இந்தியா உலகளாவிய வயது வந்தோரின் நீரிழிவு நோய் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. -மானஸ் ஸ்ரீவஸ்தவா

தற்போதைய செய்தி : 


“The Lancet Diabetes and Endocrinology” இதழ் நடத்திய ஆய்வின்படி, 2024-ஆம் ஆண்டில் 9 கோடி சர்க்கரை நோயாளிகளுடன் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், 14.8 கோடி நோயாளிகளுடன் சீனா முதலிடத்திலும், 3.9 கோடி நோயாளிகளுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


முக்கிய அம்சங்கள்:


நீரிழிவு நோய் என்றால் என்ன?


உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation (WHO)) கருத்துப்படி, நீரிழிவு நோய் (Diabetes) என்பது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாதபோது ஏற்படும் ஒரு நீண்டகால நோயாகும். இன்சுலின் (Insulin)  என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோய் முறையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கும். இது காலப்போக்கில் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் உட்பட உடலின் பல உறுப்புகளைப் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. 


பாதங்களில் ஏற்படும் நரம்பு பாதிப்போடு இரத்த ஓட்டம் குறைவதும் சேரும்போது, அது பாதப் புண்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது; இது சில நேரங்களில் கால் துண்டிப்பிற்கும் (amputation) வழிவகுக்கலாம். சர்க்கரை நோய் கண்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களையும் பாதித்து, 'நீரிழிவு விழித்திரை நோய்' (diabetic retinopathy) போன்ற பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், இது கண்பார்வை இழப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.  அத்துடன், சிறுநீரக செயலிழப்பிற்கு சர்க்கரை நோய் ஒரு முக்கியமான காரணியாக உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


நீரிழிவு நோயின் அறிகுறிகள்:


  • அதிக தாகம் எடுத்தல்


  • வழக்கத்தை விட அதிக முறை சிறுநீர் கழித்தல்


  • மங்கலான பார்வை


  • சோர்வாக உணருதல்


  • எதிர்பாராமல் உடல் எடை குறைதல்


இந்த ஆய்வு எதை வெளிப்படுத்துகிறது?


சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், உலகின் நீரிழிவு நோய் பாதிப்புகளில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 2050-ம் ஆண்டிற்குள், அமெரிக்காவைவிட பாகிஸ்தானில் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருக்கக்கூடும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


2024-ஆம் ஆண்டில், உலகில் உள்ள 20 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் 11 சதவீதத்திற்கும் அதிகமானோர் (சுமார் 58.9 கோடி மக்கள்) சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 13 சதவீதமாக, அதாவது சுமார் 85.3 கோடி அளவிற்கு பதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2024-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள மக்கள்தொகையில் ஒன்பது பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) பாதிப்பு இருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய  900 மில்லியனாக உயரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


2024-ஆம் ஆண்டில், 20 முதல் 79 வயதுக்குட்பட்ட நீரிழிவு நோயாளிகள் சீனாவில்தான் அதிக எண்ணிக்கையில் (148 மில்லியன்) இருந்தனர்; அதனைத் தொடர்ந்து இந்தியா (90 மில்லியன்) மற்றும் அமெரிக்காவில் (39 மில்லியன்) இருந்தனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


2024-ஆம் ஆண்டில், உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் நான்கு பங்கிற்கும் அதிகமானோர் (அதாவது 80.64 சதவீதம் பேர்) குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 2050-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் அதிகரிக்கப்போகும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த நாடுகளிலேயே ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மக்கள்தொகைப் பெருக்கம், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொடர்ந்து அதிகரித்துவரும் நகரமயமாக்கல் ஆகியவையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயருவதற்கு முக்கியக் காரணங்களாகும். உலகளவில் நீரிழிவு நோயின் தாக்கத்தைக் கண்காணிக்க, போதிய வசதிகள் இல்லாத இடங்களில் தரவுகளைச் சேகரிக்க ஆதரவு தேவைப்படுகிறது. ஏனெனில், இத்தகைய இடங்களில்தான் வரும் காலங்களில் சர்க்கரைநோய் பாதிப்பு பெருமளவில் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.


உலகெங்கிலும் 75 முதல் 79 வயதுடைய முதியவர்களிடையே நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகபட்சமாக சுமார் 25 சதவீதத்தை எட்டியுள்ளது. மேலும், பெண்களைவிட ஆண்களிடையேயும், கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களிலும் இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நீரிழிவு நோய் பாதிப்பு நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகமாகவும் (11.46 சதவீதம்), அதைத் தொடர்ந்து அதிக வருமானம் கொண்ட நாடுகளில் (10.21 சதவீதம்) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் (7.47 சதவீதம்) குறைவாகவும் காணப்பட்டது.


2000-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதைக் குறைக்க, எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் மத்தியில் இன்னும் தீவிரமான மற்றும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


நீரிழிவு நோயின் வகைகள்?


வகை 1 நீரிழிவு நோய்


வகை 1 நீரிழிவு நோய் (முன்பு இன்சுலின் சார்ந்த, இளம் வயது அல்லது குழந்தைப் பருவத்தில் தொடங்கும் நீரிழிவு நோய் என அழைக்கப்பட்டது), உடலில் போதிய இன்சுலின் உற்பத்தி இல்லாததால் ஏற்படுகிறது. இதற்கு தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

வகை 2 நீரிழிவு நோய்


வகை 2 நீரிழிவு நோய், உடல் ஆற்றலுக்காக சர்க்கரையை (குளுக்கோஸ்) பயன்படுத்தும் முறையைப் பாதிக்கிறது. இது உடலில் இன்சுலின் பயன்பாட்டைத் தடுக்கிறது. இதற்குச் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்கின்றனர். 


காலப்போக்கில், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) உடலுக்கு, குறிப்பாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சமீபகாலம்வரை, இந்த வகை நீரிழிவு நோய் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்டது. ஆனால், இப்போது குழந்தைகளிடமும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.


கர்ப்பகால நீரிழிவு நோய்


கர்ப்பகால நீரிழிவு என்பது சாதாரண அளவைவிட அதிகமாகவும், ஆனால் முழுமையான நீரிழிவு நோயாகக் கருதப்படும் அளவைவிடக் குறைவாகவும் இருக்கும் இரத்த சர்க்கரை நிலையாகும். இந்த வகை நீரிழிவு நோய் கர்ப்ப காலத்தில் மட்டுமே ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.


நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை


நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சாதாரண அளவைவிட அதிகமாக இருக்கும், ஆனால் அது இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) என்று சொல்லும் அளவுக்கு மிக அதிகமாக இருக்காது. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், எதிர்காலத்தில் இரண்டாம் வகை  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.


மோனோஜெனிக் நீரிழிவு நோய்


ஒற்றை மரபணு நீரிழிவு நோய்


இது ஒரு சாதாரண வகை நீரிழிவு நோய் அல்ல; இது ஒருவருடைய உடம்பில் உள்ள ஒரே ஒரு மரபணுவில் (Gene) ஏற்படும் மாற்றத்தால் வருகிறது.


வகை 5 நீரிழிவு நோய்


கடந்த ஆண்டு, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (International Diabetes Federation (IDF)), 'வகை 5' (Type 5) நீரிழிவு நோயை ஒரு தனித்துவமான பாதிப்பாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள, உடல் மெலிந்த மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் ஒரு வகை நீரிழிவு நோயாகும். ஐந்தாம் வகை நீரிழிவு நோயானது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை (Beta cells) அசாதாரணமாகச் செயல்பட வைத்து, போதுமான இன்சுலின் உற்பத்தியைத் தடுக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் உடல் அதன் செயல்பாட்டை எதிர்க்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



மற்றொரு லான்செட் (Lancet) ஆய்வறிக்கை மற்றும் அரசாங்கத்தின் முன்முயற்சி


"The Lancet Global Health இதழில் வெளியான புதிய ஆய்வின்படி, 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் (Diabetes) இருந்தது என்றும் இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீரிழிவு நோய் இருந்தவர்களில் சுமார் 40% பேருக்கு தங்களுக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பதே தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 


இந்த ஆய்வானது, இந்தியாவில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட (45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட) பெரியவர்களிடம் 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்திய முதியோர் நீடித்த ஆய்வு (Longitudinal Ageing Study in India (LASI)) தரவுகளைப் பயன்படுத்தியது. இந்தியாவில் நீரிழிவு நோய் (Diabetes) எவ்வளவு பரவலாக உள்ளது என்பதையும், அது எவ்வளவு துல்லியமாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு, கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது என்பதையும் மதிப்பீடு செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


சுமார் 2 கோடி இந்தியர்களுக்குத் தங்களுக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இருப்பதே தெரியாமல் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் சுமார் 8% பேருக்குத் தங்களுக்கு இந்நோய் இருப்பது தெரியாமலேயே அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு ஏறக்குறைய சமமாக இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது (ஆண்களுக்கு 19.6% மற்றும் பெண்களுக்கு 20.1%). மேலும், கிராமப்புறங்களைவிட (15%) நகரங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அதிகமாக (30%) உள்ளது."


இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான தெளிவான வேறுபாடுகளையும் இந்த ஆய்வு காட்டியது. வயதுக்கேற்பக் கணக்கிடும்போது, தென்னிந்திய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், மத்திய மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் குறைவாகவும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், சண்டிகர் (36.9%), கேரளா (36.0%) மற்றும் புதுச்சேரி (36%) ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் விகிதம் மிக அதிகமாக இருந்ததாகவும் அதேசமயம், நீரிழிவு நோய் பாதிப்புள்ள பெரியவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு (6.1 மில்லியன்), மகாராஷ்டிரா (5.8 மில்லியன்) மற்றும் உத்தரபிரதேசம் (4.7 மில்லியன்) ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. 


கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தைகளிடையே 'வகை 2' சர்க்கரை நோய் (Type 2 Diabetes) வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்கவும் அதைக் குறைக்கவும் பள்ளிகளில் வாரியங்களை (Sugar Boards) அமைக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)) உத்தரவிட்டுள்ளது.


சுகாதாரத் துறை முக்கியமாக மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய சுகாதார அமைச்சகம், 'தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ்' (National Health Mission (NHM)) உள்ள 'தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின்' (National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD)) வாயிலாக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.


இந்தத் திட்டம், முக்கியமாக நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கான உட்கட்டமைப்பு, பணியாளர்கள், பரிசோதனை, ஆரம்பக்கால நோய் கண்டறிதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரை, சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவைகள் மற்றும் முன்மொழிவுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.


தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (NHM), விரிவான ஆரம்ப சுகாதார சிகிச்சையின் ஒரு பகுதியாக நீரிழிவு நோயைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் கண்டறிவதற்கான மக்கள் நலத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அனைவருக்கும் உடல்நலப் பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆண்டு நீரிழிவு (சர்க்கரை நோய்) மற்றும் இரத்த அழுத்தத்திற்கான நாடு தழுவிய தொற்றா நோய் (Non-Communicable Diseases (NCD)) பரிசோதனை முகாமைத் தொடங்கியது. இந்த முகாம், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் (Ayushman Arogya Mandirs (AAMs)) மற்றும் தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின்கீழ் (National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD)) உள்ள பிற சுகாதார நிலையங்கள் மூலம் நடத்தப்படுகிறது.


தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின்கீழ் (NP-NCD) நீரிழிவு நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச மருந்துகளும், முறையான தொடர் சிகிச்சையும் வழங்கப்படுகின்றன.


 Original Article : India second in global adults diabetes burden. -Manas Srivastava


Share: