குடியுரிமையைத் தீர்மானிப்பதற்கான அடுத்தகட்ட வழிமுறை -காத்யாயினி சாமராஜ்

  ஒரு வாக்காளர்களின் குடியுரிமையை கடந்தகால ஆவணங்களைக் கொண்டு நிரூபிக்க திருப்திகரமான வழிமுறைகள் இல்லாததால், நாட்டின் உண்மையான குடிமகன் எவரும் வாக்காளர் பட்டியலிலிருந்தோ அல்லது குடியுரிமையிலிருந்தோ விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, வருங்காலத்திற்கான ஒரு திட்டத்தை அல்லது நடைமுறையை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தகின்றனர். 


தன்னார்வ அமைப்புகள் மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகளுமே இப்போது வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத் (Special Intensive Revision (SIR)) திட்டத்தை பகிரங்கமாக எதிர்த்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில், வாக்காளர் படிவங்களில் உள்ள தவறுகள் காரணமாக உதவி தேர்தல் பதிவு அதிகாரி (Assistant Electoral Registration Officer (AERO)) ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கூறுகையில், ஒரு பொறுப்புள்ள குடிமகளாக, இந்தத் தவறுகள் எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றன. மக்களுக்கோ அல்லது நாட்டிற்கோ துரோகம் செய்துவிட்டதாக நான் உணராமல் இருக்கவே, தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். 


சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (Right to Information (RTI)), வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கோப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர், "இந்த முடிவு ஆணையத்தால் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார். நாடுதழுவிய அளவில் செயல்படுத்தப்படும் இந்த சிறப்புத் தீவிர திருத்த திட்டம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிவும் இல்லை என்பதையே இது காட்டுவதாக திருமதி. பரத்வாஜ் கூறுகிறார். அப்படியானால், எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் இதனைத் தொடங்கியது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 


சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையானது ஒரு 'வேடிக்கையான நாடகம்' என்று 'தி இந்து' (The Hindu) நாளிதழ் விமர்சித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் (EC) மதிப்பைக் குறைப்பதோடு, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முறையை நிறுத்தவும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் குடியுரிமையை முடிவு செய்யும் ஒட்டுமொத்த முறையையும் சீரமைக்க ஒரு பெரிய மக்கள் இயக்கம் தேவைப்படுவதாகக் கூறுகின்றனர்.


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. பீகாரின் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், வாக்காளர் தகுதியை நிரூபிக்க பழைய ஆவணங்களைக் கோருதல், மோசமான பதிவு நடைமுறைகள் மற்றும் குடியுரிமையை வரையறுப்பதற்கான நியாயமற்ற விதிகள் ஆகியவை இந்த அமைப்பை முழுமையாகச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாகத் தெரிவிக்கின்றனர்.


சிறப்புத் தீவிர திருத்த பணிகளின் முக்கிய நோக்கம் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிவது என்றால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்கின்றனர். 2001-ஆம் ஆண்டில், எல்லை மேலாண்மைக்கான பணிக்குழு (Task Force on Border Management) 1.5 கோடி சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக மதிப்பிட்டது. 2004-ஆம் ஆண்டில், அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் இந்தியாவில் 1.2 கோடி சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் இருப்பதாகக் கூறியது. 1.2 முதல் 1.5 கோடி வரை இருந்தாலும், இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 1% மட்டுமே என்றும் கூறப்படுகிறது. யூதர்கள், திபெத்தியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் என அண்டை நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்தியா நீண்டகாலமாக புகலிடமாக இருந்து வருகிறது. இது குடியேறிய மக்களை ஏற்றுக்கொண்டு தன் நாட்டில் சேர்த்துக் கொள்ளும் இந்தியாவின் நீண்டகால வரலாற்றுப் பண்பை காட்டுவதாகத் தெரிவிக்கின்றனர். 


அந்த 1 சதவீத மக்கள் நாட்டிற்கு உள்ளே நுழைந்தபோதே அவர்களை அரசால் அடையாளம் காண முடியவில்லை என்றால், இப்போது அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது உண்மையான குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமையக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர். 'குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது' என்ற நீதிக் கோட்பாடே குடியுரிமை தொடர்பான முடிவுகளில் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தபோதிலும், 1951 ஐநா அகதிகள் உடன்படிக்கையிலோ அல்லது அதன் 1967 நெறிமுறையிலோ  இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை. எனவே, இந்தியாவின் மனிதாபிமானப் பாரம்பரியம் மற்றும் அகதிகள் உரிமைகள் மீதான மரியாதையின் அடிப்படையில், அந்த 1 சதவீதத்தினரை குடிமக்களாக ஏற்றுக்கொள்வதே சரியானதாக இருக்கும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


கடினமான தடைகள்


1986 மற்றும் 2004-ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டங்கள் (Citizenship Amendment Acts (CAA)), சிறப்புத் தீவிர திருத்த முறைக்கு அடிப்படையாக அமைகின்றன. தகுதியுள்ள குடிமக்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிப்பதை இந்தச் சட்டங்கள் மிகவும் கடினமாக்குகின்றன. ஏனெனில், பெரும்பாலான மக்களிடம் இல்லாத பழைய ஆவணங்களை இந்தச் சட்டங்கள் கோருகின்றன. இந்தத் திருத்தங்கள் சில முக்கியமான கேள்விகளையும் எழுப்புகின்றன. 'அப்னிலா' (ApniLaw) இணையதளத்தில் உள்ள ஒரு கட்டுரை 1987, 2004 மற்றும் 2019-ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குறித்து இவ்வாறு கேட்கிறது: 'குடியுரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமா அல்லது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா? மக்கள்தொகை மாற்றம் குறித்த அச்சத்தைவிட மனிதாபிமான ரீதியிலான கவலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவத்தையும், நடைமுறை அரசியல் அழுத்தங்களையும் இந்தியா எவ்வாறு சமநிலைப்படுத்தப் போகிறது?'" என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றன.


இந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீர்வு தேவை. தற்போதைய முறையில் உள்ள குறைபாடுகளும் பிரச்சினைகளும், சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் மக்களை (சட்ட விரோத குடியேறிகள்) 'ஊடுருவல்காரர்கள்' என்று முத்திரை குத்த பயன்படுத்தப்படும் பாரபட்சமான விதிகளை நீக்குவதற்கு, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. 1987-ஆம் ஆண்டிற்கு முன் பிறந்த குடிமக்களுக்கும், அதற்குப் பின் பிறந்தவர்களுக்கும் இடையே உள்ள நியாயமற்ற வேறுபாடுகள், 1987 மற்றும் 2004-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் சரிசெய்யப்பட வேண்டும். இந்த விதிகள் பாரபட்சமானவை என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-க்கு (Article 14) எதிரானது என்றும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம் என்கின்றனர்

வாக்காளர்களின் குடியுரிமையை வாக்குப்பதிவிற்குப் பிறகு உறுதிப்படுத்த தற்போது நம்பகமான வழிமுறைகள் இல்லை. இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். அனைவருக்கும் வாக்குரிமை என்ற கொள்கையின்படி, உண்மையான குடிமக்கள் யாரும் விடுபடாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்காக, 2026-ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தைக் கொண்டு வரலாம். இதன் மூலம், சட்டப்படி 'அந்நியர்' அல்லது 'குடிமகன் அல்லாதவர்' என்று அறிவிக்கப்பட்டவர்களைத் தவிர, இந்தியாவில் தற்போது வசிப்பவர்கள் அல்லது கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வசிப்பவர்கள் அனைவருக்கும் இயல்பான முறையில் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படலாம் என்கின்றனர். 


மேற்கண்ட நடவடிக்கைகள் உண்மையான குடிமக்களின் உரிமை பறிப்புக்கான வாய்ப்புகளை குறைந்தபட்சமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவின் பழமையான மனிதாபிமான பாரம்பரியம் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 


எழுத்தாளர், CIVIC-பெங்களூரின் நிர்வாக அறங்காவலராகவும், ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (Association for Democratic Reforms (ADR)) கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

 Original Article : The way forward for determining citizenship -Kathyayini Chamaraj

Share: