இந்திய இரயில்வேயின் உருமாற்றம் இரண்டு வழிகளில் நிகழ்ந்து வருகிறது. முதலாவது, பயணிகள் அனுபவத்தில் ஏற்படும் ஒரு புரட்சி; இரண்டாவது, சரக்குப் போக்குவரத்து மற்றும் தொழில்துறை திறனின் நவீனமயமாக்கலாகும். இந்தியாவின் மிகப் பழமையான உள்கட்டமைப்பான இந்திய இரயில்வே, தொடர்ந்து ஒரு வளர்ச்சியின் வலிமைமிக்க இயந்திரமாகத் திகழ்வதை, இதுபோன்ற நடவடிக்கைகள் எவ்வாறு உறுதி செய்கின்றன?
நாட்டின் மிகவும் பிரபலமான ரயில் வழித்தடங்களில் ஒன்றான ஹவுரா-சென்னை வழித்தடத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், பாலசோரிலிருந்து பிரம்மபூர் வரை ஒடிசாவின் கடலோரப் பகுதி வழியாக நான்கு வழித்தடங்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னெடுப்புகள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, ஒடிசாவை தேசிய சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
பயணிகளின் அனுபவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துடன் சேர்த்து, முக்கிய வழித்தடங்களில் நெரிசலைக் குறைப்பதற்கும் சரக்கு போக்குவரத்துப் பாதைகளை வலுப்படுத்துவதற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம், இந்திய ரயில்வேக்குள் நிகழும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காட்டுகிறது. இரயில்வே கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்தும் போக்குவரத்து மற்றும் செயல்பாட்டுத் தடைகள் எவை, மேலும் தற்போதைய நவீனமயமாக்கல் செயல்முறை அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கிறது?
செயல்பாட்டுத் தடைகளைச் சமாளிப்பதற்கான உத்தி
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் முயற்சிகளின் தொடர்ச்சியாக, 'வந்தே பாரத்' மற்றும் அதிவேக ரயில் (High-Speed Rail (HSR)) போன்ற முயற்சிகளின் மூலமாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. 'Make in India' முயற்சிகளின் மூலமாக, நவீன, வசதியான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ரயில் பயணத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக இது போன்றச் சேவைகள் அமைந்திருந்தாலும், நீண்டகாலமாக நிலவிவரும் தளவாடம் சார்ந்த வரம்புகளையும் பலவீனமான மற்றும் பழமையான ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
கடினமான மற்றும் மெதுவாகச் செல்லும் சரக்கு ரயில்களால், ரயில்வே வழித்தடங்கள் கடுமையான நெரிசலை எதிர்கொள்கின்றன. எனவே, இந்திய ரயில்வே வணிகத்தை மேம்படுத்துவதற்காக, மொத்த சரக்குகள் மட்டுமின்றி, சாலை வழியாகக் கொண்டு செல்லப்படும் பொருட்களில் கவனம் செலுத்தி, தனது சேவைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று இரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில், இந்திய ரயில்வேயின் தற்போதைய மாற்றமானது, மூன்று முக்கிய உத்திகளின் மூலம் இதற்குத் தீர்வு காண முயல்கிறது:
1. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (Dedicated Freight Corridors (DFCs)): சரக்குப் போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு இரயில் பாதைகளான பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாடு முழுவதும் பொருட்கள் கொண்டு செல்லப்படும் விதத்தை மாற்றியமைத்து வருகின்றன. ரயில் பாதைகளை விடுவிப்பதோடு, இந்த வழித்தடங்கள் சரக்குப் போக்குவரத்தின் செலவையும் நேரத்தையும் குறைக்கவும் உதவுகின்றன.
2. கவச் 4.0 (Kavach 4.0): இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு (Automatic Train Protection) அமைப்பாகும். ரயில் விபத்துகளைத் தடுக்கவும், அதிக நடமாட்டம் உள்ள பாதைகளில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை உறுதி செய்யவும் இது நாடு முழுவதும் நிறுவப்பட்டு வருகிறது.
3. நிகர-பூஜ்ஜிய (Net-zero) மற்றும் தன்னிறைவு பெற்ற எதிர்காலம்: பசுமை ஆற்றலை நோக்கிய ஒரு மாற்றம் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, தன்னிறைவு பெற்ற எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான தற்சார்பு திறன்.
இவை ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்வோம்.
சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள், தளவாடத் துறையில் எப்படி ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன?
இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, மெதுவாகச் செல்லும் சரக்கு ரயில்களும், அதிவேகப் பயணிகள் ரயில்களும் ஒரே தண்டவாளத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறையையே பின்பற்றி வருகிறது. முந்தைய ஆண்டுகளில் ரயில்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இந்த முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இன்று, இது ஒரு சிக்கலான நிலையை உருவாக்கியுள்ளது. பயணிகள் ரயில்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் தாமதமடைகின்றன. அதேசமயம், கனரக சரக்கு ரயில்களின் போக்குவரத்து காரணமாக, ‘வந்தே பாரத்’ போன்ற அதிவேக ரயில்களின் வேகமும் கட்டுப்படுத்தப்படுகிறது.
சரக்கு ரயில்களின் பிரத்யேகப் பயன்பாட்டிற்காக சரக்கு நெடுஞ்சாலைகளை (Cargo Highways) உருவாக்குவதன் மூலம், பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (Dedicated Freight Corridor (DFCs)) பிரச்சினையைத் தீர்க்க முயல்கின்றன. 1,506 கி.மீ நீளமுள்ள மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடம் (Western Dedicated Freight Corridor (WDFC)) மார்ச் 2026-ல் நிறைவடைய உள்ளது. மேலும், இது இந்தச் சவாலை எதிர்கொள்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
மேற்கு மற்றும் கிழக்கு (1,337 கி.மீ) பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், இந்திய இரயில்வே தனது தண்டவாளங்களில் அதிவேகப் பயணத்திற்கான கூடுதல் இடவசதியை உருவாக்க முடியும். இந்த வழித்தடங்கள் சரக்கு ரயில்களின் வேகத்தை தற்போதைய சராசரியான 25 கி.மீலிருந்து 75 முதல் 100 கி.மீ வரை உயர்த்தும். இதன் மூலம் அழுகும் பொருட்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த மூலப்பொருட்களை மிக வேகமாகப் கொண்டு செல்ல முடியும் என்கின்றனர்.
முக்கியமாக, சரக்குப் போக்குவரத்தின் பெரும்பகுதியை இந்த வழித்தடங்களுக்கு மாற்றுவது, பயணிகள் ரயில்களுக்கான தற்போதைய தண்டவாளங்களின் நெரிசலைக் குறைக்கும். இந்த வழித்தடங்கள் மூலம் தண்டவாளங்களில் இடவசதி ஏற்படுத்தப்படாவிட்டால், அதிவேகப் பயணிகள் ரயில் என்ற இந்திய ரயில்வேயின் இலக்கு சாத்தியமற்றதாகவே இருக்கும்.
மேலும், தேசிய தளவாடக் கொள்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக இருக்கும் தளவாடச் செலவுகளை, சர்வதேச அளவிலான 8 சதவீதத்திற்கு குறைக்கும் இலக்கை அடைவதற்கு இந்த வழித்தடங்கள் மிக முக்கியமானவையாக இருக்கும். இந்தச் செலவைக் குறைப்பதன் மூலம் கிடைக்கும் கணிசமான சேமிப்புத் தொகை, நுகர்வோருக்குப் பயனாகச் சென்றடையும் அல்லது உள்கட்டமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மீண்டும் முதலீடு செய்யப்படும்.
இறுதி தூர இணைப்பைச் சரிசெய்தல்
மேலும், சரக்கு ரயில் பாதைகளின் நவீனமயமாக்கல் என்பது பிரத்யேகப் பாதைகளைத் தாண்டியும் விரிவடைகிறது. பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டத்தின்கீழ், சரக்கு போக்குவரத்தின் “இறுதி தூர” இணைப்பை (last mile connectivity) மேம்படுத்த, கதி சக்தி சரக்கு முனையங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை, ரயில் வழிதடங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் ஒருங்கிணைக்கும் நவீன பல்முனைப் போக்குவரத்து மையங்களாகும். சரக்குப் போக்குவரத்தை ரயில் பாதைகளில் மட்டுமல்லாமல், முழு விநியோகச் சங்கிலியிலும் சரக்குப் போக்குவரத்தை வேகப்படுத்துகின்றன. இந்த ஒருங்கிணைப்பு, Make in India' உற்பத்தி இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியமானது.
இதுபோன்ற போக்குவரத்து மையங்களைத் தொழிற்பேட்டைகளுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ அமைப்பது, சரக்கு அனுப்பப்பட்டதிலிருந்து அது இறுதியாக விநியோகிக்கப்படும் கால அளவைக் கணிசமாகக் குறைக்கும். இதன்மூலம், உற்பத்திச் செலவு குறைந்ததாகவும், காலவரையறைக்குட்பட்டதாகவும், ஏற்றுமதிக்குத் ஏற்றதாகவும் மாறும்.
வெறும் சரக்குகளின் எடையை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், வேகம் மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்திய ரயில்வேயின் இந்த மாற்றம், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதைக் காட்டுகிறது.
கவச் மற்றும் அதனை தாண்டிய பாதுகாப்பு கவசம்
நவீன ரயில்வே அமைப்பில் பயணிகள் மற்றும் சரக்கு பாதுகாப்பை உறுதிசெய்வது மிக அவசியமானது. வரலாற்றுரீதியாக, இந்திய ரயில்வே பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ரயில் ஓட்டுநர்களின் விழிப்புணர்வைக் கண்காணிக்கும் கைமுறை சிக்னல் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளை (Vigilance Control Devices (VCDs)) சார்ந்திருந்தனர். இருப்பினும், அதிக நெரிசல் கொண்ட ரயில்வே வழித்தடங்களில், மனிதத் தவறுகளால் ஏற்படும் அபாயங்களை இத்தகைய அமைப்புகளால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
இதற்குத் தீர்வு காணும் வகையில், இந்திய ரயில்வே 2020-ஆம் ஆண்டில் 'கவச்' (Kavach) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பினால் (Research Designs & Standards Organisation (RDSO)) உருவாக்கப்பட்ட 'கவச்', விபத்து இல்லாத நிலையை அடையும் இலக்கை ஏற்படுத்துவதற்கான ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.
இதன் சமீபத்திய பதிப்பான கவச் 4.0, சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையத்தின்படி (International Electrotechnical Commission (IEC)), உலகின் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரமான பாதுகாப்பு ஒருமைப்பாட்டு நிலை 4-யைப் (Safety Integrity Level (SIL-4)) பூர்த்தி செய்கிறது.
இது ரயில் நிலையங்கள், ரயில் என்ஜின்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகிலுள்ள உபகரணங்களுக்கு இடையே தொடர்ச்சியான தகவல் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் செயல் முறையில் உள்ளது. உதாரணமாக, ஒரு என்ஜின் ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறினாலோ அல்லது சிக்னல் பிழைகள் காரணமாக இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்துவிட்டாலோ, 'கவச்' அமைப்பானது தானாகவே கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு பிரேக் போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆபத்தான நிலையில் சிக்னலை மீறிச் செல்வது (Signal Passing at Danger (SPAD)) மற்றும் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நிலை தடுக்கப்படுகிறது.
பாதுகாப்பு மட்டுமின்றி, கவச் தண்டவாளப் பரப்பை மேலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் உதவுகிறது. ஒவ்வொரு ரயிலின் இருப்பிடம் மற்றும் வேகம் குறித்த தகவல்களை வழங்கும் ஒரு தானியங்கி அமைப்பைப் பயன்படுத்துவதால், பாதுகாப்பு அபாயங்கள் ஏதுமின்றி இரண்டு ரயில்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம், புதிய தண்டவாளங்களை அமைப்பதற்கான முதலீட்டுத் தேவையைத் தற்காலிகமாகக் குறைத்து, இருக்கும் தண்டவாளங்களிலேயே கூடுதல் இரயில்களை இயக்க இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.
பசுமை ஆற்றல் மற்றும் தற்சார்புத் திறன்
நவீனமயமாக்கல் இயக்கத்தின் மூன்றாவது தூண், பசுமை ஆற்றலை நோக்கிய மாற்றம் மற்றும் மேம்பட்ட தற்சார்புத் திறன் ஆகும். இந்திய ரயில்வே, தனது அகல இருப்புப்பாதை கட்டமைப்புகளை முழுமையாக மின்மயமாக்குவதன் மூலமும், இருப்புப்பாதை நிலையங்களின் கூரைகள் முழுவதும் பெரிய அளவில் சூரிய மின்தகடுகளை நிறுவுவதன் மூலமும், 2030-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்திய நிலையை அடைய ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்த மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இறக்குமதி செய்யப்படும் டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், ரயில்வேயானது இறக்குமதி சார்புநிலையையும், உலகளாவிய எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கிறது. மேலும், 'பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்' முயற்சியின் ஒரு பகுதியாக, மலைப்பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளில் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்களை இயக்கவும் திட்டங்கள் உள்ளன. இது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளிலும் ரயில்வே துறையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.
நிலைத்தன்மையுடன், இந்திய ரயில்வே உள்நாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் மற்றும் கவச் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தளங்களின் உள்நாட்டு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவை தற்சார்பை நோக்கிய ஒரு மாற்றத்தின் எடுத்துக்காட்டுகளாகும்.
இது 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தகைய தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. இந்திய ரயில்வே, ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் நிலையிலிருந்து, தற்போது வளர்ந்துவரும் நாடுகளுக்கு ரயில்வே உள்கட்டமைப்பை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாறுவது, அதன் பயணத்தில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்கின்றனர்.
இந்திய இரயில்வே துறையை மறுசீரமைப்பதை நோக்கி
இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் என்பது வெறும் ரயில்களையும் ரயில் நிலையங்களையும் புதுப்பிப்பது மட்டுமல்ல. இது நாட்டின் ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பையே மாற்றி அமைக்கும் ஒரு மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கையாகும். பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (DFCs) மூலம் சரக்கு ரயில்களையும் பயணிகள் ரயில்களையும் தனித்தனியாகப் பிரிப்பது, கவாச் 4.0 (Kavach 4.0) போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம், காலனித்துவ காலத்து அடையாளமாக இருந்த இந்திய ரயில்வே, தற்போது வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் "இரும்பு முதுகெலும்பாக" மாறி வருகிறது.
இந்த மாற்றம் இரண்டு தளங்களில் நடைபெற்று வருகிறது. முதலாவது, வேகம், வசதிகள் மற்றும் மொத்தப் பயணத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தில் ஒரு புரட்சியை உருவாக்குகிறது. இரண்டாவது வெளிப்படையாக தெரியாததாக இருந்தாலும், சரக்கு போக்குவரத்தையும் தொழில்துறை செயல்திறனையும் நவீனமயமாக்குவது ஆகும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம், இந்தியா 2047-ஆம் ஆண்டை நோக்கிப் பயணிக்கும்போது, நாட்டின் மிகத்தொன்மையான உள்கட்டமைப்புகள்கூட இந்தியாவின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு வலிமையான இயந்திரமாகத் தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும், இது தடையற்ற, பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து வசதிகளின் மூலம் தேசத்தை ஒன்றிணைக்கிறது.
Original link:
Indian Railways: From an aging colonial relic to a powerful engine of growth.