குழந்தை பராமரிப்புப் பணியாளரின் முக்கியமான பங்கை அங்கீகரிக்கவும்.

இந்தியாவில் உள்ள குழந்தை பராமரிப்புப் பணியாளருக்கு சிறந்த கொள்கைகள், கண்ணியமான ஊதியங்கள் மற்றும் பணிச்சூழல்கள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட பராமரிப்பு உள்கட்டமைப்பு தேவை.


ஜூலை மாதம் 24-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதியை சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம், சமுதாயம் மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பாக, குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் — நல்வாழ்வுக்கு விரிவான பராமரிப்பு மற்றும் ஆதரவுக் கொள்கைகளின் இன்றியமையாதப் பங்கை அங்கீகரித்தது. இக்கொள்கைகள் ஊதியம் இல்லாதப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளைக் குறைத்தல், மறுபங்கீடு செய்தல் மற்றும் மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டவை. ஏனெனில், பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் பெண்கள் மற்றும் இளம் பெண்களின் பங்கு விகிதாச்சாரமற்ற முறையில் அதிகமாக உள்ளது. மேலும், இது தேசிய புள்ளிவிவரங்களில் கவனிக்கப்படாமல், குறைவாக மதிப்பிடப்பட்டு, கணக்கில் வராமல் இருப்பதோடு, பொருளாதார மற்றும் சமூகக் கொள்கை வகுப்பிலும் புறக்கணிக்கப்படுகிறது.


இந்தியா நீண்டகாலமாகப் பராமரிப்பு சேவையின் வரலாற்றைக் கொண்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தாராபாய் மோடக் மற்றும் கிஜுபாய் பதேகா போன்ற கல்வியாளர்களின் பணிகளுடன் குடும்பத்திற்கு வெளியே நிறுவனங்கள் தோன்றின. வளர்ச்சிக்கு ஏற்ற நடைமுறைகளுடன்கூடிய இந்த முன்னோடி முயற்சிகள், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நவீன குழந்தைப் பராமரிப்பு ஏற்பாடுகள் தோன்றியதால் படிப்படியாகக் குறைந்தன. நவீன குழந்தைப் பராமரிப்பு பெரும்பாலும் தனியார், தன்னார்வத் துறையில் இருந்ததால், குழந்தைப் பராமரிப்புச் சேவைகள் மிகவும் தேவைப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டன.


1972-ஆம் ஆண்டில், மீனா சுவாமிநாதன் தலைமையில், இந்திய அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட, பாலர் குழந்தைகளுக்கான வளர்ச்சிக் குறித்த ஆய்வுக் குழுவின் அறிக்கை, நாட்டின் குழந்தை பராமரிப்புச் சேவைகளின் வரலாற்றையே மாற்றியமைத்தது. அந்த அறிக்கை ஒரு தெளிவான சமூகநீதிக் குறிக்கோளை வகுத்தது. மேலும், ஏழை மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த இளம் குழந்தைகளுக்கான உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு முழுமையான அணுகுமுறையை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 


இதன் விளைவாக 1975-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டம் (Integrated Child Development Services Scheme (ICDS)) தொடங்கப்பட்டது. இது இன்று உலகின் மிகப்பெரிய ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் 1.4 மில்லியன் அங்கன்வாடி (குழந்தை பராமரிப்பு) மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் பலன்கள் 23 மில்லியன் குழந்தைகளைச் சென்றடைகின்றன. மேலும், சுமார் 2.4 மில்லியன் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களால் சேவை செய்யப்படுகின்றன. மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை கணிப்புகள் மற்றும் 2030-ஆம் ஆண்டுக்குள் 60 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரித்து 2.6 மில்லியன் மையங்கள் மற்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.


குறைவான ஊதியம் மற்றும் குறைவான மதிப்பீடு


பல தேசிய மற்றும் உலகளாவிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளபடி, சமூக வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்குப் பராமரிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த போதிலும், பராமரிப்புப் பணியாளர்கள் குறைவான ஊதியம் பெறுபவர்களாகவும், போதிய மதிப்பு அற்றவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், குழந்தையின் ஆரம்பக்கால வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்புகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. அனைவரையும் உள்ளடக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டங்களை விரைவாக விரிவுபடுத்த வேண்டிய நிலை, தரமான குழந்தை பராமரிப்புக்கு தேவையான நடைமுறை கற்றலில் பராமரிப்புப் பணியாளர்களின் திறன்களை வளர்க்கும் பணிக்கு முன்பும் பணியின்போதும் வழங்கப்படும் பயிற்சிக்கு குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. இதற்கு ஒரு பகுதி காரணம், ஆரம்பகால ஆசிரியர்கள் நிபுணர்களாக அல்லாமல், உணவு, சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு போன்ற முதன்மைத் தேவைகளைக் கவனிக்கும் பராமரிப்பாளர்களாகக் கருதப்படுவதே ஆகும். அவர்கள் தொழில்முறைப் பணியாளர்களாகக் கருதப்படாததால், அவர்களின் மதிப்பு குறைவது குறைந்த ஊதியத்தில் மட்டுமல்லாமல், பணிச்சூழல் (சம்பளத்துடன் கூடிய விடுப்பு உட்பட), சமூகப் பாதுகாப்புப் பலன்கள், தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், மற்றும் கூட்டு அமைப்பு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் வழிவகுக்கிறது. பல மாநிலங்களில், அவர்களின் மாத ஊதியம் ₹8,000 முதல் ₹15,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இது திறன் குறைந்த  தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது.


காலநிலை மாற்றத்தின் தாக்கம்


காலநிலை மாற்றத்தின் காரணமாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு தரமான குழந்தை பராமரிப்பு சேவைகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஏழைப் பெண்களும் குழந்தைகளும் காலநிலை மாற்றம் மற்றும் வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு உடல்நலம், பராமரிப்பு சேவைகள் மற்றும் சத்தான உணவை பெறும் வாய்ப்புகள் குறைகின்றன. நிலையான வளர்ச்சி இலக்குகள் வீடுகளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் பராமரிப்புப் பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கான அவசியத்தைக் குறிப்பிடுகையில், காலநிலை மாற்றம் பல ஆண்கள் தங்கள் கிராமப்புறங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு வேலைதேடி இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.


இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் காணப்பட்டதுபோல, குடும்பங்கள் கடின நிலையில் இருந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் அருகில் இல்லாததால் பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமற்றதாகியது. குடும்பங்கள் நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும்போது, ​​அதிக வாழ்க்கைச் செலவுகள் - குறிப்பாக வீட்டு வாடகை போன்ற காரணங்களால் பெண்களும் வேலைக்குச் செல்லவேண்டிய நிலையைக் கட்டாயமாக்குகிறது. அவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வீடுகளில் வீட்டுவேலை அல்லது பராமரிப்பு வேலையில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், அந்தப் பெண்கள் தங்களது சொந்தக் குழந்தைகளை கவனிக்க வசதிகளும் மிகக் குறைவாகவே உள்ளன. ஆனால், பராமரிப்புச் சேவைக்கென்று நகரங்களில் அங்கன்வாடி மையங்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே சரியாகச் செயல்படுகின்றன.



இந்திய அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான இந்திய நேரப் பயன்பாடு கணக்கெடுப்பு (Time Use in India 2024), பராமரிப்புப் பணிகளில் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதை தெளிவாகக் காட்டுகிறது. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 426 நிமிடங்கள் (ஏழு மணி நேரத்திற்கு மேல்) ஊதியம் இல்லாத வீட்டு வேலை மற்றும் பராமரிப்புப் பணிகளில் செலவிடுகிறார்கள். ஆண்கள் (புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்) 163 நிமிடங்கள் (இரண்டு மணி நேரத்திற்கு மேல்) செலவிடுகிறார்கள். மொத்தத்தில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் முதல் 17 சதவீதம் ஆகும். சிறிய அளவிலான ஆய்வுகள், தாய்மார்களின்  பராமரிப்பு மற்றும் குழந்தைக்கு உணவளிக்க போதிய நேரமில்லாமைப் போன்ற காரணங்கள்  குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான தொடர்புகளைத் தெளிவாகக்  காட்டுகின்றன. ஏறக்குறைய 35 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு காரணங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். 5-வது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி (2019–21), ஆறு மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளில் 11 சதவீதம் குழந்தைகள் மட்டுமே குறைந்தபட்ச சத்தான உணவை உட்கொள்கின்றனர். இது அறிவாற்றல் மற்றும் வளர்ச்சிக் குறைபாட்டுச் சிக்கலை எழுப்புகிறது.


இந்தச் சூழலில், நடமாடும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் மன்றம் (Forum for Creches and Childcare Services (FORCES)) ஆகியவை இணைந்து டெல்லியில், அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு,  இந்தியா குழந்தை பராமரிப்பு சாம்பியன் விருதுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தன. குழந்தை பராமரிப்புத் துறையில் சிறந்து விளங்கியவர்களையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில் ஏழு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அவை, சிறந்த குழந்தை பராமரிப்பு பணியாளர், சிறந்த குழந்தை பராமரிப்பு பணியாளர், சிறந்த குழந்தை பராமரிப்பு மேற்பார்வையாளர், சிறந்த உள்ளூர் தலைவர், சிறந்த அரசு சாரா நிறுவனம், குழந்தை பராமரிப்பு சாம்பியன் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கு நிதியளிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்தல் ஆகியனவாகும். முன்னணி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், முதலாளிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க இந்த விருதுகள் முயன்றன. அனைவருக்கும் தரமான குழந்தை பராமரிப்பு கிடைப்பதையும் சமநீதியானதாக இருப்பதையும் உறுதி செய்ய, சமூகங்களுக்குள் களத்தில் பணியாற்றுவது, உள்ளூர் மட்டத்தில் பணியாற்றுவது, கொள்கை மட்டத்தில் பணியாற்றுவது ஆகியவற்றில் அவர்கள் ஆற்றிவரும் அயராத முயற்சிகளை கொண்டாடுவதற்காகவே இது அமைந்தது.


இந்த நிகழ்வு குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் குரல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவர்கள் திறமையான தொழில் வல்லுநர்கள் மட்டுமல்ல, சமூக விதிமுறைகளுக்கு சவால் விடும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் (change-makers) என்பதையும் இது காட்டியது. அவர்கள் எப்படி சாதி மற்றும் வர்க்கத் தடைகளைத் தகர்க்கிறார்கள், களங்கத்தை கடக்க நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். மேலும், தங்கள் வேலையைத் ‘அழுக்கான குழந்தைகளுடன்’ செய்வதாக இழிவாகப் பார்க்கும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்து வரும் விமர்சனங்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதையும் அவர்கள் அந்த விழாவில் பகிர்ந்து கொண்டனர்.


காலப்போக்கில், அவர்கள் பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று, குழந்தைகளுக்குப் பொதுவாகக் கிடைக்காத வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அவர்களுடன் வலுவான உணர்ச்சிபூர்வமான பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது மிகவும் சவாலானது. ஏனெனில், பெற்றோர் நீண்டநேரம் வேலை செய்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் மோசமான சூழலில் வாழ்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வதால், பராமரிப்பாளர்கள் சுகாதார காப்பீடு, சிறந்த வாழிடம் மற்றும் சரியான பராமரிப்பு வசதிகளுக்காகவும் வாதிடுகிறார்கள். குழந்தைகளுடன் நண்பர்களைப் போல் விளையாடுவது, கவனிப்பாளர்களாக அவர்களை வளர்ப்பது, அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் மற்றும் தேவைப்படும்போது தலையிடும் பொறுப்புள்ள பெரியவர்களாகச் செயல்படுவது போன்ற பலதரப்பட்ட பணிகளைச் செய்கிறார்கள். 


ஸ்காண்டிநேவியாவில் உள்ள தரநிலையைப் பொருத்துங்கள்


குழந்தை பராமரிப்புப் பணியாளர்களை அங்கீகரிப்பது, தரமான, கனிவான கவனிப்பை வழங்குவதிலும், வலுவான மற்றும் உள்ளடக்கிய தேசத்திற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் அவர்களின் முக்கியப் பங்கினை எடுத்துக்காட்டுவதில் முதல் படியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவர்கள் கண்ணியமான ஊதியம் மற்றும் பணி நிலைமைகளைப் பெறுவதை உறுதிசெய்வதைத் தவிர, செய்ய வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன. அதாவது, இந்த பராமரிப்புப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும் மற்றும் கவனிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் வளங்களை மறுபகிர்வு செய்யவேண்டிய தேவை உள்ளது. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஏற்பாடுகள் இன்னும் குறைவாகவே உள்ளன. இந்திய அரசின் ‘பல்னா’ (Palna) திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 10,000-க்கும் அதிகமான குழந்தை பராமரிப்பு மையங்களில் தற்போது 2,500 மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அரசாங்கம் தற்போது பொது குழந்தைப் பராமரிப்பிற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.4 சதவீதம் முதலீடு செய்கிறது. அனைவருக்கும் தரமான பராமரிப்பை வழங்க, இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் ஆக மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். இது ஏற்கனவே உலகளாவிய குழந்தைப் பராமரிப்பை வழங்கும் ஸ்காண்டிநேவிய நாடுகளைப் போலவே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள்மீது  கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகிறது. இதை அடைவதற்கு தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் இரண்டும் தேவை. குழந்தை பராமரிப்புத் தொழிலாளர்களின் அறிவையும் திறன்களையும் அங்கீகரிப்பதுடன், இந்தத் துறைக்கு போதுமான வளங்களையும் குரலையும் உறுதி செய்யும் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளும் இருக்க வேண்டும். பெண் தொழிலாளர்கள் மற்றும் பின்தங்கிய குழந்தைகளின் உரிமைகள் ஈடேற வேண்டுமானால், அதிகாரப் பரவலாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு உரிமையுடைமை ஆகியவை மிக முக்கியமானவை.


நித்யா ராவ், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மேம்பாட்டுப் பள்ளியின் பேராசிரியராக உள்ளார்.


Original Article:  Recognise the critical role of the childcare worker 


Share: