பலேர்மோ நெறிமுறை (Palermo Protocol) என்றால் என்ன? 2023-ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதா, சட்டத்தில் ஆட்கடத்தல் (trafficking) எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் குழந்தைகளைச் சுரண்டலிலிருந்து (children from exploitation) எவ்வாறு பாதுகாக்கிறது? உச்சநீதிமன்றம் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது? சுரண்டலை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான ஒன்றிய-மாநில அரசு உறவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
தற்போதைய செய்தி:
குழந்தைக் கடத்தல் என்பது இந்தியாவில் கவலைக்குரியதாக இருந்து வருகிறது. கே. பி. கிரண் குமார் vs மாநில அரசு (K. P. Kiran Kumar versus State) வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பில், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதுடன், குழந்தை கடத்தல் என்பது அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் குழந்தைகளின் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை (right to life) மீறுகிறது என்று கூறியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2022ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 3,098 குழந்தைகள் கடத்தலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2024 மற்றும் மார்ச் 2025-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியா முழுவதும் குழந்தைத் தொழிலாளர், கடத்தல் மற்றும் ஆட்கடத்தலில் இருந்து 53,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர். இருப்பினும், 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய குற்றங்களுக்கான தண்டனை விகிதம் 4.8%-ஆக மட்டுமே இருந்தது.
குழந்தை கடத்தல் (child trafficking) என்றால் என்ன?
சர்வதேச அளவில், 2000ஆம் ஆண்டின் பலேர்மோ நெறிமுறை (ஐ.நா. மனிதர்களை, குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் கடத்துவதைத் தடுத்தல், ஒடுக்குதல் மற்றும் தண்டிப்பதற்கான நெறிமுறை) குழந்தைக் கடத்தலை, 'சுரண்டல் நோக்கத்திற்காக ஒரு குழந்தையை கொண்டு செல்லுதல், மாற்றுதல், அடைத்து வைத்தல் அல்லது பெற்றுக்கொள்ளுதல்' என வரையறுக்கிறது. தற்போது, பாரதிய நியாய சன்ஹிதா (Bhartiya Nyaya Sanhita (BNS)) 2023-ஆம் ஆண்டின் பிரிவு 143, ஒருவர் அச்சுறுத்தல்கள், வன்கொடுமை, மோசடி, ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது சம்மதத்தைப் பெறுவதற்காகப் பலன்களைக் கொடுப்பதன் அல்லது பெறுவதன் மூலமாகவோ, ஒரு நபரைச் சுரண்டலுக்காக ஆள்சேர்ப்பு செய்தல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லுதல், அடைக்கலம் கொடுத்தல், மாற்றுதல் அல்லது பாதிக்கப்பட்டவரைக் கட்டுப்படுத்தும் ஒருவரிடமிருந்து சம்மதம் பெறுவதற்காகப் பணம் அல்லது சலுகைகள் வழங்குவது போன்றவை மனிதக் கடத்தல் ஆகும் என்று கூறுகிறது. 'சுரண்டல்' (exploitation) என்ற சொல் ஒரு விரிவான விளக்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் அது உடல்ரீதியான மற்றும் பாலியல் சுரண்டலையும் உள்ளடக்கியது. இது எந்தவொரு அடிமைத்தனம் (servitude), கொத்தடிமைத்தனம் அல்லது உறுப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றுதல் போன்ற வடிவங்களையும் உள்ளடக்கியது.
குழந்தைகளின் உரிமைகள் (rights of children) என்ன?
அரசியலமைப்புச் சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக விரிவான விதிகளை வழங்குகிறது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 23 மற்றும் 24 ஆகியவை மனிதக் கடத்தல், யாசகம் பெறுதல், கட்டாய உழைப்பு மற்றும் அபாயகரமான தொழில்களில் வேலைக்கு அமர்த்துதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை அளிக்கின்றன. இந்த விதிகளைத் தவிர, குழந்தைகள் தவறாக நடத்தப்படாமல் இருப்பதையும், அவர்கள் ஆரோக்கியமான முறையில் மற்றும் சுதந்திரம் மற்றும் கண்ணியமான சூழ்நிலைகளில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 39-ன் உட்பிரிவுகள் (e) மற்றும் (f) ஆகியவற்றின்கீழ், அவர்கள் சுரண்டப்படுவதிலிருந்தும், புறக்கணிக்கப்படுவதிலிருந்தும் அல்லது கைவிடப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் 98 மற்றும் 99 பிரிவுகள் குறிப்பாக சிறார்களை 'விற்பது மற்றும் வாங்குவது' (selling and buying) குறித்துப் பேசுகின்றன. மறுபுறம், பாலியல் சுரண்டலுக்கான ஆட்கடத்தலைத் தடுப்பது 1956ஆம் ஆண்டு ஒழுக்கக்கேடான போக்குவரத்து தடுப்பு (Immoral Traffic (Prevention) Act)) சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், குழந்தைக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவை 2015ஆம் ஆண்டு சிறார் நீதி குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு (the Juvenile Justice (Care and Protection of Children) Act) சட்டத்தின் கீழ் வருகிறது. 2013ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டமும் (Criminal Law Amendment Act), பாலியல் சுரண்டல், அடிமைத்தனம், கொத்தடிமை, கட்டாய உழைப்பு மற்றும் உறுப்பு நீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் ஆட்கடத்தலைத் தெளிவாக வரையறுப்பதன் மூலம் அதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சம்மதம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது ஆட்கடத்தலை ஒரு குற்றமாகவே கருதுகிறது.
2012ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences (POCSO) Act) இந்த விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை உள்ளடக்கிய குற்றங்களை வரையறுப்பதைத் தவிர, இந்தச் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. இந்த சட்டத்தின் கீழ் கடுமையான வழக்குகளில் ஆயுள் மற்றும் மரண தண்டனை வழங்கப்படலாம். இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, இந்தச் சட்டம் பாலின பாகுபாடின்றி (gender-neutral) அனைவருக்கும் பொருந்தும் தன்மையாகும். வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக, போக்சோ சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 400 விரைவு நீதிமன்றங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்கள், ஒவ்வொரு நீதிமன்றமும் ஆண்டுக்கு 165 வழக்குகளைத் முடித்து வைப்பதை இலக்காக நிர்ணயித்துள்ளன.
நீதித்துறை அணுகுமுறை எப்படி இருந்துள்ளது?
1990ஆம் ஆண்டு விஷால் ஜீத் vs இந்திய (Vishal Jeet versus Union of India) ஒன்றியம் வழக்கில், கடத்தல் மற்றும் குழந்தை விபச்சாரம் ஆகியவை கடுமையான சமூக-பொருளாதார பிரச்சனைகள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கு ஒரு தடுப்பு மற்றும் மனிதாபிமான அணுகுமுறை தேவை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. எம்.சி. மேத்தா vs தமிழ்நாடு அரசு (M. C. Mehta versus State of Tamil Nadu), 1996ஆம் ஆண்டு வழக்கில், அபாயகரமான தொழில்களில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடைசெய்யும் நோக்கில் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. மேலும்,2011ஆம் ஆண்டு பச்ச்பன் பச்சாவ் அந்தோலன் vs இந்திய ஒன்றியம் (M. C. Mehta versus State of Tamil Nadu) வழக்கில், குழந்தைகளிடம் பரவலாக நடைபெறும் சுரண்டல் மற்றும் கடத்தலைச் சமாளிப்பதற்காக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பாதிக்கப்பட்டவர்களின் சமூக-பொருளாதார பாதிப்புகள், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களை, கருத்தில் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றங்களுக்கு பலியாவதிலிருந்தும் பாதுகாக்க சமூகம் தவறிவிட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். வறுமை, வேலையின்மை, இடம்பெயர்வு, பேரழிவுகள் மற்றும் குடும்ப அமைப்பின் முறிவு போன்ற காரணிகள் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்குகின்றன. இது கடத்தல் சங்கிலியை வலுப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களின் பரவல் இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளன. ஏனெனில், போலி வேலை அல்லது 'மாதிரியமைத்தல்' (modelling) வாய்ப்புகள் என்ற பெயரில் ஆட்களைச் சேர்ப்பதில் இது அதிகமாகக் காணப்படுகிறது. அரசாங்கம் முதலில் வலுவான அமைப்புகள் மூலம் குழந்தைகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். கடத்தல்காரர்களுக்கு தண்டனை குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களைக் கடுமையாகத் தண்டித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் என்பதால், ஒரு வலுவான ஒன்றிய-மாநில அரசு உறவும் முக்கியமானதாகிறது.
C. B. P. ஸ்ரீவஸ்தவா டெல்லியில் உள்ள பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ளார்.
Original Article : How should India tackle child trafficking? -C.B.P. Srivastava