பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பம்சங்களை உள்ளடக்கி, அரசு ஊழியர்களுக்காக 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (Tamil Nadu Assured Pension Scheme ( (TAPS)) தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் சிறந்த ஓய்வூதியப் பாதுகாப்பைக் கோரி வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1985-ஆம் ஆண்டு தனது 58-வது வயதில், மாதம் சுமார் ₹800 ஓய்வூதியத்துடன் பணிஓய்வு பெற்ற ஒரு இயற்பியல் பேராசிரியர், தற்போது ₹1.3 லட்சம் ஓய்வூதியம் பெறுகிறார். அதேபோல், 1998-ஆம் ஆண்டு ₹6,000 ஓய்வூதியத்துடன் பணிஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், தற்போது ₹35,000 பெறுகிறார்.
இந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 2003-ஆம் ஆண்டுக்கு முன்னதாக மாநில அரசுப் பணியிலோ அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களிலோ சேர்ந்த அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (Old Pension Scheme (OPS)) வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டமானது, ஊழியர்களின் பங்களிப்பு இல்லாதது (non-contributory) மற்றும் மாநில அரசால் முழுமையாக நிதி வழங்கப்படுவதாகும். ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஓய்வூதியமானது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. மேலும், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே அதே விகிதத்தில் அகவிலைப்படியும் வழங்கப்படுகிறது. சுமார் இரண்டு லட்சம் ஊழியர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் வருகின்றனர்.
2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (Contributory Pension Scheme (CPS)) வருகிறார்கள். இது தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் (National Pension System (NPS)) போன்றது. இத்திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தைப் பங்களிப்பாக வழங்குகின்றனர்; அதற்கு இணையான தொகையை மாநில அரசும் வழங்குகிறது. பணி ஓய்வின் போது, அவர்களுக்குத் திரட்டப்பட்ட மொத்தத் தொகை மட்டுமே வழங்கப்படும். அவர்கள் காப்பீடு சார்ந்த ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்யாவிட்டால், அவர்களுக்கு வழக்கமான ஓய்வூதியமோ, விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அகவிலைப்படியோ அல்லது ஓய்வூதிய மாற்றங்களோ (Pension Revision) கிடைக்காது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழ்நாடு அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இணையாததாலும், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியச் சட்டத்தின்படி (Pension Fund Regulatory and Development Authority Act (PFRDA)) நிதி மேலாளரை நியமிக்காததாலும், மாநில அரசு ஊழியர்களுக்கான வருமானம் திட்டத்தைவிட சுமார் இரண்டு சதவீதம் குறைவாக உள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார். ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2004-ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் இந்த தேசிய ஓய்வூதியத் திட்டம், சந்தை நிலவரத்துடன் தொடர்புடைய வருமானத்தை வழங்கும் ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்; மேலும், பணி ஓய்வின்போது திரட்டப்பட்ட தொகையில் குறைந்தது 40% காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
திமுகவின் வாக்குறுதி.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்துவதாக உறுதியளித்தது.
இருப்பினும், 25 ஆண்டுகளுக்கு முன்பே, ஓய்வூதியப் பொறுப்புகள் (pension liabilities) அரசாங்கத்திற்கு பெரும் சுமையாக மாறி வருவதை அரசு உணர்ந்திருந்தது. முக்கியமாக, ஓய்வூதியத் தொகைகள் மாற்றி அமைக்கப்பட்டதும், மேம்பட்ட சுகாதார வசதிகளால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்ததும் இதற்கு முக்கிய காரணங்களாகும். அப்போதைய நிதி அமைச்சரும், அதிமுக தலைவருமான சி. பொன்னையன் அவர்கள் 2001-ஆம் ஆண்டு, அரசின் ஓய்வூதியப் பொறுப்புகள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30% வளர்ந்து வருவதாகவும், இது நீடிக்க முடியாத ஒன்று என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். கர்நாடக முன்னாள் தலைமைச் செயலாளர் பி. கே. பட்டாச்சார்யா அவர்கள் 2003 அக்டோபரில் ரிசர்வ் வங்கியிடம் (RBI) சமர்ப்பித்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் ஓய்வூதியச் செலவினங்கள்: 1980-90 ஆகிய காலக்கட்டத்தில்: 3.8%, 1990-95 ஆகிய காலக்கட்டத்தில்: 6.6%, 1995-2000 ஆகிய காலக்கட்டத்தில்: 10.8%, 2001 மற்றும் 2002 ஆகிய காலக்கட்டத்தில் சுமார் 16% என உயர்ந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன. மேலும், தற்போதைய திமுக அரசு 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட மாநில நிதிநிலை குறித்த 'வெள்ளை அறிக்கையில்', 2006-07-ஆம் ஆண்டு முதல் 2020-21-ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில், இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வுக்கால பலன்களுக்கான செலவு இரட்டை இலக்க விகிதத்தில் வளர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில் இது ஒற்றை இலக்க விகிதத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று ஆண்டான 2020-21-ஆம் ஆண்டுகளில் மட்டும், ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்ட காரணத்தால் இந்தச் செலவு சற்று குறைந்ததாகக் கூறப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) திரும்புவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும் நிலையில், 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்வதிலும் தமிழக அரசு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொகை சுமார் ₹84,507 கோடியாக உயர்ந்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) முழுமையாக அமல்படுத்தாததற்காக, இந்தியத் தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG))) தமிழக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023–24 நிதியாண்டுக்கான அறிக்கையில், அரசு இந்த நிதியை நீண்டகாலமாக கருவூலப் பத்திரங்கள் (Treasury Bills) மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக திட்டங்களில் (Life Insurance Corporation of India (LIC)) முதலீடு செய்துள்ளதை இந்தியத் தலைமைத் கணக்குத் தணிக்கையாளர் தரப்பு (CAG) சுட்டிக்காட்டியுள்ளது. இவை பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund (GPF)) வட்டியைவிடக் குறைவான லாபத்தையே ஈட்டித் தந்துள்ளன. தற்போது, இந்த நிதி எல்.ஐ.சி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு, பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வட்டி விகிதத்திற்கு இணையாக 7.1% வட்டி விகிதங்களைப் பெற்று வருகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது
இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டங்களைத் தொடங்கினர். பிப்ரவரி மாதம் 2022-ஆம் ஆண்டில் இத்திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக முதலில் ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே சத்தீஸ்கர் மாநிலமும் அறிவித்தது. முக்கியமாக, இந்த இரண்டு மாநிலங்களிலும் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது என்பதும், 2023-ஆம் ஆண்டின் இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல்கள் நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஜூன் 2022 செய்திக் குறிப்பில் ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டது. தற்போது ஓய்வு பெற்றவர்களே பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) முக்கியப் பயனாளிகளாக இருப்பதால், மாநில அரசுகள் இப்போதே இந்தத் திட்டத்திற்கு மாறினால் உடனடியாகப் நிதி நெருக்கடி ஏற்படாது. இருப்பினும், 2004-05 ஆம் ஆண்டிற்குப் பிறகு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (NPS) பணியில் சேர்ந்தவர்கள் 2034-ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறத் தொடங்கும்போது, இதற்கான உண்மையான நிதிச் சுமை வெளிப்படையாகத் தெரியவரும். சுருக்கமாகச் சொன்னால், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது எதிர்காலத் தலைமுறையினரின் செலவில், தற்போதைய தலைமுறையினருக்குப் பயனளிப்பதாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த எச்சரிக்கையையும் மீறி, ஜார்கண்ட் மாநிலம் செப்டம்பர் 2022-ஆம் ஆண்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பஞ்சாபும், 2023-ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசமும் இதைப் பின்பற்றின. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது ஒரு 'பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கை' என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி. சுப்பாராவ் விவரித்தார். இது சமூக பாதுகாப்பு இல்லாத பொதுமக்களின் நலனைப் புறக்கணித்து, அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும் வாதிட்டார்.
இருப்பினும், தென்மாநிலங்கள் இந்தப் பிரச்சனையில் மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டதாகத் தெரிகிறது.
தென் மாநிலங்களின் எதிர்வினை
ஜூன் மாதம் 2023-ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, ஆந்திரப் பிரதேச உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை (Andhra Pradesh Guaranteed Pension Scheme (APGPS)) அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், ஓய்வூதியதாரர்கள் தாங்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இதற்கு அவர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தை பங்களிப்பாக வழங்க வேண்டும். மேலும், மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் அகவிலைப்படியையும் பெற இவர்கள் தகுதியுடையவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 2024-ஆம் ஆண்டில், மத்திய அரசு இதே போன்ற ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme (UPS)) அறிமுகப்படுத்தியது. இது ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின்கீழ், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அவர்களின் கடைசி 12 மாத கால சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க இத்திட்டம் உறுதி அளிக்கிறது.
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஓய்வூதியம் தொடர்பான அரசியல் அழுத்தம் மற்றும் அடுத்த ஓராண்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை திமுக அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், ஜனவரி மாதம் 3-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை" (TAPS) அறிவித்தார். இது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), ஆந்திர மாநிலத்தின் (APGPS) மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றின் கலவையாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசுக்கு ஆரம்பத்தில் மட்டும் ₹13,000 கோடி செலவாகும் என்றும் மேலும், இதற்காக மாநில அரசு ஆண்டுதோறும் சுமார் ₹11,000 கோடி பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
இந்தத் திட்டம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தப் புதிய திட்டத்தின்கீழ், ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது ஊதியத்தில் 10 சதவீதத்தை பங்களிப்பாக வழங்குகின்றனர்; அதற்கு இணையான தொகையை அரசாங்கமும் வழங்குகிறது. இதில் ஓய்வூதிய மறுசீரமைப்பு கிடையாது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாத கால அடிப்படை ஊதியத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், பணியின் கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், ஒரு ஊழியர் குறைந்தது 10 ஆண்டுகள் தகுதியான பணிக்காலத்தை முடித்திருந்தால் மட்டுமே குறைந்தபட்ச உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணிக்காலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் இந்த குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே வீதத்தில் அகவிலைப்படி உயர்வினைப் பெறுவார்கள் என்றும் ஒரு ஓய்வூதியதாரரின் மறைவிற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் அவர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதத்திற்கு இணையான தொகையை மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
₹25 லட்சம் வரையிலான இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை (DCRG) உடன், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வுபெற்ற, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் (CPS) பயனாளிகளுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, ஓய்வூதியச் சுமையானது மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் தற்போதுள்ள 21%–22% என்ற அளவைவிட மிகவும் குறையும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்கான ஆண்டுப் பங்களிப்புகள் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (OPS) ஓய்வுபெறுபவர்களுக்கான கொடுப்பனவுகள் காரணமாக, இந்தத் திட்டம் மாநில அரசின் மீது நிதி அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், அரசு ஊழியர்களில் சில பிரிவினர் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
ஏறக்குறைய 23 லட்சம் தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களில் இதுவரை சுமார் 1.22 லட்சம் பேர் மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் போன்றே ஊழியர்களிடையே வரவேற்பின்றி இருக்கும் நிலையைச் சந்திக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது, சுமார் 6 லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Original Article : What is Tamil Nadu’s new hybrid pension model?