‘பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மாண்’ (PM-POSHAN) திட்டம் என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


 சத்தீஸ்கரில் மதிய உணவு சமைப்பவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் நடைபெற்றக் கூட்டத்தில், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் வழங்கப்பட்ட விவரங்களின்படி, 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பூதியத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியுள்ளன. 2025-26-ஆம் ஆண்டிற்குப் பிறகும் இத்திட்டத்தை நீட்டிப்பதற்கான ஒரு முன்மொழிவு தயாரிக்கப்படுவதற்கு முன்பு, திட்டத்தில் செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளைக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சகம் விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.


பீகார், அருணாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், தெலங்கானா, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் தொகையை மாதம் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை உயர்த்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட தரவுகளின்படி, கோவா, மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் டெல்லி உட்பட எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மதிய உணவு சமைப்பவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் எந்த கூடுதல் தொகையும் இல்லாமல் ரூ.1,000 ஆக உள்ளது என்றும் மற்ற மாநிலங்கள் ஆரம்பத்தில் வழங்கப்படும் ரூ.1,000 உடன் வெவ்வேறு தொகைகளை வழங்கி வருகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் மாதாந்திரத் தொகை மொத்தம் ரூ.4,100 முதல் ரூ.12,500 வரையிலும், கேரளாவில் ரூ.12,000 ஆகவும், புதுச்சேரியில் ரூ.10,000 ஆகவும் உள்ளது.


கடந்த ஆண்டு நிகழ்வில், மாநிலங்கள் குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கான அழைப்பிற்குப் பதிலளித்தாலும், மதிய உணவை சமையல்காரர்களுக்கான குறைந்த ஊதியம் குறித்து மாநிலங்கள் சுட்டிக்காட்டுவது இது முதல் முறையல்ல. PM-POSHAN திட்டத்திற்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் திட்டமிடல் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசுடன் நடைபெறும் வருடாந்திரக் கூட்டங்களில் பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளன.


கடந்த ஆண்டு கூட்டடத்தொடரில் PM-POSHAN திட்டத்தின், கீழ் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் குறித்த கேள்விக்கு, கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி பதிலளித்ததாவது: தகுதியுள்ள குழந்தைகளுக்கு சூடான, சத்தான உணவை வழங்குவது மற்றும் சமையலர்-உதவியாளர்களை (cook-cum-helpers (CCHs)) நியமிப்பது உட்பட, இந்தத் திட்டம் சரியாகச் செயல்படுவதற்கான முழுப் பொறுப்பும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசகளிடமே உள்ளது..


மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முன்வைத்த மற்ற பரிந்துரைகளில், உணவிற்கான மூலப்பொருள் செலவை அதிகரித்தல், 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் திட்டத்தின் கீழ் காலை உணவை வழங்குதல் ஆகியவை அடங்கும்.


மதிய உணவை சமைப்பவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த பல மாநிலங்கள் விரும்புவதாகவும், இது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


உங்களுக்குத் தெரியுமா?


பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மாண் (Pradhan Mantri Poshan Shakti Nirman scheme (PM-POSHAN)) திட்டத்தின்கீழ், ஒன்றிய அரசு உணவு தானியங்களை வழங்குகிறது. மேலும், மூலப்பொருள் செலவை மாநிலங்களுடன் (மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன்) 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறது. வடகிழக்கு மற்றும் இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களுக்கு இந்த விகிதம் 90:10 ஆகும். இது முக்கிய உணவுப் பொருட்களில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்களைச் சேர்ப்பதை ஊக்குவிக்கிறது.


— அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் உள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக, உணவுக்கான உரிமை (Right to Food) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறுவதற்கான உரிமையை வழங்குகிறது. அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் 47-வது பிரிவு, ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை (state to raise the level of nutrition and public health) என்று கூறுகிறது.




Share: