2025-ம் ஆண்டில், நீதித்துறை குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நீதிமன்றத்திற்கு வெளியேயான சர்ச்சைகளால் வடிவமைக்கப்பட்டன. 2026-ம் ஆண்டில், குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் தொடர்பான பல முக்கியமான பிரச்சினைகளை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டதால், கவனம் மீண்டும் நீதிமன்றங்களுக்குத் திரும்புகிறது.
2025-ம் ஆண்டில் நீதிபதிகளின் நடத்தை (conduct of judges) குறித்த விவாதங்கள் சட்டத்துறையில் ஆதிக்கம் செலுத்தின. தொடர்ச்சியான சர்ச்சைகள் நீதித்துறையின் மீது கவனத்தைத் திருப்பியது. அப்போதைய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பாக அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் தோல்வியடைந்தது மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய நேர்காணல்களில் தங்கள் தீர்ப்புகளை ஆதரித்த இரண்டு முன்னாள் இந்திய தலைமை நீதிபதிகள் (Chief Justices of India(CJI)) தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன.
நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்துகொண்டே, உச்சநீதிமன்றம் குறிப்பிடத்தக்க முடிவுகளை வழங்கியது. சில வழக்குகளில், நிர்வாகத் துறை வழக்கில் ஒரு தரப்பாக இருந்தபோது வழங்கப்பட்ட தனது முந்தைய தீர்ப்புகளை அது மாற்றி அமைத்தது. முன்னதாக, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு சட்டமன்றச் செயல்பாட்டில் ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. இந்த உத்தரவு குடியரசுத் தலைவர் பரிந்துரையின் மூலம் திறம்பட செல்லாததாக்கப்பட்டது. முன்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளைத் தடைசெய்த தனது முந்தைய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அதே ஆண்டில், நீதிமன்றம் பல நடுவர் மன்ற மற்றும் வணிகத் துறை தொடர்பான தீர்ப்புகளை வழங்கியது. இந்தத் தீர்ப்புகள் தனிப்பட்ட தகராறுகளில் நீதித்துறை அதிகாரத்தின் வரம்புகளைத் தெளிவுபடுத்த உதவியது.
எனவே, 2025 முடிவடையும் நிலையில், 2026 இந்திய உச்சநீதிமன்றத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
கண்காணிப்பின் கீழ் நீதிபதிகள்
பதவி நீக்கம்
நீதிபதி வர்மா வழக்கு ஒரு உள் நீதித்துறை விசாரணையிலிருந்து அரசியல் களத்திற்கு மாறியுள்ளது. அந்த நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர் எதிர்த்து வழக்குத் தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் கீழ் "ஒருதலைப்பட்சமாக" தன்னை விசாரிக்க ஒரு குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. நாடாளுமன்றம் இதை பின்பற்றினால், 2026-ம் ஆண்டு அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி மீது முதல் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும்.
நீதிபதி யாதவுக்கு எதிரான மற்றொரு பதவி நீக்கத் தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த முடிவு அரசியல்வாதிகள் அமல்படுத்தக்கூடிய நீதித்துறை பொறுப்புணர்வை எந்த அளவிற்கு உண்மையில் அமல்படுத்த முடியும் என்பதைச் சோதித்தது. நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பதவி நீக்கத் தீர்மானம் ஒரு மிக உயர்ந்த அரசியலமைப்பு வரம்பை அமைக்கிறது என்பதை இந்த வழக்கு காட்டியது. மேலும், இந்த செயல்முறை முற்றிலும் அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே வடிவமைக்கப்படுகிறது என்பதையும் இது காட்டியது.
பொதுமக்களின் கண்காணிப்பும் நேரலை ஒளிபரப்பும்
பெருந்தொற்று காலத்தில், நீதிமன்றங்கள் மெய்நிகர் விசாரணைகளை ஒரு பரிசோதனையாக மேற்கொண்டன. இது இப்போது ஒரு கலப்பின அமைப்பாக (hybrid system) உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு நடவடிக்கைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. ஆனால், இது நீதிபதிகளை நிகழ்நேரத்தில் கவனிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் உள்ள தடையையும் குறைத்துள்ளது.
நீதிபதிகளின் சாதாரணமாகக் கூறப்படும் வாய்மொழி கருத்துக்களும் நீதிமன்ற நகைச்சுவைகளும் இப்போது சமூக ஊடகங்களில் எளிதில் பரவுகின்றன. இந்த காணொளிகள் பெரும்பாலும் வைரலாகின்றன. அவை பெரும்பாலும் சரியான சூழல் இல்லாமல் பகிரப்படுகின்றன. சில சமயங்களில், அவை அரசியல் விவாதங்களில் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு வழக்கில் தலைமை நீதிபதி கவாய் தெரிவித்த கருத்துக்களால் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கறிஞர், நீதிமன்றத்திலேயே அவரைத் தாக்கினார். தெருநாய்களை நிர்வகிப்பதில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் தங்கள் தீர்ப்புகளை ஆதரித்ததன் மூலம், ஓய்வுக்குப் பிறகு அளித்த நேர்காணல்கள், அந்த நிறுவனத்தை முன்னெப்போதும் இல்லாத ஆய்வுக்கு உட்படுத்தியது. பாபர் மசூதி-ராம ஜென்மபூமி வழக்குத் தீர்ப்பில் (Babri Masjid-Ram Janmabhoomi verdict) நீதிமன்றத்தின் நியாயத்தை நீதிபதி சந்திரசூட் விளக்கினார். அதேநேரத்தில், ஓய்வு பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு நீதிபதி கவாய், தனது ஆரவல்லி தீர்ப்பை ஆதரித்தார். அதில் அவர் மலைகளின் 100 மீட்டர் வரையறையை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்த ஆண்டு, இந்த நிறுவனத்தின் மீதான தொடர்ச்சியான ஆய்வு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான வலுவான கோரிக்கைகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொலீஜியம் மற்றும் உள் கருத்து வேறுபாடு
2025-ம் ஆண்டில் கொலீஜியத்தின் செயல்பாடு வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலியை பரிந்துரைத்தது கொலீஜியத்திற்குள் கேள்விகளை எழுப்பியது. 2027-ம் ஆண்டில் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பி.என். நாகரத்னா, நீதிபதி பஞ்சோலியின் பரிந்துரைக்கு எதிராக ஒரு மாற்றுக்கருத்துக் குறிப்பை எழுதினார். இந்தக் குறிப்பு, பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கொலீஜியம் பதிவுகளில் சேர்க்கப்படவில்லை. தலைமை நீதிபதி சூர்யா காந்த் பிப்ரவரி 2027 வரை பதவிக்காலத்தில் இருப்பதால், அவர் 2026-ல் கொலீஜியத்திற்குத் தலைமை தாங்குவார். 2026-ம் ஆண்டில் குறைந்தது 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகுவதால், தலைமை நீதிபதி சூர்யா காந்த்தின் கொலீஜியம் புதிய நியமனங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அவரது பதவிக்காலம் அவர் தனது கொலீஜியம் சக உறுப்பினர்களுடன் உருவாக்கும் ஒருமித்த கருத்து மூலம் வடிவமைக்கப்படும்.
2026-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்குகள்
மதம்
ஒரு இடைக்கால உத்தரவில், உச்சநீதிமன்றம் 2025 வக்ஃப் சட்டத்தின் இரண்டு முக்கிய விதிகளை நிறுத்தி வைத்தது. முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்றாலும், வக்ஃப் சொத்தின் நிலையை தீர்மானிப்பதில் மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்களை அது கட்டுப்படுத்தியது மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத பிரதிநிதித்துவத்திற்கும் உச்சவரம்பு நிர்ணயித்தது என்று நீதிமன்றம் கூறியது. இந்தச் சட்டத்திற்கு எதிரான ஒரு பெரிய வழக்கு 2026-ல் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது. இது பிற அம்சங்களுடன், ஒரு சொத்து வக்ஃப் சொத்தா மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும் உள்ளடக்கியதா என்பதில் அரசாங்கத்தை நடுவராக ஆக்குகிறது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிரான வழக்கு (Places of Worship Act). 1991-ம் ஆண்டு சட்டம், அயோத்தியில் அப்போது சர்ச்சைக்குரிய கட்டமைப்பைத் தவிர, ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையையும் முடக்கியது.
கர்நாடக ஹிஜாப் தடைக்கு (Karnataka hijab ban) சவால், இது தனிநபர் சுயநிர்ணய உரிமை மற்றும் இது தனிப்பட்ட சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தும் அரசின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
சபரிமலையில் பெண்கள் நுழைவதை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பின் மறுஆய்வு, மதத்திற்கு அவசியமான மற்றும் ஒருங்கிணைந்த மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாக்க நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கோட்பாடான "அத்தியாவசிய மத நடைமுறை சோதனையை" (essential religious practice test) மறு மதிப்பீடு செய்யும்.
குடிமக்கள் மற்றும் அரசு
ஜூன் மாதம், தேர்தல் ஆணையம் பீகாரில் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் "சிறப்பு தீவிர திருத்தம்" (special intensive revision (SIR)) ஒன்றை அறிவித்தது. இந்தப் பயிற்சியில், 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் இல்லாத அனைத்து வாக்காளர்களும் மீண்டும் ஒருமுறை தங்கள் வாக்களிக்கும் தகுதியை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க வேண்டியிருந்தது. தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களின் பட்டியலை வழங்கியது, ஆனால் அதில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் சேர்க்கப்படவில்லை. இந்த முடிவு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது. பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டது. நீதிமன்றம் அத்தகைய பயிற்சியை நடத்துவதற்கு முதன்மையான தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறியது. அடையாளச் சான்றை நிரூபிப்பதற்கான ஆதாரை "12வது ஆவணமாக" கருதுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு நபரை விலக்க தேர்தல் ஆணையத்திற்கு மேலும் கடினமாக்கியது.
இந்த வாக்காளர் சரிபார்ப்புப் பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்போது, அது சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. 2026-ம் ஆண்டின் மத்தியில் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதை குறிப்பாக எதிர்க்கக்கூடும்.
குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான சவால். டிசம்பர் 31, 2014 க்கு முன்பு மூன்று முஸ்லிம் பெரும்பான்மை அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் அல்லாத, ஒரு வகுப்பினருக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் முயல்கிறது.
2020 டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உமர் காலித் மற்றும் பிறரின் ஜாமீன் மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பல நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பிக்காமல் இந்த வழக்கை விசாரித்துள்ள காலித்தின் ஜாமீன் வழக்கு, நீதிமன்ற அமைப்பில் ஏற்படும் தாமதங்கள் ஒரு குடிமகனின் சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளது. காலித்தின் ஜாமீன் வழக்குடன், பயங்கரவாதச் செயலை வரையறுக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 15 எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதற்கான பரந்த வரம்பை சவால் செய்யும் மனுவையும் உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும்.
பேச்சு சுதந்திரம்
தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கடுமையான கருத்துக்களும் முடிவுகளும், அவரது பதவிக்காலத்தில் பேச்சு சுதந்திரம் தொடர்பான வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதைக் காட்டுகின்றன. 2022-ம் ஆண்டு பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தொடர்பான வழக்கில், பாதுகாப்பு வழங்க மறுத்த நீதிபதி சூர்யகாந்த், "நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு" என்று கூறியிருந்தார். யூடியூப் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்ததற்காக பாட்காஸ்டர்-செல்வாக்கு மிக்க ரன்வீர் அல்லாபாடியாவுக்கு கைது செய்வதிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பு வழங்கிய நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வானது, "அவரது மனதில் ஏதோ ஒரு அசுத்தமான விஷயம் இருக்கிறது..." என்று குறிப்பிட்டது.
பின்னர், தலைமை நீதிபதியாக அவர் தலைமையிலான அமர்வு, பேச்சுரிமையைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், சமூக ஊடக தளங்களை "செல்வாக்கிலிருந்து விடுபட்ட" ஒரு தன்னாட்சி அமைப்பு மேற்பார்வையிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. பயனர்களின் வயதை ஆதார் அல்லது பான் அட்டையைப் பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் என்றும் அந்த அமர்வு பரிந்துரைத்தது. மே மாதம் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் மற்றும் மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா ஆகியோர் மீதான வெறுப்புப் பேச்சு தொடர்பான இரண்டு வழக்குகளில், முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டுமா என்பதைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் (SIT) விசாரணையை அமைக்க நீதிபதி காந்த் உத்தரவிட்டார்.
கொள்கை கேள்விகள் (Questions of policy)
அரசாங்கம் ”2025-ஆம் ஆண்டின் இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை” (Promotion and Regulation of Online Gaming Act) இயற்றியது. இந்தச் சட்டம் இணையவழி பண விளையாட்டுகளைத் தடை செய்தது. இது திறமை விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகளுக்கு இடையே நீதிமன்றங்கள் நீண்டகாலமாக ஏற்படுத்தியிருந்த வேறுபாட்டை குறைக்கச் செய்கிறது. இந்தச் சட்டம் டெல்லி, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்களில் சவால் செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த வழக்குகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டது.
டெல்லி-தேசிய தலைநகரப் பகுதியில் (Delhi-NCR) காற்று மாசுபாடு நெருக்கடி நீதித்துறையின் முக்கியப் பகுதியாகவே இருக்கும். உச்சநீதிமன்றம் மாதாந்திர விசாரணைகளை நடத்தி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கொள்கைகளை உருவாக்குவதில் இது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
முக்கியமான புதிய சட்டம்
அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா-2025 (Constitution (130th Amendment) Bill), ஊழல் அல்லது கடுமையான குற்றங்களை எதிர்கொண்டு, குறைந்தது 30 நாட்கள் தொடர்ச்சியாக காவலில் வைக்கப்பட்டிருக்கும் மத்திய அல்லது மாநில அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முயல்கிறது. இந்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக் குழுவிற்கு (Joint Committee) அனுப்பப்பட்டது. இந்த மசோதாவின்கீழ் ஒரு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்வதற்கான பல்வேறு அளவுகோல்களை உருவாக்க இது முயல்கிறது என்பது மசோதாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.
தற்போது, 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) கீழ், சில குற்றச் செயல்களுக்கு தண்டனை பெற்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவோ அல்லது பதவியில் நீடிக்கவோ தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இருப்பினும், முன்மொழியப்பட்ட திருத்தமானது, குற்றவியல் விசாரணையின் முதன்மை படிகளான கைது மற்றும் தடுப்புக்காவலை அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான அடிப்படையாக மாற்றுகிறது..
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023-ன் பல பகுதிகள் 2026-ல் தொடங்கும். டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025 ஆகியவை இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவைப் பாதுகாக்க விதிகளை உருவாக்குகின்றன. அவை தனிநபர்களின் (தரவு முதன்மைதாரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்) உரிமைகளையும், தரவைக் கையாளும் நிறுவனங்களின் (தரவுப் பொறுப்பாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்) கடமைகளையும் வரையறுக்கின்றன. இந்தச் சட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்போது, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் சட்டப் பூசல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' (One Nation, One Election (ONOE)) மசோதா, மக்களவைக்கும், மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த முன்மொழிகிறது. இது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகளான நீதிபதி ஜே.எஸ். கேஹர், ரஞ்சன் கோகோய், சந்திரசூட் மற்றும் யு.யு. லலித் ஆகியோர் இந்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராகினர். இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை என்று நீதிபதிகள் கேஹர் மற்றும் சந்திரசூட் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிபதிகள் கோகோய் மற்றும் லலித் ஆகியோர் சாத்தியமான சட்டச் சவால்களைச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Original Article : Before top court in 2026, matters of religion, citizenship, liberty. -Apurva Vishwanath