இந்தியாவின் மஹாசாகர் திட்டம் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) குறித்த தொலைநோக்குப் பார்வை என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— கடல்சார் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தரவுப் பகிர்வு ஆகியவற்றில் இந்தியாவின் நிபுணத்துவத்தைச் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் என்று மோடி கூறினார். பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கிய அம்சங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், 'கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில்' (Colombo Security Conclave) சீஷெல்ஸ் முழுநேர உறுப்பினராக இணைந்ததை மோடி வரவேற்றார். இது 2011-ஆம் ஆண்டில் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்திய கடல்சார் பாதுகாப்பு அமைப்பாகும். தற்போது இதில் மொரிஷியஸ் மற்றும் வங்காளதேசமும் உறுப்பினர்களாக உள்ளன.


— இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளை இது வலுப்படுத்தும் என்றும், உறவுகளை மேம்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார். இருநாடுகளும் இணைந்து இருதரப்பு ஒத்துழைப்பை மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலின் பொதுவான எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 


— திங்கட்கிழமை காலை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகள் நீடித்த நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான 'மேம்படுத்தப்பட்ட இணைப்புகள் மூலம் ஒரு கூட்டு தொலைநோக்கு' (Sustainability, Economic Growth and Security through Enhanced Linkages (SESEL)) திட்டத்தை ஏற்றுக்கொண்டன. மேலும், சுகாதாரம், கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் ஆகிய துறைகள் சார்ந்த முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.


— இந்த சந்திப்பின் போது, ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மருந்தியல் தரநிலைகள் (Pharmacopoeia) குறித்த ஒத்துழைப்பு, ஆய்வு அமைப்புகளுக்கு இடையிலான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பணிகள், 2026–2030-ஆம் ஆண்டிற்கான கலாச்சார பரிமாற்றத் திட்டம், டிஜிட்டல் உருமாற்றம் (Digital transformation) தொடர்பான பணிகள், கடல் அவதானிப்பு, கடல்சார் ஆராய்ச்சி மற்றும் தரவுப் பகிர்வு, சீஷெல்ஸ் (Seychelles) நாட்டு அரசு ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்தல் துறைகளில் ஒத்துழைப்பை வழங்குகின்றன.


— சீஷெல்ஸ் நாட்டிற்கு 175 மில்லியன் டாலர் மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இதில் 125 மில்லியன் டாலர் 'கடன் உதவி' திட்டமாகவும், மீதமுள்ள தொகை 'நிதியுதவி' திட்டமாகவும் வழங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை சீஷெல்ஸில் பொது வீட்டுவசதி, போக்குவரத்து, உட்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


— இந்தியா - சீஷெல்ஸ் இடையிலான உறவு மக்களை மையமாகக் கொண்டது என்றும், இது மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய உதவுகிறது என்றும் இருநாட்டுத் தலைவர்களும்  வலியுறுத்தினர்.


— இந்தியா மேற்கொண்டு வரும் மகாசாகர் (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions (MAHASAGAR)) திட்டத்தில் (அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான திட்டம்), சீஷெல்ஸ் நாடு ஒரு முக்கியமான தூணாக விளங்குவதாக மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். அதே சமயம், சீஷெல்ஸ் நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவிற்கு கௌரவ விருந்தினராக வருமாறு பிரதமர் மோடிக்கு ஹெர்மினி அழைப்பு விடுத்தார். கடந்த திங்கள்கிழமை மோடியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


உங்களுக்குத் தெரியுமா?


— இந்தியா மற்றும் சீஷெல்ஸ் நாடுகள் பல ஆண்டுகளாக வலுவான பாதுகாப்பு உறவுகளைக் கட்டமைத்துள்ளன. குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் கடற்கொள்ளை மற்றும் பிற பொருளாதாரக் குற்றங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உறவு அமைந்துள்ளது. அதிபர் ஹெர்மினி அவர்கள் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள்ளேயே இந்தியாவிற்கு வருகை தந்தது, அந்தத் தீவு நாடானது இந்தியாவிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்துகிறது.


— மஹாசாகர் (MAHASAGAR) கொள்கையானது, சாகர் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் (Security and Growth for All in the Region (SAGAR)) அடிப்படையில் உருவானது. இது இந்தியாவின் கடல்சார் செயல்பாடுகளின் விரிவாக்கத்தைக் காட்டுகிறது. இது இந்தியாவின் அண்டை நாடுகளை மட்டும் உள்ளடக்கியது அல்லாமல், விரிவான இந்தோ-பசிபிக் பிராந்தியம் வரை நீடிக்கிறது. மேலும், இது குவாட் நாடுகள் (QUAD) அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் ராஜதந்திரரீதியிலான கூட்டணியையும் இணைக்கிறது.


Original article : What is India’s MAHASAGAR (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) Vision? -Roshni Yadav, Khushboo Kumari

Share: