மேற்கு வங்கத்தில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. -ரோஷ்னி யாதவ்

  மேற்கு வங்கத்தில் சமீபத்தில் பதிவான நிபா வைரஸ் பாதிப்புகள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த அபாயகரமான நோய்மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் கண்டறியும் முறைகள் என்ன? மேலும், இதற்கு ஏதேனும் குறிப்பிட்ட சிகிச்சை உள்ளதா?


தற்போதைய செய்தி:

மேற்கு வங்கத்தில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்பு வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் என்றும், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. நிபா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மாநில அரசுக்கு உதவுவதற்காக, ஒரு தேசிய கூட்டு நோய்ப் பரவல் தடுப்புக் குழு (National Joint Outbreak Response team) மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில், இந்த நிபா வைரஸ் குறித்து அறிந்துகொள்வது மிகவும் முக்கியமாதாகிறது.

முக்கிய அம்சங்கள்:


1. நிபா என்பது வௌவால்கள், பன்றிகள், நாய்கள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை முக்கியமாகப் பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்றாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதால், நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படலாம். மேலும், இது கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும்.


2. நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது வைரஸ் பரவியுள்ள பழங்கள், மரங்கள் அல்லது பேரீச்சம்பழச் சாறு மற்றும் பதநீரை அருந்துவதன் மூலமாகவோ மனிதர்களுக்குப் பரவக்கூடும். இது வீடுகளிலோ அல்லது மருத்துவமனைகளிலோ நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடும். மேலும், நிபா நோயால் இறந்தவர்களின் உடல்களைக் கையாளும்போதும் இது பரவலாம்.


3. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (Disease Control and Prevention (CDC)) அமைப்பின்படி, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி, சுவாசப் பிரச்சனைகள் மற்றும் வாந்தி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். கடுமையான சூழல்களில், இது குழப்பம், அதீத தூக்கக் கலக்கம், வலிப்புத்தாக்கங்கள், மூளை வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். மேலும், கோமா அல்லது மரணத்திற்கும் வழிவகுக்கலாம்.

4. நிகழ்நேர பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (real-time polymerase chain reaction (RT-PCR)) பரிசோதனையானது, மூக்கு அல்லது தொண்டைச் சளி மாதிரிகள், மூளைத் தண்டுவட திரவம் (cerebrospinal fluid (CSF)), சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் மூலம் நிபா வைரஸை உறுதிப்படுத்த முடியும். நோய்த்தொற்றின் பிந்தைய நிலைகளில் அல்லது குணமடைந்த பிறகு, மருத்துவர்கள் நொதி-இணைக்கப்பட்ட நோயெதிர்ப்பு உறிஞ்சும் மதிப்பீடு (enzyme-linked immunosorbent assay (ELISA)) பரிசோதனை மூலம் இரத்தத்தில் உள்ள சில ஆன்டிபாடிகளைப் பரிசோதித்து நோயைக் கண்டறியலாம்.


5. இதற்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிக தண்ணீர் குடிப்பது, ஓய்வெடுப்பது, குமட்டல் அல்லது வாந்தியை கட்டுப்படுத்த மருந்துகளைப் பயன்படுத்துவது, சுவாசிப்பதற்கு இன்ஹேலர்கள் மற்றும் துகள் தெளிப்பான்களைப் (nebulisers) பயன்படுத்துவது மற்றும் தீவிரமான சமயங்களில் வலிப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவை தற்போதுள்ள சிகிச்சை முறைகளாகும்.


6. இந்தியாவில் நிபா நோய்த் தொற்றுகள் அரிதாகவே ஏற்படுகின்றன. கேரளாவில் பாதிப்புகள் சில காலங்களுக்கு முன்னர் பதிவாகியுள்ளன. அதே சமயம் மேற்கு வங்கத்தில் கடைசியாக 2001-ஆம் ஆண்டு சிலிகுரியில் நிபா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டது.


7. குறிப்பாக, நிபா வைரஸின் முதல் மனிதத் தொற்றுகள் 1998-ஆம் ஆண்டில் மலேசியாவிலும், 1999-ஆம் ஆண்டில் சிங்கப்பூரிலும் ஏற்பட்டன. இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட நபர், எந்த மலேசிய கிராமத்தில் இந்த நோயால் இறந்துபோனாரோ, அந்த கிராமத்தின் பெயரிலிருந்தே இந்த வைரஸ் தனது பெயரைப் பெறுகிறது.


‘ஒரே ஆரோக்கிய (One-health approach) அணுகுமுறை என்றால் என்ன?

1. உலக சுகாதார அமைப்பின் வலைத்தளத்தின்படி, ஒரே ஆரோக்கியம் என்பது மக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை நிலையான சமநிலைப்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒன்றிணைக்கும் அணுகுமுறையாகும்.


2. மனிதர்களின் ஆரோக்கியம், வீடு மற்றும் காட்டு விலங்குகள், தாவரங்கள் மற்றும் பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவை ஒன்றோடொன்று நெருக்கமாக தொடர்புடையவை என்பதை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கிறது.


3. சுகாதாரம், உணவு, நீர், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை துறை சார்ந்த கவலைகளைக் கொண்ட பரந்த தலைப்புகளாக இருந்தாலும், துறைகள் மற்றும் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், தொற்று நோய்களின் உருவாக்கம், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும், நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் இது முக்கிய இடத்தை வகிக்கிறது.


4. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை ஒன்றிணைப்பதன் மூலம், ஒரே ஆரோக்கிய அணுகுமுறை (One Health) என்பது நோய்களைத் தடுப்பது, கண்டறிவது, அவற்றுக்குத் தயாராவது மற்றும் நிர்வகிப்பது என ஒவ்வொரு கட்டத்திலும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உலகை ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்கச் செய்கிறது.


5. இந்த அணுகுமுறையை சமூக, தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டங்களில் பயன்படுத்தலாம். இது பகிரப்பட்ட மற்றும் திறமையான நிர்வாகம், தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பைச் சார்ந்துள்ளது. ஒரே ஆரோக்கிய அணுகுமுறையை பயன்படுத்துவது, மக்கள் அதன் நன்மைகள், அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளவும், ஆரோக்கியத்திற்கான நியாயமான மற்றும் முழுமையான தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகிறது.


Original Article : Two cases of Nipah virus detected in West Bengal. -Roshni Yadav

Share: