இந்த ஆண்டுக்கான கோச்சோன் பரிசு, (Kochon Prize) உலகளாவிய சுகாதார சமத்துவத்தை மாற்றியமைக்கக்கூடிய, அளவிடக்கூடிய தீர்வுகளை இந்தியா எவ்வாறு உருவாக்குகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
காசநோய் (TB) கட்டுப்பாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்கையில், ஒரு சிறிய ஆனால் புரட்சிகரமான மாற்றம் தனித்து நிற்கிறது — அதுவே 'பாயிண்ட்-ஆஃப்-கேர்' மூலக்கூறு நோய் கண்டறிதல் (point-of-care molecular diagnostics) முறையாகும். பாரம்பரியமாக, காசநோய் கண்டறிதலுக்குக் குறைந்த உணர்திறன் கொண்ட சளி தடவு பரிசோதனை (sputum smear test) அல்லது மையப்படுத்தப்பட்ட ஆய்வகங்களில் இருந்து கல்ச்சர் முடிவுகளுக்காக வாரக்கணக்கில் காத்திருப்பது தேவைப்பட்டது. இருப்பினும், சிறிய, மின்கலன் மூலம் இயங்கும் (Polymerase Chain Reaction (PCR)) இயந்திரங்களைக் கொண்டு, காசநோய் மற்றும் மருந்து எதிர்ப்பு இரண்டையும் இப்போது ஒரு மணி நேரத்திற்குள்ளாகக் கண்டறியக் கூடிய வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
நோய் கண்டறிதலில் ஒரு புதிய புரட்சி
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட Truenat பரிசோதனை போன்ற விரைவான மூலக்கூறு சோதனைகள், குறிப்பாக குறைவான வளங்கள் கொண்ட பகுதிகளில், உலகளாவிய காசநோய் ஒழிப்புப் போராட்டத்தில் இன்றியமையாத கருவிகளாக மாறியுள்ளன. நைஜீரியாவில், தேசிய காசநோய் திட்டத்தில் Truenat-ஐச் சேர்த்தது, ரிஃபாம்பிசின்-எதிர்ப்பு காசநோய் (rifampicin-resistant TB) கண்டறிதலை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியது. இது மருந்து-எதிர்ப்பு வகைகளைக் கண்டறிவதில் இந்தச் சோதனையின் வலிமையை வெளிப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு சளி சேகரிப்பதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்க, நைஜீரியா, Truenat சோதனைக்காக மல மாதிரிகளைப் பயன்படுத்த முயற்சித்துள்ளது. இது ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிதல் மற்றும் உறுதிப்படுத்துதலை மேம்படுத்த உதவுகிறது.
ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் (Mozambique) மற்றும் தான்சானியாவில் (Tanzania) உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தளத்தின் பயன்பாட்டை மதிப்பீடு செய்து, சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தி லான்செட் (The Lancet) இதழில் வெளியிடப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் செய்யப்படும் மூலக்கூறு பரிசோதனையை, முடிவுகளை விரைவாகத் தெரிவிக்கும் முறையுடன் இணைத்தது, நோயாளிகள் ஆரம்ப வருகைக்குப் பிறகு ஏழு நாட்களுக்குள் சிகிச்சையைத் தொடங்கும் விகிதத்தை வெகுவாக மேம்படுத்தியது என்று அந்த மருத்துவ ஆய்வு வெளிப்படுத்தியது. இந்தப் பரிசோதனை முறை, நோய்க் கண்டறியும் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், சிகிச்சையையும் எளிதாக்கியது. வளங்கள் குறைவாக உள்ள சூழல்களில் மேம்பட்ட காசநோய் பராமரிப்பில், சிகிச்சையளிக்கும் இடத்திலேயே செய்யப்படும் (point-of-care) நோயறிதல் கருவிகளின் இன்றியமையாத பங்கினை இது நிரூபிக்கிறது. இத்தகைய புதுமைகள், உலகளாவிய காசநோய் ஒழிப்பு இலக்குகளை அடைவதற்கு மிக முக்கியமானவை.
நோயறிதல் திறனில் ஏற்பட்ட இந்த மாற்றம் காசநோய்க் கட்டுப்பாட்டின் இயல்பை வெறுமனே மாற்றவில்லை. மாறாக, ஆரம்பகால சிகிச்சை என்பது புவியியல் அல்லது உள்கட்டமைப்பின் செயல்பாடாக இல்லாத ஒரு உலகிற்கு இது அடிப்படையாக அமைந்தது.
இந்த மாற்றத்தின் உலகளாவிய தாக்கம், இந்த ஆண்டு கோவாவை தளமாகக் கொண்ட மோல்பயோ டயக்னாஸ்டிக்ஸ் (Molbio Diagnostics) காசநோய் நோயறிதலில் ஆற்றிய பணிக்காக மதிப்புமிக்க கோச்சோன் பரிசை (Kochon Prize) பெற்றபோது அங்கீகரிக்கப்பட்டது. கொரியாவின் கோச்சோன் அறக்கட்டளை மற்றும் ஸ்டாப் டிபி பார்ட்னர்ஷிப் (Stop TB Partnership) ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்ட கோச்சோன் பரிசு, காசநோய் கட்டுப்பாட்டுக்கான பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகும். காசநோய் விளைவுகளை வெகுவாக மேம்படுத்திய விஞ்ஞானிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கண்டுபிடிப்புகளை இது கௌரவித்துள்ளது. இந்த விருதின் முக்கியத்துவம் எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்தையும் கடந்தது. இந்த ஆண்டுக்கான பரிசு, இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் நாட்டிற்குள் காசநோயை எதிர்த்துப் போராட உதவுவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய காசநோய் ஒழிப்பு முயற்சியிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா உருவாக்கிய கையடக்க மூலக்கூறு தளத்திற்கு (portable molecular platform) உலக சுகாதார நிறுவனம் (WHO) 2020-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்ததை இந்த எழுத்தாளர் நினைவுகூர்கிறார். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இருந்து இதற்கான சான்றுகள் கிடைத்தன. இந்தத் தளம் மத்திய ஆய்வக அமைப்புகளுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் இதை மிக எளிதாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் அந்த ஆய்வுகள் காட்டின. இறுதியாக, நோயறிதல் சோதனை நோயாளியிடம் நேரடியாகச் செல்லும், நோயாளி சோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை என்ற நிலை உருவானது. இது கண்டுபிடிப்பு (innovation) மற்றும் உள்ளடக்கம் (inclusion) இரண்டும் சந்தித்த ஒரு தருணம். மேலும், பல இந்திய நிறுவனங்கள் காசநோய் கண்டறிதல் கண்டுபிடிப்பில் இறங்கியுள்ளன. இதன் விளைவாக இன்று மேம்படுத்தப்பட்ட பல உடனடிப் பராமரிப்பு சோதனைகள் கிடைக்கின்றன.
பரவலாக்கப்பட்ட காசநோய் கட்டுப்பாட்டில் இந்தியாவின் பங்கு
இந்தியாவின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National TB Elimination Programme (NTEP)) இந்தத் தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொண்டு, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான உடனடி மூலக்கூறு பரிசோதனை மையங்களை அமைத்தது. காசநோய் என்று சந்தேகிப்பதற்கும் சிகிச்சை தொடங்குவதற்கும் இடையேயான நேரத்தை இது எவ்வாறு மிகவும் குறைத்துள்ளது என்பதற்கும், அதன் மூலம் காசநோய் மேலாண்மை நெறிமுறைகளை பெரிதும் மேம்படுத்தியுள்ளது என்பதற்கும் போதுமான மற்றும் அதற்கும் மேலான ஆதாரங்கள் உள்ளன.
மக்களுக்கான அதிகாரம்: இந்தியாவில் காசநோய் சிகிச்சையை மாற்றியமைக்க, சமூகம் சார்ந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம்.
இந்த விருது, இந்தியாவில் காசநோயை ஒழிக்க எப்படி ஒத்துழைப்புடன் பணி புரிகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இன்று, காசநோய் கட்டுப்பாடு என்பது வெறும் அரசின் வேலை மட்டுமல்ல. தனியார் கண்டுபிடிப்பாளர்கள், சமுதாய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அமைப்புகள் அனைவரும் சேர்ந்து செயல்படுகிறார்கள். உலகின் மொத்த காசநோய் பாதிப்புகளில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் இருப்பதால், இந்த கூட்டாண்மை மிகவும் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது. தனியார்துறையின் துரிதமான நடவடிக்கைகள் தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறது. அதேசமயம், பொதுத் துறை அணுகுமுறை, தரவு மற்றும் பொறுப்புணர்வை வழங்குகிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு வலுவான பொது சுகாதார அமைப்பை உருவாக்குகிறார்கள்.
கோச்சோன் பரிசு இந்தியாவுக்கு இருமுறை வழங்கப்பட்டுள்ளது — 2006-ஆம் ஆண்டில் டாக்டர் எல்.எஸ். சௌஹானுக்கு (ஜாம்பியாவின் காசநோய்/எச்.ஐ.வி. செயற்பாட்டாளர் வின்ஸ்டோன் ஜுலுவுடன் பகிர்ந்துகொண்டார்) மற்றும் 2017-ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு (Indian Council of Medical Research (ICMR)). இந்த ஆண்டின் விருது இந்தியாவுக்கு கிடைத்த மற்றொரு கௌரவம் என்பதைவிட, இந்தியாவில், மலிவு விலையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளின் சக்திக்கான உலகளாவிய அங்கீகாரமாகும்.
துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள நடமாடும் மருத்துவமனைகள் முதல் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அகதிகள் முகாம்கள் வரை இந்தியாவின் கையடக்க மூலக்கூறு நோய் கண்டறியும் கருவிகள் இப்போது உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. உலகளாவிய சுகாதார சமத்துவத்தை மேம்படுத்தும், அளவிடக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதன்மூலம் இந்தியா புதுமைகளில் முன்னிலை வகிக்க முடியும் என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் நிரூபிக்கின்றன.
ஆனால், காசநோய்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை. அடுத்த சவால் என்னவென்றால், இத்தகைய நோய் கண்டறிதல் கருவிகளுடன், சிகிச்சை, ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு மற்றும் களங்கத்தைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான சமச்சீரான அணுகுமுறையை உறுதி செய்வதாகும். இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காசநோய்க்கு எதிரான போரில் வெற்றிபெற வேண்டுமானால், இது போன்ற அனைத்து காரணிகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
தொடர்ச்சியான முதலீடு, புதுமைகளுக்கான அழைப்பு
நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். துரித பரிசோதனைகள் (point-of-care tests) போன்ற புதுமையான முறைகளை அங்கீகரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நாம் ஒரு பெரிய உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்: காசநோய் என்பது ஏற்றத்தாழ்வுகளால் தூண்டப்படும் ஒரு நோய்.
நோயறிதல், ஊட்டச்சத்து, தொடர்புத் தடமறிதல், டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கண்டுபிடிப்புகளில் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் காசநோயை ஒழிக்கும் இந்த உலகளாவிய முயற்சியில் யாரும் விடுபடாமல் இருப்பதை நம்மால் உறுதி செய்ய முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது.
டாக்டர் சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி ஆவார்.
Original Article: Redefining the narrative of TB eradication worldwide