STEM துறைகளில் பெண்களைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியாவிற்கு ஏன் அரசியல் மாற்றம் தேவை? -வாசுதேவன் முகுந்த்

 அறிவியல் சார்ந்த துறைகள் எந்தக் கேள்விகளை முறையானவை என்று கருதுகிறது என்பதையும், எந்தச் சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பது அவசியம் எனத் தீர்மானிக்கிறது என்பதையும் பாலினப் பன்முகத்தன்மை மேலும் விரிவுபடுத்துகிறது.


இந்தியாவில் அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை, அதிகரித்துவரும் ஆர்வம் மற்றும் நீடிக்கும் தடைகளுக்கு இடையிலான இடைவெளியை வெளிப்படுத்துகிறது. எளிமையாகச் சொன்னால், அதிகமான சிறுமிகளும் இளம் பெண்களும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, Technology, Engineering, and Mathematics (STEM) உள்ளிட்ட துறை சார்ந்த கல்வியில் நுழைகிறார்கள். ஆனால், அவர்களின் இந்த லட்சியத்தை நீண்டகால அறிவியல் வாழ்க்கைப்பயணமாக (Career) மாற்றுவதில் நாடு இன்னும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்றும் இதற்கான காரணம் குறித்தும் விவரிக்கின்றனர்.


உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு (2021-22) (All India Survey on Higher Education 2021-22), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் (STEM) உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 43 சதவீதம் பேர் பெண்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தியத் தொழில்முறை கலாச்சாரத்தில் நீண்டகாலமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த இயந்திர மற்றும் கட்டுமானப் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை குஜராத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புள்ளிவிவர அறிக்கை (Research and Development Statistics Report 2023) 2023-ஆம் ஆண்டின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், 2021-ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (STEM) ஆராய்ச்சிப் பணியாளர்களில் பெண்கள் 18.6 சதவீதம் மட்டுமே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.


இந்தக் கருத்தை நிறுவனங்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளன. மாணவிகளை அறிவியல் படிக்க ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்கள் பணியிடங்களில் தொடர்ந்து நீடிக்கவும், முன்னேறவும் ஏதுவான ஒரு ஆதரவான சூழலை உருவாக்கவும் இப்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (Department of Science and Technology (DST)) Project GATI ((Project GATI - Gender Advancement for Transforming Institutions) திட்டம், பாலின சமத்துவத்தை ஒரு முக்கிய சீர்திருத்த இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு, மீண்டும் அறிவியல் பணிக்குத் திரும்புவதை ஆதரிக்கும் வகையில் அரசின் கொள்கை முடிவுகள் இப்போது மிகத்தெளிவாக உள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவு சார்ந்த ஆராய்ச்சி முன்னேற்றத்தை வளர்ப்பு மூலம் ஈடுபடுத்துதல் (Women in Science and Engineering-Knowledge Involvement in Research Advancement through Nurturing (WISE-KIRAN)) திட்டம், ஆராய்ச்சியை விட்டு வெளியேறி மீண்டும் அதில் இணைய விரும்பும் பெண்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது.


இத்தகைய திட்டங்கள் பல அறிவியல் பணியிடங்களில் உள்ள ஒரு பொதுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. அதாவது, ஒரு சிறந்த விஞ்ஞானி என்பவர் எப்போதும் வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும், எந்த இடத்திற்கும் இடம்பெயரக் கூடியவராக இருக்க வேண்டும் மற்றும் குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகள் இல்லாதவராக இருக்க வேண்டும். இந்தியாவில், பராமரிப்புப் பணிகள் இன்றும் பெரும்பாலும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன, மேலும் குழந்தைப் பராமரிப்புக்கான ஆதரவு முறையானதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இத்தகைய நம்பிக்கைகள் தகுதியுள்ள நபர்களைத் தாராளமாக முன்வரவிடாமல் தடுத்துவிடுகின்றன. இது வெளிப்படையாகப் பலரை ஒதுக்கி வைப்பதாக இருந்தாலும், ஆய்வகங்களுக்குள் இருப்பவர்கள் இதனை "திறமைக்கான அங்கீகாரம்" (meritocracy) என்று கூறி நியாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். 


பாலினத்தைப் பற்றி பொதுவாக மட்டும் பேசுவது, அறிவியல் துறையில் நிலவும் தடைகளை முழுமையாக விளக்காது என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். இந்தியாவில் ஒருவருடைய பாலின அடையாளமானது சாதி, வகுப்பு, பிராந்தியம், மொழி, மதம், மாற்றுத்திறன் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு திறமையான இளைஞர் அறிவியல் துறையை விட்டு வெளியேறுகிறார் என்றால், அதற்கு ஒரே நேரத்தில் பல சமூக அமைப்புகள் அவருக்கு எதிராகச் செயல்படுவதுதான் காரணமாக இருக்கிறது. ஒரு நகரத்துக் கல்லூரியில் படிக்கும் 'மேல்தட்டு' சாதியைச் சேர்ந்த பெண்ணும், ஒரு சிறிய நகரத்துக் கல்லூரியில் படிக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணும் ஒரே பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் வெவ்வேறானவை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். வேலை நேர்காணல் அல்லது நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பே, அவர்களுக்குக் கிடைக்கும் வழிகாட்டிகள் (Mentors), பயிற்சி வாய்ப்புகள் (Internships), மாநாடுகள், பரிந்துரைக் கடிதங்கள், ஆய்வக வசதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


மற்ற உயர்நிலைத் துறைகளைப் போலவே, இந்திய அறிவியல் துறையிலும் யார் உள்ளே நுழையலாம் மற்றும் யார் அங்கிருக்கத் தகுதியானவர்கள் என்பதைத் தீர்மானிக்கும் நிறுவனங்களையே நீண்டகாலமாகச் சார்ந்திருக்கிறது. பட்டியல் சாதியினர் (Schedule Caste (SC)), பழங்குடியினர் (Schedule Tribes (ST)) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (Other Backward classes (OBC)) சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் (STEM) துறைகளில் சேர்ந்தாலும், அவர்கள் ஒருவித மறைமுகமானப் புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலை அதிகாரப்பூர்வ சட்டங்களால் எளிதில் விளக்கிவிட முடியாது. உதாரணமாக, சக மாணவர்களாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக "சலுகை பெற்றவர்களாக" பார்க்கப்படுவது அல்லது தங்களை எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போன்ற உணர்வுகளாக அமைகின்றன. இதன் விளைவாக, மிகக் குறைவான நபர்களே அறிவியல் துறையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இது அறிவியல் துறையில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்பட வேண்டும் மற்றும் எந்த மாதிரியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.


அதேபோல், அறிவியல் சார்ந்த பணியிடங்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பழகிய அல்லது கையாளுவதற்கு எளிதான அடையாளங்களைக் கொண்டவர்களையே எதிர்பார்க்கின்றன. குறிப்பாக "நிர்வாகச் சிக்கல்களை" உருவாக்காத மனிதர்களை அவை விரும்புகின்றன. திருநங்கை/திருநம்பி  விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, தடைகள் என்பது துறை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளிலிருந்தே தொடங்கி பணியின் ஒவ்வொரு அம்சத்திலும் நீடிக்கிறது. கடந்த ஆண்டு பியோன்சி லைஷ்ராம் (Beoncy Laishram) சந்தித்த அனுபவங்கள் இதற்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது. திருநங்கைகள் இன்றும் தங்களின் ஆவணங்களைப் புதுப்பிப்பதில் போராடுகிறார்கள். தங்களின் பழைய ஆய்வுக் கட்டுரைகளுக்கும் தற்போதைய அடையாளத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தங்கும் விடுதிகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பயன்படுத்துவதற்குக் கூட தேவையற்ற கேள்விகளையும் இடையூறுகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். மேலும், அவர்கள் சந்திக்கும் துன்புறுத்தல்களை ஒரு நிறுவனப் பிரச்சனையாகப் பார்க்காமல், தனிப்பட்ட "நாடகம்" என்று அலட்சியப்படுத்தும் கலாச்சாரம் நிலவுகிறது. வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு பகைமை நிறைந்த துறை ஒருவரது வாழ்க்கைப் பயணத்தையே முடக்கிவிடக்கூடும், மேலும் ஒரு அவமானகரமான சம்பவம் அந்தப் பணியிடத்தையே நிரந்தரமாகப் பாதுகாப்பற்ற ஒன்றாக உணரச் செய்துவிடக் கூடிய சூழல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. 


இந்தச் சிக்கல்கள் ஒரு விரிவான தொழிலாளர் பிரச்சினையோடு தொடர்புடையவையாகப் பார்க்கப்படுகிறது. பெண்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் (STEM) பட்டங்களைப் பெற்றாலும், பொருளாதாரம் அவர்களுக்குப் பாதுகாப்பான வேலைகளைத் தொடர்ந்து வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. 2023–24-ஆம் ஆண்டில் இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 31.7 சதவீதமாக  உள்ளது. இது உலகத் தரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பதை தரவுகள் காட்டுகின்றன. பெண்களின் வேலைகளின் தரம் மற்றும் நிலைத்தன்மை குறித்து பொது விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன. அதாவது, குறிப்பாக, இந்தப் பங்களிப்பு பாதுகாப்பான வேலைகளைக் குறிக்கிறதா அல்லது வறுமை காரணமாகச் செய்யப்படும் குறைந்த ஊதிய வேலைகளைக் குறிக்கிறதா என்ற கேள்வி உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், கல்வி வளர்ச்சிக் கேற்பப் போதுமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்பப் பணிகளை இந்தியா உருவாக்குகிறதா என்பதே முக்கியப் பிரச்சினையாகும். குறுகியகால ஒப்பந்தங்களும், முறைசாரா வேலைவாய்ப்புகளும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் திருநங்கை பட்டதாரிகளுக்கு எதிரான பாகுபாட்டை இன்னும் மோசமாக்குகின்றன. ஏனெனில், அவர்களுக்குப் பணியிடங்களில் போதிய பாதுகாப்பு இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.


Original article : Why India needs political change to retain women in STEM? -Vasudevan Mukunth

Share: