‘நீர் நொடிப்புநிலை’ அறிக்கை -குஷ்பூ குமாரி

நமது பூமி உலகளாவிய ‘நீர் நொடிப்புநிலை’ எனும் பற்றாக்குறை காலகட்டத்தில் நுழைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை நீர் மேலாண்மைக்கு ஏன் முக்கியமானது. மேலும், அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன?


தற்போதைய செய்தி


ஐக்கிய நாடுகள் சபையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பல்கலைக்கழக நிறுவனம் (United Nations University Institute for Water, Environment and Health (UNU-INWEH)), "நீர் நொடிப்புநிலை : நெருக்கடிக்குப் பிறகு, நம்மிடம் ஏற்கனவே உள்ள நீரைக் கொண்டு நாம் எப்படி வாழலாம்” என்ற தலைப்பில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை போன்ற முக்கியப் பிரச்சினைகளில் மக்களை ஒன்றிணைத்து, கூட்டாகச் செயல்படுவதற்கு நீரை ஒரு பாலமாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தக் அறிக்கை கொள்கை வகுப்பாளர்களை வலியுறுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. மனித உயிர்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் நீர் மிகவும் அடிப்படையானது. வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வேளாண்மை, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் நிலைநிறுத்துகிறது. இருப்பினும், நீர் அத்தியாவசியமானதாக இருந்தாலும், நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. நீர்ப் பற்றாக்குறையின் விளைவுகள் பொருளாதாரம் மற்றும் சமூகங்கள் முழுவதும் பரவுகின்றன: பயிர்கள் அழிகின்றன, மின் விநியோக அமைப்புகள் செயலிழக்கின்றன, நோய்கள் பரவுகின்றன, நகரங்கள் வாழத் தகுதியற்றதாகின்றன, உழவர்கள் வேலை இழக்கின்றனர், சமூகங்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. மோதல்கள் எழுகின்றன, அமைதி மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுகின்றன.


2. நிலையான வளர்ச்சி இலக்கு-6 (Sustainable Development Goal (SDG)), 2030-ஆம் ஆண்டுக்குள் "அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் கிடைப்பதையும் நிலையான மேலாண்மையையும் உறுதி செய்ய" உலகிற்கு உறுதியளிக்கிறது. இருப்பினும், இந்த இலக்கை அடைவதிலிருந்து உலகம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. 2.2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை, 3.5 பில்லியன் மக்களுக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை. மேலும், 4 பில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மாதமாவது கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று  அறிக்கை கூறுகிறது.


3. நீர் தேவைக்கும் கிடைக்கக்கூடிய வளங்களுக்கும் இடையிலான கட்டமைப்பு ஏற்றத்தாழ்வு காரணமாக உலகம் "உலகளாவிய நீர் நொடிப்புநிலை " (global water bankruptcy) காலகட்டத்தில் நுழைந்துள்ளதாக நீர் நொடிப்புநிலை அறிக்கை அறிவித்துள்ளது. சேதம் சரிசெய்ய முடியாத நிலையை அடைவதற்கு முன்பு, நீர் வளங்களைப் பாதுகாக்க விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.


4. அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 75% பேர் நீர் பாதுகாப்பற்ற அல்லது மிகவும் நீர் பாதுகாப்பற்ற நாடுகளில் வாழ்கின்றனர்.


உலகின் முக்கிய நிலத்தடி நீர்நிலைகளில் 70 சதவீதம் நீண்டகாலமாகச் சரிவைச் சந்தித்து வருகின்றன.


300 கோடி மக்களும், உலக உணவு உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டவையும், நீர் விநியோகம் குறைந்து வரும் அல்லது நிலையற்ற நிலையில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன.


பாசன வசதி பெற்ற 170 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான  வேளாண் நிலங்கள்  அதிகமாக நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.


5. அறிக்கையின்படி, காலநிலை மாற்றம் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை மழைப்பொழிவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், நீர் சுழற்சி மற்றும் உருகும் பனிப்பாறைகள் நதி ஓட்டங்களை ஒழுங்கற்றதாக ஆக்குகின்றன. வெள்ளம் மற்றும் மிகவும் வறண்ட வானிலைக்கு இடையில் "திடீர் மாற்றங்களை" (whiplashes) ஏற்படுத்துகின்றன.


6. வறட்சி, நீர் பற்றாக்குறை மற்றும் மாசுபாடு போன்ற ஒரு காலத்தில் தற்காலிகமானவையாகக் கருதப்பட்ட பிரச்சனைகள், இப்போது பல இடங்களில் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தொடர்ச்சியான நெருக்கடி 'நீர் நீர் நொடிப்புநிலை ' என்று அழைக்கப்படுகிறது. சில பகுதிகள் மற்ற பகுதிகளை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வர்த்தகம், இடம்பெயர்வு மற்றும் வானிலை ஆகியவற்றின் மூலம் அனைத்துப் பகுதிகளும் ஒன்றோடொன்று தொடர்பை கொண்டுள்ளதாக அறிக்கை வலியுறுத்துகிறது. ஒரு பிராந்தியத்தில் நீர் வற்றும் போது, ​​அது மற்ற பிராந்தியங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பதட்டங்களை அதிகப்படுத்துகிறது.


7. ‘நீர்ப் பற்றாக்குறையின்’ விளைவுகளை இப்போது உலகின் அனைத்து இடங்களிலும் காண முடிகிறது என்றும், பல நகரங்கள் மீண்டும் மீண்டும் ‘பூஜ்ஜிய நாள்’ (Day Zero) நிலைக்கு அருகில் வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பூஜ்ஜிய நாள் என்பது, நகர்ப்புற அமைப்புகளால் அதிகமான குடியிருப்பாளர்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க முடியாத ஒரு சூழ்நிலையை விவரிக்கிறது. பூஜ்ஜிய நாளை ஒருமுறை மட்டும் ஏற்படும் அவசரநிலையாகக் கருதக்கூடாது என்றும், மாறாக, நகரங்கள் தங்கள் அமைப்புகளால் கையாளக்கூடிய அளவைவிட அதிக நீரை ஏற்கனவே பயன்படுத்துகின்றன என்பதற்கான ஒரு அறிகுறியாகவே அதைப் பார்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

 

8. "நீர்ப் பற்றாக்குறை" (water crisis) மற்றும் "நீர் அழுத்தம்" (water stress) என்ற சூழ்நிலையிலிருந்து நாம் ஏற்கனவே நகர்ந்துவிட்டதால், தற்போதைய சூழ்நிலையை சரி செய்ய நெருக்கடி மேலாண்மையிலிருந்து பற்றாக்குறை மேலாண்மைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அறிக்கையின்படி, "நெருக்கடி மேலாண்மை அடிப்படையில் மறுசீரமைப்பு ஆகும். இது பொதுவாக அவசரகால நடவடிக்கைகள், தற்காலிகத் தீர்வுகள் அல்லது நீர் விநியோகத்தை அதிகரிப்பது போன்ற வழிகளைப் பயன்படுத்தி, ஒரு சிக்கலைக் கையாண்டு, நிலைமையை பழைய நிலைக்குத் திருப்ப வழிவகை செய்கிறது.


9. இருப்பினும், திவால்நிலை மேலாண்மை வேறுபட்டது. நீர் பற்றாக்குறையை நிர்வகிப்பது மனித-நீர் உறவுகளில் (human–water relations) ஒரு மாற்றத்தக்க புதிய தொடக்கத்தைக் கோருகிறது. இது பிரச்சனைகளைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகளையும் புதிய நீர் மற்றும் சுற்றுச்சூழல் யதார்த்தங்களுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் கவனமாக ஒருங்கிணைக்கிறது.


10. 2028-ஆம் ஆண்டில் "நிலையான வளர்ச்சிக்கான நீர்" (Water for Sustainable Development) என்ற சர்வதேச பத்தாண்டு நடவடிக்கை மற்றும் 2026 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில் ஐ.நா. நீர் மாநாடுகளின் முடிவை நாம் நெருங்கி வருவதால், இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியமானதாகின்றன. இது செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், பொறுப்புணர்வை வலுப்படுத்தவும், நீரை உலகளாவிய முன்னுரிமையாக உயர்த்தவும்  ஒரு முக்கிய வாய்ப்பை வழங்கிகிறது.


இந்தியாவின் நிலை


1. உலகின் மொத்த நன்னீர் வளங்களில் 4 சதவீதத்தைக் கொண்டு, உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 18 சதவீதத்தினருக்கு தேவையானதை வழங்கி வரும் நமது நாடு, தனது நீர் அமைப்புகளில் கடுமையான பற்றக்குறையை எதிர்கொள்கிறது. 1951 மற்றும் 2024-க்கு இடையில், நாட்டில் தனிநபருக்கான மேற்பரப்பு நீர் கிடைப்பதில் 73 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.


2. நிதி ஆயோக்கின் 2018-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு, 60 கோடி இந்தியர்கள் அதிகம் முதல் தீவிரமான நீர் பற்றாக்குறை வரை எதிர்கொள்வதாகவும், 2030-ஆம் ஆண்டிற்குள் நீரின் தேவை விநியோகத்தைவிட இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்தது.


3. உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, அதிக நீர் பற்றாக்குறை உள்ள 17 நாடுகளில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளதாக கூறியுள்ளது. நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகிறது. மேலும், வேளாண் பாசனத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், குடிநீரில் 85 சதவீதமும் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது.


4. 2024-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை, இந்தியாவின் நீர் ஆதாரங்களில் 70 சதவீதம் அசுத்தமாக உள்ளதாகவும், இது சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.


உலக நீர் தினம் (World Water Day)


1. ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று நன்னீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உலக நீர் தினத்தைக் கொண்டாடுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ‘நீரும் பாலினமும்’ (Water and Gender) என்பதாகும்


2. ஐ.நா. வலைத்தளத்தின்படி, இந்த சர்வதேச தினத்திற்கான யோசனை 1992-ஆம் ஆண்டு முதல், ரியோ டி ஜெனிரோவில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாடு நடைபெற்ற ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அதே ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதியை உலக நீர் தினமாகக் குறிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது, இது 1993-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


3. பின்னர், பிற கொண்டாட்டங்களும் நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டன. உதாரணமாக, 2013-ஆம் ஆண்டு நீர்வள ஒத்துழைப்பிற்கான சர்வதேச ஆண்டாக (International Year of Cooperation on Water) இருந்தது. மேலும் 2018 முதல் 2028 வரையிலான காலம் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான நீர் தொடர்பான நடவடிக்கைகளுக்கான சர்வதேச ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 Original Article : ‘Water Bankruptcy’ Report -Khushboo Kumari

Share: