முதலீட்டு விகிதத்தை அதிகரித்தல், புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் தொழிலாளர் மிகுந்த துறைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை தேவைப்படும் முக்கிய நடவடிக்கைகளில் சிலவாகும்.
மக்கள்தொகை வளர்ச்சி, மாற்று விகிதம் மற்றும் பணவீக்கம் தொடர்பான அனுமானங்களின் அடிப்படையில், 2047-ம் ஆண்டில் தேவையான தனிநபர் வருமானத்தை இந்தியா அடைய 7.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சியடைய வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த வளர்ச்சியை இந்தியாவால் அடைய முடியுமா? சில நாடுகள் இத்தகைய மாற்றத்தை வெற்றிகரமாகச் செய்துள்ளன. இந்த இலக்கை அடைய ஐந்து அம்ச செயல்திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம். இந்த ஐந்து நடவடிக்கைகளுக்கும் பிற துறைகளிலிருந்து ஆதரவு தேவை என்பதை வலியுறுத்துவதும் முக்கியம். பணவியல் மற்றும் நிதி நிலைத்தன்மையும் வளர்ச்சி செயல்முறையுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.
முதலீட்டு விகிதத்தை இரண்டு சதவீதப் புள்ளிகள் உயர்த்த வேண்டும்: இந்தியாவின் மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் (Gross Fixed Capital Formation (GFCF)) சமீபத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.6 சதவீதமாக உயர்ந்து வருகிறது. 2025-26-ஆம் ஆண்டில் இது 33.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் அதிகரித்த மூலதன-வெளியீட்டு விகிதம் (Incremental Capital Output Ratio (ICOR)) ஐந்திற்கு அருகில் இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில், மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதம் (GFCF) இரண்டு சதவீதப் புள்ளிகள் உயர்த்தப்பட்டால் மட்டுமே இந்தியா 7 முதல் 8 சதவீதம் வரை நிலைத்து வளர முடியும். மொத்த நிலையான மூலதன உருவாக்க விகிதத்தில் (GFCF) சமீபத்திய போக்கு, அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்களின் பங்கு படிப்படியாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது காலவரையின்றி தொடர முடியாது. தனியார் முதலீடு அதிகரிக்க வேண்டும். தனியார் முதலீட்டைத் தடுத்து நிறுத்தக்கூடிய காரணிகளை அரசாங்கம் மொத்த மற்றும் துறை அல்லது தொழில் மட்டத்தில் பகுப்பாய்வு செய்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குதல் : தொழில்துறைப் புரட்சி காலத்திலிருந்தே புதிய தொழில்நுட்பங்களின் வருகை வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகத்தை உற்சாகத்துடனும், அச்சத்துடனும் எதிர்கொள்ளப்பட்டுள்ளது. புதிய இந்தக் கண்டுபிடிப்புகள் முந்தையவற்றிலிருந்து வேறுபட்டவை என்று சிலர் வாதிடுகின்றனர். புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. ஆனால், வேலைவாய்ப்பில் அவற்றின் தாக்கம் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இந்தியா போன்ற மக்கள்தொகைக் கொண்ட நாடுகூட, போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டுமென்றால், செயற்கை நுண்ணறிவை (AI) ஏற்றுக்கொள்வதை புறக்கணிக்க முடியாது. புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குவது அவசியம், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது ஒரு கிடைமட்ட கண்டுபிடிப்பு (horizontal innovation) மற்றும் இது பொருளாதரத்தின் அனைத்து துறைகளையும் பாதிக்கும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மூலதன தேய்மானம் மற்றும் வழக்கற்றுப் போகும் (obsolescence) விகிதத்தையும் அதிகரிக்கும். அதிக அளவிலான மொத்த மூலதன உருவாக்கத்தின் மூலம் சமப்படுத்த வேண்டும்.
ஒப்பீட்டளவில் உழைப்பு மிகுந்த துறைகளில் கவனம் செலுத்துங்கள்: புதிய தொழில்நுட்பங்களின் வேலைவாய்ப்பில் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவை ஈடுசெய்ய, ஒப்பீட்டளவில் உழைப்பு மிகுந்த துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். இத்தகைய துறைகளை வெவ்வேறு வழிகளில் அடையாளம் காணலாம். ஒரு வழி, ஒரு அலகு உற்பத்திக்கு அதிக உழைப்பு பயன்படுத்தப்படும் செயல்பாடுகளைப் பார்ப்பது. இந்த வகையின்கீழ் வரும் தொழில்களில் தோல் மற்றும் அது தொடர்பான பொருட்கள் அடங்கும். ஆடை உற்பத்தி மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும். விருந்தோம்பல் (Hospitality) என்பது அதிக உழைப்பு தேவைப்படும் ஒரு பெரிய துறையாகும். ஒப்பீட்டளவில் உழைப்பு மிகுந்த இத்தகைய நடவடிக்கைகள் திறமையாகவும், போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
வளர்ச்சிக்கான உத்தி பல பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும்: வளர்ச்சிக்கான உத்தி ஒரு பரிமாணமாக இருக்கக்கூடாது. அதாவது ஏற்றுமதி அல்லது சேவைகள் போன்ற ஒரு துறையில் கவனம் செலுத்தக்கூடாது. அத்தகைய உத்தி முந்தைய காலகட்டத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கலாம். இருப்பினும், தற்போதைய சூழலில் அது பொருத்தமானதல்ல. தென்கொரியா மற்றும் தைவான் போன்ற பல கிழக்கு ஆசிய நாடுகள் ஏற்றுமதி மூலம் விரைவான வளர்ச்சியை அடைந்தன என்பது உண்மைதான். சீனா பிற்காலத்தில் இந்த குழுவில் இணைந்தது. 1973-ல் சீனாவின் பொருட்கள் ஏற்றுமதி உலக வர்த்தகத்தில் 1 சதவீதமாக இருந்தது. 2021-ல், இந்தப் பங்கு 15.2 சதவீதமாக அதிகரித்திருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, உலக ஏற்றுமதியில் அதன் பங்கு 1973-ல் 0.5 சதவீதமாக இருந்தது. 2021-ல் அது 1.6 சதவீதமாக உயர்ந்திருந்தது.
எனவே, இந்தியாவின் வளர்ச்சி விவசாயம், உற்பத்தி, சேவைகள் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் ஒரே நேரத்தில் வளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். புதிய நிறுவனங்கள் உருவாகவும், எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுவதற்கும் ஒரு ஒட்டுமொத்த சூழலை வழங்குவதே அரசாங்கத்தின் பங்காக இருக்க வேண்டும்.
சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்யுங்கள்: 1991 சீர்திருத்தங்கள் சமூக உள்கட்டமைப்பில் அதிக முதலீட்டை நோக்கி அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் காட்டின. சீர்திருத்தங்கள் என்பது 'குறைந்த அரசாங்கம்' (less government) என்று அர்த்தமல்ல, மாறாக 'வேறுபட்ட அரசாங்கம்' (different government) என்று பொருள்பட்டன. சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வது அனைவருக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமூக நீதியின் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும், இந்தியாவின் வளர்ந்துவரும் மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்திக் கொள்ள பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட கல்வியும் தேவை.
மானியங்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடனடியாக சில நிவாரணங்களை வழங்கக்கூடும். ஆனால், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு, நல்ல சுகாதாரம் மற்றும் நல்ல கல்வியை வழங்குவதே அவர்களின் முக்கியத் தேவையாக இருந்தது. இந்தியாவின் மக்கள்தொகை விவரக்குறிப்பு, 2055 வரை பழைய சார்பு விகிதத்தைவிட இளம் சார்பு விகிதத்தைக் குறிக்கிறது. எனவே, கல்வியில் அரசாங்கச் செலவினங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்த ஐந்து அம்ச உத்தி, இந்தியா ஒரு வளர்ந்தநாடு என்ற நிலையை அடைவதற்குத் தேவையான விகிதத்தில் வளர உதவுவது மட்டுமல்லாமல், சமூகநீதியை உறுதி செய்யவும் உதவும். வளர்ச்சி மற்றும் சமத்துவம் ஆகியவை எதிரெதிர் கருத்தாகக் காட்டப்படக்கூடாது. ஏற்றுக்கொள்ளக்கூடிய வளர்ச்சி முறையை அடைய அவை ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்.
வளர்ந்த இந்தியா (Viksit Bharat) இலக்கை அடைவதற்கான ஒரு வரைபடத்தை வரவு செலவுத் திட்டம் ஒரு செயல் திட்டத்தை தெளிவாக வகுக்க வேண்டும்.
ரங்கராஜன் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் தலைவராகவும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராகவும் உள்ளார். ஸ்ரீவஸ்தவா 16-வது நிதி ஆணையத்தின் கௌரவப் பேராசிரியர் மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
Original Article : How to achieve Viksit Bharat goal?. -C Rangarajan, DK Srivastava