அணுசக்தித் துறையில் இந்தியாவின் நிலை என்ன? -குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


— இந்தியா இன்னும் அதிகளவில் அனல் மின்சக்தியையே  (Thermal power) நம்பியுள்ளது. பொது மின்சார விநியோகம் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் நிலக்கரியே முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்து, ஒரு சமநிலையை ஏற்படுத்துவதையே இந்த வரைவுக் கொள்கை (Draft policy) நோக்கமாகக் கொண்டுள்ளது.


— 2005-ஆம் ஆண்டின் தேசிய மின்சாரக் கொள்கைக்கு (National Electricity Policy (NEP)) மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள 2026-ஆம் ஆண்டின் வரைவு மின்சாரக் கொள்கை, சிறிய அளவிலான மாடுலார் அணு உலைகள் (Small Modular Reactor (SMRs)), இதர சிறிய அளவிலான அணு உலைகள் மற்றும் வணிக மற்றும் தொழில்முறைப் பயனாளர்களுக்கு நேரடியாக அணுசக்தியை வழங்குதல் போன்ற மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.


— இந்த நடவடிக்கை, இந்தியாவின் அணுசக்தித் திறனை தற்போதைய 8.8 ஜிகாவாட் மின்சார சக்தியிலிருந்து (Gigawatt electric (GWe)) 2047-ஆம் ஆண்டிற்குள் 100 (Gigawatt electric (GWe)) ஜிகாவாட் மின்சார சக்தியாக உயர்த்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கிற்கு வலுசேர்க்கிறது. மேலும், இது தனியார் துறையினரின் பங்கேற்பிற்கு நீண்டகாலமாக இருந்த சட்ட மற்றும் ஒழுங்குமுறை தடைகளைத் தளர்த்திய சாந்தி (SHANTI) சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.


DRAFT ELECTRICITY

— மின்சாரத் துறையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களையும், மின்சாரக் கட்டண மாற்றங்களை ஒழுங்குமுறை ஆணையங்கள் தாமதப்படுத்தினால், தானாகவே செயல்படக்கூடிய (விலைவாசி குறியீட்டுடன் இணைக்கப்பட்ட) கட்டணத் திருத்த முறையையும் இந்த வரைவு கொள்கையானது பரிந்துரைக்கிறது. இது மின் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தவிர்க்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


— மின்தொகுப்பின் (Power Grid) நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, மின்சேமிப்புத் தொழில்நுட்பத்திற்கு (Energy Storage) கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், சந்தை சார்ந்த வழிமுறைகள் மற்றும் சுயதேவை மின் உற்பத்தி நிலையங்கள் (Captive Power Plants) மூலமாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை இந்தக் கொள்கை தொடர்ந்து ஆதரிக்கிறது.


— மின்சாரத் தேவையைப் பொறுத்தவரை இந்த வரைவு அறிக்கை லட்சிய இலக்குகளைக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியால் மின்சாரத் தேவை பெருமளவில் அதிகரிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஒரு நபருக்கான மின்சாரப் பயன்பாடு 2030-ஆம் ஆண்டிற்குள் 2,000 kWh (kilowatt-hour) ஆக உயரும் என்றும், 2047-ஆம் ஆண்டிற்குள் 4,000 kWh என்கிற அளவவிற்கு அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


— இது இந்தியாவின் வளர்ச்சிக்கும், அந்நாட்டின் காலநிலை இலக்குகளுக்கும் இடையிலான தொடர்பை விளக்குகிறது. குறிப்பாக, 2030-ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வு தீவிரத்தை 2005-ஆம் ஆண்டு அளவோடு ஒப்பிடும்போது 45 சதவீதமாகக் குறைப்பது என்றும் 2070-ஆம் ஆண்டிற்குள் 'நிகர பூஜ்ஜிய' கார்பன் உமிழ்வு நிலையை அடைவது போன்ற இலக்குகளை இந்த வரைவுக கொள்கையானது சுட்டிக்காட்டுகிறது. மேலும், குறைந்த கார்பன் ஆற்றலை நோக்கி உறுதியாகச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இது வலியுறுத்துகிறது.


— மின்சார உற்பத்தியுடன் கூடுதலாக, மின் விநியோக நிறுவனங்களின் (Electricity Distribution Companies (DISCOMS)) நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் இந்தக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.


— தேசிய மின்சாரக் கொள்கை (NEP 2026), மின் விநியோக நிறுவனங்களின் (DISCOMs) நிதி நிலையைச் சீரமைக்க முயல்கிறது. இதற்காக, மின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ற கட்டணங்களை நிர்ணயித்தல், கூடுதல் செலவுகளை உடனுக்குடன் கட்டணத்தில் சேர்த்தல் மற்றும் மின் விநியோகத்தின்போது ஏற்படும் இழப்புகளைக்  குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை இந்தப் வரைவுக் கொள்கை வலியுறுத்துகிறது.


— மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய மின் கட்டண ஆணையை வெளியிடவில்லை என்றால், மின் கட்டணங்களை ஒரு குறிப்பிட்ட குறியீட்டுடன் (Index) இணைக்க வேண்டும் என்று இது பரிந்துரைக்கிறது. இதன்மூலம் மின் கட்டணங்கள் ஒவ்வோர் ஆண்டும் தானாகவே மாற்றி அமைக்கப்படும். தற்போது, மின் உற்பத்தி, மின்சாரத்தைக் கடத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கான செலவுகளுடன் ஒரு நியாயமான லாபத்தையும் சேர்த்து, நுகர்வோர் வகைகள் மற்றும் அரசின் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு செலவு மற்றும் லாப (Cost-plus) அடிப்படை முறையில் இந்த ஆணையங்கள் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.


— உற்பத்தி நிறுவனங்கள், இரயில்வே மற்றும் மெட்ரோ இரயில்வே ஆகியவை 'திறந்த நிலை' (Open access) முறையில் மின்சாரத்தைப் பெறும்போது, குறுக்கு-மானியக் கட்டணங்கள் (Cross-subsidy charges) மற்றும் கூடுதல் கட்டணங்களை (Surcharges) செலுத்த வேண்டிய அவசியமில்லை என்கிற மற்றொரு முக்கியமான மாற்றமும் முன்மொழியப்பட்டுள்ளது.


— தற்போது, உள்ளூர் மின் விநியோக நிறுவனங்களைத் (Discoms) தவிர்த்துவிட்டு நேரடியாக மின்சாரம் வாங்கும் பெரிய நுகர்வோர், அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்தக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இதில், 'குறுக்கு-மானியக் கட்டணம்' என்பது வீடுகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்த மின்சாரக் கட்டணத்தைச் சரிசெய்யப் பயன்படுகிறது. 'கூடுதல் கட்டணம்' (Surcharges) நிலையான செலவுகளை மீட்டெடுக்க உதவுகிறது.


— புதிய வரைவு கொள்கையின்படி, இந்தியாவின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பிற்கு அணுசக்தியானது மிக முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.


— அணுசக்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதி வசதியை எளிதாக்க, அவற்றிற்கு 'பசுமைப் பத்திரம்' (Green Bond) மூலம் நிதியைப் பெறலாம் என்று இந்தக் கொள்கை கூறுகிறது. இது காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் அல்லது அதன் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் திட்டங்களுக்காக நிதி திரட்டும் ஒரு வழியாகக் கூறப்படுகிறது. 


— நாட்டின் அடிப்படை மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய நிலக்கரி மின்சாரம் முக்கியமாக இருக்கும் அதே வேளையில், தொழிற்சாலைகளின் சொந்தப் பயன்பாட்டிற்கு (Captive use) நிலக்கரிக்கு மாற்றாக அணுமின் நிலையங்களைப் பயன்படுத்த இந்த வரைவு அறிக்கை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.


— மேலும், பயன்பாடு முடிந்து மூடப்பட்ட அனல்மின் நிலையங்களில் தேவைக்கேற்ப அணுமின் நிலையங்களாக மாற்றுவதற்கும் இந்த வரைவுக் கொள்கையானது பரிந்துரைக்கிறது.


— குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் தொழிற்சாலைகளுக்கான சொந்த மின் உற்பத்தித் திறன் இன்னும் நிலக்கரியையே சார்ந்துள்ளது. நிதி ஆயோக் (NITI Aayog) தரவுகளின்படி, 2023–24-ஆம் ஆண்டுகளில் நிலக்கரி மூலம் 46 கிகாவாட் (Gigawatt (GW)), டீசல் மூலம் 19.6 கிகாவாட் (GW)  மற்றும் எரிவாயு மூலம் 6.2 கிகாவாட் (GW)  மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் எந்த ஒரு தொழிற்சாலையும் அணுசக்தியைச் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.


— இருப்பினும், பெரிய அளவிலான வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சார பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்று இந்த வரைவுக் கொள்கை ஊக்குவிக்கிறது.


— ஆனால், அணுசக்தித் திட்டங்களுக்கு மிக அதிக அளவில் முதலீடு தேவைப்படுவதால், தொழில்துறையினர் இது குறித்துத் தயக்கத்துடனேயே உள்ளனர்.


உங்களுக்குத் தெரியுமா?


— சிறிய மட்டு அணு உலைகள் (Small Modular Reactor (SMR)) என்பது மேம்படுத்தப்பட்ட சிறிய ரக அணு உலைகள் ஆகும். இவை ஒரு யூனிட்டிற்கு 30 முதல் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் வழக்கமான பெரிய அணு உலைகள், பொதுவாக 500 மெகாவாட் அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.


— சிறிய மட்டு அணு உலைகள் (SMR) எளிமையான மற்றும் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டவை. எனவே, இதன் பாகங்களை ஒரு தொழிற்சாலையிலேயே தயாரித்து, பிறகு தேவைப்படும் இடத்தில் ஒன்றாக இணைத்துக் கொள்ள முடியும். மேலும், கட்டுமானப் பணிகள் அனைத்தையும் அந்த இடத்திலேயே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது செலவைக் குறைப்பதோடு, தேவையான இடங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் வசதியையும் தருவதால், சமீப காலங்களில் இவை அதிகக் கவனத்தைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.


 Original Article : What is the status of India in nuclear power? -Khushboo Kumari

Share: