வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

  

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO))-  12 உறுப்பு நாடுகளின் அமைப்பு (அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், நார்வே, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், அயர்லாந்து இல்லாத ஐரோப்பிய நாடுகள்)


முக்கிய அம்சங்கள்:


— இந்த யோசனையை டிரம்ப் முதன்முதலில் 2019-ஆம் ஆண்டிலேயே முன்வைத்தார். இருப்பினும், தற்போது இதில் அவர் காட்டும் ஆர்வம் மற்றும் சொன்னதைச் செய்துகாட்டும் அவரது வரலாறு (உதாரணமாக, கடந்த ஆண்டு ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் இந்த ஆண்டு வெனிசுலா மீதான தாக்குதல்) அவரது பேச்சை அலட்சியப்படுத்த முடியாது என்பதை உணர்த்துகிறது. வல்லரசு நாடுகள் சர்வதேச விதிகளை மதிக்காத ஒரு 'பனிப்போருக்கு பிந்தைய' உலகில், டிரம்ப் தனது வழக்கமான துணிச்சலுடன் செயல்படுகிறார். அதே நேரத்தில், மார்க் ஜேக்கப்சன் மற்றும் சாரா ஓல்ஸ்விக் போன்ற ஆர்க்டிக் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல, கிரீன்லாந்து நீண்டகாலமாகவே அமெரிக்காவின் ஆர்வத்திற்குரிய ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்று குறிப்பிடுகின்றனர். 


— கிரீன்லாந்து மீது அமெரிக்கா காட்டிய முதல் அதிகாரப்பூர்வ ஆர்வம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நார்வே மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இடையே 434 ஆண்டுகளாக இருந்த அரசியல் கூட்டணி முறிந்த பிறகு இது நடந்தது. அதன் பிறகு, 1814-ஆம் ஆண்டு போடப்பட்ட 'கீல் ஒப்பந்தத்தின்' (Treaty of Kiel) படி கிரீன்லாந்து டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அமெரிக்கா தனது எல்லைகளை விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருந்த அந்த காலத்தில், அதாவது 1832-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கலாம் என்று பரிந்துரைத்தார். அந்த காலகட்டத்தில் "லூசியானா கொள்முதல்" (Louisiana Purchase) போன்ற அமெரிக்காவின் நிலப்பரப்பு விரிவாக்க நடவடிக்கைகள் பொதுவாக இருந்தன. இந்த ஆர்வம் 'மன்ரோ கொள்கையை' (Monroe Doctrine) பின்பற்றி அமைந்தது; இக்கொள்கையை அண்மையில் டிரம்ப், "டான்ரோ கொள்கை" (Donroe Doctrine) என்று பெயரை மாற்றி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


— 1867-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் சீவார்ட், ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திய கையோடு, கிரீன்லாந்தையும் விலைக்கு வாங்க முன்மொழிந்தார். கனடாவை அமெரிக்க எல்லைக்குள் கொண்டு வரவும், அந்நாட்டை அமெரிக்காவுடன் இணைய வற்புறுத்தவும் அவர் இந்தத் திட்டத்தைத் தீட்டியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இத்தகைய நடவடிக்கையை பிரிட்டன் கடுமையாக எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.


— முதல் உலகப் போருக்கு முன்பு, கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் கட்டுப்படுத்தவும், ஜெர்மனி அவற்றை ராணுவத் தளங்களாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், கிரீன்லாந்து மற்றும் டேனிஷ் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளை வாங்க அமெரிக்கா முயன்றது. அமெரிக்கா போரில் ஈடுபடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 1917-ஆம் ஆண்டு, டேனிஷ் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும், கிரீன்லாந்தின் மீதான டென்மார்க்கின் ஆட்சி அதிகாரத்தை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 


— இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், அமெரிக்கா மீண்டும் கிரீன்லாந்தை (Greenland) கைப்பற்ற நினைத்தது. ஏப்ரல் மாதம் 1940-ஆம் ஆண்டில் நாஜி ஜெர்மனி டென்மார்க்கைக் கைப்பற்றிய பிறகு (ஆனால் கிரீன்லாந்தைக் கைப்பற்றவில்லை), அமெரிக்கா உடனடியாக கிரீன்லாந்தின் நூக் (Nuuk) நகரில் ஒரு தூதரகத்தை அமைத்தது. 1941-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம், நாஜிக்கள் கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதைத் தடுக்க அமெரிக்கா அங்கு ராணுவத் தளங்களை அமைக்க அனுமதி பெற்றது. போர் முடிந்த பிறகு, 1946-ஆம் ஆண்டில் அதிபர் ட்ரூமன் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அதிகாரப்பூர்வமாக முன்வந்தார், ஆனால் டென்மார்க் அந்த வாய்ப்பை நிராகரித்தது. அதற்குள், அமெரிக்காவிற்கு இருந்த முக்கிய அச்சுறுத்தல் நாஜி ஜெர்மனியிடமிருந்து சோவிய ஒன்றியத்திற்கு மாறியிருந்ததாகக் கூறப்படுகிறது.


— வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு இடையே நிலவிய பனிப்போரின்போது (Cold War), அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது என்று மீண்டும் கருதியது. நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கும், கிரீன்லாந்தும் அமெரிக்காவின் நலன்களுக்கான கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டன. 1951-ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் விளைவாக, கிரீன்லாந்து மக்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படாமல் 'தூலே விமான தளம்' (Thule Air Base) உருவாக்கப்பட்டது (இது தற்போது 'பிடுஃபிக் விண்வெளி தளம்' என்று அழைக்கப்படுகிறது). பனிப்போர் முழுவதும், சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக அமெரிக்கா கிரீன்லாந்தைப் பயன்படுத்தியது. இது நேட்டோவின் 'வடக்குப் பாதுகாப்பு கவசத்தின்' ஒரு பகுதியாக இருந்தது. அணு ஆயுதப் போட்டி தீவிரமடைந்தபோது, டென்மார்க் நாடு 1957-ஆம் ஆண்டில்  "தங்கள் நாடு அணு ஆயுதங்கள் இல்லாத பகுதி" (Denmark’s 1957 nuclear weapons-free zone policy) என்று கொள்கை முடிவை அறிவித்திருந்தது. இருப்பினும், அமெரிக்கா அந்த விதியை மீறி கிரீன்லாந்தில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


— சோவியத் ஒன்றியம் (USSR) வீழ்ச்சி அடைந்தபிறகு, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாக இருந்த காலத்தில், கிரீன்லாந்தின் முக்கியத்துவம் மாறியது. அப்போது கிரீன்லாந்து பகுதிகள், வெறுமனே ரஷ்யாவை எதிர்ப்பதற்கான இடமாக இல்லாமல், கப்பல் போக்குவரத்து வழிகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆர்க்டிக் திட்டங்களுக்கான தளமாகவே பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதுடன், சீனா-ரஷ்யா இடையிலான நெருக்கமான உறவும் அமெரிக்காவின் இராணுவ ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளது. இதை 2019-ஆம் ஆண்டிலேயே அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெளிவாகக் குறிப்பிட்டார். ஆர்க்டிக் கூட்டமைப்பு இனி சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த முடியாது என்றும், ஏனெனில் சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் எச்சரித்தார். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், இது வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, கூட்டங்கள் நடத்தப்பட்டு, இராணுவப் படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


— ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு நலன்கள் இருந்தாலும், அவர்களை எதிர்ப்பதற்காக ஒரு ஜனநாயக நாட்டின் இறையாண்மையையோ அல்லது சுயநிர்ணய உரிமையையோ மீறுவது நியாயமாகாது. இந்தக் கொள்கைகளை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஆதரித்து வருகிறது. இப்பகுதியை கூட்டாகப் பாதுகாக்க அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு இருப்பது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கும். அத்தகைய ஒரு கூட்டணி ஏற்கனவே இருக்கலாம் — இது நன்கு தெரிந்த நான்கு எழுத்து சுருக்கப் பெயரால் (NATO) குறிக்கப்படுகிறது.


— அமெரிக்கா கிரீன்லாந்தை (Greenland) வாங்குவதற்கு அனுமதி கிடைக்கும் வரை, ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது இறக்குமதி வரிகளை உயர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான அந்த ஆர்க்டிக் தீவு குறித்த சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.


— பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social - social media platform created by Donald Trump) பதிவில் அறிவித்துள்ளார். இந்த நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்பை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


— ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் இறக்குமதி வரி (tariffs) 25% ஆக உயர்த்தப்படும் என்றும், கிரீன்லாந்தை வாங்குவதற்கு அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை எட்டும்வரை இந்த வரி அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார். கிரீன்லாந்தின் முக்கிய இடவமைப்பு மற்றும் அங்குள்ள கனிம வளங்கள் காரணமாக, அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்று ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் அந்தத் தீவைக் கைப்பற்ற ராணுவத்தைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை என்கின்றனர். டென்மார்க் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐரோப்பிய நாடுகள் இந்த வாரம் அந்தத் தீவிற்குத் தங்கள் படைகளை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— டென்மார்க் நாட்டின் உறுப்பினராக இருப்பதால், கிரீன்லாந்தும் நேட்டோ (NATO) அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையிலான குறுகியபாதை இந்த ஆர்க்டிக் தீவின் வழியாகச் செல்வதால், இது அமெரிக்க இராணுவத்திற்கும் அதன் ஏவுகணை எச்சரிக்கை அமைப்பிற்கும் மிகவும் முக்கியமான இடமாக உள்ளது. 


— ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து, உலகின் மிகப்பெரிய தீவாகும். இது பூமியிலேயே மக்கள் தொகை மிகக்குறைவாகக் கொண்ட பகுதியாகும். அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள இந்தத் தீவில், உலகின் மிக வடக்கே அமைந்துள்ள நிலப்பகுதியான 'காஃபெக்லூபென் தீவு' (Kaffeklubben Island) இடம்பெற்றுள்ளது.


— கிரீன்லாந்து கனிம வளம் மிக்கது. அங்கு தங்கம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற தாதுக்கள் உள்ளன. மேலும், டிஸ்ப்ரோசியம் (dysprosium), நியோடைமியம் (neodymium) மற்றும் டெர்பியம் (terbium) போன்ற முக்கியமான அரிய மண் கனிமங்களும் (rare earth minerals) அங்கு அதிகளவில் உள்ளன. உலகில் உள்ள 34 வகையான அபூர்வ மண் கனிமங்களில், சுமார் 23 கனிம வகைகள் அங்கு காணப்படுகின்றன. இதனால் சுரங்க நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டுகின்றன.


— டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தில், டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ளன. அதன் பொருளாதாரம் முக்கியமாக மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளது, மேலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% டென்மார்க் அரசாங்கத்தின் மானியங்கள் மூலம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.


— கிரீன்லாந்து புவியியல் ரீதியாக வட அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருந்தாலும், கடந்த 300 ஆண்டுகளாக டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொடக்கத்தில் ஒரு குடியேற்ற நாடாக (colony) இருந்த கிரீன்லாந்து தீவு, தனது ஆரம்பகால வரலாற்றில் மற்ற உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாத நிலையிலுமே இருந்ததாகக் கூறப்படுகிறது


— 1953-ஆம் ஆண்டு, கிரீன்லாந்து டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாறியது மற்றும் அங்குள்ள மக்களுக்கு டென்மார்க் குடியுரிமை கிடைத்தது. 1979-ல், கிரீன்லாந்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது; இதன் மூலம் அந்நாட்டு மக்கள் தங்கள் உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றனர். அதேவேளையில், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்பை மட்டும் டென்மார்க் தக்கவைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கின்றனர்.


Original Article : What is the North Atlantic Treaty Organization (NATO)? -Roshni Yadav

Share: