தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து, குறையும் விகிதாச்சாரக் கொள்கையை (Degressive Proportionality principle) ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதும், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளதை தென்னிந்திய மாநிலங்கள் கண்டறிந்துள்ளன. இதன் விளைவு என்னவென்றால், ஒன்றிய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குவதில் மக்கள் தொகை அளவு 50% முக்கியத்துவம் பெறுவதால், நிதிக் குழு (FC) தென் இந்திய மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது. காலப்போக்கில், இதன் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும். தற்போதைய முன்மொழிவுகளின்படி, மாநிலங்கள் தங்களின் தற்போதைய இடப் பங்கீட்டையே தக்கவைத்துக் கொள்ளும். ஆனால், 2029ஆம் ஆண்டு தேர்தல்களுக்கு முன்பு இடங்களின் எண்ணிக்கையில் உள்ள உண்மையான வேறுபாடு அதிகரிக்கும். இது தென்னிந்திய மாநிலங்களைப் பாதிக்கும். 2029ஆம் ஆண்டுக்கு முன்பு ஒரு தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission (DC)) இது தொடர்பாக முடிவெடுக்கும்.
சுகாதாரம் மற்றும் கல்வியில் சிறப்பாக முதலீடு செய்து, அதன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதற்காக, தென்னிந்திய மாநிலங்களின் மக்களவை இடங்களைக் குறைத்து, அதன் மூலம் அவற்றின் சார்பு அரசியல் மற்றும் நிதி அதிகாரத்தைக் (fiscal power) குறைப்பது என்பது அந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்டனையாக இருக்க வேண்டுமா? 1991ஆம் ஆண்டு முதல், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற வட மாநிலங்களிலேயே மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
சாத்தியமான தீர்வுகள்
தொகுதி மறுவரையறை தொடர்பான 84வது அரசியலமைப்புத் திருத்தம் (2001) பிரதிநிதித்துவத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் தங்களது நிலைப்பாட்டை அவசரமாக முன்வைக்க வேண்டும். 84வது
திருத்தச் சட்டம், நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையின் மீதான முடக்கத்தை 2000ஆம் ஆண்டிலிருந்து 2026ஆம் ஆண்டு வரை நீட்டித்தது. அது, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை மாநிலங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை மக்களவை இடங்களின் எண்ணிக்கை மாறாமல் இருக்கும் என்று குறிப்பிட்டது.
இதன் காரணமாகவே 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது அக்டோபர் 2028ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதன் பரிந்துரைகள் அறிவிக்கப்படும். வட மாநிலங்களில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிரந்தர அதிகாரத்தை உறுதி செய்துகொள்ளும் இந்த உத்தி, புது டெல்லியிடம் எப்போதும் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
தென்னிந்திய மாநிலங்களுக்கு மாநிலங்களில் ஏற்படும் தொகுதி மறுவரையறையின் நியாயமற்ற விளைவுகளைத் தடுப்பதற்கான தீர்வுகள் என்ன? அதில் நான்கு மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளலாம். முதலாவது வழிமுறை, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய விகிதாசாரப் பங்கீட்டைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களவை இடங்களின் மொத்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எந்த மாநிலமும் தங்களது மக்களவை தொகுதியை இழக்காத வகையில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுபங்கீடு செய்தால், மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 866 ஆக உயரும். இது மிகக் குறைந்த அளவிலான சிக்கல்களையே ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதிக மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட மாநிலங்கள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறும் என்ற சிக்கலுக்கு முழுமையாக தீர்வளிக்காது.
இரண்டாவது வழிமுறை, மக்களவை இடங்களின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாநிலங்களவையிலும் மாநிலங்களிடையே சமத்துவத்தை (அமெரிக்க செனட் சபையில் இருப்பது போல) அறிமுகப்படுத்துவதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே எண்ணிக்கையிலான இடங்களை வழங்க வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 10 இடங்களை வழங்குவது மாநிலங்கவையின் பலத்தை 245-லிருந்து 290-ஆக அதிகரிக்கும். இருப்பினும், ஆளும் கட்சி இதை எதிர்க்கக்கூடும். ஏனெனில், இது மக்களவையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆளும் கட்சியின் திட்டத்தை பலவீனப்படுத்தும்.
மூன்றாவது வழிமுறை, மக்களவையில் எந்த விதமான மாற்றங்களையும் செய்யலாமல், ஒவ்வொரு மாநிலத்திலும் 1,000 மக்களுக்கு ஒரே எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இருக்கும் வகையில், மாநில சட்டமன்றங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும். இது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், குறிப்பாக மாநில அளவில், பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும். இருப்பினும், ஆளும் கட்சி மக்களவையைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதால், இந்த யோசனையை எதிர்க்கக்கூடும்.
இறுதி வழிமுறை, மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை மாறுபட்ட முறையில் பிரிப்பதாகும்: 60% மக்கள் தொகையின் அடிப்படையிலும், 40% மாநிலங்கள் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய விதத்தின் அடிப்படையிலும் பிரிக்க வேண்டும். இது மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு உதவும். இது அனைத்து தென் மாநிலங்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரு பொதுவான நிலைப்பாடாக மாறக்கூடும்.
இது, ஐரோப்பிய நாடாளுமன்றம் 'குறைந்துவரும் விகிதாசார' கொள்கையைப் (Degressive Proportionality principle) பயன்படுத்தி 27 உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் போன்றதாகும். பெரிய நாடுகளுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், ஒரு நபருக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும். அதே சமயம், சிறிய நாடுகளுக்கு இடங்கள் குறைவாகக் கிடைத்தாலும், ஒரு நபருக்கான பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கும். இது அனைவருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது பெரிய நாடுகளின் முழுமையான ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக, மக்கள் தொகை அளவையும் நாடுகளின் சமத்துவத்தையும் சமநிலைப்படுத்துகிறது. இது மக்கள் தொகையின் அளவையும் மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவத்தையும் சமநிலைப்படுத்துகிறது. இதனால் பெரிய நாடுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒவ்வொரு நபருக்கும் ஒரே மாதிரியான வாக்குரிமை அளிப்பதற்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் இது ஒரு முக்கியமான தீர்வாகும். இதன் பொருள், ஒரு பெரிய நாட்டில் அளிக்கப்படும் வாக்கை விட ஒரு சிறிய நாட்டில் அளிக்கப்படும் வாக்கை விட அதிக மதிப்பு கொண்டது என்பதாகும்.
பயன்படுத்தப்பட வேண்டிய கொள்கை
இது, இந்தியாவில் நிதி குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு கொள்கையையும் சார்ந்திருக்கும். நிதி குழுக்கள் நியாயமற்ற தன்மை குறித்த புகார்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களின் நியாயமான புகார் என்னவென்றால், அவை அதிக பங்களிப்பை அளித்தாலும், ஒவ்வொரு நிதி குழுவிடமிருந்தும் காலப்போக்கில் குறைவாகவே பெறுகின்றன. இதைக் கையாள்வதற்காக, நிதி குழுக்கள் நிதியை ஒதுக்கீடு செய்ய பல அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றன. முதல் காரணி வருமான வேறுபாடு ஆகும். 50% முக்கியத்துவம் ஏழை மாநிலங்களுக்கு நிதி அதிகமாக கிடைக்கும். இரண்டாவது காரணி மக்கள் தொகை அளவு ஆகும். இது ஒரு மாநிலம் எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதற்காக, நிதி குழுக்கள் தற்போதைய தேவைகளைக் காட்டுவதற்காக 2011ஆம் ஆண்டு மக்கள்தொகையையும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குப் வெகுமதி அளிப்பதற்காக 1971ஆம் ஆண்டு மக்கள்தொகையையும் பயன்படுத்துகின்றன. நிதி குழு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு வெகுமதி அளிக்க முடியுமென்றால், தொகுதி மறுவரையறை ஆணையத்தால் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? மற்றொரு காரணி மக்கள்தொகை செயல்திறன் ஆகும். இது பிறப்பு விகிதங்களைக் வெற்றிகரமாகக் குறைத்த மாநிலங்களுக்கு வெகுமதி அளிக்கிறது. நான்காவது காரணி வரி வசூல் முயற்சி ஆகும். இது தங்களுக்குரிய வரிகளைச் சிறப்பாக வசூலித்து, பணத்தை பொறுப்புடன் நிர்வகிக்கும் மாநிலங்களுக்கு வெகுமதி அளிக்கிறது. ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை ஆணையத்தை மேற்கொள்வதற்கு முன்பு, தென் மாநிலங்கள் படிப்படியாகக் குறையும் விகிதாசாரக் கொள்கையை ஆதரித்து (Degressive Proportionality principle) ஒன்றிய அரசின் எல்லை நிர்ணய ஆணையத்தை அமைப்பதற்கு முன்பே ஒருமித்த கருத்தை எட்டுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
சந்தோஷ் மெஹ்ரோத்ரா, முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர், ஜே.என்.யு., தற்போது வருகைப் பேராசிரியராக, மாஸ்கோவின் உயர்நிலைப் பொருளாதாரப் பள்ளி.
Original Article : Reimagining delimitation -Santosh Mehrotra