தெருநாய் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, பயத்தையோ கொடுமையையோ அல்ல, பகுத்தறிவையும் கருணையையும் பயன்படுத்துங்கள் -டி ஆர் மேத்தா

இந்தியாவின் "நாய் பிரச்சினை"யின் (dog problem) சோகம் சட்டங்கள் இல்லாதது அல்ல. அவற்றைச் சரியாகச் செயல்படுத்தத் தவறியதே ஆகும். விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (நாய்கள்) விதிகள் (Animal Birth Control (Dogs) Rules) ஏற்கனவே ஒரு தெளிவான, ஆதாரங்களின் அடிப்படையிலான தேசியக் கட்டமைப்பை வழங்குகின்றன: அவை, பிடிப்பது(Capture) - கருத்தடை செய்வது (sterilise) - தடுப்பூசி போடுவது (vaccinate)-விடுவிப்பது (release) ஆகும்.


கடந்த பத்தாண்டுகளில், தெரு நாய்கள் அக்கம் பக்கத்தின் காவலர்களாக இருந்த நிலையிலிருந்து, இரக்கத்திற்கும் குழப்பத்திற்கும் இடையில் சிக்கி, பிரச்சனை சட்டப் போராட்டங்களின் களமாக மாறியுள்ளன. உலகில் உள்ள எந்தவொரு அரசியலமைப்பு நீதிமன்றமாவது நாய்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதற்கு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு விதிவிலக்கு. பல லட்சம் வழக்குகள், அவற்றில் பல மிகவும் தீவிரமானவை. நிலுவையில் இருந்தபோதிலும், நாய்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து சிறப்பு நீதித்துறை கவனத்தைப் பெற்று வருகின்றன.


சமீபத்தில், உச்ச நீதிமன்றம் நாய்கள் தொடர்பான ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சரிபார்க்கப்படாத ஒரு செய்தித்தாள் அறிக்கையின் அடிப்படையில், அது தானாக முன்வந்து இதைச் செய்தது. நீதிமன்றம் எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்காமலேயே செயல்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்பது ஒரு அடிப்படை சட்டத் தேவையாகும். பின்னர் நீதிமன்றம், தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து அடைத்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். மேலும், இதைச் சில மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். ஆனால், இத்தகைய பணியை நடைமுறையில் மேற்கொள்வது சாத்தியமற்றது. அதிர்ஷ்டவசமாக, அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி ஒரு புதிய அமர்வை அமைத்தார். அது தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.


இதில் ஒரு தனி அரசியலமைப்புச் சிக்கலும் உள்ளது. அது அதிகாரப் பிரிவினை தொடர்பானது. இந்தக் கொள்கை அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பின் ஒரு பகுதியாகும். உச்சநீதிமன்றமே இந்தக் கொள்கையை அங்கீகரித்துள்ளது. 1960-ம் ஆண்டு விலங்குகள் மீதான கொடுமையைத் தடுத்தல் சட்டத்தின்கீழ், விலங்கு நல வாரியம் (Animal Welfare Board (AWB)) நாய்கள் உட்பட விலங்குகளின் மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிடும் நிர்வாக அதிகாரம் ஆகும். உச்சநீதிமன்றம் தானாகவே வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்குப் பதிலாக, மனிதத் தேவைகளையும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கடமைகளில் ஒன்றான கருணையையும் நிலைநிறுத்த வேண்டும். இது அனைவருக்கும் கட்டுப்பட்டது இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் ஒருபுறம் மனிதத் தேவைகளைச் சமநிலைப்படுத்தி விலங்கு நல வாரியத்திற்கு (AWB) உத்தரவிடுவதே பொருத்தமான வழியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த நோக்கில், உச்சநீதிமன்றம் விலங்குகள் நல வாரியத்தின் பங்கைத் தானாவே மேற்கொள்வதைத் தவிர்ப்பதைக் கருத்தில் கொள்ளலாம்.


இந்தியாவின் "நாய் பிரச்சினை"யின் (dog problem) சோகம் சட்டங்கள் இல்லாதது அல்ல. அவற்றைச் சரியாகச் செயல்படுத்தத் தவறியதே ஆகும். விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Cruelty to Animals Act) கீழ் முதன்முதலில் அறிவிக்கப்பட்டு, 2023-ல் புதுப்பிக்கப்பட்ட விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (நாய்கள்) விதிகள் (Animal Birth Control (Dogs) Rules), ஒரு தெளிவான, ஆதார அடிப்படையிலான தேசியக் கட்டமைப்பை வழங்குகின்றன: அவை, பிடிப்பது (Capture)- கருத்தடை செய்வது (sterilise) - தடுப்பூசி போடுவது (vaccinate)-விடுவிப்பது (release) ஆகும். நாய் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வெறிநாய்க்கடியைத் தடுக்கவும் கருத்தடை மற்றும் தடுப்பூசி மட்டுமே நீடித்த வழிகள் என்ற உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக விலங்கு சுகாதார அமைப்பு (World Organisation for Animal Health (WOAH)) ஆகியவற்றின் அறிவியல் ஒருமித்த கருத்தை இந்த விதிகள் உள்ளடக்கியுள்ளன. இதற்கு மாறாக, நாய்களை அகற்றுவது அல்லது கொன்றொழிப்பது, சூழலியல் ரீதியான “வெற்றிடப் பகுதிகளை” (vacuum zones) உருவாக்குகிறது. இது சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கருத்தடை செய்யப்படாத நாய்களை உள்ளே வரவழைத்து, பயம் மற்றும் கோபத்தின் சுழற்சியை மீண்டும் தொடங்குகிறது.


உலகில் எந்த நாடும் தெருநாய்கள் பிரச்சனையை அடைத்து வைப்பதன் மூலம் தீர்க்கவில்லை. சில நாடுகள் அறிவியல், ஒத்துழைப்பு, மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீதான மரியாதை ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துள்ளன. பிரான்ஸ் அத்தகைய ஒரு முன்மாதிரியை வழங்குகிறது. 1980-களில், பல பிரெஞ்சு நகரங்கள் கட்டுக்கடங்காத நாய்களின் எண்ணிக்கையால் சிரமப்பட்டன. அரசு பல நடவடிக்கைகள் மூலம் கட்டாயப் பதிவு, கருத்தடைக்கான ஊக்கத்தொகைகள், செல்லப்பிராணிகளைக் கைவிடுவதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல் மற்றும் வலுவான கழிவு அமைப்புகளையும் மேம்படுத்தியது. இவை அனைத்தும் நீதிமன்றங்களால் அல்ல, நகராட்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்டன. பொதுமக்களுக்குக் கல்வி அளிக்கும் பிரச்சாரங்கள், இப்பிரச்சனையைத் தொந்தரவு என்ற கண்ணோட்டத்தில் இருந்து பொறுப்பு என்ற கண்ணோட்டத்திற்கு மாற்றின. ஒரு பத்தாண்டு காலத்திற்குள், பெருமளவில் நாய்களை அகற்றாமலோ அல்லது வதைக்காமலோ தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.


நெதர்லாந்து இதைவிட ஒரு படி மேலே சென்று, சாத்தியமற்றது என்று பலர் நினைத்ததைச் சாதித்து காட்டியது. ஒரு நாயைக் கூடக் கொல்லாமல், தெருநாய்களே இல்லாத உலகின் முதல் நாடாக நெதர்லாந்து மாறியது. எப்படி? தேசிய அளவில் செயல்படுத்தப்பட்ட பிடித்தல் - கருத்தடை - தடுப்பூசி - விடுவித்தல் (Capture-sterilise-vaccinate-release (CSVR)) திட்டத்தைச் செயல்படுத்தியது. இது இந்தியா ஏற்கனவே சட்டத்தில் அங்கீகரித்துள்ள அதே மாதிரிதான். டச்சு அரசாங்கம் போதுமான நிதியுதவியுடன் கருத்தடைத் திட்டங்களுக்கு ஆதரவளித்தது. இது பொதுக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. செல்லப்பிராணிகளைக் கைவிடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதித்தது. அதே நேரத்தில் தத்தெடுத்தல், அடையாளம் காணுதல் மற்றும் செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் முதலீடு செய்தது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது நீதித்துறை அல்ல, மாறாக சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்பட்ட நகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள்தான். இந்தியாவிலும், பல நகரங்கள் ABC திட்டத்தைப் பயன்படுத்தி, நாய் இனப்பெருக்கத்தை நிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் எண்ணிக்கையைக் குறைக்கவும் வழிவகை செய்துள்ளன. இந்த எடுத்துக்காட்டுகள், ஒரு மாறுபட்ட அணுகுமுறையை வாதிடுபவர்கள் பகுத்தறிவு காரணங்களுக்காக அல்லாமல் உணர்ச்சிபூர்வமான காரணங்களுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள் என்ற எண்ணத்தைப் போக்கும். உண்மையில், இந்தத் தர்க்கம் வெற்றிகரமான அறிவியல் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டது.


இப்போது, ​​விலங்கு நலத்துறையில் நான் ஓரளவு பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், எனக்குத் தெரிந்த கள யதார்த்தங்களைப் பற்றிப் பார்ப்போம். சுமார் 30 ஆண்டுகளாக, நான் ஜோத்பூர் நகராட்சியால் நடத்தப்படும் ஒரு நாய்கள் காப்பகத்துடன் தொடர்பில் இருந்தேன். அங்கு பெரும்பாலான நாட்களில் உணவு வழங்கப்படாததும், மருத்துவ வசதிகள் இல்லாததாலும் பெரும்பாலான நாய்கள் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இறந்துவிட்டன. அந்த நாய்களுக்கு, அந்தக் காப்பகம் ஒரு வாழும் நரகமாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு நகராட்சி பட்ஜெட் பயன்படுத்தப்படுவது குறித்து சந்தேகங்கள் இருந்தன. மேலும், அனுமதிக்கப்பட்ட நகராட்சி ஊழியர்கள் யாரும் அங்கு காணப்படவில்லை. ஒரு சில நண்பர்கள் குழுவினர் ஓரளவு ஆதரவை வழங்கினர். உண்மை என்னவென்றால், தற்போதைய அல்லது எதிர்காலத்தில் உள்ள பெரும்பாலான நாய்கள் காப்பகங்களிலும் இதே பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, பிடிக்கப்பட்ட நாய்களைக் காப்பாற்றுவதற்கான இடங்கள்தான் நாய்கள் காப்பகங்கள் என்ற எண்ணம் உண்மையில் சிறிதும் உண்மையல்ல. அவை நாய்களுக்கு மரண தண்டனை போன்றவையாகும்.


கடிக்கும் நாய்கள் பொதுவாகப் பசியுடன் இருப்பவை, அவற்றின் பாலியல் செயல்பாடுக்கு இடையூறு செய்யப்பட்டாலும் அவை கடிக்கக்கூடும் அல்லது கற்களால் அடிக்கப்பட்டவையாகும். அவற்றுக்கு உணவளித்து, கருத்தடை செய்தால், அவை ஆக்ரோஷமாக இல்லாதது மட்டுமல்லாமல், பெரும்பாலும் தூங்கிக்கொண்டே இருக்கும். அவற்றில் மிகச் சிறிய சதவீத நாய்கள் மட்டுமே கொடிய குணம் கொண்டவை. நிச்சயமாக, அவற்றை பிடித்துச் செல்லலாம் அல்லது வேறு வழிகளில் கையாளலாம். குடிசைப் பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் வாழும் நாய்களை ஏழை மற்றும் கீழ்-நடுத்தர வர்க்க மக்கள் விரும்பி உணவளிக்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை. பல குடியிருப்புப் பகுதிகளில், நாய்கள் திருடர்களிடமிருந்து ஊதியம் பெறாத காவலர்களாக இருக்கின்றன. இந்தப் பிரச்சனை அடிப்படையில் வசதி படைத்தவர்களிடம்தான் உள்ளது. பள்ளிகளில், குழந்தைகள் தங்கள் சிற்றுண்டியின் ஒரு பகுதியை நாய்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது கருணையை வளர்த்துக் கொள்ளும் ஒரு வழியாகும். உளவியலாளர்கள் சில சமயங்களில் சிகிச்சைக்காக நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன். அவற்றை பகுத்தறிவுடனும் மனிதாபிமானத்துடனும் கையாள வேண்டும். நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வுகள் மூலம் அவற்றை அணுகக்கூடாது. அச்சம் அல்லது பய உணர்வுடனும் அவற்றை அணுகக்கூடாது.


கட்டுரையாளர் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் ஆவார்.

 Original Article : To resolve the street dogs issue, use reason and compassion, not fear and cruel. -D R Mehta

Share: