கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை: ASHA மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டங்கள் குறித்து…

  அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்களுக்கு (Accredited Social Health Activist (ASHA)) சமமான ஊதியத்தை அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.


மேற்கு வங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மாதம் ₹15,000 ஊதியம் வழங்கக் கோரி நடத்தி வரும் போராட்டங்கள், ஒன்றிய மற்றும் மாநில நலத்திட்டங்களுக்கு மிக முக்கியமான பணியாளர்களுக்கு நீண்டகாலமாக 'நிரந்தரப் பணியாளர்' தகுதி மறுக்கப்படுவதை வெளிப்படையாகக் காட்டுகின்றன. இந்திரா காந்தி அரசின் காலத்தில் இருந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (Integrated Child Development Scheme (ICDS)) அங்கன்வாடி ஊழியர்கள் முறையான தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் இது தொழிலாளர் சட்டங்களை அரசு தவிர்ப்பதற்கான ஒரு முன்மாதிரியை உருவாக்கியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்களது பணிச்சுமை அதிகரித்ததால், 1989-ஆம் ஆண்டில் தேசிய அளவிலான  சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், பொருளாதார தாராளமயமாக்கல் காலத்திலும்கூட, அரசு நிரந்தர வேலைகளை உருவாக்காமல் நலத்திட்டங்களை மட்டுமே விரிவுபடுத்தியது; மாறாக அவர்களை "திட்ட பணியாளர்கள்" (Scheme workers) என்று வகைப்படுத்தி உள்ளது.  கர்நாடக அரசு vs அமீர்பி (1996) (State of Karnataka vs Ameerbi (1996)) இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு, அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர் தகுதியிலிருந்து விலக்கி வைப்பதாகத் தீர்ப்பளித்தது. இருப்பினும், 2004-ஆம் ஆண்டில் 'உணவுக்கான உரிமை' சட்டம் வலுப்பெற்றபோது இந்தப் பணியாளர்களின் தேவை அதிகரித்தது. 2000-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர் (ASHA) திட்டமும் இதே முறையைப் பின்பற்றியது; இதில் பணியாற்றுபவர்கள் 'பணியாளர்கள்' என்று அழைக்கப்படாமல் 'சமூக ஆர்வலர்கள்' அல்லது ‘செயற்பாட்டாளர்கள்’  என்றே அழைக்கப்பட்டனர். 2010-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த 45-வது தொழிலாளர் மாநாட்டில், அரசு, வேலை வழங்குபவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து, பணிகளை நிரந்தரமாக்கவும், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை (Gratuity) வழங்கவும் பரிந்துரை செய்தன. இருப்பினும், அடுத்தடுத்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசாங்கங்கள் இதைச் செயல்படுத்தத் தவறின. 2015-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான ((Integrated Child Development Scheme (ICDS)) நிதியைக் குறைத்தது, அதன்பிறகு இந்தத் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக மீண்டும் மீண்டும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


ஒன்றிய அரசானது 2018-ஆம் ஆண்டிலேயே இந்தத் தொழிலாளர்களின் ஊதியத்திற்கான தனது பங்களிப்பை நிறுத்திவிட்டது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது. அதுமட்டுமின்றி, புதிய தொழிலாளர் சட்டங்களில் முறைசாரா பணியாளர்களுக்கு (gig workers) சிறந்த பணிச்சூழலுக்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இவை அனைத்தும், அரசு தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு, மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள தொழிலாளர்களைக் கைவிடுவதையும், அதற்குப் பதிலாக வணிக நலன்களுக்கும் நிதி மேலாண்மைக்கும் மட்டுமே முன்னுரிமை அளிப்பதையும் இந்த நடவடிக்கைகள் காட்டுகிறன. பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் பணி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது. தொழிற்சங்கங்கள் இந்த அதிகாரத்தையும், தேர்தல்கால அழுத்தங்களையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே இதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும்பட்சத்தில், மாநிலங்கள் தங்கள் சொந்த வரவு-செலவுத் திட்டத்திலிருந்தே ஊதியத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எதிர்பார்த்தபடியே, வசதி படைத்த மாநிலங்களும், பலமான தொழிற்சங்க அழுத்தம் கொண்ட மாநிலங்களும் கூடுதல் சலுகைகளை வழங்கின. ஆனால், நிதிநிலை வசதிகளில் நலிந்த மாநிலங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. இருந்தபோதிலும், இந்தத் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளைத் தொடர்ந்து மறுப்பது என்பது தெரிந்தே செய்யப்படும் சுரண்டலாகவே பாரக்கப்படுகிறது.  சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (Code on Social Security), இந்த "தன்னார்வலர்களை" (volunteers) சட்டப்பூர்வமான ஊழியர்களாக ஒன்றிய அரசு வகைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அனைத்துப் மாநிலங்களிலும் சமமான ஊதியத்தை உறுதிசெய்ய, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டும். இத்தகைய சட்டப்பூர்வப் பாதுகாப்புகளை முறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே, இந்த அத்தியாவசியப் பணியாளர்களுக்கு அவர்கள் தகுதியான கண்ணியத்தை இந்தியா அரசாங்கம் வழங்கமுடியும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


Original Article : Right to dignity: On ASHA and anganwadi workers’ protests


Share: