வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் தொடரும் கண்ணாமூச்சி விளையாட்டு. -ஜீன் டிரெஸ்

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்குப் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) பதிலாக விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத சட்டத்தைக் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) VB-G RAM G)) கொண்டுவர வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் சமீபத்திய வாதங்களில் வலுவான காரணங்கள் இல்லை. 


விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் சட்டம் (VB-G RAM G Act), கடந்த சில வாரங்களாகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இருப்பினும், மத்திய அரசுடன் தொடர்புடைய ஒருசில விமர்சகர்கள் இதற்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். ஆனாலும், அவர்களுடைய வாதங்களை கூர்ந்து ஆராய வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர்.


மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இரண்டு செய்தித்தாள் கட்டுரைகள் வாயிலாக இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக அரசின் தரப்பு நியாயங்களை முன்வைத்தார். இது பொதுவிவாதத்திற்கு உதவியாக இருந்தபோதிலும், முன்வைக்கப்பட்ட வாதங்கள் வலுவற்றவையாக உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் (MGNREGA) போலவே, இந்த விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் ('VB-G RAM G') சட்டமும் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது என்றும், ஆனால் இதில் 100 நாட்களுக்குப் பதிலாக 125 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது என்றும் சவுகான் கூறினார். இருப்பினும், இந்த வாதமானது சட்டத்தின் பிரிவு 5(1)-ஐப் புறக்கணிக்கிறது. அந்தப் பிரிவின்படி, எந்தெந்த கிராமப்புற பகுதிகளில் இந்த வேலை உறுதித் திட்டம் பொருந்தும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கும்போது, அது 'வேலைக்கான உரிமை' என்ற அடிப்படை நோக்கத்தையே இந்த நடைமுறை சிதைப்பதாக அமைகிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர். 


இந்த உத்தரவாதம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், வேலை நாட்களை 125-ஆக உயர்த்துவதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) மூலமாகவே செய்திருக்க முடியும்; இதற்கு புதிய சட்டத்திருத்தம் ஏதும் தேவையில்லை. எனவே, இதைக் காரணமாகக் காட்டி விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் 'VB-G RAM G' சட்டத்தைக் கொண்டு வருவது நியாயமற்றது. சொல்லப்போனால், சில மாநிலங்கள் ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் (MGNREGA) 125 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை வழங்கி வருகின்றன.


இந்தியாவின் ‘வேலை செய்யும் உரிமையை’ திட்டமிட்டு சிதைத்தல்.

உரிமைப் பறிப்பு விவகாரம்


விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத (VB-G RAM G) சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) கட்டுப்படுத்தவில்லை என்றும், மாறாக அதை விரிவுபடுத்துகிறது என்ற வாதத்தை ஆதரிப்பதற்காக, புதிய சட்டத்தில் முன்பு இருந்த 'உரிமை மறுப்பு விதிகள்' (disentitlement provisions) நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சவுகான் குறிப்பிட்டார். இருப்பினும், இன்னும் இது குறித்து தெளிவாக விளக்கப்படாததால், அரசு தரப்பில் இருந்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) உருவாக்கப்பட்டபோது, மக்கள் வேலை செய்யும் எண்ணம் இல்லாமலேயே விண்ணப்பிக்கக்கூடும் என்று ஒரு சிக்கல் இருந்தது. சிலர் வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக, அரசாங்கம் வழங்கும் வேலையின்மை உதவித்தொகையை (Unemployment Allowance) பெறுவதற்காக இப்படிச் செய்யலாம் என்று கருதப்பட்டது. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க, ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டது. அதாவது, ஒருவர் வேலை கேட்டு விண்ணப்பித்து, அவருக்கு வேலை வழங்கப்பட்டும் அதை அவர் மறுத்தால், அடுத்த மூன்று மாதங்களுக்கு வேலையின்மை உதவித்தொகை பெற அவர் தகுதியற்றவர் ஆவார். இது ஒரு சாதாரண பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே என்பதால் இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த நிபந்தனை, "குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேலையின்மை உதவித்தொகை பெறுவதற்கான உரிமையை இழத்தல்" (Disentitlement to receive unemployment allowance in certain circumstances) என்று அழைக்கப்பட்டது.


கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் முடிவுரை


தேவையில்லாத அல்லது   வீணடிக்கப்படும் வேலை விண்ணப்பங்கள் ஒரு பெரிய பிரச்சனையே அல்ல என்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் பெரிய அளவில் நடந்ததே இல்லை என்றும் தகுதியற்றவர்களை நீக்கும் அந்த விதிமுறை (disentitlement clause) இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை என்றும் அந்த நடைமுறை உண்மையில் பயனற்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு, பின் அந்த வேலைவாய்ப்பை மறுப்பவர்களுக்கு வேலையில்லா காலநிவாரணத்தை (unemployment benefits) மறுக்கும் தனி விதிமுறை மிகவும் பயனுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. எனவே, விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத சட்டத்தில் ('VB-G RAM G') அந்தப் பழைய விதிமுறை இல்லாதது ஒரு பெரிய விஷயம் அல்ல என்றும் கூறப்படுகிறது. உழைக்கும் தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய பலன்களைப் பறிக்கும் விதிகளை இந்தச் சட்டம் நீக்கிவிட்டது என்று சவுகான் கூறுவது ஆதாரமற்றது என்று வாதிடுகின்றனர்.


நெறிமுறை சார்ந்த நிதி ஒதுக்கீடு


விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டத்திற்கு (VB-G RAM G) ஆதரவாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் சௌமியா காந்தி கோஷ் கூறுகையில், ‘தேவை அடிப்படையிலான நிதி’ (demand-driven) முறையிலிருந்து ‘நெறிமுறை சார்ந்த நிதி’ (normative funding) முறைக்கு மாறியிருப்பது குறித்து விளக்குகிறார். இருப்பினும், இந்த மாற்றமானது 'வேலைவாய்ப்பு உறுதி' (employment guarantee) என்ற கொள்கையைக் கைவிடுகிறது என்றும் வேலைவாய்ப்பு என்பது உண்மையிலேயே ஒருவருக்கு உறுதி அளிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால், அதற்கான நிதி ஒதுக்கீடு மக்களின் வேலைத் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டும். ஆனால், இத்திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி வரம்பிற்கு மேல் பெரும்பாலான மாநிலங்கள் செலவு செய்யாது என்ற அணுகுமுறை உள்ளது. இந்த ‘நெறிமுறை ஒதுக்கீடுகள்’ உண்மையில் நிதிக்கான உச்சவரம்பாக (budget ceilings) மாறக்கூடும் என்கின்றனர். அதாவது, வழங்கப்பட்ட நிதிக்கு  மேல் கூடுதல் செலவீனங்களுக்கான நிதி கிடைக்காது என்ற நிலை உருவாகும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (VB-G RAM G) கொண்டுவரப்படுகிறது: இது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, அரசு கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கொள்கைகளையும் மீறுகிறது.


நெறிமுறை சார்ந்த நிதி ஒதுக்கீட்டை (Normative funding) ஆதரிப்பவர்கள், இந்த நிதி வரம்புகளை ஒரு சாதகமான அம்சமாகவே முன்வைக்கின்றனர். தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) நிதி ஒதுக்கீடு வசதி படைத்த மாநிலங்களுக்கே சாதகமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, புதிய வரம்புகள் கொண்டு வரப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், மாநிலங்களின் வறுமை நிலைக்கும் அல்லது தனிநபர் வருமானத்திற்கும், அங்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அளவிற்கும் இடையே தெளிவான புள்ளியியல் தொடர்பு ஏதுமில்லை என்றும் சத்தீஸ்கர் போன்ற ஏழ்மையான மாநிலங்களிலும், தமிழ்நாடு போன்ற ஒப்பீட்டளவில் வசதியான மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல், பீகார் போன்ற வசதி குறைந்த மாநிலங்களிலும், குஜராத் போன்ற வசதிபடைத்த மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது.


இருப்பினும், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற ஏழ்மையான மாநிலங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் அதிக வேலைவாய்ப்புகளையும் நிதி ஒதுக்கீட்டையும் பெறுவது அவசியமானது. ஆனால், நிதி ஒதுக்கீட்டில் உச்சவரம்பு விதிப்பதோ அல்லது மாநிலங்கள் செலவைப் பகிர்ந்து கொள்ளச் சொல்வதோ போன்ற நடவடிக்கைகள் இதற்குப் பொருந்தாது என்று வாதிடுகின்றனர். மாறாக, வசதி குறைந்த மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கான தினக்கூலியை உயர்த்துவது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் வலியுறுத்தபடுகிறது. இந்த நடைமுறையானது நீண்டகாலத்திற்கு முன்பே செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே ஒரு துணிச்சலான மற்றும் நம்பிக்கையூட்டும் திட்டமாகும். சிறப்பாக நிர்வகிக்கப்படும் சில இந்திய மாநிலங்கள், மற்ற மாநிலங்களைவிட இந்தத் திட்டத்தை மிகவும் பயனுள்ள முறையில் செயல்படுத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியாவில் உள்ள மதிய உணவுத் திட்டம் மற்றும் மகப்பேறு நலத்திட்டங்கள் போன்ற பல சமூக நலத் திட்டங்கள், முதலில் தென்னிந்தியாவில்தான் தொடங்கப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) தற்போது தென்னிந்தியாவில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்காக அதன் நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கவோ தேவையில்லை. மேலும், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்றும் இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) சுமார் 0.25% மட்டுமே என்றும் தெரிவிக்கின்றனர்.



தேவையற்ற வாதங்கள்


விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (VB-G RAM G) ஊழலைக் குறைக்கும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டத்தில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகத் தணிக்கை (Social Audit) முறைகள் பெரும்பாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் (MGNREGA) இருப்பதைப் போலவே தான் உள்ளன. இந்தப் புதிய சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இதில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலேயே ஏற்கனவே டிஜிட்டல் கருவிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல நேரங்களில், இத்தகைய தொழில்நுட்பங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பலவீனப்படுத்தியுள்ளன, திட்டத்தின் மீதான அவர்களின் ஆர்வத்தைக் குறைத்துள்ளன, மேலும் ஊழல் பெருகவும் வழிவகுத்துள்ளன. உதாரணமாக, 2017-ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் ஊதியம் தவறாக ஏர்டெல் வேலட்டுகளுக்கு (Airtel Wallets) மாற்றப்பட்டது போன்ற தொழில்நுட்பப் பிரச்சினைகளை அவர்கள் மீண்டும் மீண்டும் சந்திக்கும்போது, அவர்கள் சட்டப்படி நடப்பதைக் கைவிட்டு விடுகிறார்கள்.

அதற்குப் பதிலாக, ஊழல் செய்யும் இடைத்தரகர்களுடன் கைகோர்க்கிறார்கள். இந்த இடைத்தரகர்கள் தொழிலாளர்களின் வேலை அட்டைகளையும் (Job Cards) வங்கிச் கணக்குகளையும் தவறாகப் பயன்படுத்தி, பணத்தைக் கையாடல் செய்து அதில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கிறார்கள். இத்தகைய சிக்கல்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (VB-G RAM G)எந்த நடைமுறை சீரமைப்புமின்றி மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையே முழுமையாக நம்பியிருக்கிறது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஆதரவாக, இந்திய அரசிற்கு எழுதப்பட்ட ஒரு திறந்த  கடிதம்.


நான் விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டத்தை ஆதரிப்பவர்களின் முக்கியமான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு நேர்மையாக நடக்கவே முயற்சி செய்தேன். ஆனால், அவர்களில் சிலர் பழைய கருத்துக்களையும் தவறான வாதங்களையுமே முன்வைக்கின்றனர். உதாரணத்திற்கு, ஏற்கனவே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சட்டத்தில் உள்ள அம்சங்களை அப்படியே நகலெடுத்தோ அல்லது சிறு மாற்றங்கள் செய்தோ உருவாக்கிவிட்டு, அவை இந்த புதிய சட்டத்தின் சிறப்பம்சங்கள் என்று கூறுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா, 'வாரம் ஒருமுறை சம்பளம் வழங்க வேண்டும்' என்ற விதிமுறை மூலம் இந்தச் சட்டம் தாமதமான ஊதியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகக் கூறுகிறார். ஆனால், இந்த விதிமுறை ஏற்கனவே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ளது. அதேபோல், அமைச்சர் சௌகான் அவர்கள் இந்தச் சட்டத்தின் 20-வது பிரிவு 'சமூகத் தணிக்கையை' (social audits) வலுப்படுத்துவதாகக் கூறுகிறார். ஆனால், இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) சட்டத்தின் 17-வது பிரிவைப் போன்றதுதான் என்பது அவருக்கும் தெரிந்திருக்கும்.


சுருக்கமாகச் சொன்னால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் (MGNREGA) பதிலாக விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டத்தைக் (VB-G RAM G) கொண்டு வருவதற்கு முன்வைக்கப்படும் சமீபத்திய வாதங்களில் வலுவான காரணிகள் இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பிரதமரின் பெயரிலான திட்டங்களாக மாற்றியதைப் போலவே, இந்த புதிய சட்டமும் முக்கியமாக மோடி அரசாங்கம் இத்திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் பெருமையைத் தன்வசப்படுத்தவும் உருவாக்கப்பட்டதாகவேத் தெரிகிறது. இதனால் வேலைவாய்ப்பு உத்தரவாதமும், தொழிலாளர்களின் உரிமைகளும் புறக்கணிக்கப்படுகின்றன.


Original Article : Playing hide and seek on employment guarantee -Jean Dreze

Share: