இமாச்சலப் பிரதேசத்தின் முதல் துணை மலை நகரத் திட்டத்தை மக்கள் ஏன் எதிர்க்கின்றனர்? -சௌரப் பராஷர்

பத்தாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஜாதியா தேவி நகரத் திட்டம் (Jathiya Devi township), நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடந்து தாமதங்களைச் சந்தித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதயை இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநில வளங்களைப் பயன்படுத்தி முதல் கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்படுகிறது.


சிம்லா நகரத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜாதியா தேவி, இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் (Himachal Pradesh Housing and Urban Development Authority (HIMUDA)) செயல்படுத்தப்பட உள்ள ஒரு லட்சிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2014-ம் ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலுடன் மாநில அரசால் உருவாக்கப்பட்டது. ஜாதியா தேவி பஞ்சாயத்து பவன் உட்பட, இப்பகுதி முழுவதும் சமர்பிக்கப்படவுள்ள அறிவிப்புகள், முன்மொழியப்பட்ட சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment (SIA)) ஆய்வு தொடர்பாக டிசம்பர் 29-ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு குடியிருப்பாளர்களை அழைத்தன.


2014-ம் ஆண்டு முதன்முதலில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், இப்போது பல கிராமங்களில் பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. குடியிருப்பாளர்கள் இடம்பெயர்வு, வாழ்வாதார இழப்பு மற்றும் போதுமான இழப்பீடு கிடைக்காது என்ற அச்சத்தில் உள்ளனர். ஜனவரி 10-ம் தேதி, நகரமைப்புக்காக கையகப்படுத்தப்படுவதற்கு அடையாளம் காணப்பட்ட 11 வருவாய் கிராமங்களில் குறைந்தது எட்டு வருவாய் கிராமங்களைக் கொண்ட பாகி கிராம பஞ்சாயத்து, தங்கள் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்காத ஒரு தீர்மானத்தை எதிர்ப்பின்றி நிறைவேற்றியது.


ஜாதியா தேவி நகரத் திட்டம் (Jathiya Devi Township Project)


ஜாதியா தேவி என்பது பாகி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு இடம். இந்தப் பகுதியில் ஒரு பழமையான ஜாதியா தேவி கோயில் இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. சிம்லா மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், புதிய பொருளாதார மையங்களை உருவாக்கவும், நிலையான, பேரிடரைத் தாங்கும் நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்ட துணை மலை நகரமாக இந்த முன்மொழியப்பட்ட நகரம் கருதப்படுகிறது.


மாநில நெடுஞ்சாலை-16 (State Highway (SH)) மற்றும் தேசிய நெடுஞ்சாலை-5 (National Highway (NH)) இல் உத்திரீதியாக அமைந்துள்ள இந்த நகரத்திட்டம் (township), சிம்லா விமான நிலையத்திலிருந்து ஜுப்பர்ஹட்டியில் 3–4 கி.மீ தொலைவிலும், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையம் (ISBT) சிம்லாவிலிருந்து சுமார் 20–22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதில் முகடுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பருவகால நீரோடைகளும் உள்ளன.


நவம்பர் 2025-ல் நடைபெற்ற சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) ஆய்வின்படி, நகரத்திட்டம் சுமார் 249 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதில், 35 ஹெக்டேர் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலமாக இருக்கும். முன்மொழியப்பட்ட நிலப் பயன்பாட்டுத் திட்டத்தில் பல மண்டலங்கள் அடங்கும். இதில், குடியிருப்புப் பகுதிகள் 55.16 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இவை உயர் வருமானக் குழுக்கள் (high-income groups (HIG)), நடுத்தர வருமானக் குழுக்கள் (middle-income groups (MIG)), குறைந்த வருமானக் குழுக்கள் (low-income groups (LIG)) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (economically weaker sections (EWS)) இந்த திட்டத்தின் மூலம் வீடுகளை வழங்கும். வணிகப் பகுதிகள் 13.36 ஹெக்டேர் பரப்பளவில் அமையும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத தொழில்துறை மண்டலங்கள் 15.7 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். பொழுதுபோக்கு மற்றும் பசுமை மண்டலங்கள் 16.42 ஹெக்டேர் பரப்பளவில் விரிவடையும். நதி மேம்பாட்டுப் பகுதிகள் 16.56 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். முன்மொழியப்பட்ட அகலப்படுத்தப்பட்ட சாலைகள் (13.78 ஹெக்டேர்), பயன்பாட்டு சேவைகள், திறன்மிகு போக்குவரத்து அமைப்புகள், ஹெலிபேட் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் திட்டமிடல் பகுதி ஆகியவை நகரத்திட்டத்தின் பிற அம்சங்களாகும். நகரத்திட்டத்தின் கட்டம்- 1, உயர் வருமானக் குழுக்கள் (HIG), நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG), குறைந்த வருமானக் குழுக்கள் (LIG) ​​மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) வகைகளில் 895 குடியிருப்பு அலகுகளையும், 84.22 ஹெக்டேருக்கு மேல் வணிக மற்றும் தொழில்துறை கூறுகளையும் முன்மொழிகிறது. அதேநேரத்தில், பசுமை மற்றும் நதி மேம்பாட்டு மண்டலங்கள் மேலும் 33 ஹெக்டேர்களை உள்ளடக்கும்.


Bigha :  பிகா என்பது நிலப்பரப்பை அளவிடுவதற்கான ஒரு பாரம்பரிய, தரப்படுத்தப்படாத அலகு ஆகும். இது இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் விவசாயப் பகுதிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.


கையகப்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட கிராமங்கள்


சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) அறிக்கை, எட்டு கிராமங்களில் 249 ஹெக்டேர் (தோராயமாக 2,959 பிகாக்கள்) சாத்தியமான கையகப்படுத்துதலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இந்த கிராமங்கள்: சானன் (568 பிகாக்கள்), பந்தி (109 பிகாக்கள்), ஆஞ்சி (396 பிகாக்கள்), சில்லி பாகி (699 பிகாக்கள்), மஜோலா (78 பிகாக்கள்), சில்ரு (214 பிகாக்கள்), தனோகரி (270 பிகாக்கள்), மற்றும் கியாராகி (303 பிகாக்கள்) கொண்டுள்ளது.


இந்த கிராமங்கள் அனைத்தும் சிம்லாவின் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாகி கிராம பஞ்சாயத்தின்கீழ் வருகின்றன. கூடுதலாக, அண்டை நாடான சோலன் மாவட்டத்தின் மம்லிக் தாலுகாவில் உள்ள மஞ்சியாரி கிராமமும் (சுமார் 441 பிகாக்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளது. சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) அறிக்கையின்படி, 386 வீடுகள் நேரடியாக பாதிக்கப்படும், 158 வீடுகள் வாழ்வாதார சீர்குலைவை எதிர்கொள்ளும். மறைமுக பாதிப்புகளில் பொதுவான சொத்து வளங்கள் (common property resources(CPR)) மற்றும் பகிரப்பட்ட நில பயன்பாட்டு அமைப்புகளுக்கான அணுகலை இழப்பது இதில் அடங்கும்.


போராட்டம்


முன்மொழியப்பட்ட கையகப்படுத்தல் வளமான விவசாய நிலங்கள், மூதாதையர் வீடுகள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான சமூக மற்றும் மத கட்டமைப்புகளை அச்சுறுத்துவதாக குடியிருப்பாளர்கள் வாதிடுகின்றனர். "விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உட்பட முழு கிராமங்களும் கையகப்படுத்தப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அப்பகுதி மக்கள் கூறினர். இது பல தலைமுறையாக இங்கு வசித்துவரும் மக்களை இடம்பெயர்த்து புதியவர்களுக்கு வீடுகளை கட்ட அரசாங்கம் விரும்புகிறது," என்று டிசம்பர் 29 பொது விசாரணையின் போது திட்டத்தை எதிர்த்த நீரஜ் தாக்கூர் கூறினார்.


"ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற 418 வீடுகளில் உள்ள 120 குடும்பங்களில் 1/4 பங்கு பெரும்பான்மை தேவை என்றாலும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 280 பேர் இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்" என்று கிராமப் பஞ்சாயத்து பாகியின் தலைவர் நரேஷ் குமார் தாக்கூர் கூறினார்.


"மிக நீண்டகாலத்திற்கு முன்பு, மலை நகரமைப்புக்காக இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HIMUDA) 250-க்கும் மேற்பட்ட பிகாக்களை கையகப்படுத்தியது. இதுவரை, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. அந்த நிலம் வளமற்றதாக இருந்தது என்று அவர் கூறினார். ஆனால் இந்த முறை, அரசாங்கம் வளமான விவசாய நிலங்களைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குடியிருப்பாளர்களின் வீடுகளைக் கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.


இழப்பீடு தொடர்பான கவலைகள்


நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமைச் சட்டம்-2013 இன் பிரிவு 5 மற்றும் பிரிவு 8 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள், சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) ஆய்வின்படி கையகப்படுத்தல் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியது. இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HIMUDA) மற்றும் வருவாய் அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போதைய நில விலைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆட்சியர் நிர்ணயித்த விலைகளின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்தாலும், என்ன இழப்பீடு வழங்கப்படும் என்பதை முதலில் அறியாமலேயே அவ்வாறு செய்தனர். இந்தக் கிராமங்களில் உள்ள நிலம் கூட்டாகச் சொந்தமானது என்று பல கிராம மக்கள் நம்புகிறார்கள். தனிப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடாக மிகக் குறைந்த பணமே கிடைக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.


"எனது சகோதரர்களும் நானும் கூட்டாக 12 பிகாக்களை வைத்திருக்கிறோம். நிலத்தை மகன்கள் மற்றும் பேரன்களுக்கு இடையே பிரிவினைக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும்? விவசாயம்தான் தங்களின் முக்கிய வாழ்வாதாரம் என்றும் அவர் மேலும் கூறினார். அரசாங்கம் முன்னேறுவதற்கு முன்பு இழப்பீட்டை தெளிவுபடுத்த வேண்டும்," என்று கிராமவாசிகளில் ஒருவரான 84 வயதான ஹிரா சிங் தாக்கூர் கூறினார்.


சமூகத் தாக்க மதிப்பீட்டு (SIA) அறிக்கை


சமூகத் தாக்க மதிப்பீட்டின் (SIA) அத்தியாயம் 3, நிலம் கையகப்படுத்துதல் ஏழு கோயில்கள், ஐந்து பள்ளிகள், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள், நீர் கால்வாய்கள் மற்றும் பிற பௌதீக கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட கட்டப்பட்ட சொத்துக்களை இடமாற்றம் செய்வதற்கும் அகற்றுவதற்கும் வழிவகுக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறது.


இருப்பினும், இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க நன்மைகளை முன்னிறுத்துகிறது. இந்த நகரத்திட்டம் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் மற்றும் பொருளாதார இயக்கத்தை உருவாக்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்தும், கிராமப்புறங்களை முக்கிய பொருளாதார வழித்தடங்களில் ஒருங்கிணைக்கும், சமூக மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் உள்ளூர் தொழில்முனைவை ஊக்குவிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, குறைக்கப்பட்ட எரிபொருள் நுகர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொழுதுபோக்கு இடங்களை உருவாக்குவது குறித்தும் இது குறிப்பிடுகிறது.


ஹிமுடாவின் பார்வை


இமாச்சலப் பிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HIMUDA) தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான சுரேந்தர் குமார் வஷிஷ்ட், எந்த நிலமும் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படாது என்று கூறி, அச்சங்களைத் தணிக்க முயன்றுள்ளார். "உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நாங்கள் எந்த நிலத்தையும் கையகப்படுத்தப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். டிசம்பர் 29 அன்று விசாரணை ஒரு நீண்ட செயல்முறையின் முதல்படி மட்டுமே என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஏற்கனவே சுமார் 262 பிகா நிலம் கையிருப்பில் இருப்பதாக அவர் கூறினார். குடியிருப்புவாசிகளை இடம்பெயரச் செய்யாமல் விரிவாக்கம் செய்யவே அந்த அமைப்பு விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார். குடியிருப்பு வீடுகள் கையகப்படுத்துதலில் இருந்து விலக்கப்படும் என்றும், சமையலறை தோட்டக்கலை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன என்றும் அவர் கூறினார். "வளமான நிலம் மற்றும் வீடுகளை விலக்கி வைக்க ஒரு சமரசமான வழி ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார். அந்த எட்டு கிராமங்களின் நிலம் மிகவும் வளமானதாக இல்லை என்றும் தலைமை நிர்வாக அதிகாரி மேலும் கூறினார்.


அடுத்து என்ன?


பத்தாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஜாதியா தேவி நகரத்திட்டம், நிதி நெருக்கடி காரணமாக தொடர்ந்து தாமதங்களைச் சந்தித்து வருகிறது. இதற்கான முதல்கட்டப் பணிகள் இப்போது மாநில வளங்களைப் பயன்படுத்தி தொடங்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் அதன் தற்போதைய வடிவத்தில் தொடருமா என்பது உள்ளூர் மக்களின் எதிர்ப்பு, இழப்பீடு குறித்த கவலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை அதிகாரிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. இப்போதைக்கு, இமாச்சலப் பிரதேசத்தின் முதல் திட்டமிடப்பட்ட மலைக் குடியிருப்புத் திட்டத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியின் வாக்குறுதிக்கும், இந்த மலைகளைத் தங்கள் வீடாகக் கருதும் மக்களின் வலுவான அச்சங்களுக்கும் இடையில் அது சிக்கியுள்ளது.


 Original Article : Why Himachal’s first satellite mountain township is being opposed by residents?. -Saurabh Parashar

Share: