முக்கிய அம்சங்கள்:
வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வார்டு தேர்தல்களைப் போல் இல்லாமல், மேயர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், அந்தப் பதவி இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இட ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் வரை, அரசியல் கட்சிகளால் தங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே, இந்த வாரம் மும்பைக்கு மேயர் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டத்தின் கீழ், மேயர் பதவி பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்பட வேண்டும். இந்த இடஒதுக்கீடு முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, இது நகர்ப்புற வளர்ச்சித் துறையால் நடத்தப்படும் குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. குலுக்கல் நடத்தப்பட்டு, வகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே, மேயரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை தொடங்க முடியும்.
மேயர் பதவிக்கான இட ஒதுக்கீட்டு முறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கிய மற்றும் தலைமைப் பதவிகளை பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிய 74-வது அரசியலமைப்புத் திருத்தத்திலிருந்து வருகிறது. மகாராஷ்டிராவில், நகராட்சி கழகச் சட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டத்தை உறுதி செய்வதற்காக, மேயர் பதவி அடுத்தடுத்த பதவிக்காலங்களில் இந்தக் பிரிவுகளுக்கு இடையே சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை குலுக்கல் முறையை அறிவிக்கும்போது இந்த செயல்முறை தொடங்குகிறது. அதிகாரிகள் கடந்தகால விதிமுறைகளின் அடிப்படையில் தகுதியான பிரிவுகளின் பட்டியலைத் தயாரிக்கின்றனர். பின்னர் ஒரு பொது குலுக்கல் நடத்தப்பட்டு, ஒரு சீட்டு எடுக்கப்பட்டவுடன், ஒதுக்கப்பட்ட பிரிவு இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
இதற்குப் பின்னரே, குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்பட்டபடி, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பொதுப் பிரிவிலிருந்து கவுன்சிலர்கள் மேயரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சிறப்புக் கூட்டத்தை பிஎம்சி நடத்த முடியும். மேயர் எளிய பெரும்பான்மையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 227 உறுப்பினர்களைக் கொண்ட மும்பையின் அவையில் 114-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களின் ஆதரவைப் தேவைப்படும். இட ஒதுக்கீட்டு குலுக்கலின்படி, மும்பையின் கடைசி இரண்டு மேயர்களும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் மும்பை மாநகராட்சி சட்டத்தின்படியும், மேயர் என்பவர் மும்பை மாநகராட்சியின் சடங்கு ரீதியான தலைவராக (ceremonial head) இருக்கிறார். மாநகராட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை இரண்டரை ஆண்டுகளுக்கு மேயராகத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த பதவிக்குரிய முக்கியப் பணிகள், பொதுக்குழு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, விவாதங்களின்போது கண்ணியத்தைப் பராமரிப்பது மற்றும் வாக்குகள் சமமாகப் பிரியும் பட்சத்தில் தீர்மான வாக்கு (casting vote) அளிப்பது ஆகியவை ஆகும்.
மாநகரத் தலைவரானவர், நகரத்தின் முதல் குடிமகன் என்ற முறையில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மும்பையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார். இருப்பினும், மாநகரத் தலைவர் மாநகராட்சித் துறைகளையோ அல்லது நிதியையோ கட்டுப்படுத்துவதில்லை. இந்த அதிகாரங்கள் மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு இந்தியா ஆட்சிப்பணி அலுவலரான மாநகராட்சி ஆணையரிடமே உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
பிருஹன் மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation (BMC)) 1865ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும், மும்பை மாநகராட்சி நாட்டின் அதிக வருவாய் மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க மாநகராட்சியாக உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகள் அல்லது நகரப் பஞ்சாயத்துகள் ஆகியவை நமது நகரங்களில் நகர்ப்புற நிர்வாகத்தின் அடிப்படை அலகுகளாகும். அவர்கள் தான் குடிமக்கள் உதவிக்காக முதலில் நாடிச் செல்லும் நபர்கள் ஆவர். மேலும், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் நகரபுறத் திட்டமிடல் போன்ற அடிப்படை சேவைகளுக்கு அவர்களே பொறுப்பானவர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தியாவின் முதல் நகராட்சி அமைப்பு 1687ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய் மற்றும் கல்கத்தாவில் நிறுவப்பட்டன. 1882ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என்று அழைக்கப்படும் லார்ட் ரிப்பன், தேர்ந்தெடுக்கப்பட்ட நகர அரசாங்கங்களுக்கான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஜனநாயக நகராட்சி நிர்வாகத்திற்கு அடித்தளத்தை உருவாக்கினார்.
1935ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கச் சட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, அவற்றை மாகாணங்கள் அல்லது மாநிலங்களின் பட்டியல்களின் கீழ் கொண்டு வந்தன.
இந்திய அரசியலமைப்பின் பகுதி IX-A இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அமைப்பு, பங்கு மற்றும் பொறுப்புகளை விவரிக்கிறது. மேலும், நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் நிலப் பயன்பாடு முதல் பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை வரை பல சேவைகளை நிர்வகிப்பதற்கான அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்குகிறது.
1992ஆம் ஆண்டின் 74-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (ஜூன் 1993 முதல் நடைமுறைக்கு வந்தது) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியது. இதன் மூலம் அவை ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் இணைந்து அரசாங்கத்தின் மூன்றாவது அடுக்குகளாக மாறின.
அரசியலமைப்பின் 12-வது அட்டவணை இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்ட 18 பணிகளைக் குறிப்பிடுகிறது. இந்தத் திருத்தம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் தேர்தல்களை நடத்துவதைக் கட்டாயமாக்கியது. இதில் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளூர் தொகுதிகளில் (வார்டுகள்) இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் சடங்கு ரீதியான தலைவராகப் பணியாற்றினாலும், உண்மையான நிர்வாக அதிகாரம் மாநில அரசால் நியமிக்கப்படும் மாநகராட்சி ஆணையரிடமே உள்ளது.
Original Article : What are the constitutional provisions related to the urban local bodies? -Roshni Yadav