பாரமுல்லாவில் (Baramulla) உள்ள ஜெஹன்போராவில் 2,000 ஆண்டுகள் பழமையான புத்த தளத்தின் அகழ்வாராய்ச்சி, இந்தியாவின் பண்டைய நாகரிகத்திற்குள் ஜம்மு & காஷ்மீரின் ஒருங்கிணைந்த முக்கிய இடத்தை மீண்டும் கவனத்தில் கொண்டு வந்துள்ளது.
தற்போதைய நிகழ்வு :
டிசம்பர் 28 அன்று, 2025-ம் ஆண்டுக்கான தனது கடைசி ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஜெஹான்போரா தொல்பொருள் தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். இது பண்டைய புத்த உலகில் காஷ்மீரின் பங்களிப்பை எடுத்துரைத்த அவர், இந்த எச்சங்கள் குஷானர் காலத்திற்கு கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று குறிப்பிட்டார். இந்த மேடுகள் குறித்த ஆரம்பக்கட்டத் தடயம், பாரமுல்லாவில் இருக்கும் மூன்று பழங்கால தூண்(ஸ்தூபி)களைக் காட்டும் ஒரு பிரெஞ்சு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு காப்பக புகைப்படத்திலிருந்து வெளிவந்தது.
முக்கிய அம்சங்கள் :
1. கலாச்சார அமைச்சகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா ஃபைசல், ஒரு நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையில், புத்த மத வரலாற்றில் காஷ்மீர் பற்றிய அதிகம் அறியப்படாத உண்மைகளை எடுத்துரைத்தார். ஸ்ரீநகர் நகரத்தை நிறுவியதாக நம்பப்படும் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த பேரரசர் அசோகர், இப்பகுதியில் மடங்களையும் ஸ்தூபிகளையும் நிறுவியுள்ளார்.
2. சிந்து-காந்தாரா பகுதி (Indus–Gandhara region) மற்றும் இமயமலை வழித்தடத்தின் (Himalayan corridor) சந்திப்பில் காஷ்மீர் அமைந்திருப்பது, இந்திய மையப்பகுதிக்கும் பரந்த ஆசிய உலகிற்கும் இடையே ஒரு வழியாகச் செயல்படுவதற்கு தனித்துவமாகப் பொருத்தமானதாக அமைந்தது.
3. முற்கால புத்த வரலாற்று நூல்களும், பிற்கால சமஸ்கிருத மூலங்களும் காஷ்மீரை தொடர்ந்து கற்றல் நிலம் (land of learning) அல்லது சாரதா பீடம் (Sharada Pith) என்று தொடர்ந்து குறிப்பிடுகின்றன. இது பண்டைய மற்றும் ஆரம்பகால இடைக்காலங்களில் காஷ்மீர் முதன்மையான கல்வி மையங்களில் ஒன்றாக இருந்த பங்களிப்பை அடையாளப்படுத்துகிறது.
4. புத்த தத்துவ மரபு நாகார்ஜுனரின் படைப்புகளில் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் மத்தியமகா, அல்லது நடு வழி, தத்துவத்தை நிறுவியவர். இந்தத் தத்துவமே மகாயான புத்தத்திற்கு அடிப்படையாக அமைகிறது. நாகார்ஜுனர் பல்வேறு பிராந்தியங்களில் பரவலாகப் பயணம் செய்தார். இந்த காலகட்டத்தில், அவரது கருத்துக்களைப் பயிலவும், பாதுகாக்கவும், வளர்க்கவும் காஷ்மீர் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
5. புத்த வரலாற்றில் காஷ்மீரின் முக்கியத்துவம் குஷானர் காலத்தில் தான் தெளிவாகத் தெரிந்தது. ஜெஹான்போரா தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதும் இதே காலத்தைச் சேர்ந்தவைதான். பேரரசர் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில், புத்தம் வலுவான மற்றும் முன்னெப்போதும் இல்லாத அரச ஆதரவைப் பெற்றது.
6. பேரரசர் கனிஷ்கர் நான்காவது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார். இதற்கு அறிஞர் வசுமித்திரர் தலைமை தாங்கினார். அஸ்வகோஷர் அதன் முக்கியப் பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார். மகாயான புத்தத்தை முறைப்படுத்துவதிலும் பரப்புவதிலும் இந்த சபை தீர்க்கமானதாக இருந்தது. இந்த மகாயான புத்தம் கருணை, போதிசத்துவர் இலட்சியம் மற்றும் அனைத்து உயிரினங்களின் முக்திக்கு முக்கியத்துவம் அளித்தது.
7. காஷ்மீரிலிருந்து, மகாயானக் கருத்துக்கள் காந்தர், காபூல் மற்றும் அங்கிருந்து பாக்ட்ரியாவுக்குப் (Bactria) பரவின. இந்த வகையில், காஷ்மீர் உலகளாவிய புத்தத்திற்கு புறம்பானது அல்ல. மாறாக, அது அதன் முக்கிய தொடக்க மையங்களில் ஒன்றாக இருந்தது. சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதத்தில் எழுதப்பட்ட, உலகின் மிகப் பழமையான புத்த நூல்களில் ஒன்றான கில்கிட் கையெழுத்துப்பிரதிகள் (Gilgit Manuscripts), காஷ்மீர் மற்றும் அதன் அண்டை பகுதிகளை புத்த அறிவின் பாதுகாவலர்களாக செயல்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
புத்த மதத்தின் தோற்றம்
புத்த மதம் சித்தார்த்தராகப் பிறந்த புத்தரால் நிறுவப்பட்டது. அவர் கபிலவஸ்துவின் (நவீன நேபாளத்தில் அமைந்துள்ள) சாக்ய குலத்தின் தலைவரான மன்னர் சுத்தோதனின் மகனாவார். பல்வேறு கதைகளின்படி, மாயா தனது பிறந்த வீட்டிற்குச் செல்லும் வழியில் லும்பினியில் உள்ள ஒரு தோப்பில் சித்தார்த்தரை பெற்றெடுத்தார்.
பாலி நூல்களின்படி, சித்தார்த்தர் தனது 29 வயதில், வாழ்க்கையை மாற்றும் காட்சிகளை அவர் சந்தித்தார். இதில் ஒரு வயதானவர், ஒரு நோய்வாய்ப்பட்ட நபர், ஒரு பிணம் மற்றும் ஒரு துறவி. இந்தக் காட்சிகள் அவரை ஆழமாகப் பாதித்தன. அவை வாழ்க்கையின் தவிர்க்க முடியாத யதார்த்தங்களை அவருக்கு உணர்த்தின. எனவே, அவர் தனது அரச வாழ்க்கையைத் துறந்து ஆறு ஆண்டுகள் அலைந்து திரிந்த துறவியாக மாறி, கடுமையான துறவறங்களைச் செய்தார்.
காலப்போக்கில், அவர் தற்கால பீகாரில் உள்ள கயாவில் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார். இதற்குப் பிறகு, புத்தர் அல்லது ஞானம் பெற்றவர் என்று அறியப்பட்டார். அவர் ததாகதர் (Tathagata) என்றும் குறிப்பிடப்படுகிறார். இந்தச் சொல் பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒருவரைக் குறிக்கிறது.
புத்தர் தனது முதல் பிரசங்கத்தை பனாரஸுக்கு (வாரணாசி) அருகே உள்ள ஒரு மான் பூங்காவில் தனது ஐந்து சீடர்களுக்கு வழங்கினார். இது தம்மச்சக்க-பவத்தனா (தம்மச் சக்கரத்தின் சுழற்சி) என்று குறிப்பிடப்படுகிறது. தனது பிரசங்கத்தில், புத்தர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பாதையை முன்வைத்தார். இது தனிநபர்கள் பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறவிச் சுழற்சியிலிருந்து தப்பிக்க உதவும் ஒரு வாழ்க்கை முறையை விவரித்தது. அவரது போதனைகளின் மையத்தில் நான்கு உன்னத உண்மைகள் உள்ளன. அவை ’அரிய-சச்சானி’ (ஆரிய சத்யா) என்றும் அழைக்கப்படுகின்றன. அவை,
உலகம் துன்பங்களால் நிறைந்தது. (dukkha - துக்கா)
துன்பம் ஆசையிலிருந்து எழுகிறது. (samudaya - சமுதாய)
துன்பத்தை வெல்ல முடியும் (nirodha - நிரோதா)
துன்பத்தை வெல்வதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த வழி எண்வழிப் பாதை ஆகும், இது ’அத்தங்க-மக்’ அல்லது ’அஷ்டாங்க மார்க்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மகாயான புத்தம்
1. மகாயான புத்தம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. மேலும் அதன் கோட்பாடுகள் 4-வது புத்த சபையின் போது மேலும் வளர்க்கப்பட்டன. ஆச்சார்ய நாகார்ஜுனர் மகாயான புத்தத்தில் ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார். அவர் மத்யமிகா தத்துவத்தை (Madhyamika philosophy) முன்வைத்தார். இது மகாயான புத்தத்தின் அடிப்படையாகும்.
2. ஆரம்பகால புத்த போதனைகள் ஒருவரின் சொந்த முயற்சியால் நிர்வாண நிலையை அடைவதில் கவனம் செலுத்தின. இருப்பினும், காலப்போக்கில், ஒரு புதிய கருத்து உருவானது. இந்தக் கருத்து மற்றவர்களின் முக்திக்காக உழைக்கும் ஒரு இரட்சகரைப் பற்றியது. இதன் மூலம் போதிசத்தர் (Bodhisatta) என்ற கருத்து உருவானது. போதிசத்தர்கள் தங்கள் முயற்சிகள் மூலம் தகுதிகளைச் சேகரித்த ஆழ்ந்த இரக்கமுள்ள மனிதர்களாகக் கருதப்பட்டனர். இருப்பினும், அவர்கள் இந்த புண்ணியத்தை நிர்வாண நிலையை அடைந்து உலகை விட்டுச் செல்லப் பயன்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் இங்கேயே தங்கி மற்றவர்களுக்கு உதவத் தேர்ந்தெடுத்தனர்.
3. இந்த மரபு "மகாயானம்" என்றும் அழைக்கப்பட்டது. இந்த நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் பழைய பாரம்பரியத்தை ஹீனயானம் (Hinayana) அல்லது "குறைந்த வாகனம்" (lesser vehicle) என்று விவரித்தனர். மகாயானம் வடக்கு மற்றும் வடகிழக்கு ஆசியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.