பௌத்த மதத்தின் வரலாறு மற்றும் தோற்றம் பற்றி. -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


—  கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' உரையில் இந்த இடத்தைக் குறிப்பிட்டுப் பேசினார், மேலும் ஜம்மு காஷ்மீரின் கலாச்சார பாரம்பரியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.


— அகழ்வாராய்ச்சி இயக்குநர் டாக்டர் முகமது அஜ்மல் ஷா, இந்தக் அகழ்வாய்வு கட்டமைப்புகள் குஷாணர் காலத்தைச் சேர்ந்தவை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.


— காஷ்மீரைப் பற்றி எழுதிய பல எழுத்தாளர்கள் இந்த இடத்தைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இது குறித்து ஆழமான ஆய்வுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. இது ஒரு தொல்பொருள் தளம் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், ஆராயப்படாமலேயே இருந்தது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பீடபூமி போலவும், ஒரு 'ஸ்தூபி'யை (Stupa) போன்றும் காட்சியளிக்கிறது. காலப்போக்கில் இங்குள்ள மண்மேடுகள்  சிதைவடைந்திருந்தாலும், அவை இன்னும் தெளிவாகவே தெரிகின்றன. 1970-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு பிறகு ஒரு கால்வாய் இந்தத் தளத்தை இரண்டாகப் பிரித்துள்ளது.


— கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் மத்திய ஆசிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் இணைந்து இந்த இடத்தைப் வரைபடமாக்கத் (mapping) தொடங்கினர். இந்தத் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி செய்யத் திட்டமிட்டு வந்தனர்; மேலும், அங்குள்ள மண் மேடுகளுக்கு மேல் ஒரு காலத்தில் மரத்தாலான மேற்கட்டுமானம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.


— இந்த பீடபூமி மிகப்பெரியதாக இருப்பதால், அகழ்வாராய்ச்சிப் பணிகள் திட்டமிட்ட மூன்று ஆண்டுகளைவிட அதிக காலம் எடுக்கும் என்கின்றனர். இருப்பினும், காஷ்மீர் வழியாகச் சென்ற வணிகப் பாதைகள் மற்றும் இப்பகுதியில் பௌத்த மதம் பரவிய விதம் பற்றி நாம் நன்கு புரிந்துகொள்ள இந்த தளம் பெரிதும் உதவும் என்கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள வேறு எந்தத் தொல்லியல் தளமும் செஹன்போரா (Zehanpora) தளத்தைப் போலப் பெரியது அல்ல என்றும் இங்குள்ள பல மேடுகள்  இன்னும் சேதமடையாமல் அப்படியே உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.  இவை இப்பகுதியின் வரலாறு குறித்த மிகமுக்கியமான தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


— மௌரிய மன்னர் அசோகரின் ஆட்சிக் காலத்தில்தான் காஷ்மீரீல் பெளத்தம் பரவியதாக பொதுவாக நம்பப்படுகிறது.  இருப்பினும், அசோகருக்கு முன்பே காஷ்மீரில் பெளத்தம் இருந்ததாக கலஹணரின் 'ராஜதரங்கிணி' (Rajatarangini) நூல் குறிப்பிடுகிறது. மற்றொரு ஆதாரமான 'மகாவம்சம்' (Mahavamsa), பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற பௌத்த மாநாட்டிற்கு காஷ்மீரிலிருந்து பௌத்த அறிஞர்களை அசோகர் அழைத்ததாகக் கூறுகிறது. 


— பல்வேறு பெளத்த மதத்தின் பிரிவுகளிடையே தத்துவார்த்த விவாதங்கள் மற்றும் குஷாண ஆட்சியாளர்களின் (குறிப்பாக கனிஷ்கரின்) ஆதரவின் மூலம், பெளத்த மதம் காஷ்மீரில் வலுவான இடத்தைப் பிடித்தது. இதன் விளைவாக, இப்பகுதியில் ஏராளமான மடங்கள், விஹாரங்கள் மற்றும் ஸ்தூபிகள் நிறுவப்பட்டன.


— காஷ்மீரில் பௌத்த மதத்தின் வளர்ச்சியை ராஜதரங்கிணி (Rajatarangini) நூலில் உள்ள குறிப்புகள் மூலம் அறியலாம். அந்தப் பகுதியில் மன்னர் சுரேந்திரர் பல மடாலயங்களைக் கட்டியதாக அந்த நூல் குறிப்பிடுகிறது. மேலும், இந்தோ-கிரேக்க ஆட்சியாளரான மெனாண்டர் (Menander) மற்றும் துறவி நாகசேனர் ஆகியோருக்கு இடையே பௌத்தம் குறித்து நடந்த புகழ்பெற்ற உரையாடல் காஷ்மீரில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. இந்த விவாதங்கள்அங்கு பௌத்த மதம் மேலும் வலுப்பெற உதவியதாகக் கூறப்படுகிறது.


— பிற்காலத்தில், குஷாண மன்னர்களின் ஆதரவுடன் பௌத்த நடைமுறைகள் விரிவடைந்தன. அக்காலகட்டத்தில், காஷ்மீரில் மகாயான பௌத்தம் வேரூன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரிவு பின்னர் பௌத்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்து, காஷ்மீரத் துறவிகளின் வழியாக சீனா மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.


— காஷ்மீரின் பௌத்த பாரம்பரியத்திற்கான சான்றுகள் வரலாற்று நூல்கள் மற்றும் தொல்பொருள் சிதைவுகள் ஆகிய இரண்டிலும் தெளிவாகக் காணப்படுகின்றன. இப்பகுதி முழுவதும் உள்ள பல இடங்கள் பௌத்தம் இருந்ததற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ளன.


— வடக்கு காஷ்மீரில் கனிஸ்போரா (Kanispora), உஷ்கூர் (Ushkur), செஹன்போரா (Zehanpora) மற்றும் பரிஹாஸ்போரா (Parihaspora) உள்ளிட்ட பல முக்கியமான பௌத்த தளங்கள் உள்ளன. அதே நேரத்தில், மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹர்வான் (Harwan) ஒரு முக்கியமான பௌத்த வளாகமாகத் திகழ்கிறது.


— தெற்கு காஷ்மீரில் செம்தன் (Semthan), ஹுட்முர் (Hutmur), ஹோய்னார் (Hoinar) மற்றும் குட்பால் (Kutbal) போன்ற குறிப்பிடத்தக்க பௌத்த மத இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் கலைப்பொருட்கள் மூலம் காஷ்மீரின் செழுமையான பௌத்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. இவற்றை மேலும் ஆராய்ச்சி செய்யவும், பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.


உங்களுக்குத் தெரியுமா:


— நான்காவது பௌத்த மாநாடு கனிஷ்கரால் காஷ்மீரில் நடத்தப்பட்டது; இதற்கு அறிஞர் வசுமித்திரர் தலைமை தாங்கினார், அஸ்வகோஷர் ஒரு முக்கிய பங்கேற்பாளராக இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


— கருணை, போதிசத்துவ கொள்கை மற்றும் அனைவருக்கும் விடுதலை (நிவாரணம்) ஆகியவற்றை வலியுறுத்தும் மஹாயான பௌத்தத்தை ஒருங்கிணைப்பதிலும் பரப்புவதிலும் இந்தச் சபை மிக முக்கியமான பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.



இடம்

ஆதரவு

முதல் பௌத்த சபை

ராஜ்கிர்

அஜாதசத்ரு

இரண்டாவது பௌத்த சபை

வைஷாலி

கலாஷோகா

மூன்றாவது பௌத்த சபை

பாடலிபுத்ரா

அசோகா

நான்காவது பௌத்த சபை

காஷ்மீர்

கனிஷ்கா



Original Article : About the history and origin of Buddhism. -Roshni Yadav

Share: