் ஓராண்டு விதை தேவை 48.20 இலட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டது, ஆனால் கிடைத்தது 53.15 இலட்சம் டன் ஆகும். இந்தியாவின் விதை சந்தையின் மதிப்பு சுமார் ₹40,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மே மாதம் 2014-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 2025-ஆம் ஆண்டு வரை, 3,053 வகைகள் வெளியிடப்பட்டன. இதில் 85 சதவீதம் பொதுத் துறையில் இருந்தும், 15 சதவீதம் தனியார் துறையில் இருந்தும் வந்தவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய விதை மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன ?
விதை மசோதா, 2025-ஆனது, விதை வகைகளை கட்டாயப் பதிவு செய்ய முன்மொழிகிறது. மேலும் “போலியான” மற்றும் பதிவு செய்யப்படாத விதைகளை விற்பனை செய்தல் போன்ற முக்கியமான குற்றங்களுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை ஆகியவற்றையும் முன்மொழிகிறது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து, வேளாண் தொழிலாளர்கள் பயன்படுத்தும் வகை மற்றும் ஏற்றுமதி நோக்கத்திற்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படும் வகை அல்லது அதைத் தவிர வேறு எந்த விதமான அல்லது வகையான விதைகளையும் விற்பனை செய்யக்கூடாது, அவ்வாறு விற்பனை செய்யப்படுவதற்கு, அத்தகைய வகை அல்லது விதை பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டப்பிரிவு 13-ல் கூறப்படுகிறது.
விதை சட்டம், 1966-ன் பிரிவு 5-ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஏற்கனவே உள்ள வகைகள் புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
இந்த மசோதா, விற்பனை மற்றும் இறக்குமதி செய்யப்படும் விதைகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், மற்றும் தரமான விதைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் முயல்கிறது.
இந்த மசோதா “தற்போதைய விவசாய மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுடன் இணக்கமாக” உள்ளதுடன், விதைச் சட்டம், 1966 (Seeds Act, 1966)
மற்றும் விதை (கட்டுப்பாட்டு) ஆணை, 1983 (Seeds (Control) Order, 1983) ஆகியவற்றை மாற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வரைவு விதை மசோதா, 2025-ஆனது, விதைகளின் தரம் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதை உறுதிசெய்கிறது. மேலும், கட்டுப்படியாகக்கூடிய விலையில் உயர்தர விதைகளுக்கு வேளாண் தொழிலாளர்கள் அணுகுவதை உறுதிசெய்வதையும், போலியான விதைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதையும், விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாப்பதையும், விதை இறக்குமதியை தாராளமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் முதன்மையாகக் கொண்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்ட அமலாக்கத்தைப் பொறுத்தவரை, இந்த மசோதாவின் வரைவு சிறிய அளவிலான குற்றங்களைக் குற்றமற்றதாக்க முன்மொழிகிறது. அதேசமயம், கடுமையான விதிமீறல்களுக்கு திறம்பட அபராதம் விதிக்க வலுவான விதிகளைப் பராமரிக்கிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்காக மசோதாவை இறுதி செய்வதற்குமுன், அமைச்சகம் பொதுமக்களின் கருத்துகளை கோரியுள்ளது. கருத்து தெரிவிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி ஆகும். கருத்துக்களை இணைத்த பிறகு, வரைவு அங்கீகாரத்திற்காக மத்திய அமைச்சரவையின் மூலம் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஒப்புதல் அளிக்கப்பட்டதும், மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தலாம்.
அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்வில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் நிதிநிலை கூட்டத்தொடரின்போது விதை மசோதா மற்றும் பூச்சிக்கொல்லி மசோதாவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக சௌகான் தெரிவித்தார்.
Higher penalty, regulating quality for sale and import – What the new Seeds Bill proposes.