சமிவுல்லா vs பீகார் மாநிலம் (Samiullah vs State of Bihar) வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது? பீகாரின் பட்டா மாற்றத்துடன் இணைக்கப்பட்ட பதிவு விதிகளை நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது? பதிவு என்பது உரிமை அல்லது உடைமையிலிருந்து சட்டப்பூர்வமாக ஏன் வேறுபட்டது? இந்தியாவில் நிலப் பரிவர்த்தனைகளை 'கவலைக்குரியதாக' மாற்றும் கட்டமைப்பு குறைபாடுகள் யாவை?
தற்போதைய செய்தி:
சமீபத்தில் சமிவுல்லா vs பீகார் மாநிலம் (Samiullah vs State of Bihar) வழக்கில் வழங்கிய தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் சொத்து வாங்குவதும் விற்பதும் பல இந்தியர்களுக்கு ஒரு 'மன உளைச்சலைத் தரும்' அனுபவமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. இந்த கருத்து, நாட்டில் நிலம் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளின் போது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்காட்டுகிறது.
சமிவுல்லா வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?
2019ஆம் ஆண்டில் பீகார் பதிவு விதிகளின்கீழ், அறிமுகப்படுத்தப்பட்ட துணை விதிகள் செல்லுபடியாகுமா என்பதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்த மாற்றங்களின்படி, சொத்து விற்பனையாளர் ஜமாபந்தி அல்லது நில ஒதுக்கீட்டு ஆவணம் போன்ற பட்டா மாற்றத்திற்கான ஆதாரத்தைக் காட்டத் தவறினால், விற்பனை அல்லது தானப் பத்திரங்கள் போன்ற சொத்து பரிமாற்ற ஆவணங்களை நிராகரிக்க பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
துணை விதிகள் சட்ட அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை மற்றும் நியாயமற்றவை என்று கூறி, நீதிமன்றம் மூன்று முக்கியக் காரணங்களுக்காக துணை விதிகளை ரத்து செய்தது.
முதலாவதாக, இந்த விதிகள் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவுத்துறைத் தலைவருக்கு சட்டப்பூர்வ அதிகாரங்களை மீறின. இரண்டாவதாக, ஒரு ஆவணத்தைப் பதிவு செய்வதற்கு ஒரு முன்நிபந்தனையாக விற்பனையாளர்களைப் பட்டா மாற்றத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கச் செய்வதன் மூலம், இந்த விதிகள் நடைமுறையில் உரிமைக்கான ஆதாரத்தைக் கோரின. இது பதிவுச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது என்று கருதப்பட்டது. இது சொத்துக்களை மாற்றுவதற்கான மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், சொத்துரிமைக்கான அரசியலமைப்பு (right to property) உரிமையையும் கடுமையாகப் பாதித்தது. மூன்றாவதாக, பீகார் நிலப் பதிவுச் சட்டம் மற்றும் பீகார் சிறப்பு நில அளவை மற்றும் தீர்வுச் சட்டம் போன்ற சட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்த காரணித்தினால், நிலப் பதிவு மாற்றத்திற்கான சான்றைப் பெறுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருந்தது.
ஒரு சொத்துரிமை மாற்றப் பத்திரத்தைப் பதிவு செய்வது என்பது, உரிமை அல்லது உடைமையை நிலைநாட்டுவதிலிருந்து வேறுபட்டது என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது. உரிமை மற்றும் உடைமை தொடர்பான விசாரணைகள் பதிவு அலுவலகங்களின் வரம்பிற்குள் வராமல், குடிமை நீதிமன்றங்களின் (civil courts) வரம்பிற்குள் வருகின்றன. பதிவிற்கான முன்நிபந்தனைகள் சொத்து மற்றும் விற்பனையாளரை அடையாளம் காண்பது தொடர்பானவை என்று நீதிமன்றம் முடிவு செய்தது. வரைபடங்கள் அல்லது நில அளவைப் பதிவுகள் இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
பதிவுக்கும் உரிமைப் பத்திரத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது?
உரிமை மாற்றம் செய்யப்பட்டதற்கான கட்டாயச் சான்றானது, பதிவை உண்மையான உரிமைப் பத்திரத்துடன் இணைப்பதன் மூலம் விற்பனை பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்று பீகார் மாநிலம் வாதிட்டது. ஒருங்கிணைப்பதில் உள்ள நன்மைகளை நீதிமன்றம் ஒப்புக்கொண்டபோதிலும், 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய நில அளவீடுகள் இல்லாததையும், நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறிப்பிடத்தக்க தடைகளாகச் சுட்டிக்காட்டியது.
பதிவுச் செயல்முறையுடன் ஒரு திட்டவட்டமான உரிமைப் பதிவு முறை ஒருங்கிணைக்கப்படும் வரை, சொத்துக்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் தனிநபர்களுக்கு உள்ள சுதந்திரத்திற்கும், சொத்து பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த வேண்டிய அரசாங்கத்தின் கடமைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது அரசியலமைப்பு நீதிமன்றங்களின் (constitutional courts) பொறுப்பாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஜூன் மாதம், கே. கோபி vs சார் பதிவாளர் வழக்கில், சொத்துரிமை தொடர்பான கேள்விகளைத் தீர்மானிக்கும் நீதி வழங்கும் அதிகாரம் சார் பதிவாளருக்கு இல்லாததால், அவர் சொத்தின் உரிமை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்று கூறி, பதிவு மற்றும் உரிமை குறித்த தனது சட்ட நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன் விளைவாக, விற்பனையாளர் தனது உரிமையை நிரூபிக்காத பட்சத்தில், விற்பனைப் பத்திரங்களை நிராகரிக்க துணைப் பதிவாளர்களுக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசாங்கத்தின் விதியை நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த விதி, விற்பனையாளர்கள் தாங்கள் உரிமையாளரானதற்கான அசல் ஆவணத்தைக் காட்ட வேண்டும் என்று கோரியது.
சாமியுல்லா வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அடுத்தடுத்த தீர்ப்புகளிலும் இதே போன்ற ஒரு வாத முறை தெளிவாகத் தெரிகிறது.
இந்த இரண்டு தீர்ப்புகளும், பதிவுச் சட்டம் (Registration Act) என்பது ஆவணங்களைப் பதிவு செய்வதைப் பற்றியது மட்டுமே என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. பதிவு செய்வது என்பது உரிமைக்கு ஒரு தற்காலிக அனுமானத்தை மட்டுமே வழங்குகிறது, உறுதியான ஆதாரத்தை அல்ல. 1908-ஆம் ஆண்டுச் சட்டத்திற்குப் பதிலாக வரவிருக்கும் 2025-ஆம் ஆண்டுப் பதிவு மசோதாவும் இதே போன்ற நிலைபாட்டை கொண்டுள்ளது. இந்த விதிகள், சொத்தின் உரிமையாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்காகப் பதிவு அதிகாரிகள் பதிவை மறுக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன; அவ்வாறு செய்வதற்கு ஒரு முறையான நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறுகிறது.
இந்த நிலைப்பாடு நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு கொள்கையை வலுப்படுத்துகிறது என்றாலும், நில மேலாண்மை எவ்வளவு சிக்கலானது என்பதையும், அதற்கு ஏன் சீர்திருத்தம் தேவைப்படுகிறது என்பதையும் நினைவூட்டும் ஒரு பயனுள்ள குறிப்பாக அமைகிறது.
இந்தியாவில் சொத்து வாங்குவதும் விற்பதும் ஏன் ஒரு 'மன உளைச்சலைத் தரும்' செயலாக மாறியுள்ளது?
இந்தியாவில் நில மேலாண்மை என்பது சிக்கலான ஒன்றாகும். ஏனெனில், இதில் பழைய காலனித்துவச் சட்டங்கள், சிக்கலான அரசாங்க அமைப்புகள் மற்றும் பணிச்சுமை நிறைந்த நீதிமன்றங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இது பெரும்பாலும், நிர்வாக ரீதியிலானதாகவோ அல்லது நீதித்துறை சார்ந்ததாகவோ இருந்தாலும், நிலத்திற்கான நீண்டகாலப் போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது.
பதிவு, நில அளவை, தீர்வு மற்றும் வருவாய் ஆகிய மூன்று தனித்தனித் துறைகள் தனித்தனியாகச் செயல்படுவதால், பதிவுகளை பராமரிப்பது கடினமாக உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன. மேலும், தற்போதைய அமைப்பு உரிமை குறித்த ஒரு தற்காலிக அனுமானத்தை மட்டுமே வழங்குகிறது. இது பழைய பத்திரங்கள், வரி ரசீதுகள், பட்டா மாற்றப் பதிவுகள், உடைமைக்கான சான்றுகள் அல்லது பிற விற்பனைப் பத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி நீதிமன்றத்தில் சவால் செய்யப்படலாம். இதன் காரணமாக, சொத்து வாங்குபவர்கள் சொத்து வாங்குவதற்கு முன்பு மிகுந்த கவனத்துடன் பல்வேறு சரிபார்ப்புகளைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலப் பதிவுகள் தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக வடிவங்களைப் புரிந்துகொள்வதோடு, இந்திய துணைக்கண்டம் முழுவதும் நில நிர்வாகத்தில் நிலவும் வரலாற்று முரண்பாடுகளிலிருந்து எழும் சிக்கல்களையும் அங்கீகரிப்பது முக்கியம். பல நூற்றாண்டுகளாக, இப்பகுதி பல்வேறு ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. அவர்களில் ஒவ்வொருவரும் தனித்துவமான வருவாய் அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளனர். பல்வேறு நிர்வாக நடைமுறைகள், காலனித்துவ ஆட்சி, மாகாண அரசாங்களில் பயன்படுத்தப்பட்ட தனி விதிகள், பல்வேறு வகையான பட்டங்கள் உருவாக்கம் மற்றும் நில உச்சவரம்புச் சட்டங்கள் போன்ற சுதந்திரத்திற்குப் பிந்தைய குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் மரபு, நிலம் தொடர்பான மிகவும் சிக்கலான மற்றும் பிராந்திய ரீதியாக வேறுபட்ட ஒரு சமூக-சட்டகட்டமைப்பிற்கு (socio-legal framework) வழிவகுத்துள்ளது.
நில நிர்வாக சீர்திருத்தத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
இதற்கான தீர்வு பரந்த அளவிலான நிர்வாகச் சீர்திருத்தத்தில் உள்ளது. மோசடி நடப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் வகையில், நிலப் பதிவேடுகளைப் பராமரிப்பதற்கான ஒரு ஒற்றை, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பை (synchronised record-keeping system) உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கி நவீனமயமாக்குவதற்கான முயற்சிகள் ஒன்றிய மற்றும் மாநில அளவில் நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக, கர்நாடகாவின் பூமி மற்றும் காவேரி அமைப்புகள் நில உரிமைப் பதிவுகளைப் பதிவுடன் இணைக்கின்றன. இதனால், ஒரு சொத்து விற்கப்படும்போது உரிமை விவரங்கள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன. புவியிடத் தரவுகளை வருவாய்ப் பதிவுகளுடன் இணைப்பதற்கான இதே போன்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் இது விவசாய நிலங்களுக்காகவே செய்யப்படுகிறது.
இந்த சீர்திருத்த முயற்சிகளில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. நில மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களின் பங்கு குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நிலப் பதிவுகளைப் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், திருத்த முடியாததாகவும் மாற்றுவதற்கு பிளாக்செயினைப் பயன்படுத்துமாறு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் நிலப் பதிவுகளுக்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்ட ஒரு முன்னோடித் திட்டம், நிலத் தகராறுகளைப் பாதியாகக் குறைத்து, சொத்து பரிவர்த்தனைகளை 30% அதிகமாக்கியுள்ளது.
பிளாக்செயின்கள் எவ்வாறு செயல்படும்?
பிளாக்செயின் என்பது, அதன் புனைப்பெயர் குறிப்பிடுவது போல, திருத்த முடியாத, டிஜிட்டல் சங்கிலியுடன் இணைக்கப்பட்ட தரவுத் தொகுதிகளின் சங்கிலியாகும். இந்தத் தகவல் ஒரு பரவலாக்கப்பட்ட, திறந்த அமைப்பில் சேமிக்கப்படுகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கணினியும் தரவின் ஒவ்வொரு தொகுதியையும் சரிபார்க்க முடியும். பாரம்பரிய படிநிலை அமைப்புகளைப் போல் இல்லாமல், இது பரவலாக்கப்பட்ட நிர்வாகத்தைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொகுதிகள் நிரந்தர தரவைச் சேமிக்கும் டிஜிட்டல் கணக்குப் பதிவேடுகள் (ledgers) போன்றவை. ஒவ்வொரு புதிய பரிவர்த்தனையும் இந்தத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டு, கணினியில் உள்ள அனைத்து கணினிகளுடனும் பகிரப்படுகிறது. இந்த கணக்குப் பதிவேடுகள் ஒரு பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதன் பொருள், புவியியல் இருப்பிடம் அல்லது நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து தகவல்களும் பரிவர்த்தனைகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பகிரப்படுகின்றன என்பதாகும்.
இந்த கணக்குப் பதிவேடுகளை யார் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து, அவற்றை அனுமதிக்கலாம் அல்லது அனுமதிக்காமல் இருக்கலாம். இந்த பரவலாக்கப்பட்ட தொகுதி தரவுத்தள அமைப்பின் தன்மை, கணினி ஊடுருவிகள் (Hackers) பிளாக்செயினில் உள்ள தகவல்களை சேதப்படுத்துவதிலிருந்தோ அல்லது மாற்றுவதிலிருந்தோ தடுக்கிறது. ஏனெனில், ஒரு குறியீட்டை மாற்றுவது உடனடியாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். டிஜிட்டல் நாணயம் அல்லது சொத்தை மோசடியாக நகலெடுப்பதன் மூலம் இரட்டிப்பாக்க முயற்சிப்பது, விநியோகிக்கப்பட்ட கணக்குப் பதிவேடுகளை பரிவர்த்தனை அமைப்பு காரணமாக கடினமான பணியாக இருக்கும்.
இந்த வழியில், கணக்குப் பதிவேடு என்பது நிகழ்வுகளின் ஒரு நிரந்தரமான, ஒழுங்கமைக்கப்பட்ட பதிவாகும். நிலப் பதிவுகளுக்கு இதைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு நிலத்திற்கும் அதன் சொந்த 'பிளாக்' இருக்கும். அதில் அதன் உரிமை, வாரிசுகள், இருப்பிடம், நில அளவை விவரங்கள், வரைபடம், நீர் ஆதாரங்கள், பயிர்கள் மற்றும் அது தொடர்பான பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள் போன்ற அதன் முழு வரலாறும் இடம் பெற்றிருக்கும். அதே நிலத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள், தகவல்களின் மற்றொரு தொடர்புடைய தொகுதியை உருவாக்கும். இதன்மூலம் தொடர்ந்து புதுப்பிக்கப்படும், வெளிப்படையான மற்றும் மாற்ற முடியாத நிலப் பதிவுகளின் வலையமைப்பு உருவாகும். இருப்பினும், இந்தத் தொகுதிகளில் சேமிக்கப்படும் தகவல்கள் துல்லியமானவை என்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இல்லையெனில் அத்தகைய தரவுகளைச் சரிசெய்வது உரிமையாளர்களுக்கு ஒரு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். முக்கியமாக, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, தற்போதுள்ள நில நிர்வாகம் மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சீர்திருத்தங்களின் அவசரத் தேவையை வெளிக்காட்டுகிறது. இந்தியாவின் நில நிர்வாகத்தில் உள்ள ஆழமான சிக்கல்களைப் புரிந்துகொள்வதே, அனைவருக்கும் சொத்துரிமையை உறுதிசெய்யும் பயனுள்ள தீர்வுகளை நோக்கிய முதல் படியாகும்.
கிரிஜா போசலே, பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வு நிறுவனம் (National Institute of Advanced Studies (National Institute of Advanced Studies (NIAS)) உள்ள பூசம்பதாவில் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார்; மாலினி மல்லிகார்ஜுன் தேசிய மேம்பட்ட ஆய்வு நிறுவனம் பூசம்பதாவின் தலைவராக உள்ளார்.
Original Article : On property registration and title. -Girija Bhosale