புகையிலை பயன்பாடு என்பது தொற்றா நோய்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், குடும்பச் செலவுகளை அதிகரிக்கவும், ஊட்டச்சத்தைப் பாதிக்கவும், வறுமையை அதிகப்படுத்தவும் செய்கிறது. புகையிலை நுகர்வைக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் யாவை?
இந்தியாவில் நோய்களின் தன்மை மாறி வருகிறது. தற்போது சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகள் (Autoimmune disorders) போன்ற தொற்றாத நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வாக, 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் 'உயிரிமருந்து சக்தி' (Biopharma SHAKTI) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய், முடக்குவாதம் (Arthritis), குடல் அழற்சி (Inflammatory Bowel Disease (IBD)), சொரியாசிஸ் போன்ற நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடுகள் மற்றும் மரபணு கோளாறுகள் போன்ற தீவிர நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க இந்த உயிரியல் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், இத்தகைய திட்டங்களை வெறும் மருத்துவக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், இந்த நோய்கள் பரவுவதற்கு காரணமான சமூக-கலாச்சார மாற்றங்கள், மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நுகர்வு முறைகளையும் சேர்த்தே கவனிக்க வேண்டும். உதாரணமாக, புகையிலை பயன்பாடு என்பது புற்றுநோய் மட்டுமல்லாமல் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு (சர்க்கரை நோய்), கண் நோய் மற்றும் மூட்டு வலி (Arthritis) போன்ற தொற்று அல்லாத பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதோடு, இது மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்கின்றனர்.
இந்தியக் குடும்பங்கள் சத்தான உணவைவிட புகையிலைக்காக அதிகப் பணம் செலவிடுவதாக 2023-24-ஆம் ஆண்டின் குடும்ப நுகர்வுச் செலவுக்கான ஆய்வறிக்கை (Household Consumption Expenditure Survey (HCES)) காட்டுகிறது. இது சமூக-கலாச்சாரக் காரணிகள், பணிச் சூழல் மற்றும் வறுமை ஆகியவற்றால் உருவான, தீர்க்க முடியாத ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி என்பது ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளுக்கு வழிவகுக்காததால், இந்த மாற்றமானது 'நிலையான மேம்பாட்டு இலக்கு 3: நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு' (Sustainable Development Goa (SDG 3)) நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் புகையிலை பயன்பாடு, இறப்பு மற்றும் நோய்கள்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கும் நோய்களுக்கும் புகையிலை பயன்பாடு ஒரு முக்கியமான காரணமாகும்; இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13.5 லட்சம் மரணங்களுக்கு வழிவகுக்கிறது. உலக அளவில் பார்த்தால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, புகையிலை மற்றும் நிலக்கரி/பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் பயன்பாடு அனைத்தும் சேர்ந்து, ஆண்டுதோறும் சுமார் 1.9 கோடி மரணங்களை ஏற்படுத்துகின்றன. இது உலகெங்கிலும் நிகழும் மொத்த மரணங்களில் 34 சதவீதம் என்று கூறப்படுகிறது.
2023-24-ஆம் ஆண்டின் குடும்ப நுகர்வுச் செலவின ஆய்வு (HCES), கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதச் சராசரி நுகர்வுச் செலவில் (Monthly Per Capita Consumption Expenditure (MPCE) 1.5% தொகையைப் புகையிலைக்காகச் செலவிடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதுவே நகர்ப்புற இந்தியர்களிடம் 1%-ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், புகையிலைக்கான இந்தப் பங்கீடு கிராமப்புற இந்தியாவில் 59.3%-லிருந்து 68.6%-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நகர்ப்புற இந்தியாவிலும் இந்தச் செலவினம் 59% அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
புகையிலை பயன்பாடு என்பது சிகரெட் மற்றும் பீடி மட்டுமல்லாமல், பான் மசாலா, கைனி, குட்கா, மூக்குப்பொடி, புகையில்லா புகையிலை பொருட்கள் மற்றும் பிற உள்ளூர் போதைப்பொருட்களையும் உள்ளடக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
புகையிலை, பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து
அதிகமான புகையிலை பழக்கம், ஒருவருக்குத் தேவையான உணவு அல்லது ஆற்றல் கிடைக்காத நிலையிலும், வயிறு நிறைந்தது போன்ற ஒரு போலி உணர்வைத் தரும். இந்தியாவில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது; ஏனெனில் இங்கு புகையிலை பெரும்பாலும் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்தே பயன்படுத்தப்படுகிறது. புகையிலை பசியை அடக்கி, சத்தான உணவுகள் இல்லாமலேயே வயிற்றை நிரப்பக்கூடும். இதில் உள்ள நிக்கோட்டின் (Nicotine) பசியைக் குறைத்து, உணவு உட்கொள்ளும் அளவையும், உடல் எடையையும் குறைக்கிறது. மேலும், புகையிலைக்காகச் செலவிடப்படும் பணம் சத்தான உணவுகளுக்கான செலவினத்தைத் தடுக்கிறது. இவற்றுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் சேரும்போது, அது ஒருவரின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2008-ஆம் ஆண்டு ரிஜோ எம். ஜான் மேற்கொண்ட ஆய்வு உட்பட பல ஆராய்ச்சிகள் ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்துகின்றன. புகையிலைக்காக அதிகம் செலவு செய்யும் குடும்பங்கள், பால், கல்வி, தூய்மையான எரிபொருள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகக் குறைவான தொகையையே செலவிடுகின்றன. இது குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளையே பெருமளவில் பதிப்பதாகக் கூறப்படுகிறது.
புகையிலைக்காகச் செலவிடப்படும் பணம் ஒரு 'வாய்ப்புச் செலவு' (Opportunity cost) ஆகும். அதாவது, அந்தப் பணத்தை ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள தேவைகளுக்காகப் பயன்படுத்தியிருக்க முடியும். புகையிலைக்கான செலவைக் குறைத்து, அந்தப் பணத்தை உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது, ஊட்டச்சத்தையும் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற பிற வளர்ந்து வரும் நாடுகளிலும் இதே போன்ற முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
புகையிலை பயன்பாட்டிற்கும், உடல் எடை குறைவாக இருத்தல் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு (Causal relationship) உள்ளது. ஏசுவடியான் செல்வமணி மற்றும் குழுவினர் 2024-ஆம் ஆண்டில் நடத்திய 'இந்தியாவின் முதியவர்களிடம் புகையிலை பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் குறைந்த உடல் நிறை குறியீட்டெண் (Low (Body Mass Index (BMI))' குறித்த ஆய்வில் ஒரு முக்கிய உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, புகையிலை பிடிக்கும் பழக்கம் உள்ள முதியவர்கள், அந்தப் பழக்கம் இல்லாதவர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டாலும், அவற்றின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயைவிட, அதனால் சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்புகளே அதிகம் என்கின்றனர். இந்தியாவில், புகையிலை பயன்பாடு என்பது பின்தங்கிய பொருளாதார நிலையில் உள்ள மக்களையே மிக அதிகமாகப் பாதிக்கிறது. புகையிலை வாங்குவதற்காகச் செலவிடப்படும் தொகை அல்லது அதன் பின் விளைவுகளால் ஏற்படும் மருத்துவச் செலவுகளை அதிகரிப்பதாக, ரிஜோ எம். ஜான் மற்றும் எஸ்டெல் பி. டச்சி ஆகியோரின் 2025-ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
புகைப்பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தேவை
புகையிலை நிறுவனங்கள் எளிய நிலையில் உள்ள மக்களையே குறிவைக்கின்றன. அதனால், புகையிலையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மட்டும் போதுமானவை அல்ல. மாறாக, புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர் பிரச்சாரங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. இவை பயனாளர்களுக்கு ஒரு நம்பிக்கையையும், மீட்சியையும் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (National Tobacco Control Programme (NTCP)) உள்ள புகையிலை ஒழிப்பு மையங்களுக்கு (Tobacco Cessation Centres (TCCs)) கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக, பாஸி மற்றும் குழுவினரின் இந்தியாவில் புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகள் (Programme and Policy Perspectives Towards a Tobacco-free Generation in India) குறித்து 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் (NTCP) மாநில மற்றும் மாவட்ட அளவிலும் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, புகையிலை ஒழிப்பு மையங்களின் (TCC) அணுகுமுறையும் அதன் செயல்திறனையும் அளவிடுவதற்கு இன்னும் வலுவான வழிமுறைகள் தேவைப்படுகின்றன. மேலும், புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதோடு, தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டங்களை தற்போதுள்ள பள்ளி மற்றும் இளம்பருவ சுகாதாரத் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதும் அவசியமாகிறது.
சுகாதாரம், கல்வி மற்றும் சட்டஒழுங்கு ஆகிய துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், புகையிலை ஒழிப்பு என்பது ஒரு முழுமையான நடவடிக்கையாக அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். புகையிலை பழக்கத்தை கைவிடுவதற்கான சேவைகளை வழங்குவதில் சுகாதாரத் துறையின் பல்வேறு நிலைகளிலும், பயனர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக அளவிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. குப்தா மற்றும் அவரது குழுவினர் 2022-ஆம் ஆண்டில் மேற்கொண்ட "இந்தியாவில் புகையிலை பழக்கத்தைக் கைவிடுவதற்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உத்திகள்" (Strategic Initiatives to Improve Tobacco Cessation Delivery in India) என்கிற ஆய்வின்படி , இந்த அரசுத் துறைகள் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கு மிகக் குறைந்த முன்னுரிமையையே அளிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. எனவே, இந்தப் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவமும், போதிய நிதி ஒதுக்கீடும் அவசியமாகிறது.
மனித வளத்தை மேம்படுத்துவதற்காகப் புகையிலை பயன்பாட்டைக் குறைத்தல்
புகையிலை பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விளம்பரம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை இன்னும் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டு முதல், சிகரெட் மற்றும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்குப் புதிய 40 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவை 'தீய விளைவுகளை ஏற்படுத்தும் பொருட்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பைத் தவிர்க்கவும், புகையிலை நிறுவனங்கள் வரி முறையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், இந்த வரி இனி சில்லறை விற்பனை விலையின் (Retail Selling Price (RSP)) அடிப்படையில் கணக்கிடப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரிகள் (Excise duties) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரித் திட்டங்கள் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புகையிலை பொருட்கள் மீது அதிக வரி விதிப்பது ஆரோக்கியத்திற்கும், சமத்துவத்திற்கும் ஆதரவான ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் விலையேற்றத்தினால் தங்கள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இந்தத் திட்டம், உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ள 75 சதவீத வரி இலக்கை இந்தியா எட்டுவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
இந்த உயர்வு ஏற்பட்ட போதிலும், இது உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையைவிட மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். இதன் உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பாக, பொதுச் சுகாதார ஆர்வலர்களும் புகையிலை நிறுவனங்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகையிலைப் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்பதாலும், அதற்கு உறுதியான சந்தை வாய்ப்பு இருப்பதாலும், மற்ற பணப்பயிர்களைவிட விவசாயிகள் இதையே பயிரிட விரும்புகிறார்கள். விவசாயிகள் மற்ற பயிர்களைப் பயிரிட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றால், அவர்களுக்குப் பயிர் பாதிப்பு ஏற்படும் காலங்களில் அரசு தலையிட்டு சிறந்த ஆதரவையும் உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
புகையிலைப் பயன்பாடு என்பது உடல்நல அபாயங்கள் மற்றும் மரணங்கள் தொடர்பானது மட்டுமல்ல, அது குடும்பச் செலவுகள், ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் வறுமை ஆகியவற்றின் மீதான ஒரு சுமையாகக் கருதப்படுகிறது. எனவே, இதற்கு பொதுக் கொள்கைரீதியாக உடனடி கவனம் தேவைப்படுகிறது. புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது, வளர்ச்சியடைந்த இந்தியா @2047 (Viksit Bharat @2047) இலக்கை நோக்கி முன்னேறவும், நாட்டின் மனித வளத்தை மேம்படுத்தவும் ஒரு வழியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.