இந்தியாவின் கடல்சார் கொள்கை: அது எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்ன? -ராஜீவ் பாட்டியா

 இந்தியாவின் கடல்சார் கொள்கை, அதன் வரலாறு மற்றும் புவியியல் பின்னணியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இது 'The Routledge Handbook of Maritime India’  என்ற கையேட்டில் ஆராயப்பட்டுள்ளது. இக்கையேடு இந்தியாவின் வளமான கடல்சார் வரலாறு மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அதன் இராஜதந்திர ரீதியான உறவுகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.


இந்தியாவை மையமாகக் கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் மிக முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் இமயமலைத் தொடரும் மற்றும் இந்தியப் பெருங்கடலும் ஆகும். இவை இந்தியாவின் இயற்கையான எல்லைகளைக் குறித்தது மட்டுமல்லாமல், அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தையும் செல்வாக்கு செலுத்தின. வடக்கில் உள்ள தரைவழிப் பாதைகள் வழியாகப் படையெடுத்தவர்கள் வெவ்வேறு வலிமையுடன் பேரரசுகளை உருவாக்க இந்தியாவுக்குள் நுழைந்தனர். அதே சமயம், விந்திய மலைகளுக்குத் தெற்கே வசித்த இந்தியர்கள், எப்போதும் கடலுக்கு அருகிலேயே இருந்ததால், வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம், மற்றும் அவ்வப்போது ஏற்பட்ட படையெடுப்புகளுக்காகவும் கிழக்கிலும் மேற்கிலும் கடற்பயணம் மேற்கொண்டனர்.


இந்த பரந்த வரலாற்றுப் பின்னணியில், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: வரலாறு, இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பொறுத்தவரை, இந்தியாவிற்கு கடல்சார் களத்தின் முக்கியத்துவம்  என்ன? அல்லூரி சுப்ரமணியம் ராஜு மற்றும் ஆர். ஸ்ரீனிவாசன் ஆகியோரால் தொகுக்கப்பட்ட 'The Routledge Handbook of Maritime India' இந்தக் கேள்விக்கு ஒரு விரிவான, ஆழமான மற்றும் பல பரிமாண நோக்கில்  பதிலைத் தருவதாகக் கூறப்படுகிறது.




கடல்சார் வரலாற்றைக் குறித்து


வரலாற்றைப் பார்க்கும்போது, கடல் பகுதி எப்போதும் எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பண்டைய மற்றும் இடைக்காலங்களில் இந்திய மாலுமிகள் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு வெகுதூரம் பயணம் செய்யும் திறன், இன்றும் நமக்கு பெருமையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்தியப் பெருங்கடலின் மீதான கட்டுப்பாடு, இந்தியாவின் கடல் வழி வர்த்தகத்தின் மீதும், இறுதியில் அதன் சுதந்திரத்தின் மீதும் அதிகாரத்தை அளிக்கிறது என்று ஜவஹர்லால் நேரு குறிப்பித்துள்ளார்


இந்தக் கையேட்டின் முதல் பகுதியில், பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகள் உள்ளன. இந்தக் கட்டுரைகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுகின்றன. சோழர்கள், மராத்தியர்கள், ஐரோப்பியர்கள், மற்றும் இந்திய-அரபு கடல்சார் வர்த்தகம் ஆகியோரின் தொடர்புகளில் இந்தக் கட்டுரைகள் முக்கிய கவனம் செலுத்துகின்றன. என். மனோகரன் அவர்கள் சோழர்களை "கடல் புலிகள்" (The Nautical Tigers) என்று விவரிக்கிறார். அறிஞர்-இராஜதந்திரி  கே. எம். பணிக்கர் பற்றிய ஒரு அத்தியாயம், அவரது கருத்துக்களை விமர்சன ரீதியாக ஆராய்வதுடன், அவை இன்றைய புவிசார் அரசியல் சூழலுக்கும் எவ்வாறு தொடர்ச்சியான பொருத்தத்தைக் கொண்டுள்ளன என்பதையும் காட்டுகிறது. வருண் சஹ்னி, ஒரு முற்போக்கான பார்வையில், இந்தியப் பெருங்கடலை ஒரு கடந்து செல்லும் இடமாக கருதுவதைவிட, உலகின் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளில் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ள ஒரு இடமாக  பார்க்க வேண்டும் என்று வாதிடுகிறார்.


இந்தியாவின் கடல்சார் உத்தி


இந்த நூலின் அத்தியாயங்கள் இந்தியாவின் உத்தி மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுடனான அதன் உறவுகள் பற்றி விளக்குகின்றன. இந்தியா, அதன் அண்டை நாடுகள் அனைத்துடனும் கடல் எல்லைகளை வரையறுப்பதில் முன்னணியில் இருந்ததுடன், ஒவ்வொரு வழக்கிலும் அவற்றைத் தீர்த்தது; ஆனால் பாகிஸ்தானுடன் மட்டும் ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை. ஏனெனில், பாகிஸ்தான் "உள்நோக்கம் கொண்ட

அனுமானங்கள்" என்று விவரிக்கப்படுவதன் அடிப்படையில் ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியது. ஹுவோ வென்லே (Huo Wenle) எழுதிய அத்தியாயம், சீன-இந்திய கடல்சார் போட்டியைக் (Sino-Indian maritime rivalry) குறித்து ஆராய்ந்து, சீன மற்றும் இந்திய அறிஞர்களின் பார்வைகளை ஆய்வு செய்கிறது. கடலில் ஏற்படும் மோதல்களைத் தவிர்ப்பதற்காகவும், இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நலன் சார்ந்த மோதல்களைத் தவிர்ப்பதற்காகவும், இரு அரசாங்கங்களும் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி, கடல்சார் ஈடுபாடுகளுக்கு தெளிவான விதிகளை வகுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். மற்ற அத்தியாயங்கள், இந்தியா-ஆஸ்திரேலியா கடல்சார் உறவுகளில் 1980-களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட திருப்புமுனையை விளக்குகின்றன. இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான முக்கிய ஒற்றுமைகளை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், கடல்சார் பலதரப்புவாதத்திற்கு (maritime multilateralism) ஆதரவாக இந்தியா, பிரான்ஸ் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் இந்தோ-பசிபிக் குறித்த தொலைநோக்கு நடவடிக்கைகளும் விவாதிக்கப்படுகின்றன.


இந்தப் புத்தகம் நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. அதில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கடல்சார் நிறுவனங்கள், இணைப்புகள் மற்றும் நிர்வாகம் பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஜோ செங்சின் (Zou Zhengxin) எழுதிய அத்தியாயம், அமெரிக்காவின் செல்வாக்கினால் உருவாகும் "zero-sum game"  மூலம் ஏற்படும் அபாயங்களைச் சுட்டிக்காட்டி, இந்தியா மற்றும் சீனாவின் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகத்தை ஒப்பிடுகிறது. மேலும், கடல்சார் வளர்ச்சியை மேம்படுத்த கூட்டு ஆலோசனைக் கூட்டமைப்புகளை அவர் பரிந்துரைக்கிறார். ஆர். சீனிவாசன் எழுதிய இலங்கை குறித்த அத்தியாயம், ஊழல், குல அரசியல் மற்றும் பலவீனமான தலைமை போன்ற காரணிகளால் நாடுகள் சீனாவின் "புதிய பட்டுப்பாதை திட்ட முன்முயற்சியில்" (Belt and Road Initiative (BRI)) இணைந்து, அதனால் கடல்சார் நிர்வாகம் பலவீனமடைவதை விளக்குகிறது.


வலிமையை நிலைநாட்டுதல்


இந்த கையேட்டின்படி, இந்தியா தனது கடல்சார் வலிமையை வெளிப்படுத்துவதில் திறம்பட செயல்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், இந்தியக் கடற்படை அரபிக் கடலில் கடற்கொள்ளையைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றியது. இதன் மூலம், வெறும் பார்வையாளர் என்ற நிலையிலிருந்து

ஒரு 'நிகர பாதுகாப்பு வழங்குநர்' (Net Security Provider) என்ற நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இரண்டு அத்தியாயங்கள் புவிசார் அரசியல் போட்டி குறித்து ஆய்வு செய்கின்றன. ஒன்று, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் வியூகத்துடன் ஒத்துப்போகும் வகையில் ஒரு "சமநிலைப்படுத்தும் அமைப்பு" (a hedging system) உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகிறது. மற்றொன்று, ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட பிராந்திய சக்திகளின் "அரசியல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை" உருவாக்க இந்தியா தனது கடல்சார் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.


கடந்த 20 ஆண்டுகளாக பல ஆய்வாளர்கள் இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவின் நீண்டகாலத் திட்டங்கள், வலிமை மற்றும் கூட்டமைப்பு நாடுகள் பற்றி விவாதித்து வருகின்றனர். சமீபத்தில், உக்ரைன், காசா, ஈரான், செங்கடல் மற்றும் வெனிசுலா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாகவும், மேலும் அமெரிக்காவின் 2025ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு வியூகம் (U.S. National Security Strategy 2025) சீனாவை ஒரு புவிசார் அரசியல் அச்சுறுத்தலைவிடவும் ஒரு பொருளாதாரப் போட்டியாளராகவே கருதுவதாலும், இந்தோ-பசிபிக் பகுதியின் முக்கியத்துவம் சற்று குறைந்திருருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்தியா தனது இந்தோ-பசிபிக் வியூகத்தை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


கடைசி ஏழு அத்தியாயங்கள் கொண்ட தொகுப்பு கடல்சார் களத்தில்  ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பற்றிப் பேசுகிறது. இதில், நீருக்கடியில் உள்ள கள விழிப்புணர்வு (Underwater Domain Awareness (UDA)), நீருக்கடியில் உள்ள அமைப்புகள் முதல் கடல்சார் பாதுகாப்பு; நீலப் பொருளாதாரப் புரட்சி மற்றும் மாற்றம் (Blue Economy revolution and shift); காலநிலை மீள்தன்மை; மற்றும் கடலோரப் பாதுகாப்பு வரையிலான பலதரப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளன. நீலப் பொருளாதாரத்தின் எல்லா பகுதிகளிலும் ஆர்வமுள்ள நிபுணர்கள், சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை இணைத்து இந்தக் கையேட்டை மிகச் சிறப்பாகத் தயாரித்துள்ளனர் எனவே, இது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர். இதில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கொள்கை வகுப்பாளர்கள் கவனமாகப் படித்து, மிக நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

கேட்வே ஹவுஸின் புகழ்பெற்ற ஆய்வாளரான ராஜீவ் பாட்டியா, இந்தியப் பெருங்கடல் தலைநகரங்கள் பலவற்றில் விரிவான இராஜதந்திர அனுபவம் கொண்ட ஒரு முன்னாள் தூதர் ஆவார்.


Original Article : India’s maritime policy: how it has evolved and what lies ahead -Rajiv Bhatia

Share: