இந்திய கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

  முக்கிய அம்சங்கள்:


இந்தியா போன்ற நாடுகளில், வேளாண்மை செய்வது மிகவும் சவாலானதாக இருக்கிறது. ஏனெனில், 86 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் 2 ஹெக்டேர் (5 ஏக்கர்) அல்லது அதற்கும் குறைவான மிகச் சிறிய நிலப்பரப்புகளையே வைத்துள்ளனர். இந்த பணிகளை மேற்கொண்டும் வரும் உழவர்களுக்கு, குறைந்த உழைப்பில் அதிக விளைச்சலைத் தரும் எளிய வேளாண் முறைகள்அதிக பலனைத்தரகக்கூடும். நெல் சாகுபடியில் பயன்படுத்தப்படும் அத்தகைய ஒரு முறைதான் 'மாற்று ஈரப்படுத்துதல் மற்றும் உலர்த்துதல்' (Alternate Wetting and Drying (AWD)) என்பதாகும்.


நீரால் நிரப்பப்பட்ட நெல் வயல்கள் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆனால், அந்த நீர் மண்ணில் ஆக்ஸிஜன் இல்லாத நிலையையும் உருவாக்குகிறது. ஆக்ஸிஜன் இல்லாத இந்த மண், சில நுண்ணுயிரிகள் தாவரப் பொருட்களைச் சிதைக்க அனுமதிக்கிறது. தாவரப் பொருட்களிலிருந்து வரும் கார்பன், நீரிலிருந்து வரும் ஹைட்ரஜனுடன் இணைந்து, மீத்தேன் வாயுவை உருவாக்குகிறது.


மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயுவாகும்.  100 ஆண்டுகளில் புவி வெப்பமடைதலில் இதன் தாக்கம் கார்பன்-டை-ஆக்சைடை (CO2) விட 28 மடங்கு அதிகமாக உள்ளது.


'மாற்று ஈரப்படுத்துதல் மற்றும் உலர்த்துதல்' (Alternate Wetting and Drying (AWD)) முறையில், நெல் வயல்கள் எல்லா நேரமும் நீரால் நிரம்பி வைக்கப்பட்டிருப்பதில்லை. மாறாக, அவை மீண்டும் நீரால் நிரப்பப்படுவதற்கு முன்பு, ஒரு குறுகிய காலத்திற்கு உலர விடப்படுகின்றன. மீத்தேன் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகளுக்கு ஏற்ற, நீர் தேங்கிய காற்றில்லா சூழல் உருவாகாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.


விவசாயிகள் தங்கள் வயல்களை முதல் 20 நாட்களுக்கு நீரால் நிரப்பி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் பிறகு, அடுத்த 45 நாட்களில், அவர்கள் வயலை இரண்டு முறை காய விட வேண்டும். ஒவ்வொரு முறை நிலங்களை காயவிடும் காலம் ஆறு நாட்கள் நீடிக்கும். அப்போது, ​​மீண்டும் நீர் பாய்ச்சுவதற்கு முன்பு, நீர் மட்டம் மண் மேற்பரப்பிலிருந்து 10–15 சென்டிமீட்டர் கீழே குறையும்  என்று மிட்டி லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் தேவதூத் தலால் கூறுகிறார்.


பெங்களூரைச் சேர்ந்த ஒரு காலநிலை தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனம், 2024ஆம் ஆண்டு காரிஃப் (பருவமழை) சாகுபடிப் பருவத்தில், மாற்று ஈரப்பதம் மற்றும் உலர்த்தல் (AWD) முறையினால் ஏற்படும் நீர் சேமிப்பு, மீத்தேன் உமிழ்வு குறைப்பு மற்றும் தானிய விளைச்சல் ஆகியவற்றை அளவிடுவதற்காக ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் உள்ள 30 உழவர்களின் வயல்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 15 வயல்களில் மாற்று ஈரப்பதம் மற்றும் உலர்த்தல் முறை பயன்படுத்தப்பட்டு நெல் பயிரிடப்பட்டது மற்ற 15 வயல்களில் வயல்களை எல்லா நேரமும் நீரால் நிரப்பி வைக்கும் பாரம்பரிய முறை பயன்படுத்தப்பட்டது.


மிட்டி லேப்ஸ் ஆய்வில், தொடர்ச்சியான நீர்ப்பாசனத்தில் ஒரு ஏக்கருக்கு 4.96 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்ட நிலையில், மாற்று ஈரப்பதம் மற்றும் உலர்த்தல் (AWD) முறையைப் பயன்படுத்திய நெல் வயல்களில் ஒரு ஏக்கருக்கு 3.14 மில்லியன் லிட்டர் என மிகக் குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மாற்று ஈரப்பதம் மற்றும் உலர்த்தல் (AWD) வேளாண்  முறையில், வயல்கள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 3.5 டன் CO2-க்கு சமமான மீத்தேன் வாயு அல்லது ஒரு ஏக்கருக்கு 1.4 டன் வாயுவை வெளியிடுகின்றன. இது, அடிப்படை முறையான தொடர்ச்சியான நீர் பாய்ச்சும் முறையை விட மிகக் குறைவானதாகும். அந்த முறையில் ஒரு ஹெக்டேருக்கு 6 டன் (அல்லது ஒரு ஏக்கருக்கு 2.4 டன்) மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.


முக்கியமாக, ஒரு உழவரின் கண்ணோட்டத்தில் பார்த்தால், மாற்று ஈரப்பதம் மற்றும் உலர்த்தல் (AWD)  மற்றும் CF ஆகிய இரண்டு முறைகளின்கீழ் சராசரி தானிய மகசூல் ஒரே மாதிரியாக, ஏக்கருக்கு  2.5 டன்களாக இருந்தது.


2023-24-ஆம் ஆண்டில், மிட்டி லேப்ஸ் நிறுவனம் தெலங்கானாவைச் சேர்ந்த 600 உழவர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 250 உழவர்கள் என மொத்தம் 850 விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம், அவர்கள் தங்கள் வயல்களில் மாற்று நீர் பாய்ச்சல் முறையை மேற்கொள்வதுடன், நிலத்தடி நீர் மட்டத்தின் ஆழத்தைக் கண்காணிக்க 30 சென்டிமீட்டர் நீளமுள்ள துளையிடப்பட்ட குழாய்களையும், மீத்தேன் உமிழ்வை அளவிடுவதற்காக வாயு மாதிரிகளைச் சேகரிக்க மூடிய அக்ரிலிக் அறைகளையும் நிறுவினர்.

தனிப்பட்ட விவசாயிகளின் வயல்களில் அறைகளை அமைத்து, சேகரிக்கப்பட்ட மாதிரிகளைச் சோதனைக் குழாய்களில் வைத்து, அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு வாயு மாதிரிகளைச் சேகரிப்பதற்காக அனுப்புவதன் மூலம், நேரடி அளவீட்டின் அடிப்படையில் மீத்தேன் உமிழ்வுத் தரவுகளை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். இத்தகைய உண்மையான, சரிபார்க்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கான குறைப்புகளை (CO2 சமமான அளவில்) உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்கான கார்பன் வரவுகளாகப் பயன்படுத்தலாம் என்று தலால் விளக்குகிறார்.


தரவு மையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் அதிக ஆற்றலையும் நீரையும் பயன்படுத்தும் பிற தொழில்கள் போன்ற பெரிய நிறுவனங்கள் கார்பன் வரவுகளை வாங்குகின்றன. இது அவர்களின் சொந்த உமிழ்வுகளைச் சமநிலைப்படுத்தவும், 'நிகர பூஜ்ஜிய' (net zero-carbon) கார்பன் இலக்குகளை நோக்கிச் செயல்படவும் அவர்களுக்கு உதவுகிறது.


பேயர், ஷெல் எனர்ஜி இந்தியா மற்றும் ஜென்ஜீரோ ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டமைப்பான 'The Good Rice Alliance', வழக்கமான நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் நடவு செய்யும் படிகளைத் தவிர்த்து, மாற்று ஈரப்பதம் மற்றும் உலர்த்தல் (AWD) மற்றும் நேரடி விதைப்பு முறைகளைப் பயன்படுத்தி நெல் பயிரிடுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.


இந்த கூட்டணி, 13 மாநிலங்களில் 12,000-க்கும் மேற்பட்ட உழவர்களை  இணைத்துள்ளதாகவும், 35,000 ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளதாகவும், ஆண்டுக்கு 120,000 டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான மீத்தேன் உமிழ்வைக் குறைத்துள்ளதாகவும் கூறுகிறது.


இது ஒரு புதிய வாய்ப்புகள் உருவாகி வரும் துறையாகும். மேலும், இந்த பயிர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா இன்று உலகின் முதல் நாடக இருந்து வருகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


2023-ல் தொடங்கப்பட்ட கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)), கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதையும், அதிக ஆற்றல் தேவைப்படும் தொழில்களில் உமிழ்வுகளைக் குறைப்பதை எளிதாக்குவதையும், 2015ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் (Paris Climate Agreement) கீழ் இந்தியாவின் பருவநிலை உறுதிப்பாடுகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


— இந்தத் திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. அதற்காக, 2023 கார்பன் வரவு வர்த்தகத் திட்டத்திற்கான (CCTS) ஒரு இணைப்பு வழிமுறையை ஏற்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change) ஏப்ரல் 16 அன்று, 2025ஆம் ஆண்டிற்கான பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வுச் செறிவுக் குறியீடு (Greenhouse Gases Emissions Intensity (GEI)) இலக்கு விதிகள் குறித்த வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


— கடந்த ஆண்டு டிசம்பரில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, ​​கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகிறது என்று தெரிவித்தது. ஒரு இணைப்பு வழிமுறை மற்றும் ஒரு ஈடுசெய் வழிமுறை போன்றவையாகும். இந்த அமைப்பின்கீழ், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தேவையான இலக்கை அடையும் நிறுவனங்கள் கார்பன் வரவு சான்றிதழ்களைப் பெறலாம்.


— ஈடுசெய் வழிமுறையின் (offset mechanism) கீழ், பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்தப்படாத நிறுவனங்கள்கூட, அந்த வாயுக்களைக் குறைக்கும், அகற்றும் அல்லது தவிர்ப்பதற்கான திட்டங்களைப் பதிவுசெய்து, கார்பன் வரவு சான்றிதழ்களைப் பெற முடியும்.

Original Article : What is the Indian Carbon Credit Trading Scheme? -Khushboo Kumari

Share: