அணுசக்தி யுகத்தின் தொடக்கத்தில், நாடுகள் தங்களது அணு ஆயுதங்களை உருவாக்கி வந்த காலத்தில், அணு ஆயுதப் போர் உருவாவதைத் தடுக்கும் சக்தி, எதிரிக்கு ஏற்படப்போகும் விளைவுகளை 'உறுதியாகத்' தெரிவிப்பதில் இருக்கிறதா அல்லது ஒருவித 'நிச்சயமற்றத் தன்மையை' அதாவது அச்சுறுத்தலை உருவாக்குவதில் இருக்கிறதா என்கிற விவாதம் எழுந்தது
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பாவிற்கும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு பின்னாளில் சரியாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) (North Atlantic Treaty Organisation (NATO)) அமெரிக்காவை ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டமைப்பு நாடக ஐரோப்பா கருதிய அந்த 'நம்பிக்கை' நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அணுஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் கடைசி ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் இப்போது மிகவும் தீவிரமடைந்துள்ளன.
சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக ஐரோப்பாவைப் பாதுகாக்கும் ஒரு தற்காப்பு அணுசக்தி கூட்டணியாக 1949-ஆம் ஆண்டில் நேட்டோ (NATO) உருவாக்கப்பட்டது. இதற்கு அமெரிக்காவே முக்கியப் பாதுகாப்பு உத்தரவாதமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அதே அமெரிக்கா தனது கூட்டமைப்பிற்கு எதிராகத் திரும்பியுள்ளது. டென்மார்க் நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கிரீன்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்ததும், அதற்காக அவர் கொடுத்த அழுத்தங்களும், பொருளாதார உத்திகளும் நேட்டோ நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையைச் சிதைத்துவிட்டன. நம்பிக்கை இல்லையெனில், ஒரு அணுசக்தி கூட்டணியாக நேட்டோவின் பலம் குறைந்துவிடும். ஐரோப்பா இதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்கிறது என்பது அந்த கண்டத்தின் எதிர்கால பாதுகாப்பை மட்டுமல்லாமல், அணுசக்தித் தடுப்பு குறித்த எதிர்கால விவாதங்களையும் தீர்மானிக்கும் என்கின்றனர். ஐரோப்பாவின் புதிய பாதுகாப்பு அமைப்பு அணுசக்தித் தடுப்புக்கு முன்னுரிமை அளிக்கிறதா என்பதைப் பொறுத்து, அணு ஆயுதங்கள் குறித்த சிந்தனையானது, கடைசியாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்ட 80 ஆண்டுகளில் கற்ற பாடங்களைக் கொண்டு புதுப்பிக்கப்படும், அல்லது 'அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்' (Non-Proliferation Treaty (NPT)) உலகை அணுசக்தி நாடுகள் மற்றும் அணுசக்தி இல்லாத நாடுகள் எனப் பிரித்த பழங்கால விவாதங்களிலேயே சிக்கிக்கொண்டிருக்கும்.
அணுசக்தி குறித்த விவாதம்
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT), புதிய நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தியது. அதன் பிறகு, உலகப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போட்டியிலிருந்து பயங்கரவாதம், தீவிரவாதம், காலநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி, ஏற்றத்தாழ்வு மற்றும் பிராந்திய மோதல்கள் எனத் திசைமாறியுள்ளன. இந்தப் பிரச்சனைகள் எதற்கும் அணு ஆயுதங்களால் எளிதில் தீர்வுகாண முடியாது. இருப்பினும், பெரிய நாடுகளுக்கு இடையே மீண்டும் போட்டி அதிகரித்துவரும் நிலையில், அணு ஆயுதங்களை வைத்திருப்பது மட்டுமே அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் இறுதியான உத்தரவாதம் என்பது போன்ற விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அணு ஆயுதங்கள் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு எப்படி உதவுகின்றன என்பது குறித்த விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. நாடுகள் தங்களின் அணு ஆயுத இருப்பை உருவாக்கிக் கொண்டிருந்த ஆரம்பக் காலத்தில் ஒரு கேள்வி எழுந்தது: 'அணு ஆயுதத் தடுப்பு என்பது நிச்சயத்தன்மையை சார்ந்ததா அல்லது நிச்சயமற்றத் தன்மையை சார்ந்ததா?' சிலர், 'நிச்சயமற்றத் தன்மையே போதுமானது' என்று வாதிட்டனர். அதாவது, ஒரு நாடு அணு ஆயுதத்தால் பதில் தாக்குதல் நடத்துமா இல்லையா என்பதில் எதிரிக்குத் தெளிவான சந்தேகம் இருந்தால் மட்டுமே, அந்த நாடு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சும் என்கின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1980-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை இந்த நிலைதான் நீடித்தது. இஸ்ரேல் இப்போதும் இதையே நம்பியுள்ளது, ஏனெனில் அந்த நாட்டிடம் அணு ஆயுதம் இருக்கிறதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியாது. ஆனால், மற்ற அணு ஆயுத நாடுகள் 'நிச்சயத்தன்மையில்' கவனம் செலுத்தின. தங்களிடம் பெரிய அளவில் அணு ஆயுதங்கள் இருப்பதை அவை வெளிப்படையாகக் காட்டின. இதன் மூலம், 'தாக்குதல் நடத்தப்பட்டால் கண்டிப்பாகப் பதில் தாக்குதல் நடத்துவோம்' என்பதை அவை உறுதிப்படுத்தின. அணு ஆயுதச் சோதனைகள் அவர்களின் நோக்கத்தையும், ஆயுதங்களின் எண்ணிக்கை அவர்களின் மன உறுதியையும் வெளிக்காட்டின.
அதே சமயம், நாடுகள் அதிகப்படியான அணு ஆயுதங்களைத் தயாரித்த போதிலும், அவற்றை பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு வலுவான தார்மீகத் தடை உருவானது. 1945-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு அணுஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை. அவ்வப்போது அணுஆயுத அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக அணுஆயுதங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகள் இதுவரை தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும்/ரஷ்யாவிற்கும் இடையிலான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களும், உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடை முயற்சிகளும் மற்றுமொரு 'ஹிரோஷிமா' போன்ற பேரழிவு ஏற்படாமல் தடுக்க உதவியிருக்கலாம். இருப்பினும், அணு ஆயுதத் தடுப்பு (Nuclear Deterrence) குறித்த சிந்தனை முறை பெரும்பாலும் மாறாமல் அப்படியே உள்ளது. அமெரிக்க மற்றும் ரஷ்ய அணு ஆயுதக் இருப்புகள் பெருமளவு குறைக்கப்பட்ட பிறகு, தற்போது அந்தப் போக்கு மீண்டும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. அதாவது, அணு ஆயுதங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் அணுஆயுதங்களை மிக வேகமாக நவீனப்படுத்தி வருகின்றன. சீனா 2023-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 100 அணுஆயுதப் போர்முனைகளை அதிகரித்து வருவதாகவும், தற்போது அதன் வசம் சுமார் 600 அணுஆயுதங்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015-ஆம் ஆண்டில், பிரிட்டன் தனது அணுஆயுத கையிருப்பை குறைக்கும் முடிவை மாற்றிக்கொண்டது; தற்போது அங்கு சுமார் 225 அணுஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' (New START), பிப்ரவரி 5-ஆம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. ரஷ்யா (5,459) மற்றும் அமெரிக்கா (5,277) ஆகிய இரு நாடுகளும் தங்களின் தற்போதைய அணுஆயுத அளவை மேலும் அதிகரித்தால், அது மீண்டும் ஒரு 'பனிப்போர்' (Cold War) காலத்தைப் போன்ற அச்சுறுத்தலை உருவாக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
உக்ரைன் போரின் பாடங்கள்
உக்ரைன் போர், ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பைத் தடுப்பது உண்மையில் எது என்பது குறித்த ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு முன்னும், மீண்டும் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் அணுஆயுத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், இந்த மிரட்டல்களுக்குப் பதிலாக, 'நிச்சயமான அணுஆயுதத் தாக்குதல் நடத்துவோம்' என்கிற எதிர்வினையாற்றமல், 'மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்' என்ற ஒரு தெளிவற்ற எச்சரிக்கையே பதிலாக வழங்கப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அணுஆயுதங்கள் இல்லாத நாடான உக்ரைன், அணுஆயுத பலம் கொண்ட ஒரு நாட்டை எதிர்த்துத் தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறது. உக்ரைன் பிற நாடுகளின் உதவியைப் பெற்றுள்ளது, சில பகுதிகளை இழந்தும் உள்ளது. ஆனால், அணுஆயுதங்களைக் கொண்ட ஒரு நாட்டிடம் உக்ரைன் இன்னும் தோற்றுப்போய்விடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவைச் சாராத ஒரு பாதுகாப்பு அமைப்பை ஐரோப்பா உருவாக்கிவரும் நிலையில், வரும் மாதங்களில் எடுக்கப்படப்போகும் முடிவுகள், அணு ஆயுதங்கள் குறித்த உலக நாடுகளின் சிந்தனையை மாற்றியமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் ஐரோப்பாவிற்கான அணுஆயுதப் பாதுகாப்பை நீட்டிப்பது குறித்த சில விவாதங்களைத் தவிர்த்து, முந்தைய விவாதங்கள் பெரும்பாலும் அமெரிக்காவைச் சார்ந்திருப்பது குறித்தே அமைந்திருந்தன. இதற்கிடையில், உக்ரைனின் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்க 'விருப்பமுள்ளவர்களின் கூட்டணி' (Coalition of the Willing) என்ற பெயரில் ஒரு ஐரோப்பியக் குழு உருவானது. அணுஆயுத பலம் கொண்ட ஒரு நாட்டை (ரஷ்யா) எதிர்த்துத் தன்னைத் தற்காத்துக் கொள்வதில் உக்ரைன் தற்போது அனுபவம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், ஐரோப்பா எடுக்கப்போகும் முடிவு, அதாவது ஒரு புதிய அணுஆயுதக் கூட்டணியை உருவாக்குவதா அல்லது அணுஆயுதங்களுக்குச் சிறிய அளவிலான பங்களிப்பைக் கொடுத்து ஒரு தற்காப்புக் கூட்டணியை உருவாக்குவதா என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். அணுஆயுதங்கள் மற்றும் அவற்றின் தடுப்பு ஆற்றல் குறித்த எதிர்கால விவாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
பிரியஞ்சலி மாலிக், அணுசக்தி அரசியல் மற்றும் பாதுகாப்பு குறித்து எழுதி வருகிறார்.