இந்தியா பல நிலைகளில் ஒரே நேரத்தில் திறம்படச் செயல்படுவதற்கான தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொள்ளாதவரை, உலகளாவிய நிர்வாகத்தில் தனது மதிப்புமிக்க நிறுவன தன்னாட்சியைத் தக்கவைத்துக் கொள்வது கடினமாக இருக்கலாம் என்கின்றனர்
கடந்த ஆண்டின் இறுதியில், ஐக்கிய நாடுகள் சபை (UN) இணையவழி குற்றங்களுக்கு எதிரான புதிய ஒப்பந்தத்திற்கான கையெழுத்திடும் நிகழ்வை நடத்தியது. இது, கடந்த 20 ஆண்டுகளில் பேச்சுவார்த்தை மூலம் உருவாக்கப்பட்ட முதல் சர்வதேச குற்றவியல் நீதி ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், உலகளாவிய இணையவெளி நிர்வாகத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் காரணம்காட்டி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. டிசம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில் ஐநா பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு 72 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு ரஷ்யாவின் தீர்மானத்தின் மூலம் முன்மொழியப்பட்ட இந்த உடன்படிக்கை, ஐநா உறுப்பு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவாகும். இதில் சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு பகுதி உடன்பாடு (Consensus) ஏற்படுவதற்காக எட்டு முறை அதிகாரப்பூர்வ அமர்வுகளும், ஐந்து முறை இடைக்கால ஆலோசனைகளும் தேவைப்பட்டன. இந்த நீண்ட செயல்முறை உலகளாவிய நிர்வாகத்தில் உள்ள சவால்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இது இந்தியாவையும் பாதிக்கிறது; ஏனெனில், நிலையற்ற உலக ஒழுங்கும், சர்வதேச சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியும் ஒரு 'பலமுனை மைய அமைப்பை' (Polycentric) உருவாக்கக்கூடும். இத்தகைய சூழலை கையாளுவதற்கு இந்தியா இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பதை இது உணர்த்துகிறது.
உறுதியற்ற ஆதரவு
ஐக்கிய நாடுகளின் (UN) ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல ரஷ்யாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டன. தற்போதுள்ள உலகளாவிய இணைய நிர்வாக முறையை மாற்ற அவை ஒன்றிணைந்த முயற்சியை மேற்கொண்டன. தற்போதைய முறையானது பெரும்பாலும் 2001-ஆம் ஆண்டின் 'புடாபெஸ்ட் இணைய குற்றங்கள் ஒப்பந்தத்தை' (Budapest Convention on Cybercrime) அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பிய நாடுகளால் வழிநடத்தப்படும் அந்த ஒப்பந்தத்தில் 76 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால், அதில் ரஷ்யாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை. முறையான அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகள் மட்டுமே அதில் உறுப்பினராகப் பங்கேற்க முடியும் என்பதால், புடாபெஸ்ட் ஒப்பந்தம் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இல்லை. இதனால்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தின்கீழ் சேராமல் விலகி இருக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது
இதற்கு நேர்மாறாக, ஐநா ஒப்பந்தம் (UN Convention) அனைத்து நாடுகளின் பங்கேற்பையும் ஆதரித்தது இருப்பினும், அது பெரும் கருத்து வேறுபாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. ஐரோப்பிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; ஏனெனில், இது புடாபெஸ்ட் ஒப்பந்தத்தில் (Budapest Convention) உள்ள பல வரையறைகளையும் நடைமுறைகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டது. மேலும், உலகளாவிய விதிகளை உருவாக்குவதில் தொடர்ந்து தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடுகள் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஜூலை மாதம் 2025-ஆம் ஆண்டில் வெளியான ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பு ஆவணம் ஒன்றில், இந்த புதிய கட்டமைப்பை அமல்படுத்தும் தொடக்கக் காலத்திலேயே ஐரோப்பா தனது "ஆழமான குரலைப்" பதிவு செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் எடுத்த இந்த முயற்சியின் மீது சந்தேகத்துடனேயே இருந்தது. அத்துடன், இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள "கடுமையான குற்றங்கள்" என்பதற்கான விரிவான விளக்கம், சர்வாதிகார நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று பல அமெரிக்க சமூகக் குழுக்கள் எச்சரித்தன.
இந்தியாவின் தயக்கம் ஒரு மாறுபட்ட காரணத்தைப் பிரதிபலிக்கிறது. புடாபெஸ்ட் உடன்படிக்கையைப் போலன்றி (Budapest Convention), ஐநா சபையின் இந்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்றது. இருப்பினும், குடிமக்களின் தரவுகள் (Data) மீது அதிகக் கட்டுப்பாட்டைப் பெற இந்தியா முன்வைத்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில், உலகளாவிய விதிகளை உருவாக்குவதில் இந்தியா பலமுறை தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியானது, ஆரம்பகால பருவநிலைப் பேச்சுவார்த்தைகளில் 77 வளரும் நாடுகளுக்கு தலைமை தாங்கி பெற்றிருந்த இந்தியாவின் செல்வாக்கை இப்போது பலவீனப்படுத்திவிட்டது.
மொத்தத்தில், ரஷ்யாவும் சீனாவும் பலவீனமான ஐக்கிய நாடுகள் சபையைத் (UN) தங்கள் உலகளாவிய பார்வையை நியாயப்படுத்துவதற்கான ஒரு தளமாகப் பார்க்கின்றன. அதேநேரத்தில், ஐரோப்பா போன்ற வலுவிழந்து வரும் நாடுகள் தங்கள் செல்வாக்கைத் தக்கவைக்கப் போராடுகின்றன. மீண்டும் எழுச்சி பெற்றுள்ள அமெரிக்கா தனது தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் இந்தியா மிகவும் எச்சரிக்கையுடனும், நிறுவனங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க தயக்கத்துடனும் உள்ளது. ஹனோயியில் (Hanoi) காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் குவாட் (Quad) மற்றும் Five Eyes போன்ற வலுவான கூட்டணிகளுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன. இது தற்போதைய காலத்தின் சிக்கலான அரசியல் சூழலை வெளிப்படுத்துகிறது.
கொள்கைகளுக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளி
ஐநா உடன்படிக்கையானது, சர்வதேச சட்டக் கொள்கைகளுக்கும் உண்மையான நடைமுறைக்கும் இடையே அதிகரித்துவரும் இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது. இணையவழித் தீமைகள், குறிப்பாகக் குழந்தைத் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகளை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் போன்றவற்றைத் தடுப்பதற்கான பொதுவான உடன்பாட்டுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இருப்பினும், இந்த உடன்படிக்கையில் 'இணையவழிக் குற்றம்' (cybercrime) என்பதற்கான வரையறை மிகவும் தெளிவற்றதாக உள்ளது. மேலும், இது ஒருமித்த கருத்து ஏற்கப்பட்ட பகுதிகளோடு மட்டும் நிற்கவில்லை. மாறாக, இது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாடுகள் தங்களுக்குத் தேவையான குற்றங்களின் வரம்பை விரிவுபடுத்த அனுமதிக்கிறது. மேலும், இது மனித உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். ஒரு குற்றவியல் வழக்கில் நீதித்துறை மேற்பார்வை போன்ற அடிப்படைப் பாதுகாப்புகள்கூட, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்ட நடைமுறைக்கே விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவை (AI) முறைப்படுத்தும் முயற்சிகளில் இதேபோன்ற ஒரு போக்கைக் காணமுடிகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், மனிதர்களை மையமாகக் கொண்டதாகவும் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் உடன்படுகின்றன. இந்த பொதுவானக் கருத்துக்கள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development (OECD)) செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகள், G7 நாடுகளின் ஹிரோஷிமா செயல்முறை (Hiroshima Process) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம் (Global Digital Compact) போன்ற பல்வேறு கட்டமைப்பு திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், இணையவழிக் குற்றங்கள் குறித்த ஒப்பந்தத்தைப் போலவே (Cybercrime Convention), கொள்கை அளவில் ஒருமித்தக் கருத்து இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்தும் முறையில் பெரிய அளவிலான வேறுபாடுகள் உள்ளன. சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு 'அடையாளச் சின்னம்' (Watermarking) இடுவதை முறைப்படுத்த இந்தியா சமீபத்தில் முன்மொழிந்த திட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். பயனர் பாதுகாப்பு என்ற உலகளாவிய இலக்கின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த இலக்கை அடைய இந்திய அரசு சில கடுமையான விதிகளை முன்மொழிந்துள்ளது. உதாரணமாக, உள்ளடக்கத்தின் 10% இடத்தை ஆக்கிரமிக்கும் வகையில் கட்டாயமாக அடையாளச் சின்னங்களை (labeling) இட வேண்டும் போன்ற மிகவும் துல்லியமான மற்றும் கண்டிப்பான நடைமுறைகளை இது பரிந்துரைக்கிறது.
பலமுனை மையக் கொள்கை
உலகளாவிய நிர்வாகம் பெரும் சிக்கலில் உள்ளது, நிலைமை சீராகும் என்று நம்புவதற்குப் போதிய காரணங்கள் இல்லை. ஐக்கிய நாடுகள் சபைக்கான (UN) நிதி உதவியை அமெரிக்கா பெருமளவில் குறைத்துவிட்டது. உக்ரைன் மற்றும் காசா ஆகிய இடங்களில் நடக்கும் போர்களைத் தடுப்பதில் பாதுகாப்பு கூட்டமைப்பு பலவீனமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation (WTO)) தர்க்கத் தீர்க்கும் முறை 2019-ஆம் ஆண்டு முதல் முடங்கிக் கிடக்கிறது. சமீபத்திய ஒப்பந்தங்களைப் பார்க்கும்போது, இணையப் பாதுகாப்பு போன்ற புதிய துறைகளிலும் சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது கடினம் என்றே தோன்றுகிறது.
இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, ஆனால் இதற்கான தெளிவான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.
தற்போது உருவாகிவரும் புதிய உலக ஒழுங்குமுறை, பன்னாட்டு உறவுகளை (Multilateralism) ஒரு கொள்கை அளவிலேயே வைத்திருக்கிறது. ஆனால், நடைமுறை ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கு சிறிய அளவிலான நாடுகள் அல்லது இருதரப்பு குழுக்களையே அதிகம் நம்பியுள்ளது. இதனால் பல்வேறு அமைப்புகள் ஒன்றின்மேல் ஒன்றாகச் செயல்பட்டு, நாடுகளின் செயல்திறனைச் சோதிக்கும் ஒரு சிதறிய அமைப்பு உருவாகியுள்ளது. இதேபோன்ற சிக்கல்கள் ஏற்கனவே எல்லை கடந்த தரவுப் பரிமாற்றத்தை (Cross-border data flows) ஒழுங்குமுறைப்படுத்தும் முயற்சிகளில் காணப்படுகின்றன. தற்போது இது இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலும் ஏற்படும் எனத் தெரிகிறது. தரவுகள் நம்பகமான நாடுகளுக்கு இடையே பரிமாறப்பட வேண்டும் என்பதில் பொதுவான உடன்பாடு இருந்தாலும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
சர்வதேச நிர்வாகத்தில் தனது மதிப்புமிக்க நிறுவன சுயாட்சியைத் தக்கவைத்துக் கொள்வது இந்தியாவிற்கு கடினமாக இருக்கும் என்கின்றனர். ஒரே நேரத்தில் பல நிலைகளில் செயல்படுவதற்கான தனது தொழில்நுட்பத் திறனை இந்தியா வலுப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். உள்நாட்டைப் பொறுத்தவரை, ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கு இங்கே விரிவான வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
விவன் சரண் மற்றும் சுகன்யா தப்லியால் ஆகியோர் புது டெல்லியில் உள்ள Koan Advisory குழுமத்தின் பொதுக் கொள்கை நிபுணர்களாக உள்ளனர்.
Original Article : Cybercrime and the crisis of global governance -Sukanya Thapliyal, Vivan Sharan