உயிரியல் உள்ளீடுகள் (biologicals) எவ்வளவு புத்திசாலித்தனமாக வேளாண்மையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வேளாண் தொழிலின் எதிர்காலம் அமையும் என்கின்றனர்.
இந்தியா முன்னெப்போதையும்விட அதிக உணவு உற்பத்தியைச் செய்து வருகிறது. ஆனால், அதன் மண்ணின் வளம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. பல ஆண்டுகளாக, சாதனை அளவிலான அறுவடைகளைப் பெற வேளாண்மை ரசாயன உரங்களையே பெரிதும் நம்பியிருந்தது. தற்போது இந்த முறையை மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இப்போது கவனம், 'எவ்வளவு அதிகமாக விளைவிக்க முடியும்?' என்பதிலிருந்து, 'நிலத்தைப் பாதிக்காமல் எப்படி உணவை உற்பத்தி செய்வது?' என்பதற்கு மாறியிருக்கிறது. பழைய முறைகள் உடனடி உணவுத் தேவையைத் தீர்க்க உதவினாலும், காலப்போக்கில் அவை மண் வளம் குறையவும், இயற்கைச் சமநிலை சீர்குலையவும் காரணமாகின. இதற்குத் தீர்வாக, இயற்கையோடு இணைந்த உயிரியல் முறைகளை (Biological solutions) அடிப்படையாகக் கொண்ட புதிய வேளாண் அணுகுமுறை உருவாகி வருகிறது.
தேசிய பொருளாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் மண்ணின் வளத்தை மீட்டெடுக்கும் அதே வேளையில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ஒரு நடைமுறை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வழியை வழங்குவதன் மூலம், உயிர் உரங்கள் (Biofertilisers) இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இந்த மாற்றம் என்பது ஒரு தற்காலிகமானது அல்ல என்றும் மாறாக, இது அதிகரித்துவரும் சாகுபடி செலவுகள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் பாரம்பரிய வேளாண்மையில் காணப்பட்ட குறைந்த அளவிலான பயிர் விளைச்சலைச் சமாளிக்க வேளாண் தொழிலாளர்கள் எடுத்துள்ள ஒரு உத்திமுறையிலான நடவடிக்கையை பிரதிபலிக்கிறது.
மண் வளம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து வருவதைச் சரிசெய்தல்
இந்த மாற்றத்தின் அடிப்படையில் சக்திவாய்ந்த உயிரி உரங்களைப் (Biofertilizers) பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது. ஏனெனில், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மண் வளம் குறைந்து வருவது ஒரு தீவிரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (Indian Council of Agricultural Research (ICAR)) கூறுகையில், இந்தியாவில் சுமார் 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு பல்வேறு வகையான நிலச் சீரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய விவசாயப் பகுதிகளில், மண்ணில் உள்ள கரிமக் கார்பன் (Organic carbon) அளவு 0.5% என்ற அபாயகரமான நிலைக்குக்கீழ் குறைந்துவிட்டது என்றும் இது மண்ணின் உயிரியல் செயல்பாட்டையும், பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் தன்மையையும் பெருமளவில் குறைத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான தீவிர விவசாய முறைகளால் மண்ணின் இயற்கை கனிம வளங்கள் தீர்ந்து, பரவலான ஊட்டச்சத்து சமநிலையின்மையும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளன. இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மட்டுமின்றி, முதன்மை ஊட்டச்சத்துக்களும் இப்போது மிகவும் சீரற்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பரிந்துரைக்கப்படும் நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம் (Nitrogen, Phosphorus, Potassium (NPK)) விகிதம் 4:2:1 ஆகும். ஆனால், சில பகுதிகளில் இந்த விகிதம் 10.9:4.1:1 என மிக மோசமாக மாறியுள்ளது. இது அதிகப்படியான நைட்ரஜன் பயன்பாட்டையும், மண்ணின் ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறன் குறைந்து வருவதையும் காட்டுகிறது.
சமீபத்திய மண் பரிசோதனைகளின்படி, இந்தியாவின் விளைநிலங்களில் 58.6%-க்கும் அதிகமான நிலங்களில் கந்தகச் (Sulfur) சத்துக் குறைபாடும், சுமார் 36% நிலங்களில் துத்தநாகக் (Zinc) குறைபாடும் நிலவுகிறது. அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் மண்ணின் காரத்தன்மை (pH) அளவு அதிகரித்து வருவது (அதாவது காரத்தன்மை அதிகரிப்பது) கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. மண்ணில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், இந்த அதிகப்படியான காரத்தன்மை காரணமாக பயிர்களால் அவற்றைச் சரியாக உறிஞ்ச முடிவதில்லை என்றும் இது உரப்பயன்பாட்டுத் திறனைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில், இந்த உயர் pH நிலைகள் மண்ணுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டைத் தடுத்து, மண்ணின் ஆரோக்கியத்தையும் விளைச்சலையும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், குறிப்பிட்ட நுண்ணுயிர் உட்புகுத்திகளை (Microbial inoculants) பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் மண்ணின் உயிரியல் செயல்பாட்டை மீண்டும் மீட்க முடியும் என்கின்றனர். இவை மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறனை அதிகரிக்கின்றன. இத்தகைய உயிரியல் தீர்வுகளே எதிர்கால விவசாயத்திற்கு ஒரு நடைமுறைச் சாத்தியமான வழியாக அமைகின்றன.
நுண்ணுயிர் வினையூக்கிகளின் தொழில்நுட்ப செயல்பாடுகள் மற்றும் வேர் மண்டல மறுசீரமைப்பு
தற்கால உயிரி உரங்கள் வளிமண்டலம் மற்றும் மண்ணில் சேமிக்கப்பட்டுள்ள சத்துக்களைத் தாவரங்கள் எளிதில் உட்கொள்ளும் நிலைக்கு மாற்றும் பல்வேறு உயிரியல் செயல்முறைகள் மூலம் செயல்படுகின்றன. ரைசோபியம் (Rhizobium), அசோடோபாக்டர் (Azotobacter) மற்றும் அசோஸ்பைரில்லம் (Azospirillum) போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிரிகள், செயற்கை நைட்ரஜன் உரங்களின் தேவையைக் குறைக்கவோ அல்லது முழுமையாக மாற்றவோ உதவுவதால் விவசாயிகளுக்கு மிகவும் அவசியமாகின்றன. இவற்றுடன் இணைந்து பேசிலஸ் (Bacillus) மற்றும் சூடோமோனாஸ் (Pseudomonas) போன்ற பாஸ்பேட்-கரைக்கும் பாக்டீரியாக்கள், மண்ணில் உறைந்து கிடக்கும் பாஸ்பரஸ் சத்தை விடுவிக்க உதவுகின்றன. மேலும், மைக்கோரைசா (Mycorrhizal) பூஞ்சைகள் பயிர்கள் ஊட்டச்சத்தை உறிஞ்சும் முறையையே மாற்றியுள்ளன. இந்தப் பூஞ்சைகள் செடிகளின் வேர்கள் எட்டாத தூரம் வரை பரவி நீர், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைச் சேகரிப்பதோடு, பல்வேறு உயிரினங்களை ஒன்றிணைக்கின்றன. இத்தகைய தொடர்புகள் தாவரங்களுக்கு வெறும் ஊட்டமளிப்பதோடு மட்டுமல்லாமல், வேர் மண்டலத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம் மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகளை எதிர்க்கவும், நீண்டகால வறட்சி போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களைத் தாங்கி வளரவும் உதவுகின்றன.
வேளாண் தொழிலாளர்களுக்கான உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் நிதி நிலைத்தன்மையை அளவிடுதல்
உயிரி உரங்களின் (biological inputs) பயன்பாட்டை நோக்கிய இந்த மாற்றம், அதிக லாபம் மற்றும் நிலையான விளைச்சல் கிடைப்பதற்கான வலுவான ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (Indian Council of Agricultural Research (ICAR)) போன்ற முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள், உயிரி உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு காலநிலை மண்டலங்களில் பயிர் விளைச்சலை 20-30% வரை அதிகரிக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு, இந்த உற்பத்தித் திறன் இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் லாபரீதியாகப் பார்த்தால், பருவநிலை மாற்றம் மற்றும் மண் வளம் குறைவதால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க இந்த அணுகுமுறை மிகவும் ஏற்றது என்பது தெளிவாகிறது. இன்று மண்ணின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், வேளாண் துறை வருங்காலத்திற்கான வளமான மற்றும் நிலையான அறுவடையை உறுதி செய்கிறது.
தேசிய அளவிலான உத்திமுறை கொள்கை மற்றும் உயிரியல் சந்தையின் விரிவாக்கம்
இத்தகைய மாற்றத்தை ஆதரிப்பதற்காக, இந்திய அரசு, தாய் மண்ணைப் பாதுகாப்பதற்கும், அதன் வளத்தை மீட்டெடுப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்குமான பிரதமரின் திட்டம் (Programme for Restoration, Awareness, Nourishment and Amelioration of Mother Earth (PM-PRANAM)) போன்ற திட்டங்களின் மூலம் உயிரியல் உள்ளீடுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. இது நாட்டின் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ரசாயன உர மானியங்களால் ஏற்படும் பெரும் நிதிச் சுமையைக் குறைக்கவும் முயல்கிறது. மாற்று ஊட்டச்சத்து ஆதாரங்களைப் பின்பற்றுவதற்கு மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம், நிலையான விவசாயத்திற்கான ஒரு வலுவான அமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. இந்த கொள்கை மாற்றம் சந்தை போக்குகளிலும் தெளிவாகத் தெரிகிறது. சுமார் 153 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய உயிரி உரச் சந்தை, 2033-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 12-16% கூட்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நச்சுக்களற்ற உணவுகளுக்கான தேவை அதிகரிப்பால், இந்திய இயற்கை உணவுச் சந்தை 2031-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3.21 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, உயிரி உரங்களைப் பயன்படுத்துவது பெரிய அளவிலான சந்தைகளில் நுழைவதற்கும் எதிர்கால ஏற்றுமதி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அவசியமாகிறது.
எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஒரு வலுவான அமைப்பை உருவாக்குதல்
இந்தியாவின் அடுத்த தலைமுறை வேளாண்மையானது, சூழலியல் அறிவும் மேம்பட்ட நுண்ணுயிர் தொழில்நுட்பமும் (microbial technology) இணைந்த ஒரு புதிய வடிவத்தைப் பெற்று வருகிறது. கடந்த காலங்களில், வேளாண் தொழிலாளர்களிடையே இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்ததும், தயாரிப்புகளின் இருப்புக்காலம் குறைவாக இருந்ததும் சிக்கல்களாக இருந்தன. இருப்பினும், முறையான பயிற்சித் திட்டங்கள் மற்றும் உள்ளூர் அளவிலான செயல்முறை விளக்கங்கள் மூலம் வேளாண் தொழிலாளர்களின் தொழில்நுட்பத் திறன் தற்போது மேம்பட்டுள்ளது. குறிப்பாக, நிலைப்படுத்தப்பட்ட திரவ வடிவங்கள் (liquid formulations) மற்றும் நவீன அமைப்புகளின் (customised carrier systems) அறிமுகம் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இத்தகைய உயிரியல் தீர்வுகளை நோக்கி நகர்வதன் மூலம், தீவிரமான காலநிலை மாற்றங்களையும் மோசமான மண் மேலாண்மையையும் தாங்கி வளரக்கூடிய வலுவான ஒரு விவசாயச் சூழல் உருவாகியுள்ளது. இன்று மண்ணின் ஆரோக்கியத்தில் நாம் செலுத்தும் கவனம், எதிர்காலத்தில் செழிப்பான மற்றும் நிலையான அறுவடைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்திய வேளாண்மையின் எதிர்காலம் என்பது நாம் எவ்வளவு உரங்களைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல என்றும் மாறாக உயிரியல் தீர்வுகளை எவ்வளவு புத்திசாலித்தனமாக விவசாய முறையில் ஒருங்கிணைக்கிறோம் என்பதிலேயே அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர், IPL Biologicals - International Panaacea Limited நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
Original Link: How biofertilisers are changing farmer practices in India.