பெண் உழவர்கள், இந்தியாவின் தேய்ந்துவரும் வேளாண் தொழிலுக்கு எவ்வாறு துணை நிற்கிறார்கள்? -ரித்விகா பட்கிரி

 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை வேளாண்மை மற்றும் ஊரகத் துறைக்காகப் பல புதிய முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபையும் 2026-ஆம் ஆண்டை பெண் உழவர்களின் சர்வதேச (International Year of the Woman Farmer) ஆண்டாக அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், வேளாண்மையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் வளங்களுக்கான அணுகல் போன்ற காரணிகள் இந்தியாவில் உள்ள வேளாண்மைத் தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பை எவ்வாறு பாதிக்கின்றன? முக்கிய நுண்ணறிவுகளுக்கு விளக்கப்படங்களைப் பார்க்கவும்.


2026-27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை, பாரத்-விஸ்தார், ஷீ-மார்ட்ஸ் மற்றும் விவசாய வளங்களை அணுகுவதற்கான மெய்நிகர் ஒருங்கிணைந்த அமைப்பு (Virtually Integrated System to Access Agricultural Resources)) வரை, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்மையை ஊக்குவிப்பது போன்ற பல முன்னெடுப்புகளை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டை பெண் உழவர்களின் சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது.


தேசிய வளர்ச்சிக்கு பெண்கள் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை வரவு செலவு அறிக்கை வலியுறுத்தினாலும், பெண் உழவர்கள் மீதான அரசின் கவனம், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் பங்கை அங்கீகரிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சர்வதேச பெண் உழவர்களின் ஆண்டு, பெண் உழவர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதையும், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் முதலீடுகளை முன்னெடுப்பதையும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதையும், மீள்திறன் கொண்ட வேளாண் உணவு அமைப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


வளர்ச்சி கதைகளின் ஒரு பகுதியாக பெண்கள்


1970-ஆம் ஆண்டுகள் வரை, பெரும்பாலான மக்கள் வேளாண் பணிகளை செய்து வந்த குடும்பங்களுக்கு ஆண்களே தலைமை தாங்குகிறார்கள் என்றும், ஆண்களே முக்கிய உழவர்களாகவும், பெண்களும் குழந்தைகளும் அவர்களுக்கு உதவியாளர்களாகவும் இருந்தாக நம்பி வந்தனர்.


இந்த பொதுவான கண்ணோட்டம், டேனிஷ் பொருளாதார நிபுணர் எஸ்டர் போசரூப்பின் 1970-ஆம் ஆண்டு 'Woman’s Role in Economic Development' என்ற புத்தகத்தால் சவால் செய்யப்பட்டது. அந்தப் புத்தகம், உழவுப் பணிகளில் ஆண்கள் எப்போதும் முக்கிய உழவர்களாக இருப்பதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆவணம் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான  (1976 முதல் 1985 வரை) பத்தாண்டுகள் என்றும் வளர்ச்சியில் பெண்கள் என்ற அணுகுமுறைக்கும் ஒரு அடித்தளமாக அமைந்தது. ஏனெனில், இது பெண்களை வளர்ச்சி முன்னெடுப்புகளில் ஒருங்கிணைப்பதை நோக்கிய உலகளாவிய கொள்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.


வளர்ச்சி குறித்த புதிய அணுகுமுறைகள், குடும்ப உழவு பணிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு பணிகள்  இருப்பதாகவும், இந்தப் பணிகள் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களில் வேறுபடுகின்றன என்றும் சுட்டிக் காட்டின. மேலும், அவை இரண்டு  முக்கியமான கருத்துக்களையும் எடுத்துரைத்தன: அவை பெண்கள் தன்னிச்சையாக உழவர்களாக இருக்க முடியும் மற்றும் சில குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்கி முடியும்  என்பதாகும்.


மறைந்து வரும் வேளாண்மை


ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, உலகளவில் மொத்த வேளாண்த் தொழிலாளர் படையில் பெண்கள் 40 சதவீதமாக உள்ளனர். இந்தியாவில், வேளாண்மையில் பொருளாதார ரீதியாக சிறப்பாகச் செயல்படும் தொழிலாளர்களில் பெண்கள் 80 சதவீதமாக உள்ளனர். மேலும், வேளாண் தொழிலாளர் படையில் பெண்களின் பங்கு 2017-18-ஆம் ஆண்டில் 57 சதவீதத்திலிருந்து 2023-24-ஆம் ஆண்டில் 64.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், உழவுத் தொழில் ஆண்களின் பங்கேற்பு 40.2 சதவீதத்திலிருந்து 36.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தத் தரவு குறைந்தது இரண்டு முக்கியமான சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: ஆண்கள் வேளாண்மையிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்றும் ஊரக இந்தியாவில் உள்ள பெண்கள் பெரும்பாலும் ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளர்களாக உள்ளனர்.


பொருளாதார வல்லுநர்கள், ஊரக இந்தியாவில் "மறைந்து வரும் வேளாண்மை" எனப்படும் ஒரு நிகழ்வுடன் இந்த மாற்றத்தைப் பற்றி விவாதித்துள்ளனர். வேளாண்மை மறைந்து வரும் வேளையில், இளைஞர்கள் பெரும்பாலும் உழவுத் தொழிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் போக்கு, வளரும் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் சான்றுகள், இளம் மற்றும் படித்த ஆண்கள் உழவுத் தொழிலிருந்து விலகி ஊரக விவசாயம் அல்லாத வேலைகளுக்குச் செல்கிறார்கள் அல்லது நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. பெண்களுக்கு உழவுத் தொழில் அல்லாத வேலை வாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை.


இது நம்மை இரண்டாவது பிரச்சினைக்குக் கொண்டு செல்கிறது: ஊரக இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் குடும்பத் தொழில்களில் ஊதியம் பெறாத உதவியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஊரக குடும்ப நிறுவனங்களில் ஊதியம் பெறாத பெண் தொழிலாளர்களில் 87% பேர் வேளாண்மை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தரவுகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் பெண் தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சுயதொழிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே ஆகும். இந்த சுயதொழில் வளர்ச்சி ஊரக இந்தியாவில் பெரும்பாலும் உழவுத்தொழிலை சார்ந்து உள்ளது.


காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி (Periodic Labour Force Survey (PLFS)), சொந்தமாகத் சுயதொழில் செய்பவர்கள், முதலாளிகள் மற்றும் ஊதியம் பெறாத உதவியாளர்கள் ஆகியோர் அடங்குவர். பெண்களைப் பொறுத்தவரை, சுயதொழிலில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, முக்கியமாக குடும்ப நிறுவனங்கள் அல்லது பண்ணைகளில் ஊதியம் பெறாத உதவியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக நிகழ்ந்துள்ளது. இந்த ஊதியம் பெறாத உதவியாளர்கள் தரவு சேகரிப்பிலும் கொள்கைகளிலும் கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது.


பெண்களின் கண்ணுக்குப் புலப்படாத நிலை மற்றும் வளங்களுக்கான அணுகல்


பாலினம் மற்றும் மேம்பாடு குறித்த அறிஞர்கள், ஊரக இந்தியாவில் பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வரலாற்று ரீதியான இருப்பு குறித்துப் பேசியுள்ளனர். இது பெரும்பாலும் முதலாளித்துவ வளர்ச்சி, உழைப்பாளர்மயமாதல் (proletarianisation) மற்றும் ஆண்களின் இடம்பெயர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்தியாவில், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள் இரண்டு முக்கிய காரணங்களால் உருவாகின்றன. முதலாவதாக, கணவர் இறப்பு, பிரிவினை, விவாகரத்து அல்லது உடல்நலக்  குறைபாடு போன்ற காரணங்களால் ஆண் தலைவர் இல்லாததால் சில குடும்பங்கள் பெண் தலைமையிலான குடும்பங்களாக மாறுகின்றன. இரண்டாவதாக, ஆண்கள் வேலைக்காக இடம்பெயர்ந்து, குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் விட்டுச் செல்லும்போது மற்ற குடும்பங்கள் பெண் தலைமையிலான குடும்பங்களாக மாறுகின்றன.


ஊரக இந்தியா முழுவதும், ஆண்கள் பொதுவாக உழவுத் தொழிலிற்கு வெளியே வாய்ப்புகளைத் தேடி சுழற்சிமுறை (circular) அல்லது பருவகால இடம்பெயர்வில் (seasonal migration) ஈடுபட்டுள்ளனர். இடம்பெயர்வு பின்வரும் காரணிகளாலும் ஏற்படுகிறது. அவை, 


1. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனில் ஏற்பட்ட மந்தநிலை.


2. உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு.


3. பயிர்களுக்கு காலநிலை தொடர்பான அதிக அபாயங்கள்.


4. போதிய வேலை வாய்ப்பு சூழல் இல்லாதது.


5. ஊரக இந்தியாவில் படித்த இளைஞர்களின் வளர்ந்துவரும் ஆர்வம் போன்றவையாகும்.


உலகளாவிய தெற்குப் பகுதி முழுவதும் இத்தகைய போக்குகள் காணப்படுகின்றன. வேளாண் நிலங்கள் சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்படுவதால், உழவுத்தொழிலை மட்டும் நம்பி ஒரு குடும்பத்தை நடத்துவது சாத்தியமற்றதாகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், பெண்கள் பெரும்பாலும் நிலத்தைத் தாங்களாகவே நிர்வகித்து, உழவுத்தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வயதான விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும், விவசாயத்தில் பெண்களின் பங்கு வளர்ந்து வருவதும் ஒரே நேரத்தில் நிகழ்வதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.


பெண் விவசாயிகள் புதிய உழவு முறைகளைப் பயன்படுத்தவும், பயிர் பல்வகைப்படுத்தலின் புதிய வடிவங்களில் பணி செய்யவும் அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஊரக இந்தியாவில் உள்ள பெண்கள் கால்நடை வளர்ப்பின் முதுகெலும்பாகவும் உள்ளனர். பால் மற்றும் கால்நடை வளர்ப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகளை அவர்களே செய்கின்றனர். உழவுத்தொழில் அவர்களின் பங்கைப் போலவே, கால்நடை வளர்ப்பிலும் பெண்களின் பங்கு கண்ணுக்குத் தெரியாமலும், கணக்கில் கொள்ளப்படாமலும் உள்ளது. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் பெண்களின் பங்கு கண்ணுக்குத் தெரியாமலும், குறைவாக மதிப்பிடப்படுவதும், சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீதான அவர்களின் உரிமை மற்றும் அணுகலில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, ஊரக இந்தியாவில் பெண்கள் அனைத்து வேளாண் நிலங்களிலும் 15 சதவீதம் மட்டுமே சொந்தமாக வைத்துள்ளனர். தரவு சேகரிப்பில் பெண்களின் தலையீடுகள், நில உரிமை போன்ற பகுதிகளில் பாலின வாரியான தரவுகளைச் சேகரிப்பதை ஊக்குவித்திருந்தாலும், இன்னும் பல சவால்கள் உள்ளன. பல சமயங்களில், நில உரிமை குறித்த தரவுகள் கூட்டு உரிமைக்கும் தனி உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிவதில் தவறிவிடுகின்றன. பெரும்பாலான பெண்களுக்கு நிலமும் பிற சொத்துக்களும் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுடன், குறிப்பாக கணவர்களுடன் இணைந்து சொந்தமாக வைத்துள்ளன. இது, நிலத்தின் மீது பெண்களுக்கு உண்மையில் உள்ள கட்டுப்பாடு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் எவ்வளவு குறைவு என்பதை மறைத்துவிடுகிறது.

வேளாண்மையில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கி


காலநிலை மாற்றத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ளாமல், பெண் உழவர்கள் குறித்த எந்தவொரு விவாதமும் முழுமையடையாது. காலநிலை மாற்றம் பெண்களைச் சமமற்ற முறையில் பாதிக்கிறது என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. வெப்ப அலையால் பெண் தலைமை வகிக்கும் குடும்பங்கள் ஆண்டுக்கு 37 பில்லியன் டாலர்களையும், வெள்ளத்தால் 16 பில்லியன் டாலர்களையும் இழக்கின்றன.


இந்த விவகாரத்தில், தொழில்நுட்பத் தலையீடுகள் பெண் உழவர்களுக்குப் பயனளிக்கும். நெல் சாகுபடி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். நெல் சாகுபடி செய்யும் பெண்கள் பெரும்பாலும் தோல் பிரச்சனைகள், நீரிழப்பு, ஒவ்வாமைகள், நீரினால் பரவும் நோய்கள் போன்ற உடல்நல அபாயங்களையும், பல உடல்ரீதியான சவாலான வேலைகளையும் எதிர்கொள்கின்றனர் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை நடவு செய்வதற்குப் பதிலாக, விதைகளை நேரடியாக வயலில் விதைக்கும் நேரடி நெல் விதைப்பு (direct-seeded rice (DSR)) போன்ற தொழில்நுட்பங்களைத் ஏற்றுக்கொள்வது பெண்களின் உழைப்புச் சுமையைக் குறைக்க உதவுகிறது. நேரடி நெல் விதைப்பு முறை நீர் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் பயன்பாட்டையும் குறைக்கிறது. நெல் சாகுபடி பசுமை இல்ல வாயு (greenhouse gas) வெளியேற்றத்தில் 48 சதவீதத்தைக் கொண்டுள்ளது.


பெண்களின் உழைப்பின்மீது இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கம் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், சரியான முறையில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்போது, ​​தொழில்நுட்பம் பெண் உழவர்களுக்குப் பல கட்டமைப்புத் தடைகளைத் எதிர்கொள்ள உதவ முடியும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் உற்பத்தி வளங்களுக்கான அணுகல் கிடைத்தால், வேளாண் விளைச்சல் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதன் மூலம் உலகளவில் கூடுதலாக 100 முதல் 150 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது.


எனவே, பெண்களைப் பற்றிய சிறந்த தரவுகளைச் சேகரிப்பதைத் தவிர, பராமரிப்பு சேவைகள், பாதுகாப்பான நில உரிமை, கடனுக்கான அணுகல் மற்றும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற விவகாரங்களில் முதலீடு செய்வது முக்கியம். இவை வேளாண்மையில் பெண்களுக்கு அதிகக் கட்டுப்பாடு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற உதவும்.




Share: