முக்கிய அம்சங்கள்:
— பிரதமர் மோடி அவர்கள், தலைநகரில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், "விளக்கு மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள்" என்ற தலைப்பில் நடந்த, புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் மாபெரும் சர்வதேசக் கண்காட்சியில் கலந்துகொண்டார். பிரதமர் அங்கு பேசும்போது, இந்த நிகழ்வு 125 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பாரம்பரியமும், மரபும் திரும்பி வந்ததைக் குறிக்கிறது என்று கூறினார்.
— புத்தரின் இந்தப் பகிரப்பட்ட பாரம்பரியம், இந்தியா வெறும் அரசியல், இராஜதந்திரம், பொருளாதாரம் ஆகியவற்றால் மட்டும் இணைக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரம் என்றும் மாறாக, ஆழ்ந்த உணர்ச்சிகள், நம்பிக்கை மற்றும் ஆன்மீகப் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். புனித பிப்ரஹ்வா (Piprahwa relics) (புத்தரின் உடல் எச்சங்களின் ஒரு பகுதி) நினைவுச்சின்னங்கள் பௌத்த மத மக்கள் தொகை அதிகம் உள்ள வியட்நாம், தாய்லாந்து, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்றதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
— வியட்நாம், தாய்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும், ஆன்மீக எழுச்சியும் பக்தியும் அலை அலையாகப் பெருகின. அங்கே மக்கள் பெருந்திரளாக வந்து மரியாதை செலுத்தினர் என்று மோடி கூறினார். இந்தியாவில் புனிதச் சின்னங்கள் இருப்பது "மிகுந்த உத்வேகம் அளிக்கிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், புத்தரின் ஆசீர்வாதத்துடன் 2026-ஆம் ஆண்டு உலகிற்கு ஒரு புதிய அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
— இந்த புனிதச் சின்னங்கள் 125 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி உள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த மே மாதம் ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில் அவை விற்கப்படாமல் தடுக்கும் பொருட்டு, அரசாங்கமும் கோத்ரேஜ் குழுமமும் இணைந்து தலையிட்டதன் விளைவாகவே இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
— 1898 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் (Piprahwa relics), ஆரம்பகால பௌத்தத்தின் தொல்லியல் ஆய்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இவை புத்தருடன் நேரடியாகத் தொடர்புடைய மிகப் பழமையான மற்றும் வரலாற்றுரீதியாக மிகவும் முக்கியமான நினைவுச்சின்னங்களாகக் கருதப்படுகின்றது. புத்தர் துறவறம் மேற்கொள்வதற்கு முன் தனது ஆரம்ப வாழ்க்கையைக் கழித்த இடமாக பரவலாக அடையாளம் காணப்பட்ட பண்டைய கபிலவஸ்துவுடனேயே (Kapilavastu) பிப்ரஹ்வா தளத்தகுதியான தொல்லியல் சான்றுகள் தொடர்புபடுத்துகின்றன.
— பௌத்த பாரம்பரியம் அடுத்த தலைமுறையினரை இயல்பான முறையில் சென்றடைவதை உறுதிசெய்ய தனது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் கூறினார். உலகளாவிய பௌத்த உச்சி மாநாடு (Global Buddhist Summit), மற்றும் வெசாக் (Vesak), ஆஷாட பூர்ணிமா (Ashadha Purnima) போன்ற சர்வதேச நிகழ்வுகளும் இந்தச் சிந்தனையின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
— புத்தர் தனது போதனைகளை வழங்கிய பாலி மொழியை (Pali) மக்கள் எளிதில் அணுகுவதற்கு வசதியாக, தனது அரசாங்கம் அந்த மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து (Classical language status) வழங்கியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
உங்களுக்குத் தெரியுமா?
— இன்றைய உலகில் பௌத்தம் ஒரு முக்கியமான உலக மதமாக உள்ளது, அதன் போதனைகள் மூலம் பலரை கவர்ந்திழுக்கிறது. பொது ஆண்டுக்கு (பொ.ஆ.மு) முன் 6-ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றிய பௌத்தம், மற்ற ஸ்ரமண (Śramanic) பிரிவுகளுடன் சேர்ந்து, பிராமண பாரம்பரியத்தின் சடங்கு மற்றும் படிநிலை அம்சங்கள் மீதான வளர்ந்துவரும் அதிருப்தியின் விளைவாக உருவானதாகக் கூறப்படுகிறது.
— பௌத்த மதம், சித்தார்த்தராகப் பிறந்த புத்தரின் மூலம் நிறுவப்பட்டது. இவர் கபிலவஸ்துவில் (இன்றைய நேபாளத்தில் அமைந்துள்ளது) இருந்த சாக்ய குலத் தலைவரான சுத்தோதன மன்னரின் மகனாவார். பல்வேறு குறிப்புகளின்படி, மாயாதேவி தன் தாய் வீட்டிற்குச் செல்லும் வழியில் லும்பினியில் உள்ள ஒரு தோட்டத்தில் சித்தார்த்தரைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.
— பௌத்த மதம் மூன்று ரத்தினங்களை (திரிரத்னா) விடுதலைக்கான வழிமுறையாகக் குறிப்பிடுகிறது. அவை:
அறிவு (பிரஜ்ஞா): உண்மைகளை அறிதல்.
நடத்தை (சீலம்): நல்லொழுக்கத்துடன் வாழ்தல்.
தியானம் (சமாதி): ஆழ்ந்த மன ஒருமைப்பாடு ஆகியன ஆகும்
— உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையையொட்டிய பிப்ரஹ்வா (Piprahwa) என்னும் இடத்தில், ஒரு பழங்கால பௌத்த ஸ்தூபியை அகழ்வாராய்ச்சி செய்தபோது, பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் (Piprahwa relics) கண்டுபிடிக்கப்பட்டன. இவை பௌத்த சமூகத்திற்கு மத மற்றும் கலாச்சார ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
Original Article : What is India’s Antiquities and Art Treasures Act, 1972? -Roshni Yadav