பெரும்பாலான பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறைகள் இருப்பதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் அவற்றை யார் சுத்தமாக வைத்திருப்பார்கள்? -மந்தாஷா அகமது

 


பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் தனியாக இருப்பதாக கூறப்பட்டாலும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறையால் சுகாதாரமற்ற நிலைமைகள் தொடர்கின்றன.

             

இந்தியா முழுவதும் உள்ள பல அரசுப் பள்ளிகளில், தூய்மைப் பணியாளர்களுக்கான வேலைகள் தெளிவாகப் பட்டியலிடப்படுவதில்லை. அவை பெரும்பாலும் "மற்ற பணியாளர்கள்" போன்ற தெளிவற்ற தலைப்புகளின் கீழ் மறைக்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. 2025ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, ​​திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த M.S. தாரணிவேந்தன் அரசுப் பள்ளிகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கான கழிப்பறைகளில் எவ்வளவு பயன்பாட்டில் உள்ளன, மற்றும் எவ்வளவு பயன்பாட்டில் இல்லை என்பது குறித்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச வாரியான தரவுகளைக் கோரினார். டிசம்பர் 1, 2025 அன்று பதிலளித்த கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, இந்தியா முழுவதும் உள்ள 94% பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் உள்ளன என்பதைக் காட்டும் தரவுகளை மேற்கோள் காட்டினார்.


சண்டிகர், டெல்லி மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha Abhiyan) மூலம் 100% பெண்களுக்கான கழிப்பறைகள்  உள்ளன என மாநில வாரியான புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. காகிதத்தில், புள்ளிவிவரங்கள் திருப்தியளிப்பதாக உள்ளன. நடைமுறையில், இந்த கழிப்பறைகளை பராமரிப்பது யார்? போன்ற கேள்விகள் எழுகின்றன.


அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களின் பணியிடங்கள் குறித்து மாநில வாரியாக விரிவான தரவு எதுவும் பொது வெளியில் கிடைக்கவில்லை. கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (Unified District Information System for Education Plus (UDISE+)) பள்ளி உள்கட்டமைப்பு, கழிப்பறைகள், குடிநீர் மற்றும் வகுப்பறைகளைக் கண்காணிக்கிறது. கல்வியின் வருடாந்திர நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) போன்ற தரவுத்தொகுப்புகள் கற்றல் முடிவுகள் மற்றும் ஆசிரியர் கிடைக்கும் தன்மையில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், தூய்மைப் பணியாளர்கள் போன்ற கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.


தூய்மையான பள்ளிகள்


தூய்மை இந்திய இயக்கம், தூய்மையான பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் போன்ற தேசியத் திட்டங்கள், பள்ளிகளில் நீர், தூய்மை மற்றும் சுகாதாரத் தரங்களை (water, cleanliness and hygiene (WASH)) கட்டாயமாக்குகின்றன. இவை கழிப்பறை கட்டுமானம், கை கழுவும் வசதிகள் மற்றும் திட்டமிடப்பட்ட தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இருப்பினும், இந்தத் திட்டக் கட்டமைப்பு எதிலும், பள்ளிகளுக்குள் அங்கீகரிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர் பணியிடங்களைப் பற்றித் தெளிவாக வரையறுக்கவோ அல்லது கட்டாயமாக்கவோ இல்லை.


அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் மாநில அல்லது மாவட்ட அளவில், கல்வித் துறைகள், நகராட்சி அமைப்புகள் அல்லது வெளி ஒப்பந்த செய்யப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. ஏனெனில், வேலைவாய்ப்புகள், நியமனங்கள் அல்லது சம்பளங்களைக் கண்காணிப்பதற்கு என ஒரு பொதுவான தேசிய அமைப்பு எதுவும் இல்லை.


ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளிலிருந்து வரும் அறிக்கைகள், ​​ஆசிரியர்கள், சமையல்காரர்கள் மற்றும் மாணவர்களே வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அல்லது அந்த வசதிகள் அசுத்தமாக, பூட்டப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் விடப்படுவதாகவும் காட்டுகின்றன.


சம்பளம் போதிய அளவு வழங்கப்படுவதில்லை


பல மாநிலங்களில், தூய்மைப் பணிகள் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அவர்கள் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்தையே வழங்குகிறார்கள் என்று கல்வி உரிமை ஆர்வலர் அசோக் அகர்வால் கூறுகிறார். டெல்லியில், மாநகராட்சி தனது பள்ளிகளுக்குத் தூய்மைப் பணியாளர்களை வழங்க ஒரு முகமையை நியமிக்கிறது என்று அவர் விளக்குகிறார். இந்தத் தொழிலாளர்கள் மாதத்திற்கு சுமார் ₹2,000 மட்டுமே சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை. மேலும், அவர்கள் முறையாக அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதி இடைத்தரகர்கள் மற்றும் முகமைச் செலவுகளுக்குச் சென்றுவிடுவதால், மிகக் குறைந்த தொகையே உண்மையில் தொழிலாளர்களைச் சென்றடைகிறது.


உதாரணமாக, ஹரியானா அரசாங்கத்தின் ஒரு இணையதளத்தில், ஆகஸ்ட் 2024-ல் ஒரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கான 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் காட்டப்பட்டன. ஆனால், இந்தப் பணிகளில் ஏதேனும் அரசுப் பள்ளிகளுக்கானதா என்பது குறித்து அதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இது பொறுப்பு எவ்வளவு தெளிவற்றதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


இதன் தாக்கம் களத்தில் தெளிவாகத் தெரிகிறது. புனேவின் பன்ஷேட் பகுதியில் உள்ள பன்ஷேட் மாதிரி கிளஸ்டர் பள்ளியில், வகுப்பறைகள் அல்லது கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளர்கள் யாரும் இல்லை.  தலைமை ஆசிரியை ஷபானா கான் கூறுகையில், தான் பலமுறை வகுப்பறைகளைத் தானே சுத்தம் செய்திருப்பதாகவும் அல்லது கழிப்பறைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் வைத்திருக்க மதிய உணவு சமையல்காரரிடம் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.


மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள பாரதிய கிராம விகாஸ் சங்கத்தைச் (Bharatiya Gram Vikas Sangh (BGVS)) சேர்ந்த ஊழியர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களோ அல்லது மாநில அரசின் நிதியுதவியோ இல்லை என்று தெரிவித்தனர். மகாராஷ்டிராவில், பல அரசுப் பள்ளிகள் தூய்மைப் பணியாளர்களை நியமிப்பதற்கு தன்னார்வலர்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களையே சார்ந்துள்ளன. அவர்களுக்கு, சுத்தம் செய்யும் கழிப்பறைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாதத்திற்கு ₹2,000 முதல் ₹3,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.


அங்கீகரிக்கப்பட்ட பதவிகள் எதுவும் இல்லை.


காயக்வாடின் கூற்றுப்படி, அரசுப் பள்ளிப் பணியாளர் நியமன விதிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆய்வக உதவியாளர் மற்றும் நூலகர் போன்ற பதவிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், தூய்மைப் பணியாளர்களுக்கான அதிகாரப்பூர்வப் பதவி எதுவும் இல்லை. இதன் காரணமாக, பள்ளிகள் தூய்மைப் பணியாளர்களை முறைசாரா வழிகளிலோ அல்லது வெளி முகமைகள் மூலமாகவோ பணியமர்த்த சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பல பள்ளிகளில் அடிப்படை கழிப்பறைகள் கூட இல்லை என்றும் அவர் கூறினார். சில பள்ளிகளில் வளாகத்தில் கழிப்பறைகளே இல்லை அல்லது கழிப்பறைகள் பூட்டப்பட்டிருக்கின்றன அல்லது மிகவும் அசுத்தமாக இருக்கின்றன. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் அருகிலுள்ள கட்டிடங்களில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்த சூழல் ஏற்பட்டுள்ளது.


திரு. கெய்க்வாட் குறிப்பிட்டதாவது, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதி பொதுவாக ஒருமுறை வழங்கப்படும் தன்மையுடையது. அதை சம்பளம் வழங்குவதற்கோ அல்லது தூய்மைப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கோ பயன்படுத்த முடியாது. மேலும், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதைத் தவிர, நீடித்த நீர் விநியோகத்தையோ அல்லது நீண்டகாலப் பராமரிப்பையோ அதனால் உறுதிசெய்ய முடியாது.


ஜார்க்கண்டில் உள்ள பள்ளிகளுடன் பணியாற்றும் காசிநாத், தூய்மைப் பணியாளர் வேலைகள் முக்கியமானவையாகக் கருதப்படுவதில்லை என்றும், கல்வி அமைப்பில் அவை இரண்டாம் நிலையாகவே நடத்தப்படுகின்றன என்றும் கூறினார். கட்டிடங்கள், ஆசிரியர்கள், தரமான கல்வி மற்றும் உணவு போன்ற விவகாரங்களில் மட்டுமே எப்போதும் கவனம் செலுத்தப்படுவதாகவும், தூய்மைப் பணியாளர்கள் பள்ளிகளுக்கு அத்தியாவசியமானவர்களாக ஒருபோதும் கருதப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.


நாடாளுமன்றம் நல்ல உள்கட்டமைப்பு புள்ளிவிவரங்களைக் காட்டினாலும், உண்மை நிலைமை மோசமாக இருப்பதாக காட்டுகின்றன. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர் மற்றும் மாணவிகளுக்குத் தனித்தனி கழிப்பறைகள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறைகள், செயல்படும் கை கழுவும் வசதிகள் மற்றும் குழாய் நீர் வசதி ஆகியவை தேவை என்று அகர்வால் கூறினார். கழிப்பறைகளையும் வகுப்பறைகளையும் கட்டுவது மட்டும் போதாது என்றும், முறையான கல்வியை வழங்க பள்ளிகளுக்குப் போதுமான ஊழியர்களும் தேவை என்றும் மேலும் கூறினார்.


பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பெண்கள்


தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (National Commission for Protection of Child Rights (NCPCR)) முன்னாள் தலைவரான சாந்தா சின்ஹா, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மட்டுமல்லாமல், சமூகப் பிரச்சினைகளால் தான் பெண்கள் பெரும்பாலும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள் என்று கூறினார். கல்வி மற்றும் குழந்தை உரிமைகள் துறையில் பணியாற்றிய பல ஆண்டுகால அனுபவத்திலிருந்து, குழந்தைத் திருமணம், வீட்டுப் பொறுப்புகள், பாலின அடிப்படையிலான வன்முறை, இளம் வயது கர்ப்பம், மோசமான உடல்நலம் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் சிறுமிகள் பள்ளிப் படிப்பை பாதிலயிலே நிறுத்துவதாக கூறுகிறார். இந்தச் சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாகவே கல்வி பார்க்கப்படுகிறது. மாறாக இந்தத் தடைகள் அனைத்தையும் மீறித்தான் மாணவிகள் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.


கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் கண்ணியத்திற்கு அவசியமானவை. இருப்பினும், மாணவிகள் பள்ளியில் சேருவதற்கோ அல்லது தொடர்ந்து படிப்பதற்கோ உள்கட்டமைப்பு வசதிகளை முதன்மைக் காரணமாகக் கருதக்கூடாது என்று திருமதி சின்ஹா ​​எச்சரித்தார். தனிப்பட்ட மற்றும் சுதந்திரமான தரவுகள் போதுமான அளவில் இல்லை என்றும், UDISE+ தரவுகள் களத்தில் உள்ள யதார்த்தத்துடன் பெரும்பாலும் பொருந்துவதில்லை என்றும் அவர் கூறினார். மாணவிகள் பள்ளிக்கு வருவதற்குக் கழிப்பறைகளே காரணம் என்று அரசுத் துறைகள் கூறினால், அந்த கூற்றை அமைப்புக்கு வெளியே நடத்தப்படும் ஆய்வுகள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று அவர் விளக்கினார். மேலும், அமைப்பிற்குள் புறக்கணிப்புகள் இருந்தபோதிலும், மாணவிகள் தங்கள் கல்வியைத் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


பல பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறைகளைச் சுத்தம் செய்வது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது என்று சின்ஹா ​​கூறினார். இந்தச் சிக்கல்களைத் தலைமை ஆசிரியர்களோ அல்லது உள்ளூர் தலைவர்களோ தாங்களாகவே செயல்படுவதன் மூலம் சரிசெய்ய முடியாது என்று அவர் வலியுறுத்தினார். மாறாக, அனைத்துப் பள்ளிகளிலும் சுகாதாரத்திற்காக உள்ளூர் முடிவுகளுக்கு விடாமல், ஒரு சீரான, ஒழுங்கமைக்கப்பட்ட தீர்வுகள் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


கட்டமைப்பு வசதிகளில் மட்டுமல்லாமல், மக்களிடமும் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை திருமதி சின்ஹா ​​குறிப்பிட்டார். மேலும், தூய்மைப் பணியாளர்களை நியமிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு சுதந்திரமான, பொறுப்புக்கூறும் அமைப்புமுறைக்கு அவர் அழைப்பு விடுத்தார். "இந்த பொறுப்பு கல்வித் துறையிடமே இருக்க வேண்டும்," என்று கூறிய அவர், சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பணிகள் தன்னார்வ ஏற்பாடுகளையோ அல்லது தற்காலிகத் தீர்வுகளையோ சார்ந்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.


சமூக மற்றும் பள்ளி மட்டத்தில், ஒவ்வொரு பள்ளியும் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. ஆனால், யார் இதைக் கேட்கிறார்கள்? என்று திருமதி சின்ஹா ​​​​கூறினார்.


மந்தாஷா அகமது இந்தூரில் ஐந்து வருட அனுபவமுள்ள தன்னார்வ பத்திரிகையாளர். கல்வி, சிவில் உரிமைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதில் கவனம் செலுத்தி அவர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.


Original link:

Govt. tells Parliament most schools have girls’ toilets. But who will keep them clean? 


Share: