போக்சோ வழக்குகளை விரைவாக முடிப்பது என்பது நியாயமானதல்ல. -ராகுல் வர்மா

 புதிய தரவுகளும் அறிக்கைகளும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகக் குறைந்த உதவியுடன் நீண்ட கால சட்டப் போராட்டங்களை  தொடர்ந்து எதிர்கொண்டு வருவதைக் காட்டுகின்றன.


2025 ஆம் ஆண்டில், இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது. அந்த ஆண்டில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences (POCSO) Act)) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட, விரைவு நீதிமன்றங்கள் அதிக குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை முடித்து வைத்தன. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட 80,320 வழக்குகளுடன் ஒப்பிடுகையில், 87,754 வழக்குகளை முடித்து வைத்ததன் மூலம் அந்த நீதிமன்றங்கள் 109% வழக்குகளைத் தீர்த்து வைக்கும் விகிதத்தை அடைந்தன.


குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு திருப்புமுனையாக வர்ணனையாளர்கள் பாராட்டியுள்ளனர். நீதிமன்றங்கள் தேங்கிக் கிடந்த வழக்குகளைத் தீர்த்துவிட்டதாகக் கூறினர். ஆனால், புதிய தரவுகள் வேறு ஒரு கதையைச் சொல்கின்றன. அதிக வழக்குகள் முடிக்கப்பட்டாலும், தண்டனைகளின் விகிதம் குறைந்து வருகிறது. மேலும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிறிய உதவி இல்லாமல் நீண்டகால வழக்குகளில் சிக்கித் தவிக்கின்றனர்.


2012ஆம் ஆண்டில்  இயற்றப்பட்ட போக்சோ சட்டம், ஒரு சிறப்புச் சட்டமாக வடிவமைக்கப்பட்டது. ஏனெனில், இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) மற்றும் பெண்கள் பாதுகாப்புச் (women’s protection laws) சட்டங்களின் கீழ் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான முந்தைய விதிகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் தனித்துவமான தன்மையை அங்கீகரிக்கத் தவறின. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences (POCSO) Act)), குழந்தைகளுக்கான நட்பான நடைமுறைகள், விரைவான விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வயது வந்தவர்களிடமிருந்து வேறுபட்ட முறையில் நடத்தும் ஒரு அமைப்பு போன்றவற்றை உருவாக்குவதாக உறுதியளித்தது.


அதிக நீதிமன்றங்கள் இருந்தும், தண்டனைகளின் விகிதம் குறைவாகவே உள்ளது


இந்தியாவில் தற்போது 773 விரைவுச் சிறப்புநீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 400 நீதிமன்றங்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட  வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குப் பிறகு, நிர்பயா நிதியிலிருந்து ரூ.1,952 கோடி நிதியுதவியுடன் அக்டோபர் 2019-ல் விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் செப்டம்பர் 2025-ல் 3,50,685 வழக்குகளை முடித்து வைத்துள்ளன. செப்டம்பர் 2025-க்குள், இந்தக் நீதிமன்றங்கள் 3,50,685 வழக்குகளை  முடித்து வைத்துள்ளன. வழக்கமான நீதிமன்றங்களில் மாதத்திற்கு 3.3 வழக்குகள் விசாரிக்கப்படும் நிலையில், இந்த நீதிமன்றங்களில் மாதத்திற்கு 9.5 வழக்குகளைக் கையாளுகின்றன. இருப்பினும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதரவும் குறைவாகவே உள்ளன.


உண்மையில், நாடு முழுவதும் தண்டனைகளின் விகிதம் 2019-ல் இருந்த 35%-லிருந்து 2023-ல் 29% ஆகக் குறைந்துள்ளது. 2019-ல் இருந்த 35% என்ற அடிப்படை விகிதத்தை எடுத்துக்கொண்டால், 2023-ல் 90% வழக்குகள் முடிக்கப்பட்ட நிலையில், தண்டனைகளின் விகிதம் 45% ஆக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக அது 29%-ஆக உள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட 16 புள்ளிகள் குறைவாகவும், 36% பற்றாக்குறையாகவும் உள்ளது. முக்கிய விவகாரம்  என்னவென்றால், வழக்குகளை விரைவாக விசாரிப்பது நீதியை மேம்படுத்தவில்லை அது பலவீனமான தண்டனைகளுக்கே வழிவகுத்துள்ளது. விரைவு நீதிமன்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 19% பேரை மட்டுமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கின்றன. சில மாநிலங்களில், சிறைக்குச் செல்பவர்களை விட விடுதலையாகிச் செல்பவர்களே அதிகமாக உள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படுகினறன.


போக்சோ வழக்குகளில் சாட்சியமளிக்கும் குழந்தைகளுக்கு விரைவான விசாரணைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை விட மேலானவை தேவைப்படுகின்றன. அவர்களுக்குப் பயிற்சி பெற்ற ஆதரவு நபர்கள், வழக்குகளை உணர்வுப்பூர்வமாகக் கையாளும் காவல்துறை, வழக்கறிஞர்கள், மற்றும் விசாரணைக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அல்லாமல், விசாரணை நடைபெறும்போதே இழப்பீடு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்யக்கூடிய குழந்தை நலக் குழுக்கள் தேவை. இந்த பாதுகாப்பு அம்சங்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும்போது, ​​வழக்குகள் விரைவாக முடிக்கப்படலாம். ஆனால், தண்டனைகள் பலவீனமாகவே இருக்கின்றன. அதிலும், இழப்பீடு குறைவாகவே கிடைக்கிறது. மேலும், குழந்தைகள் பெரும்பாலும் உதவியை விட அதிக காயங்களுடன் இந்த அமைப்பிலிருந்து வெளியேறுகிறார்கள்.



ஆனால் இந்தப் போக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது  என்று அட்டவணை எடுத்துக்காட்டுகிறது.


விரைவான விசாரணைகள் நியாயமான தீர்ப்புகளுக்கு வழிவகுக்கவில்லை. விசாரணைகள் விரைவாகவே உள்ளன. குற்றப்பத்திரிகைகள் முழுமையடையாமல் உள்ளன மற்றும் தடயவியல் அறிக்கைகள் தாமதமாகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற அதிக  வழக்குகள் பதிவான மாநிலங்களில் இந்த விகிதங்கள் தெளிவாக தெரிகிக்கின்றன.


சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள இந்த இடைவெளி, போக்சோ சட்டத்தின் பிரிவு 39-இன் கீழ் ஆதரவு நபர்களை நியமிப்பதையும் பாதிக்கிறது. 2021-ல், அனைத்து வழக்குகளிலும் ஆதரவு நபர்களை நியமிப்பதை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது. பின்னர், 2024-ல் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆதரவு நபர்கள், நீண்ட மற்றும் சிக்கலான நீதி செயல்முறையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறார்கள். இருப்பினும், பல மாநிலங்கள் இன்னும் ஆதரவு நபர்களுக்கான அதிகாரப்பூர்வ குழுக்களை உருவாக்கவில்லை. இதன் காரணமாக, பல வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு முன்பே தோல்வியடைந்து விடுகின்றன.


இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய நடைமுறைத் தீர்வுகள் உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆதரவு நபர்களைக் கண்காணிப்பது, ஆய்வக அறிக்கைகளுக்குக் கடுமையான காலக்கெடுவை நிர்ணயிப்பது, பழைய வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக ஒன்றாகக் குழுவாக்குவது, மற்றும் பலவீனமாகச் செயல்படும் மாநிலங்களைக் கண்டறிய தண்டனை விகிதங்கள் குறித்து காலாண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். மத்தியப் பிரதேசத்தில், சிறப்பு நீதிமன்றங்கள் தடயவியல் சோதனைகள் மற்றும் சாட்சி வாக்குமூலங்களின் வேகத்தை மேம்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, மற்ற மாநிலங்களில் இதே போன்ற வழக்குகள் தோல்வியடைந்த நிலையில், இந்த நீதிமன்றங்கள் பல வழக்குகளில் தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளன.


சட்ட உதவி செய்யும் தன்னார்வலர்கள் (para-legal volunteers (PLV)), விடுபட்ட முதல் நிலை பாதுகாப்பு அரண்


டிசம்பர் 2025-ல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்

(Protection of Children from Sexual Offences (POCSO) Act)) சட்டத்தின் வழக்குகளுக்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்ட உதவி செய்யும் தன்னார்வலர்களை (PLV) நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போதைய, நிலை குறித்த அறிக்கை இதில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 919 காவல் நிலையங்களில் 42-ல் மட்டுமே சட்ட உதவி தன்னார்வலர்கள் உள்ளனர். சட்ட உதவி தன்னார்வலர்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயத்துடனும், அழுத்தத்துடனும், புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் தனியாக காவல் நிலையங்களுக்குச் செல்கின்றன. உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், வழக்கை பதிவு செய்ய காவல்துறை ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகப் பல செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டின. அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் தகவல் அறிக்கையை (first information report (FIR)) சில வாரங்களுக்குப் பதிவு செய்யாமல் வைத்திருந்ததுடன், வழக்கை கைவிடுமாறு அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். 2022-ல் உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி காவல் நிலையத்திலேயே மீண்டும் தாக்கப்பட்டார். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலையீட்டிற்குப் பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சட்ட உதவி செய்யும் ஒரு தன்னார்வலர்கள் உதவி தன்னார்வலர் இருந்திருந்தால், இந்த மிரட்டல்களைத் தடுத்திருக்கலாம். அதே, நாளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதை உறுதி செய்திருக்கலாம். மேலும், ஆதாரங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்திருக்கலாம்.


சில சமயங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வயது வந்தவுடன் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தால், நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்துள்ளன. சட்டம் (பிரிவு 6) குற்றவாளியை தெளிவாகக் குற்றவாளி என்று கண்டறிந்தபோதிலும், உயர் நீதிமன்றங்கள் இதை அனுமதித்துள்ளன. இத்தகைய தீர்ப்புகள் பாதிக்கப்படக்கூடிய சிறுமிகளைத் தங்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுடன் வாழ்நாள் முழுவதும் வாழும் சூழலுக்கு தள்ளிவிடுகின்றன.


நீதிமன்றங்கள் எந்த நிலையிலும் இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவிடலாம். குறிப்பாகக், கல்வி அல்லது ஆரோக்கியம் ஆபத்தில் இருக்கும்போது முக்கியமானதாக இருக்கும். ஆனால், பெரும்பாலான நீதிமன்றங்கள் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கவே விரும்புகின்றன. அதற்குள் ஒரு குழந்தையின் கல்விக்கும் குடும்ப வருமானத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பு பெரும்பாலும் சரிசெய்ய முடியாததாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதல் தவணைத் தொகை கிடைக்கிறது. இந்த தாமதங்களுக்காக உயர் நீதிமன்றங்கள் சட்ட உதவி அதிகாரிகளை மீண்டும்

மீண்டும் கண்டித்துள்ளன. இத்தகைய சூழல்களில், இந்த பரிமாற்றங்கள் தங்கள் நோக்கத்தை இழந்துவிடுகின்றன என்று Vidhi மையம் குறிப்பிடுகிறது.


பின்தங்கிய குடும்பங்கள் பயணம் மற்றும் வழக்கறிஞர்களுக்காகப் பணம் கடன் வாங்க வேண்டியுள்ளது. மேலும், அரசு வழங்கும் நிவாரணத்தை விட அன்றாட வாழ்க்கைக்கே அவர்கள் அதிகப் பணம் செலவிடுகின்றனர். தினக்கூலித் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதால் வருமானத்தை இழக்கின்றனர். மேலும், தாய்மார்கள் விசாரணைக்குச் செல்வதற்காகத் தங்கள் வேலைகளை விட்டுவிட சூழல் வேண்டியிருக்கலாம். ஆதரவற்ற நிலையில் நடைபெறும் விரைவு விசாரணைகள், குழந்தைகளுக்கு உதவுவதை விட அதிகத் தீங்கையே விளைவிக்கின்றன.


ராகுல் வர்மா ஒரு சமூகவியலாளர் மற்றும் தன்னார்வஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்தியாவில் கல்வி, தொழிலாளர் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து எழுதுகிறார்.


Original Article : Faster is not fairer in POCSO case clearance numbers -Rahul Verma

Share: