2026-27 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கை, வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைப்பதே ஆகும். குறிப்பாக, கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் நிதித்துறைக் கொள்கை எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பது, அங்கிருக்கும் நிதி விதிகளின் தன்மையைப் பொறுத்தே அமையும். தற்போது இந்திய ஒன்றிய அரசு, 'ஆரோக்கியமான நிதி மேலாண்மை' (Sound finance rules) என்று அழைக்கப்படும் விதிகளைப் பின்பற்றுகிறது. கடன் வாங்குவதை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். 2003-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை' (Fiscal Responsibility and Budget Management (FRBM)) சட்டத்திற்குப் பிறகு, இந்தியா பெரும்பாலும் இந்த விதிகளையே கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும், கடந்தஆண்டில் இதில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதலாவதாக, நிதிப் பற்றாக்குறைக்கும் (Fiscal Deficit) மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (Gross Domestic Product (GDP)) இடையிலான விகிதத்தில் அதிக கவனம் செலுத்திய நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை (FRBM) சட்டத்தைப் போலல்லாமல், இந்தப் புதிய நிதிக் கொள்கையானது கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (Debt-to-GDP) விகிதத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கிறது. இரண்டாவதாக, இந்தப் புதிய கொள்கை கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 50 சதவீதமாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை 2031-ஆம் ஆண்டிற்குள் அடைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை (FRBM) சட்டத்தின்கீழ் பரிந்துரைக்கப்பட்ட 40 சதவீத வரம்பைவிடச் சற்று அதிகமான கடன் அளவை அனுமதிக்கிறது.
இந்த மாற்றங்கள் நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இரண்டு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தற்போதைய கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Debt-to-GDP ratio) இலக்கை விட அதிகமாக உள்ளதால், அதைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, முதன்மைப் பற்றாக்குறையை 2026 நிதியாண்டில் உள்ள 0.8%-லிருந்து 2027 நிதியாண்டில் 0.7%-ஆகக் குறைக்கவும், அதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையை (Fiscal deficit) 4.4%-லிருந்து 4.3%-ஆகக் குறைக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கை, 2022-ஆம் நிதியாண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் அதே அணுகுமுறையைப் போன்றது என்கின்றனர்.
இரண்டாவதாக, புதிய 'கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி' (Debt–GDP) இலக்கானது, முந்தைய நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை (FRBM) சட்டத்தைவிட அரசாங்கத்திற்கு நிதி மேலாண்மையில் கூடுதல் சுதந்திரத்தை (Fiscal space) வழங்குகிறது. 2027- ஆம் நிதியாண்டில் 'முதன்மைப் பற்றாக்குறை' மற்றும் 'நிதிப் பற்றாக்குறை' ஆகிய இரண்டும் குறையும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் குறைப்பின் அளவு 2022-ஆம் நிதியாண்டிலிருந்து காணப்பட்ட வேகத்தைவிடக் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நிதி இலக்கை அடைதல்
அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமானால், அரசாங்கம் தனது கடன் அல்லாத வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைக் குறைக்க வேண்டும். 2026-27 நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கடன் அல்லாத வருமானத்தின் பங்கு 9.5%-லிருந்து (2025-26) 9.3%-ஆகக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. மறைமுக வரிகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) வசூல் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்; இவை இரண்டும் முந்தைய ஆண்டைவிட 0.3 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடன் இல்லா வருவாய் (Non-debt receipts) குறைவாக இருந்தபோதிலும், 2026-27 நிதியாண்டில் (FY27) ஒட்டுமொத்த அரசுச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அரசுச் செலவினத்தின் பங்கு, சென்ற நிதியாண்டில் இருந்த 13.9%-லிருந்து 13.6%-ஆகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் உட்கட்டமைப்பு போன்ற மூலதனச் செலவுகள் மாற்றமின்றி 3.1%-ஆகவே தொடர்கிறது. ஆனால், அன்றாட நிர்வாகச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதிக லாபமும் வளர்ச்சியும் தரக்கூடிய மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் கடந்த கால நடவடிக்கைகளையே இதுவும் பிரதிபலிக்கிறது.
மொத்தச் செலவினங்களைக் குறைத்ததன் சுமை, முக்கியமாக மேம்பாட்டுச் செலவினங்களின் (Development Expenditure) மீது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் சமூக நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சேவைகளுக்கான செலவுகளும் அடங்கும். 2025-26 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6.1% ஆக இருந்த மேம்பாட்டுச் செலவினம், 2026-27 நிதியாண்டில் 5.7%-ஆகக் குறைந்துள்ளதாக நிதிநிலைத் திட்ட மதிப்பீடு (Budget Estimates (BE)) காட்டுகிறது. இந்தக் குறைப்புக்கு முக்கியக் காரணம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கான ஒதுக்கீடு குறைந்ததே ஆகும். இத்துறைகளுக்கான பங்கு 2025-26-ல் 1.5%-லிருந்து 2026-27–ல் 1.2%-ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான வருவாய் செலவினங்களில் செய்யப்பட்ட பெரும் குறைப்பே, கிராமப்புற வளர்ச்சி நிதி குறைய முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் மறைமுக வரிக் குறைப்பால் ஏற்பட்ட சாதகமான தேவைகள் (Demand), விவசாயம் மற்றும் கிராமப்புறங்களுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் முழுமையாக ஈடுசெய்யப்பட்டுவிட்டன.
சமீபத்திய நிதிசார் விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துவது, குறைந்தது இரண்டு முக்கியமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இரண்டு சிக்கல்கள்
முதலாவதாக, பலவீனமான உலகப் பொருளாதாரச் சூழலில் முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து கவலை எழுந்துள்ளது. உலகளாவிய தேவை மற்றும் ஏற்றுமதி குறைவாக உள்ளதால், நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. தற்போதைய நிதிக்கொள்கை, பெருநிறுவன முதலீடுகளைத் ஈர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை என்கின்றனர்.
இரண்டாவதாக, இந்தியாவில் வளர்ச்சியின் பலன்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதில் சிக்கல் உள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான அரசின் நடவடிக்கைகள், பெரும்பாலும் விவசாயம் மற்றும் வளர்ச்சி சார்ந்த செலவினங்களையே பாதித்துள்ளன. ஆனால், பெருநிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வரி வருவாய், கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய அளவிலேயே தற்போதும் நீடிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், அரசாங்கம் தனது கடன் சார்ந்த இலக்குகளை அடைவதில் காட்டும் கவனத்தை, இந்த இரண்டு முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.