சம்மத வயது குறைக்கப்பட வேண்டுமா? -கார்த்திகே சிங்

 தற்போதைய சட்டம், பருவ வயதுடையோரிடையேயான சம்மதத்துடன் கூடிய உறவுகளை குற்றமாக கருதுகிறது என்று வாதிடுகின்றனர், அதே சமயம் வேறு சிலர் சம்மதத்திற்கான வயதைக் குறைப்பது குழந்தைப் பாலியல் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்புகளை பலவீனப்படுத்தலாம் என்று எச்சரிக்கின்றனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 போக்சோ (Protection of Children from Sexual Offences Act (POCSO)) வழக்குகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த விவாதம், பருவ வயதினரின் சுய நிர்ணய உரிமையை மதிப்பதற்கும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் இடையேயான இறுக்கமான சமநிலையைப் பிரதிபலிக்கிறது.


ஜனவரி மாதம் 10-ஆம் தேதி, உச்சநீதிமன்றம், உத்தரபிரதேச மாநிலம் vs அனிருத் மற்றும் பிறர் வழக்கில், சம்மதத்துடன் கூடிய காதல் உறவுகளில், ஒரு துணைவர் சிறுவராக இருக்கும் இளம் பருவத்தினரிடையே, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (POCSO) சட்டம், 2012 தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டது. உச்சநீதிமன்றம், உண்மையான இளம்பருவத்து காதல்களை சட்டத்தின் கடுமையான பிடியிலிருந்து விலக்குவதற்கு சரியான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியது. இது சம்மத வயது குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.


சட்டக் கட்டமைப்பு


வயது வந்தோரின் ஒப்புதல் என்பது ஒரு நபர் பாலியல் செயல்பாட்டிற்குச் சம்மதிக்கக்கூடிய சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வயதாகும். இந்தியாவில், பாலின-நடுநிலையான போக்சோ (POCSO) சட்டத்தின்மூலம் இந்த வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதிற்குக்கீழ் உள்ள எவரும் “குழந்தை” என்று கருதப்படுவார். மேலும், அவர்களின் ஒப்புதலுக்குச் சட்டப்பூர்வ மதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, சிறார்களுடன் தொடர்புடைய எந்தவொரு பாலியல் செயலும், குழந்தைகள் செல்லுபடியாகும் ஒப்புதலை வழங்க முடியாது என்பதன் அடிப்படையில், சட்டபூர்வமான பாலியல் வன்புணர்வாகவே (statutory rape) கருதப்படுகிறது. போக்சோ (POCSO) சட்டத்தின் பிரிவு 19-ஆனது, இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றம் நிகழ்ந்துள்ளது அல்லது நிகழக்கூடும் என்று அறிந்த அல்லது சந்தேகிக்கும் எவரும் அதைப் பற்றி காவல்துறைக்கோ அல்லது சிறார் சிறப்புக் காவல் பிரிவிடமோ புகாரளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம் (Criminal Law (Amendment) Act, 2013) மூலம், 18 வயது வரம்பு குற்றவியல் சட்டத்தில் உறுதியாக இணைக்கப்பட்டது. "இந்தச் சட்டம், பாலியல் வன்புணர்வை வரையறுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-ஐ திருத்தியது, அந்தப் பிரிவு முன்னர் சம்மதத்திற்கான வயதை 16-ஆக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருத்தங்கள், இந்திய தண்டனைச் சட்டத்தை போக்சோ (POCSO) சட்டத்திற்கு இணையாகக் கொண்டுவரப்பட்டு, சம்மதத்தின் வயதானது  18-ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியது. "பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)), 2023, இந்த அணுகுமுறையைத் தொடர்கிறது: சட்டப்பிரிவு 63, பெண்ணின் சம்மதத்துடன் அல்லது சம்மதம் இல்லாமலோ நிகழும் பாலியல் ரீதியான செயல்களை, அந்தப் பெண் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், அதைப் பாலியல் வன்கொடுமையாக இந்தச் சட்டத் திருத்தம் வரையறுக்கிறது.


இந்தியாவில் சம்மத வயது (Age of Consent) காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 10 வயதாக இருந்தது, 1891-ஆம் ஆண்டில்  12-ஆகவும், பின்னர் 14-ஆகவும், அதன் பிறகு 16-ஆகவும் உயர்த்தப்பட்டு, 2012-ஆம் ஆண்டு போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ்  18-ஆக உயர்த்தப்பட்டது. சம்மத வயதானது, குறைந்தபட்ச திருமண வயதிலிருந்து தனிப்பட்டது. குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006-ன்கீழ், திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21 என்று வரையறுக்கப்பட்டது.


ஆதரவான வாதங்கள்


சமீபத்திய ஆண்டுகளில், சம்மத வயது (Age of Consent) குறித்த விவாதம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்குகள் அதிகத்துள்ளதுதான் என்கின்றனார். இந்த வழக்குகளில் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்களே “எங்கள் உறவு சம்மதத்தோடு தான் நடந்தது” என்று சொல்கிறார்கள். தற்போதைய சட்டம் 16–18 வயது இளைஞர்களின் பாலியல் உணர்வுகளை முழுமையாக புறக்கணிக்கிறது. அவர்களுக்கு முதிர்ச்சியான சம்மதம் கொடுக்கும் திறன் (autonomy) இருக்கிறது, அதை சட்டம் மதிப்பதில்லை என்கின்றனர். போக்சோ (POCSO) சட்டம் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது என்றும் வளர்ந்த இளம் வயதினருக்கிடையேயான சம்மதத்துடனான உறவுகளை குற்றமாக்குவதற்காக அல்ல என்றும் சம்மத வயதை 18-லிருந்து குறைக்க வேண்டும் என்று  வாதிடப்படுகிறது.


‘சிறார்களின் பாலியல் நடத்தை ’ நிலைமைகளை பிரதிபலிக்கும் வகையில், NFHS-4 (2015-16) காட்டுவது என்னவென்றால், 11% பெண்கள் 15 வயதுக்கு முன்பும், 39% பெண்கள் 18 வயதுக்கு முன்பும் முதல் பாலியல் அனுபவத்தைப் பெற்றிருந்தனர், Enfold ஆய்வு ஒன்று (2016-2020 காலகட்டத்தில் அசாம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 7,064 POCSO தீர்ப்புகளை ஆய்வு செய்தது) கண்டறிந்தது: அவற்றில் 24.3% வழக்குகள் காதல் உறவுகளை உள்ளடக்கியவை ஆகும்; அத்தகைய வழக்குகளில் 82% பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்துவிட்டனர்.அதே மாநிலங்களில் POCSO சட்டத்தின் பிரிவு 6 (தீவிர ஊடுருவும் பாலியல் வன்கொடுமை) கீழ் 264 வழக்குகளை Enfold-Project 39A ஆய்வு செய்தபோது, 25.4% வழக்குகள் ஒப்புதலுடன் கூடிய உறவுகளை உள்ளடக்கியவை என கண்டறியப்பட்டது.எனவே, பலர் மிகவும் நுணுக்கமான சட்ட அணுகுமுறையை வலியுறுத்துகின்றனர் – 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஒப்புதலை மதிக்கும் அதே வேளையில், கட்டாயப்படுத்துதல், சுரண்டல் அல்லது அதிகார மீறலுக்கு எதிரான பாதுகாப்புகளை உறுதி செய்யும் ஒரு அணுகுமுறை. அவர்கள் பாலியல் கல்வி, உறவுகள் மற்றும் ஒப்புதல் குறித்து தகவலறிந்த, திறந்த விவாதத்தை நோக்கி உரையாடலை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் – முழுமையான குற்றமாக்குதலுக்குப் பதிலாக, ஏனெனில் அது பெரும்பாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. பல மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் ஒப்புதல் வயது 16 ஆகும், கட்டாயப்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பாதுகாப்புகளுடன். யுகே, கனடா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ‘வயது நெருக்கமுள்ள விலக்குகள்’ (close-in-age exemptions) அல்லது ‘ரோமியோ-ஜூலியட் உட்பிரிவு’ (Romeo-Juliet clause) அங்கீகரிக்கின்றன – இதன்மூலம் சிறிது வயதான சக உறவினர்களுடன் ஒப்புதலுடன் கூடிய உறவில் ஈடுபடும் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.


சவால்கள் 


"சம்மத வயது" வரம்பைக் குறைப்பது குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இவ்வாறு செய்வதால், இருக்கும் சட்டப் பாதுகாப்புகள் வலுவிழந்துவிடும் என்றும், மனிதக் கடத்தல் மற்றும் மற்ற வகையிலான குழந்தை அத்துமீறல்களை "சம்மதத்துடன் நடந்தது" என்று கூறி நியாயப்படுத்த வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர். தற்போதுள்ள "தெளிவான வரையறைக் கொள்கை" (Bright-line rule) - அதாவது, 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் பாலியல் சம்மதம் கொடுக்க இயலாதவர்களாகக் கருதுவது - என்பது, போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ் சிறார்களுக்கு உறுதியான, தெளிவான பாதுகாப்பை வழங்க சட்டமியற்றுபவர்களின்  தெளிவான நோக்கத்தைக் காட்டுகிறது. 


இந்தக் கொள்கை, ஒரு தெளிவான மற்றும் பொதுவான தரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தனிப்பட்ட நபரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாறுபடும் விளக்கங்களைத் தவிர்க்கிறது. வயதைக் குறைப்பதை எதிர்ப்பவர்கள், பருவ வயது  சம்மத உறவுகள் சம்பந்தப்பட்ட அரிதான வழக்குகளில் நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட “வழிகாட்டப்பட்ட நீதித்துறை விருப்பத்தை” பயன்படுத்தலாம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அத்தகைய விதிவிலக்குகளை சட்டத்தில் முறையாகச் சேர்ப்பதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.



மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார்கள், ஆசிரியர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் போன்ற நபர்களால், அதாவது, அக்குழந்தைக்குத் தெரிந்த மற்றும் நம்பிக்கையான நபர்களால் செய்யப்படுகிறது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் 2007-ஆம் ஆண்டு ஆய்வின்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைக்குத் தெரிந்தவர்களாகவே இருந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளில், குழந்தைகள் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான பலம் அல்லது அத்துமீறலை எதிர்க்கவோ அல்லது புகாரளிக்கவோ இயலாத நிலையில் உள்ளனர், இதனால் சம்மதம் என்ற எந்தவொரு கூற்றுக்கும் அர்த்தமில்லாமல் போகிறது. சட்டத்தை பலவீனப்படுத்துவது வற்புறுத்தலை இயல்பாக்குவதோடு, புகாரளிப்பதைத் தடுத்து, குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ கடமைகளுக்கு எதிராகச் செல்லும் என்று எச்சரிக்கின்றனர். சம்மத வயதைக் குறைப்பது, இளைஞர்கள் உணர்ச்சிரீதியாக முழுமையாக முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அவர்களை பாலியல் செயல்பாடுகளுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


சம்மத வயதைக் குறைப்பதற்கான சட்டமுன்மொழிவுகளை நாடாளுமன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. நீதிபதி வர்மா குழு (Justice Verma Committee) இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-ன் கீழ் அதனை 16-ஆகவே தொடர் வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், போக்சோ சட்டத்துடன் (POCSO Act) பொருந்தும் வகையில், 2013-ஆம் ஆண்டில் சம்மத வயதை 18-ஆக உயர்த்த நாடாளுமன்றம் தீர்மானித்தது. நாடாளுமன்ற மனிதவள மேம்பாட்டுக் குழு (Parliamentary Standing Committee on Human Resource Development), அதன் 240-வது அறிக்கையில் (2011), சிறார்களின் சம்மத வயதை அங்கீகரிக்கும் கருத்தை நிராகரித்ததுடன், விருப்பமோ அல்லது முதிர்ச்சியோ சட்டபூர்வமான சம்பந்தமற்றது (legal relevance) என்றும் குறிப்பிட்டது. உள்துறை நிலைக்குழுவின் (Standing Committee on Home Affairs) 167-வது அறிக்கையும் (2012) சம்மத வயதை 18-ஆக உயர்த்துவதை ஆதரித்ததோடு எந்தவொரு ‘நெருங்கிய வயது விதிவிலக்கு’ நடவடிக்கைகளும் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. 


 சமீபத்தில், சட்ட ஆணையத்தின் (Law Commission’s) 283-வது அறிக்கை (2023), ஒப்புதல் வயதைக் குறைப்பது போக்சோ சட்டத்தை வெறும் “காகிதச் சட்டமாக” (paper law) மாற்றிவிடும் என்றும், குழந்தை திருமணம், விபச்சாரம் மற்றும் ஆட்கடத்தலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.


சட்ட ஆலோசனை


சட்டத்தை கடுமையாகப் பயன்படுத்த நீதிமன்றங்கள் பெரும்பாலும் சிரமப்படுகின்றன, ஏனெனில் சில சூழ்நிலைகளில், அது யாரைப் பாதுகாக்க நோக்கம் கொண்டதோ, அவர்களுக்கே தீங்கு விளைவிக்கும் என்பதை அவை ஒப்புக்கொள்கின்றன. மாநிலம் vs ஹித்தேஷ் (2025) (State versus Hitesh (2025)) வழக்கில், இளம்பருவ உறவுகள் குறித்த சமூக மற்றும் சட்டப்பூர்வ கண்ணோட்டங்கள், சுரண்டல் அல்லது துஷ்பிரயோகம் இல்லாத, சம்மதத்துடன் கூடிய காதல் உறவுகளில் இளைஞர்களின் உரிமையின்மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும், அத்தகைய உறவுகளை மதிக்க சட்டம் மாற்றப்பட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதேபோல், ஆஷிக் ராம்ஜி அன்சாரி vs மகாராஷ்டிரா மாநிலம் (2023) (Ashik Ramjaii Ansari versus State of Maharashtra (2023))  வழக்கில், பாலியல் சுயநிர்ணயம் என்பது சம்மதத்துடன் கூடிய உறவு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு ஆகிய இரண்டிற்குமான உரிமைகளை உள்ளடக்கியது என்றும், இவை இரண்டையும் அங்கீகரிப்பது மனித கண்ணியத்திற்கு அவசியமானது என்றும் பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இருப்பினும், முகமது ரஃபாயத் அலி vs டெல்லி மாநில வழக்கில், போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவருக்கு 18 வயதுக்கு குறைவாக இருந்தால், சம்மதம் சட்டப்படி ஏற்கதக்கது அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக, 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி, 14 வயது சிறுமி சம்பந்தப்பட்ட POCSO வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்த கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், போக்சோ (POCSO) சட்டம் சிறுவர்களுடன் அவர்களது இருதரப்பு சம்மதத்துடன் உடலுறவு கொள்வதை அங்கீகரிக்கவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேநேரத்தில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-இன்கீழ் உள்ள தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, குற்றத்தை நிரூபித்த போதிலும், உச்சநீதிமன்றம் தண்டனை விதிக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்த சம்பவத்தை சிறுமி ஒரு குற்றமாகக் கருதவில்லை என்றும், சட்ட நடவடிக்கையால் அவர் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதே வேளையில், இந்த முடிவு ஒரு முன்மாதிரியாக  கருதப்படக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தியது.


சமீபத்தில், ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு , உச்சநீதிமன்ற விசாரணையின் போது, ​​நீதிபதி பி.வி. நாகரத்னா அவர்கள், பெரும்பான்மை வயதை நெருங்கிய நபர்களுக்கு இடையேயான காதல் உறவுகள் வேறுவிதமாகப் பார்க்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். பெற்றோர் ஒரு காதல் திருமணத்தை எதிர்க்கும் வகையில் புகார் அளிக்கும்போது, ஒரு சிறுவன் போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவதால் ஏற்படும் மன உளைச்சலை நீதிபதி சுட்டிக்காட்டினார்.


முன்னால் உள்ள பாதை


சட்டப்படி சம்மத வயது வரம்பை மாற்றுவது பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வந்தாலும், சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இடையே வளர்ந்து வரும் வேறுபாடுகளை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். இதன்மூலம், புலனாய்வு அமைப்புகளும், கீழ் நீதிமன்றங்களும் ஒரு சீரான அணுகுமுறையைப் பின்பற்ற முடியும் என்கின்றனர். அதே நேரத்தில், சட்டத்தின் மூலம் மட்டுமே வளரிளம் பருவத்தினரின் சிக்கலான யதார்த்தங்களைக் கையாள முடியாது என்றும் கூறப்படுகிறது. உண்மையான மாற்றம் என்பது முறையான பாலியல் கல்வி, வளரிளம் பருவத்தினரின் சுயாட்சிக்கு மரியாதை அளித்தல், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான எளிதான அணுகல், பாலின உணர்திறன் கொண்ட காவல் துறை அணுகுமுறை, மற்றும் ஆதரவான சமூக சூழல்—குறிப்பாக குடும்ப எதிர்ப்பை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கான ஆதரவான சூழல்—போன்ற ஒரு முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியது."


என்ஃபோல்ட் (Enfold) போன்ற ஆய்வுகளின் தரவுகள் காட்டுவது என்னவென்றால், பல வழக்குகள் சம்மதத்துடன் ஏற்படும் உறவுகளிலிருந்து உருவாகின்றன. ஆனால், பெற்றோர் சம்மதிக்காதபோது, அவர்கள் இவற்றைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் நீதிமன்றங்களுக்கு அதிகச் சுமை ஏற்படுவதுடன், அடிப்படைப் பிரச்சினைகளான மோசமான பாலியல் கல்வி மற்றும் சந்திப்புகள் (Dating) தொடர்பான கலாச்சாரத் தடைகள் போன்றவற்றைக் கவனிக்காமல், அமைப்பின் மீதான நம்பிக்கையும் பலவீனமடைகிறது. இங்குள்ள முக்கியப் பிரச்சினை, சம்மதத்தின் வயது 18-ஆக இருக்க வேண்டுமா அல்லது 16-ஆக இருக்க வேண்டுமா என்பது மட்டுமல்ல, மாறாக, சம்மதத்துடன் கூடிய இளம் பருவத்தினரின் உறவுகளைப் பாலியல் சுரண்டல்களிலிருந்து சட்டமானது எப்படித் தெளிவாக வரையறுக்க முடியும் என்பதே முக்கியம். வயது வரம்பை மொத்தமாகக் குறைப்பது, குழந்தைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தலாம்; அதே நேரத்தில், இப்போதுள்ள இந்தப் பொதுவான விதி, சம்மதத்துடன் உறவில் இருக்கும் இளைஞர்கள் நியாயமற்ற முறையில் குற்றவாளிகளாக்கப்படுவதாகத்  தெரிவிக்கின்றனர்.


குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பரந்த சட்டத் தளர்வு கொடுப்பதற்குப் பதிலாக, நடைமுறைச் சீர்திருத்தம் தேவை. இதில் 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு (3 முதல் 4 ஆண்டுகள் வயது இடைவெளியுடன்) 'நெருங்கிய வயதுடையவர்கள்' என்ற விலக்குகள், ஒவ்வொரு வழக்கிலும் கட்டாய நீதித்துறை ஆய்வு, மற்றும் சம்மதம், ஆரோக்கியமான உறவுகள், மற்றும் மனநல ஆரோக்கியம் குறித்த வலுவான பள்ளி கல்வி ஆகியவை ஆகும். இந்த அணுகுமுறை இளைஞர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைக் குறைக்கும், அதேவேளையில் அதிக விழிப்புணர்வு மற்றும் ஆதரவு உள்ள சமூகத்தை உருவாக்க உதவும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


கார்த்திகே சிங், புது டெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர்.


riginal Article : Should the age of consent be lowered? -Kartikey Singh

Share: