நாட்டின் பெருநகரங்களில் காணப்படும் நெரிசலுக்கு சிறு நகரங்கள் ஒரு தீர்வாக அமையுமா?
இந்தியா நகரங்களைப் பற்றி பேசும்போது பெரும்பாலும் மிகப்பெரிய நகரங்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. ஆனால், உண்மையில் ஒரு முக்கியமான மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது: இந்தியாவில் உள்ள ~9,000 நகரங்களில், வெறும் 500 நகரங்கள் மட்டும்தான் பெரிய நகரங்கள், மீதி அனைத்தும் 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள சிறிய நகரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சிறிய நகரங்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விளைவு மட்டுமல்ல, அதில் உள்ள பிரச்சினைகளும் தற்போது தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
சிறு நகரங்கள் எவ்வாறு பெருகியுள்ளன?
1970-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டுகள் வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய நகரங்களை மட்டுமே சார்ந்து இருந்தது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பின்னாளில் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்கள் தொழிற்சாலைகள், அரசு முதலீடு, வேலைவாய்ப்பு எல்லாவற்றுக்கும் மையமாக மாறின. ஆனால், இன்று இந்த பெரிய நகரங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. நில விலை மிக அதிகமாக (உற்பத்தித் திறனோடு தொடர்பில்லாமல்) உயர்ந்துவிட்டது. சாலை, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண தொழிலாளர்களால் வாழ முடியாத அளவுக்கு அன்றாட வாழ்க்கைச் செலவும் வீட்டு வாடகையும் உயர்ந்துவிட்டன. அதாவது — முன்பு வளர்ச்சிக்கு உதவிய அதே பெரு நகரங்கள் இப்போது அதிகப்படியான சுமையை தாங்க முடியாமல் திணறுவதாகக் கூறப்படுகின்றன.
இப்போது சிறிய நகரங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றம் இந்தியா முழுவதும் தெரிகிறது. சட்டெனப்பள்ளி, தம்தரி, பாராபங்கி, ஹாசன், போங்கைகாவ், உனா போன்ற சிறு நகரங்கள், தளவாடம், வேளாண் பொருட்கள் செயலாக்கம், கிடங்கு, கட்டுமானம், சேவைகள் மற்றும் நுகர்வு மையங்களாக மாறிவருகின்றன. பெருநகரங்களில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களையும், வேளாண் தொழில்களில் எதிர்காலம் இல்லை என்று நினைக்கும் கிராமத்து இளைஞர்களையும் இந்த சிறு நகரங்கள் ஈர்த்து வருகின்றன.
இவை நகரமயமாக்கலுக்கு வெளியில் இல்லை — அதன் ஒரு பகுதிதான். மலிவான நிலம், நெகிழ்வான தொழிலாளர் முறை, தளர்வான சட்ட விதிகள் மற்றும் குறைவான அரசியல் கவனம் ஆகியவை காரணமாக, பெரிய முதலீட்டு அழுத்தத்துக்கு நடுவே இந்த சிறு நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சிறு நகரங்கள் ஒரு சிறந்த மாற்று வழிதானா?
அவை சுதந்திரம் அல்லது முன்னேற்றத்திற்கான உண்மையான வாக்குறுதிகள் எதையும் வழங்கவில்லை. இப்போது நடப்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல; மாறாக கிராமப்புற வறுமை நகரங்களுக்கு இடம் பெயர்வதுதான் நடக்கிறது. பெரும்பாலான வேலைகள் முறைசாராத் தொழில்களாகவே உள்ளன. ஒப்பந்தம் இல்லாத கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டிலிருந்தே குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத ஆன்லைன்/டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் வேலைகள் போன்ற தற்காலிக வேலைகளில் சிக்கியுள்ள இளைஞர்கள் என இந்த நிலை நீடிக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் (Shahdol) மற்றும் கர்நாடகாவின் ராய்ச்சூர் (Raichur) போன்ற நகரங்களில் புதிய அதிகார அமைப்புகள் உருவாகி வருகின்றன: ரியல் எஸ்டேட் முகவர்கள், உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், நுண்கடன் வழங்குபவர்கள் மற்றும் அரசியல் இடைத்தரகர்கள் இப்போது நிலத்தையும் உழைப்பையும் கட்டுப்படுத்துகிறார்கள். இது கொள்கை தோல்வியை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.
இந்தியாவின் முக்கிய நகர்ப்புறத் திட்டங்கள் இன்னும் பெரிய நகரங்களையே மையமாகக் கொண்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட அடல் நகரங்களை புதுப்பித்து மேம்படுத்தும் திட்டம்கூட (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)), பெரும்பாலான சிறுநகரங்களை முக்கியமான அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு முதலீடுகளிலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது. குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்கள் பெரிய நகரங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. ஆனால், சிறு நகரங்களோ முறையற்ற திட்டங்களையும், தற்காலிக தீர்வுகளையுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் லாரிகளின் பயன்பாடு அதிகரித்து, நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு மிகப்பெரிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. சிறு நகர நகராட்சிகளில் போதிய நிதியோ அல்லது பணியாட்களோ இல்லை என்பதும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. திட்டமிடுதல் பணிகள் உள்ளூர் சூழலைப் புரிந்து கொள்ளாத ஆலோசகர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன, மேலும் பொதுமக்களின் பங்களிப்பு வெறும் பெயரளவு கூட்டங்களோடு முடிந்துவிடுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
அடுத்து என்ன?
முதலில், சிறிய நகரங்களை இந்தியாவின் எதிர்கால நகர வளர்ச்சியின் முக்கிய சக்தியாக அரசு அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவது, பெரிய நகரங்களைப் போலவே திட்டமிடாமல், வீடு - வேலை - போக்குவரத்து - சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து சிறிய நகரங்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவது, சிறிய நகரங்களுக்கு வலுவான உள்ளாட்சி அமைப்புகள், தெளிவான மற்றும் வெளிப்படையான நிதிநிலை, தொழிலாளர் சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், கூட்டுறவுகளுக்கு போதுமான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இறுதியாக, டிஜிட்டல் தளங்கள் & பொருளாதார அமைப்புகள் போன்றவை உருவாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பணம்/மதிப்பு உள்ளூரிலேயே தங்குவதற்கு இடவசதி ஏற்பாடுகளுக்கு உதவவும், தரவு பயன்பாட்டில் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும் மூலதனம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இந்திய நகரங்கள் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு மிக முக்கியமானவையாகும். அவை சமத்துவமின்மையை அதிகரிக்கின்றனவா அல்லது ஜனநாயக மாற்றத்திற்கான இடங்களாக மாறுகின்றனவா என்பது அரசியல் விருப்பத்தைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.
திகேந்தர் சிங் பன்வார், கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினர் ஆவார்.
Original Article : Are India’s small towns being increasingly urbanised? -Tikender Singh Panwar