வலுவான வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் மற்றும் சநிலையான பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு '’சரியான காலகட்டத்தில்' (goldilocks moment) இந்தியா உள்ளது. ஆனால், வளர்ந்த இந்தியாவின் வெற்றியை மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் பணியிடத்தில் நுழையும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கக்கூடிய நீடித்த முன்னேற்றமாக இத்தகைய ஆதாயங்களை எவ்வாறு மாற்றுவது?
உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், இந்தியா மீதான உலகளாவிய எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தரவு காட்டுகிறது.
குஜராத் உச்சிமாநாட்டின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பிராந்திய மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்றும், பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், வேளாண் உற்பத்தி புதிய சாதனைகளை எட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பால், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் மற்றும் பணவியல் கொள்கை முடிவுகளால் இது வலுப்படுத்தப்படுகிறது அவை இந்தியாவின் "சாதகமான காலகட்டத்தை" குறிக்கின்றன. வளர்ச்சி வலுவாகவும், பணவீக்கம் குறைவாகவும், பெரிய பொருளாதார நிலைமைகள் சமநிலையுடனும் காணப்படும் ஒரு காலகட்டம் இதுவாகும்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistics Office (NSO)) காலாண்டு அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட 5.6 சதவீதத்தை விட அதிகமான அளவாகும். உற்பத்தித் துறை (9.1 சதவீதம்), கட்டுமானத் துறை (7.2 சதவீதம்) மற்றும் நிதி மற்றும் வணிகச் சேவைகள் (10.2 சதவீதம்) ஆகியவற்றின் வலுவான செயல்பாடுகளே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். தனிநபர் நுகர்வும் 7.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது வலுவான தேவையைக் காட்டுகிறது.
இருப்பினும், இந்த "சாதகமான காலகட்டம்" நிலையான முன்னேற்றமாக மாற்றப்படுமா மாறுமா என்பது, வளர்ந்த இந்தியா @ 2047 திட்டத்தின் வெற்றியை மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் பணிகளில் நுழையும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கும். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை, வளர்ச்சி ஒரு தேர்வல்ல, அது ஒரு தேவை.
வளர்ச்சி என்பது ஒரு தேவை, ஒரு தேர்வு அல்ல.
இந்தியாவின் வளர்ச்சிச் சவாலானது ஒரு எளிய கணக்கீட்டால் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 10 மில்லியன் மக்கள் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் இணைகின்றனர். அவர்களுக்கு வேலைகளையும் வருமானத்தையும் வழங்க, பொருளாதாரம் ஆண்டுதோறும் 6 சதவீதத்திற்கும் மேலாக வளர வேண்டும். இதைவிடக் குறைவான வளர்ச்சி என்பது மெதுவான முன்னேற்றத்தை மட்டும் குறிப்பதில்லை. அது வேலைவாய்ப்புகளின் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது, அதிக மக்களை முறைசாரா வேலைகளில் தள்ளுவது, ஊதிய தேக்கம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவது போன்ற சூழல்களிலும் தள்ளிவிடுகிறது.
வளர்ச்சி குறையும் போது, பாதிப்பு அமைதியாக அதிகரிக்கிறது. இளைஞர்கள் நிலையான வேலையைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள். குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. சமத்துவமின்மையை மாற்றுவது கடினமாகிறது. நலத்திட்டங்கள் சிரமங்களைக் குறைக்கலாம். ஆனால், பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் வளர்ச்சியின் பங்கை அவற்றால் ஈடுசெய்ய முடியாது.
மற்ற நாடுகள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன. தென் கொரியா, தைவான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைந்த பின்னரே செல்வந்த நாடுகளாக மாறின. அவை உற்பத்தித் துறையை வளர்த்தன, உற்பத்தித்திறனை மேம்படுத்தின. மேலும், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கின. எந்த ஒரு நாடும் மெதுவான அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அந்த மாற்றத்தை அடையவில்லை.
எனவே, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு, உயர் வளர்ச்சி என்பது வெறும் பெருமைக்குரிய விவகாரம் மட்டுமல்ல, வளர்ச்சி என்பது சாத்தியமா இல்லையா என்பதைப் பற்றியதாகும்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் எதை காட்டுகின்றன?
வலுவான வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அது வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.2% ஆகவும், முதல் காலாண்டில் 7.8% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இது பொருளாதாரம் மீண்டு வருவதைக் காட்டுகிறது.
இருப்பினும், 2026ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) வெளியிடப்பட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளுடன் (First Advance Estimates (FAE)) ஒப்பிடும்போது, நிலைமை மேலும் எச்சரிக்கைக்குரியதாகிறது. 2025-26ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஆண்டின் 6.5 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு உண்மையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஆனால், வலுவான வளர்ச்சி இன்னும் முழுமையாக உறுதியாகவில்லை.
காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறுகியகால வளர்ச்சியைக் காட்டுகிறது. இது பெரும்பாலும் அடிப்படை விளைவுகள், துறைசார் ஏற்ற இறக்கங்கள் மற்றும் செலவின நேரத்தால் பாதிக்கப்படுகிறது. ஆண்டு மதிப்பீடுகள் இந்த நகர்வுகளை மென்மையாக்குகின்றன மற்றும் மிகவும் எச்சரிக்கையான பார்வையை வழங்குகின்றன. இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆண்டின் தொடக்கம் வலுவாக இருந்தபோதிலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறையக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
துறைசார் அமைப்பை உன்னிப்பாக ஆராய்வது இதற்கான காரணத்தை விளக்குகிறது. இந்தியாவின் பெரும்பாலான வளர்ச்சி நிதி மற்றும் அரசாங்கப் பணிகள் போன்ற சேவைத் துறைகளிலிருந்து வருகிறது. அதே சமயம் வேளாண் மற்றும் சுரங்கத் தொழில்கள் பலவீனமாக உள்ளன. வேளாண்துறை 3.1% மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஊரக பகுதிகளில் உள்ள பல மக்கள் வேலைக்கும் வருமானத்திற்கும் இதைச் சார்ந்திருக்கிறார்கள். பலவீனமான வேளாண் வளர்ச்சி ஊரகப் பகுதி தேவையை குறைப்பது மட்டுமல்லாமல், நுகர்வை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார விரிவாக்கத்தின் நிலைத்தன்மையையும் பாதிக்கிறது.
நுகர்வு, வேலைகள் மற்றும் விடுபட்ட இணைப்பு
குறைந்த பணவீக்கம் மற்றும் நகரங்களில் நிலவிய வலுவான தேவை ஆகியவற்றின் உதவியுடன், மக்கள் அதிக செலவு செய்ததே இந்தியாவின் இரண்டாம் காலாண்டில் பதிவான 8.2% வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். சமீபத்திய வளர்ச்சி வேகத்தைத் தக்கவைப்பதில் வீட்டுச் செலவினங்களின் இந்த பங்கை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) அங்கீகரித்துள்ளது.
ஆனால், வருமானத்தால் ஆதரிக்கப்படாத நுகர்வு என்பது நீண்டகால வளர்ச்சிக்கு ஒரு பலவீனமான தூணாகும்.
வேலைவாய்ப்புத் தரவுகள், குறிப்பாக உற்பத்தி மற்றும் சிறு நிறுவனங்களில், வேலை வளர்ச்சி உற்பத்தி வளர்ச்சியை விட பின்தங்கியே உள்ளது என்பதைக் காட்டுகின்றன. நிலையான வேலைகளும், அதிகரித்து வரும் ஊதியங்களும் இல்லாமல், நுகர்வு பலவீனமடைகிறது. வேலைகள் இல்லாத நிலையில், நுகர்வு ஒரு நீடித்த வளர்ச்சி இயந்திரமாக இல்லாமல், குறுகியகால தூண்டுதலாக மட்டுமே அமைகிறது.
தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் முறைப்படுத்தலையும் நெகிழ்வுத்தன்மையையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் தாக்கம், நடைமுறைப்படுத்தலையும் களத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் சார்ந்துள்ளது. அதேநேரத்தில், வேலை வாய்ப்புகள் குறையும்போது நுகர்வில் ஏற்படும் கடுமையான சரிவுகளைத் தடுத்து, ஊரக பகுதி வருமானங்களுக்கு விக்சித் பாரத் - ரோஸ்கர் மற்றும் அஜீவிகா திட்டத்திற்கான உத்தரவாதம் (ஊரகம்) (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) ஒரு முக்கிய நிலைப்படுத்தியாகத் தொடர்கிறது. அதன் தொடர்ச்சியான முக்கியத்துவமே தொழிலாளர் சந்தையின் பலவீனத்திற்கான ஒரு செய்தியாகும். இது ஒட்டுமொத்த வளர்ச்சி புள்ளிவிவரங்களால் சுட்டிக்காட்டப்படும் நம்பிக்கைக்கு முரணாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) கவலைகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாற்றம்
இந்தச் சூழலில், சர்வதேச நாணய நிதியம் (IMF) எழுப்பிய கவலைகளையும் தரவுகளில் சில சிக்கல்கள் இருப்பதாக எச்சரித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதில் உள்ள பலவீனங்கள், காலாவதியான 2011-12 அடிப்படை ஆண்டு, முறைசாராத் துறையின் வரையறுக்கப்பட்ட உள்ளடக்கம், மாற்று குறிகாட்டிகளைச் சார்ந்திருத்தல் மற்றும் பருவகாலத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட காலாண்டுத் தரவுகளின் பற்றாக்குறை ஆகியவற்றை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இவை வெறும் தொழில்நுட்பரீதியான சிறு குறைகள் அல்ல. இந்தச் சிக்கல்கள் குறுகியகால வளர்ச்சி எண்களை முழுமையாக நம்புவதை கடினமாக்குகின்றன.
அரசாங்கம் இதை ஒப்புக்கொண்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடும் முறையில் ஒரு விரிவான சீர்திருத்தத்தைத் தொடங்கியுள்ளது. 2022-23-ஆம் ஆண்டு என்ற புதிய அடிப்படை ஆண்டு பிப்ரவரி 2026-ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் விவாதக் கட்டுரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வழிமுறை சீர்திருத்தங்கள் பின்வருமாறு :
1. அரசாங்கத்தின் மின்-ஆளுமை அமைப்பான MCA21-லிருந்து அதிக நிறுவனத் தரவுகளைப் பயன்படுத்துதல்,
2. பல வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை நிறுவனங்களை (Limited Liability Partnerships (LLPs)) உள்ளடக்குதல்,
3. பல செயல்பாடுகளைச் செய்யும் நிறுவனங்களைச் சிறப்பாக வகைப்படுத்துதல்,
4. காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Enterprises (ASUSE)) ஆகியவற்றைப் பயன்படுத்தி முறைசாரா துறை குறித்த புதுப்பிப்புகள், மற்றும் இரட்டைப் பணவீக்க நீக்க முறையின் பரந்த பயன்பாடுதுதல்,
இது போன்ற மாற்றங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை மேலும் வலுவானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றும். குறிப்பாக, இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி கொள்கைகள் வகுக்கப்படும்போது, காலாண்டு வளர்ச்சி சிறப்பாக இருப்பது நீண்டகால முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று கருதுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
ரிசர்வ் வங்கியின் கொள்கை உதவுகிறது. ஆனால், வரம்புகளைக் கொண்டுள்ளது.
டிசம்பர் 2025-ல், ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு, ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.25 சதவீதமாகக் குறைக்க ஒருமனதாக முடிவு செய்தது. அதே, நேரத்தில் நடுநிலையான நிலைப்பாட்டைப் பாதுகாத்து, குறைந்த பணவீக்கத்துடன் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கணித்தது.
பணவியல் கொள்கையின் முடிவு தெளிவான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பணவீக்கம் 5-6 சதவீதத்திலிருந்து ஏறக்குறைய 2-3 சதவீதமாகக் கடுமையாகக் குறைந்துள்ளது. மேலும் அது குறையும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. வளர்ச்சி வேகம் வலுவாக உள்ளது. 2-ஆம் காலாண்டில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், விலை ஸ்திரமின்மையை ஆபத்தில் ஆழ்த்தாமல் தூண்டுவதற்கு இடமுள்ளதாக ரிசர்வ் வங்கி நம்புகிறது. கடன் வாங்கும் செலவுகளைக் குறைப்பதற்கும், சமமான மாதாந்திர தவணைகளைக் (Equated Monthly Instalment (EMI)) குறைப்பதற்கும், வீடுகள் மற்றும் நிறுவனங்களின் செலவினங்களை ஊக்குவிப்பதற்கும் ரெப்போ-விகிதக் குறைப்பு நோக்கமாக உள்ளது.
ஆனால், பணவியல் கொள்கையின் வரம்புகளை அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். மத்திய வங்கிகள் வளர்ச்சியை உருவாக்குவதில்லை, அவை நிலைமைகளை நிர்வகிக்கின்றன. உற்பத்தித்திறன் ஆதாயங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வருமான வளர்ச்சி ஆகியவை வட்டி விகிதங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், முதலீடு, திறன்கள், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனத் தரத்தைப் பொறுத்து இருக்கும்.
திறந்த சந்தை செயல்பாடுகள் மற்றும் அந்நிய செலாவணி பரிமாற்றங்கள் போன்ற பணப்புழக்க கருவிகளுடன் விகிதக் குறைப்புகளும் இணைந்திருப்பது, அடிப்படை நிதி நிலைமைகள் வசதியாக தளர்வாக இருப்பதற்குப் பதிலாக குறைவாகவே இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முறை பரவலான பெரிய பொருளாதார ஆறுதலைக் காட்டிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகிறது.
வெளிப்புற அழுத்தங்களும் வளர்ச்சியின் நீடித்த தன்மையும்
மேலும், இந்த உயர் வளர்ச்சி வெளிப்புற அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டும். வர்த்தகம், முதலீடு மற்றும் நாணய மாற்று விகித மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பாதிக்கின்றன. ரூபாய் மதிப்பு குறைவது ஏற்றுமதிக்கு உதவக்கூடும். ஆனால், அது இறக்குமதிச் செலவுகளை, குறிப்பாக இந்தியாவின் இறக்குமதியில் பெரும் பகுதியாக இருக்கும் எரிசக்திப் பொருட்களின் செலவை அதிகரிக்கிறது. இது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் விலைகள் மற்றும் செலவுகளில் விரைவாக எடுத்துக்காட்டுகிறது.
மூலதனப் பாய்ச்சல்களும் முக்கியமானவை. உலகளாவிய சூழ்நிலைகள் மாறினால், பணம் வேகமாக நாட்டை விட்டு வெளியேறக்கூடும். இதனால், பொருளாதாரம் வலுவாகத் தோன்றினாலும், உள்நாட்டில் நிதி நிலைமை மேலும் பாதிப்படையலாம்.
ரூபாயின் சமீபத்திய சரிவுகள், உள்நாட்டுப் பொருளாதாரம் வலுவாகத் தோன்றும்போதும் கூட உலகளாவிய அழுத்தங்கள் இந்தியாவைப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. இது ஒரு எளிய விவகாரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: இந்தியாவின் வளர்ச்சி உள்நாட்டுத் தேவையை மட்டும் சார்ந்து இருக்க முடியாது. அது உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளையும் நிலைத்து நிற்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
வளர்ந்த இந்தியா இலக்கிற்கு, வளர்ச்சி உள்ளடக்கியதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும்
இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சி புள்ளிவிவரங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கின்றன. ஆனால், அவை வளர்ச்சியின் நிலைத்தன்மை குறித்த கேள்விக்குத் தீர்வு காணவில்லை. வலுவான காலாண்டு வளர்ச்சி, தணிந்துவரும் பணவீக்கம் மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால், அவை நிலையான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் வருமானங்களுக்கு மாற்றாக அமையாது. வளர்ச்சியை நீடித்ததாக மாற்றுவதற்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகளிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் இது முன்னுரிமையாக மாற வேண்டும்.
பலவீனமான வேளாண் தேவையைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதால், ஊரக பகுதி வருமானங்களை வலுப்படுத்த வேண்டியது முக்கியமனதாகிறது. VB-G RAM G போன்ற திட்டங்கள் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க உதவுகின்றன. ஆனால், அவை உண்மையான வேலைகளுக்கு மாற்றாக அமைய முடியாது. மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பும் அதிக ஊதியமும் இருந்தால்தான், செலவினங்களால் ஏற்படும் வளர்ச்சி நீடித்து நிற்கும்.
அதே நேரத்தில், தரவுகளின் நம்பகத்தன்மை ஒரு கொள்கை முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும். அளவீடு மற்றும் கொள்கை மீதான நம்பிக்கையை மேம்படுத்த, தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கீட்டு முறையின் சீரமைப்பு முக்கியமானதாகும். இறுதியாக, ஏற்றுமதிப் போட்டித்திறன், நிலையான மூலதனப் பாய்ச்சல்கள் மற்றும் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்களை கவனமாகக் கையாள்வதன் மூலம் வெளிப்புற நிலைத்தன்மையை வலுப்படுத்த முடியும். வளர்ந்த இந்தியா @ 2047-க்கு, வளர்ச்சி என்பது வேகமாக மட்டுமல்லாமல், நிலையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும்.
Original Article : Do India’s recent growth numbers settle the question of sustainability? -Pushpendra Singh and Archana Singh