இந்தியாவின் முறைசாரா நகர்ப்புற தொழிலாளர் வளத்திற்கான சவால்கள். -திகேந்தர் சிங் பன்வார்

நொய்டாவில் சமீபத்தில் நடந்த தொழிலாளர்கள் போராட்டம், இந்தியாவின் நகர்ப்புறங்களின் நிலையற்றத் தன்மையை வெளிக் கொண்டு வருகிறது.


நொய்டாவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்  சில நாட்களுக்கு முன்னர் நடத்திய போராட்டங்கள், இந்தியாவின் நகர்ப்புறங்களில் நிலவும் நிலையற்றத் தன்மையை வெளிக்காட்டுகின்றன. இந்தப் பேராட்டங்கள் ஒரு சிறிய பகுதி மட்டுமே; பேராட்டங்கள் இந்தியாவின் பிற நகர்ப்புறப் பகுதிகளிலும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக, முறைசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களின்  பேரம் பேசும் திறன் அதிகாரம், நகராட்சி, மாநில மற்றும் ஒன்றிய அரசு அமைப்புகள் மற்றும் அவர்களின் முதலாளிகளுடன் ஒப்பிடும்போது,   குறைந்து வருகிறது.


இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 90% முறைசாரா தொழிலாளர் படையினராக உள்ளனர். நகர்ப்புறங்களில், காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) படி, நிரந்தர சம்பளம் அல்லது ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள் எந்த எழுத்துப் பூர்வ ஒப்பந்தமும் இல்லாமல், முறைசாரா அல்லது தற்காலிகப் பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


என்ன தவறாக நடந்தது என்பது நகர்புற உற்பத்தி அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன் தொடர்புடைய நீண்டகாலக் கதையாகும். நகரங்கள், தொழில்துறை உற்பத்தி மையங்களாக இருந்த நிலையிலிருந்து, சமூக மறுசீரமைப்பு (social reproduction) மையங்களாக மாறிவிட்டன. நகர்புறங்களில் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்துறை குறைந்து விட்டது. மும்பையில் உள்ள ஆலைகள் மூடப்பட்டதும், அகமதாபாத் நெய் தொழிற்சாலைகள் மூடப்பட்டதும் இதற்கு ஒரு உதாரணமாகும். இதன் விளைவாக, நகரங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் முக்கிய பகுதிகளில் இருந்து விலகி, சிதறிய அமைப்புகளாக மாறிவிட்டன. இப்போது கவனம், பாதுகாப்பற்ற வாழ்க்கையை நிர்வகிப்பதில் உள்ளது. இதையே “சமூக மறுசீரமைப்பின் நகரமயமாக்கல்”  (urbanisation of social reproduction) என்று கூறுகிறார்கள். எளிமையாகச் சொன்னால், வாழ்வாதாரம் முக்கியமாகி விட்டது. சமையல் செய்வது, சுத்தம் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெறுவது முக்கியமானதாக மாறிவிட்டது. இந்த மாற்றம் என்பது, நகரங்களின் வடிவமைப்பு, அரசியல் மற்றும் வாழ்க்கை ஆகியவை தற்போது உயிர்வாழ்வதற்கான அன்றாடப் போராட்டங்களாலேயே அதிகம் வடிவமைக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.


உரிமைகள் முதல் தேவை அடிப்படையிலான சேவைகள் வரை


இந்த மாற்றம் உற்பத்தி மாற்றங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது அடிப்படை சேவைகளையும், அரசின் பங்கையும் மாற்றியது. ஜான் வில்லியம்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட 'வாஷிங்டன் ஒருமித்த கருத்து' (Washington Consensus) வளர்ச்சிக்கான வழிகாட்டும் அணுகுமுறையாக மாறியது. இந்த அணுகுமுறையின் கீழ், அரசு தண்ணீர், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உரிமை அடிப்படையிலான சேவைகளை வழங்குவதிலிருந்து விலகியது. அதற்குப் பதிலாக, வரவு-செலவு சமநிலை, வரி சீர்திருத்தங்கள், வர்த்தக சுதந்திரம் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தேவையும் வளர்ச்சியும் சார்ந்த மாதிரியை ஏற்றுக்கொண்டது. தண்ணீரையும் கல்வியையும் தொழில்துறையாக மாற்றியதால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. அதன் விளைவாக உழைக்கும் வர்கத்தின் சந்தையின் இறக்கங்களை எதிர்கொண்டு, தங்களுக்கான இடங்களை மீட்டெடுக்கும் திறனையும் இழந்தனர்.


நகர்ப்புற தொழிலாளர்களின் பாதிப்பு நிலை (precariousness) என்பது முறைசாரா வேலைவாய்ப்பு, நில உரிமை பாதுகாப்பின்மை, மற்றும் நகர வாழ்க்கையின் உயர்ந்த செலவு ஆகியவற்றின் இணைப்பாகும். நகர்ப்புற ஏழைகளில் 40% பேர் குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் மாத வருமானத்தின் 30% முதல் 50% வரை பகுதியை குடிசை பகுதிகளில் முறைசாரா வீடுகளுக்கான வாடகையாக செலவிடுகின்றனர். இந்த வீடுகளில் அடிப்படை சுகாதார வசதிகளும் சட்டபூர்வ பாதுகாப்பும் இல்லை. மேலும், இந்தியாவின் நகர்ப்புற ஒழுங்கற்ற குடியிருப்புகளில் 60% பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தாழ்வான இடங்களிலும் ஆபத்தான பகுதிகளிலும் அமைந்துள்ளன. இது அவர்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை அதிகரிக்கிறது.


நீர் மற்றும் மின்சாரத்தைச் சந்தை அடிப்படையிலான பயனர் கட்டண மாதிரிகளுக்கு மாற்றுவது போன்ற அத்தியாவசிய சேவைகளின் தனியார்மயமாக்கல்; ‘உலகத் தரம் வாய்ந்த’ உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர அசையாச் சொத்துக்களுக்காக சேரிப்பகுதிகளை மேம்படுத்தி, அவற்றை வெளியேற்றுதல்; தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்துதல்; இயற்கையும் இயற்கை இடங்களும்  வணிகமயமாக்கப்படும் நகர்ப்புறப் பொதுவெளிகளை அபகரித்தல் போன்றவற்றால் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது. வீட்டுவசதித் துறையில், அரசு நேரடியாக வீடுகளை வழங்கும் அமைப்பாக இருந்து, தனியார் நில வள மேம்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் குறைந்த வருவாய் பிரிவினருக்கான குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பொது நிலங்கள், உயர்தரத் திட்டங்களுக்குத் மாற்றியமைக்கப்பட்டன.


இந்திய ரிசர்வ் வங்கியின் 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, பிணையம் இல்லாத காரணத்தால், நகர்ப்புற ஏழைகள் பெரும்பாலும் முறைசார் வங்கிச் சேவைகளைத் தவிர்த்து, வட்டிக்குப்பணம் கொடுப்பவர்களை நாடுவதால், அவர்கள் தீராத கடன்களில் சிக்குகின்றனர்.


நகர்ப்புற ஒடுக்குமுறைகளின் சந்திப்பு (Urban intersectionality)


கேரள நகர ஆணையம், உழைக்கும் மக்களின் கொள்கைகளை பல கோணங்களில், பலதரப்பட்ட பார்வைகளிலிருந்து நகர்ப்புறக் கொள்கையை அணுக முயன்றுள்ளது. நகர மன்றத்தில் உள்ள 'தொழிலாளர் மன்றம்' (workers council) என்பது, முறைசாராத் தொழிலாளர்கள் நகர நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் இணை-உற்பத்தியாளர்களாக மாறும் அத்தகைய இடங்களை மீட்டெடுப்பதற்கான வழிகளில் ஒன்றாகும். காலநிலை மாற்றம், பேரிடர்கள் மற்றும் நிலையற்ற வளர்ச்சி செயல்முறைகள் ஆகியவற்றின் நகர்ப்புறச் சுழலில், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் முறைசாராத் துறைத் தொழிலாளர்களுக்கும் இடையே பலதரப்பட்ட இணைப்புகளை உருவாக்குவது முக்கியமானதாகும்.


டிகேந்தர் சிங் பன்வார் கேரள நகர ஆணையத்தின் உறுப்பினர் ஆவார்.


Original link:

Challenges for India’s informal urban workforce.


Share: