இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் 2.0 (India Semiconductor Mission (ISM) 2.0), அரசு இனி சிப் தயாரிப்பு தொழிற்சாலைகளைத் தாண்டி மற்ற துறைகளிலும் கவனம் செலுத்த வழிவகை செய்கிறது. அதாவது, குறைமின்கடத்திகளின் உற்பத்திக்குத் தேவையான கருவிகள், மூலப்பொருட்கள், வேதிப்பொருட்கள், வடிவமைப்பு கருவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மற்றும் விநியோகச் சங்கிலியின் உறுதித்தன்மை போன்ற விரிவான தளங்களில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவின் குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தித் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் 2.0' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த இரண்டாம் கட்டத்தின் நோக்கம், குறைமின்கடத்தி உற்பத்திக்குத் தேவையான கருவிகள் மற்றும் மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்தியாவின் சொந்த அறிவுசார் சொத்துரிமையை உருவாக்குவது மற்றும் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்துவது ஆகும். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதற்காக, தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களை அமைப்பதிலும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த முதன்மையான திட்டத்தின் முதல் கட்டம், சுமார் 10 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது. இது முக்கியமாக குறைமின்கடத்தி உற்பத்தி, சிப் தொகுப்பு மற்றும் சோதனை ஆலைகளை அமைப்பதற்கு ஆதரவளித்தது. இந்நிலையில், 2024-ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, அரசு இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி 2.0 (ISM 2.0) திட்டத்தை இறுதி செய்துள்ளது. இதன் மொத்த நிதி ஒதுக்கீட்டுத் தொகையானது சுமார் 15 பில்லியன் டாலர் ஆகும். இம்முறை சிப் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வாயுக்களுக்கு நிதி உதவி அளிப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று நிதி அமைச்சர் இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டத்திற்கான 2.0 (ISM 2.0) முழுமையான நிதிஒதுக்கீட்டு விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், 2026-27-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக மத்திய நிதி அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு ₹1,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுகையில், 'இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் 1.0 (ISM 1.0) இந்தியாவின் குறைமின்கடத்தி திறன்களை விரிவுபடுத்தியது. அதன் தொடர்ச்சியாக, இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் (ISM) 2.0 திட்டமானது, குறைக்கடத்திகள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும்; முழுமையான இந்திய அறிவுசார் சொத்துக்களை வடிவமைக்கும்; விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும், தொழில்நுட்பம் மற்றும் திறமையான தொழிலாளர்களை உருவாக்க, தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார்.
இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் (ISM) 2.0 ஏன் தேவை?
இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டத்தின் (ISM) முதல் கட்டத்தில், சிப்களை தயாரிப்பதற்கான அடிப்படை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. இதில் டாடா குழுமத்தின் ஒரு சிப் தயாரிப்பு ஆலை மைக்ரான் டெக்னாலஜி (Micron Technology), டாடா (Tatas), சிஜி பவர் (CG Power), கேய்ன்ஸ் செமிகான் (Kaynes Semicon) போன்ற நிறுவனங்களின் சிப் தொகுப்பு மற்றும் சோதனை ஆலைகளும் அடங்கும். அதே வேளையில், ஒட்டுமொத்த குறைமின்கடத்தி சூழலமைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்த அரசாங்கம், சிப் பேக்கேஜிங் (Packaging) பணிகளுக்காக தற்போது வழங்கப்படும் 50% மானியத்தை குறைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி 2.0 திட்டமானது, வெறும் சிப் உற்பத்தி என்பதோடு அரசாங்கத்தின் கவனத்தை நிறுத்திக்கொள்ளாமல், குறைமின்கடத்தி உபகரணங்கள், மூலப்பொருட்கள், வேதிப்பொருட்கள், வடிவமைப்பு கருவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை என அனைத்து விரிவான பகுதிகளுக்கும் விரிவுபடுத்துகிறது.
இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் (ISM 2.0) குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு, இத்துறையில் இந்தியாவின் வளர்ந்துவரும் லட்சியங்களை வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை வெறும் சிப் தயாரிப்பு என்ற நிலையிலிருந்து மாற்றி, உபகரணங்கள், மூலப்பொருட்கள், இந்திய அறிவுசார் சொத்துரிமை மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை உள்ளிட்ட ஒட்டுமொத்த மதிப்புத் தொடர் உத்தியை நோக்கி நகர்த்துகிறது. உலகளாவிய குறைமின்கடத்தி உற்பத்தி சந்தையில் இந்தியா ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க இது மிக அவசியமமாகப் பாரக்கப்படுகிறது. இனி சிப்களைத் தயாரிப்பது மட்டுமே முக்கியமல்ல என்றும் வடிவமைப்பு, கருவிகள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்குத் தேவையான ஆரம்பகட்ட உள்ளீடுகள் ஆகியவற்றில் திறன்களை வளர்ப்பதே முதன்மை நோக்கமாகாக் கருதப்படுகிறது. இவைதான் நீண்டகாலப் போட்டித்தன்மையையும் ராஜதந்திர ரீதியிலான தன்னாட்சி சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் என்று இந்திய மின்னணு மற்றும் குறைமின்கடத்தி சங்கத்தின் (India Electronics and Semiconductor Association (IESA)) தலைவர் அசோக் சந்தக் தெரிவித்துள்ளார்.
இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டம் 1.0: இதுவரை கடந்து வந்த பாதை
கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அமைச்சரவை 'இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டத்தின்கீழ்' (India Semiconductor Mission), ₹4,594 கோடி மதிப்பிலான நான்கு புதிய குறைமின்கடத்தி சிப் தொகுப்பு மற்றும் சோதனை மையங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதில் இரண்டு தொழிற்சாலைகள் ஒடிசாவிலும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா ஒன்றும் அமையவுள்ளன. இதன் மூலம், சிப் தயாரிப்பு, சிப் தொகுப்பு மற்றும் சோதனை மையங்கள் என மொத்தம் 10 சிப் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு அரசு தற்போது நிதி உதவி வழங்கி வருகிறது.
இதற்கு முன்னதாக, இந்திய குறைமின்கடத்தி உற்பத்தி திட்டத்தின்கீழ் (India Semiconductor Mission) ரூ.76,000 கோடி மதிப்பீட்டில் ஆறு சிப் உற்பத்தி ஆலைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் $11 பில்லியன் மதிப்பிலான Tata - (Powerchip Semiconductor Manufacturing Corporation (PSMC)) தொழிற்சாலை, மற்றும் மைக்ரான் டெக்னாலஜி (Micron Technology), டாடா (Tatas), ஜப்பானின் ரெனசாஸ் (Renesas) நிறுவனத்துடன் இணைந்த சிஜி பவர் (CG Power), கேய்ன்ஸ் செமிகான் (Kaynes Semicon) மற்றும் HCL-Foxconn ஆகிய நிறுவனங்களின் சிப் தொகுப்பு மற்றும் சோதனை ஆலைகளும் அடங்கும். இவற்றில் சில ஆலைகளின் பணிகள் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.