உலகளாவிய அதிகாரம், போர்முறை மற்றும் நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மனிதகுலத்தால் அதைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு விதிமுறைகளையும் சமநிலைகளையும் உடனுக்குடன் உருவாக்கிச் செயல்படுத்த முடியுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
தற்போதைய காலத்தை மாற்றி அமைத்து, ஒரு புதிய யுகத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் ஒன்று உண்டு என்றால், அது செயற்கை நுண்ணறிவுதான் (Artificial Intelligence (AI)) என்கின்றனர். குறைந்தபட்சம், கடந்த காலத்தில் ஏற்பட்ட தொழில்புரட்சியைப் போலவே, இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன்மிக்க பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models (LLMs)) நாம் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக அறிமுகமாகி வருகின்றன. இத்துறையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி மிகவும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, சமீபத்திய சீன மாதிரிகளின் வெற்றி, செயற்கை நுண்ணறிவுத் துறையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்திச் செல்கிறது என்றாலும் இது ஒரு தொடக்கம் மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமானது. கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி, ஜனவரி மாதம் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) ஆற்றிய உரையில், இன்றைய உலகம் ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்லவில்லை, மாறாக ஒரு பெரும் பிளவை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று விவரித்தார். பெரிய நாடுகள் பொருளாதார ஒருமைப்பாட்டை ஒரு ஆயுதமாகவும், இறக்குமதி வரிகளை ஒரு செல்வாக்குக் கருவியாகவும், நிதி அமைப்புகளை மிரட்டல் விடுக்கவும், மற்றும் விநியோகச் சங்கிலிகளை மற்றவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தும் வழியாகவும் கையாளுவதாக அவர் கூறினார். இருப்பினும், எல்லாவற்றையும்விடப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) பற்றியோ, ஏற்கனவே உலகை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தோ அவர் குறிப்பிடவில்லை. பெரிய நாடுகளுக்கு இடையிலான போட்டி மற்றும் அந்தப் போட்டியில் சிக்கியுள்ள மற்ற நாடுகளின் தேர்வுகள் பற்றி அவர் பேசினாலும், தற்போதும் எதிர்காலத்திலும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்கின்றனர்.
உண்மைநிலையை எதிர்கொள்ளுங்கள்
உலகத் தலைவர்கள் இந்தப் புதிய உண்மைநிலையை உணர்ந்து, செயற்கை நுண்ணறிவானது உலகை வேகமாக மாற்றியமைத்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது நடந்து வரும் இந்த மாற்றம், உலகளாவிய ஒழுங்குமுறையையே பெருமளவில் மாற்றக்கூடும் என்பது பற்றி மிகக் குறைந்த விழிப்புணர்வே உள்ளது. நாம் ஒரு சாதாரண மாற்றத்தில் இல்லை, மாறாக ஒரு பெரிய பிளவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று கார்னி கூறியபோது, மற்ற காரணிகளைவிட இந்த செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, நமக்குத் தெரிந்த சர்வதேச அமைப்புகளையே முற்றிலும் சீர்குலைக்கும் என்பதை முழுமையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
செயற்கை நுண்ணறிவினால் ஏற்படவிருக்கும் அச்சுறுத்தலின் அளவை ஒரு சில தலைவர்களே முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளனர். மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற சில தொழில்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், செயற்கை நுண்ணறிவானது ஏற்கனவே ராஜதந்திரம் மற்றும் அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டுள்ளனர். நாடுகள் தங்களது சொந்த தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்கி, மீள்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) செயற்கை நுண்ணறிவு பற்றி விவாதிக்கப்பட்டாலும், அந்த விவாதங்கள் கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெளிவுபடுத்தவில்லை. மாறாக, சர்வதேச நாடுகள் இதிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, இந்தியா ஒரு இரண்டாம் நிலை செயற்கை நுண்ணறிவு சக்தி என்ற கருத்தை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிராகரித்தார். தற்போது தொழில்துறை தலைவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு முக்கிய ராஜதந்திரம் சார்ந்த கருவியாக பார்க்கின்றனர். நிதிநுட்பம் (Fintech) முதல் சுகாதாரம் வரை அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் மாற்றம் உலகளாவிய போட்டியை மறுசீரமைத்து வருகிறது. இருப்பினும், நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை தேவை என்கின்றனர். இதை அதிகமாகச் சார்ந்து இருப்பது பிழைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவானது கற்பனையான மாயத்தோற்ற (Hallucinations) தகவல்கள் மூலம் தவறான மேற்கோள்களையும், இல்லாத தீர்ப்புகளையும் கூட உருவாக்க வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அனைத்து துறைகளிலும் முன்னேறிச் செல்லுதல்
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் உண்மையான ஆற்றல் மற்றும் ஆபத்துகளுக்கு இதெல்லாம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. செயற்கை நுண்ணறிவானது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், தகவல் பரிமாற்றம், கண்காணிப்பு, தகவல் தொடர்பு, பகுப்பாய்வு மற்றும் ராணுவத் தொழில் துறை ஆகியவற்றில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மிகக்குறைவே. தற்போதைய உலகளாவிய கட்டமைப்பு முறைகளை இந்த அளவுக்கு ஆழமாகப் பாதிக்கக்கூடிய வேறொரு தொழில்நுட்பம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர்.
இந்த வகையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகவும் நுணுக்கமான நிலைகளில் செயல்படுகிறது. மேலும், அது இன்னும் படிப்படியாக வளர்ந்து வருகிறது. தற்போதே அது மனிதர்களின் பேச்சு, மொழி, பார்வை மற்றும் சிந்திக்கும் திறனைப் பிரதிபலிக்கிறது. ஆனால், வரும் காலங்களில் இது இன்னும் வலிமையான மற்றும் ஆபத்தான திறன்களை அடைய வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பாதுகாப்புத் துறையில் இது அதிகம் நிகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு ராணுவமயமாக்கப்படும்போது, போர் முறையானது மனிதர்களால் இயக்கப்படும் முறையிலிருந்து மாறி, தானாகவே முடிவெடுக்கும் திறன் கொண்ட சுயநிர்ணய (Autonomous) மற்றும் ஆளில்லா அமைப்புகளை நோக்கி ஏற்கனவே நகரத் தொடங்கிவிட்டதாகவும் எச்சரிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாகி வரும் நிலையில், அது போர்க்களத்தில், குறிப்பாக ஆயுத அமைப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் மிகுந்த கவலையை அளிக்கிறது. இது தானாகவே இயங்கும் ட்ரோன்கள் (Drones), செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இணையவழி தாக்குதல் நடத்தும் ஆயுதங்கள் மற்றும் நவீன வழிசெலுத்துதல் (Navigation) மற்றும் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஆளில்லா தரைவழி வாகனங்களை உருவாக்கியுள்ளது. இந்த முன்னேற்றங்கள், மனிதனின் நேரடித் தலையீடு இன்றி பல அமைப்புகளை இயக்க அனுமதிப்பதன் மூலம் போர் முறையையே மாற்றி வருகின்றன. இன்று, மோதல்களின்போது முடிவுகளைத் தானாகவே எடுப்பதற்கும், போர்க்களத்தின் தன்மையை மாற்றி அமைப்பதற்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.
இரவு நேரத்திலும் பார்க்க உதவும் கருவிகள் (night-vision gear), நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வெடிமருந்து பொருத்தப்பட்ட ட்ரோன்களை உக்ரைன் வீரர்கள் பயன்படுத்துவது, எதிர்காலப் போர்களின் அடையாளமாக மாறியுள்ளது. போரின் ஆரம்பக் கட்டத்தில், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் எதிர்த்து போரிட்ட விதம், முதல் உலகப் போரின் இறுதியில் பீரங்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பாரம்பரிய ராணுவ வலிமையைக் குறைக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவின் சமமற்ற தாக்கம் அதன் பலமாகவும், அதே சமயம் ஆபத்தாகவும் இருக்கிறது. இது அதிகாரத்தை பாரம்பரிய ராணுவக் கட்டமைப்புகளிலிருந்து விலக்கி, செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கி பயன்படுத்தத் தெரிந்த எவரிடமும் கொண்டு சேர்க்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது ஒரு கட்டத்தில் மனித அறிவையும் தாண்டி, மனிதக் கட்டுப்பாட்டைத் தாண்டி தானாகவே இயங்கத் தொடங்கிவிடும் என்பதுதான் மிகப்பெரிய சிக்கலாகக் குறிப்பிடப்படுகிறது.
மனிதக் கட்டுப்பாடின்றி இயங்கும் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்கள், ஒரு அச்சுறுத்தும்படியான இருண்ட எதிர்காலத்தையே நமக்குக் காட்டுகின்றன. இதற்கான ஆரம்பக்கால அறிகுறிகள் இப்போதே வெளிப்படத் தொடங்கிவிட்டன. அவை மிக வேகமாக வளரக்கூடும் என்றும் குறிப்பாக, தானாகவே இயங்கும் ட்ரோன்கள் மக்கள் கூட்டத்தைத் தாக்கிப் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் விரைவில் இத்தகைய அமைப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வரலாற்றிலேயே போர்கள், விபத்துக்கள், பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். உண்மை என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு எப்போது மனிதனைவிட மேம்பட்டதாக மாறும் அல்லது எப்போது நன்மைக்கோ தீமைக்கோ தன்னிச்சையாகச் செயல்படும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
போர்க்களத்தைத் தாண்டி, ராஜதந்திரம், உளவுத்துறை மற்றும் பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு மிகவும் பயனுள்ளதாக மாறி வருகிறது. இது இனி வெறும் ஒரு கருவி மட்டுமல்ல. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்புகளைவிட, அது மிக வேகமாக வளர்ந்துவிடுமோ என்கிற சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், இதுவரை அதன் மிகப்பெரிய தாக்கம் போர்களில்தான் வெளிப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் விண்வெளி, இணையம் (Cyber) மற்றும் மின்னணுப் போர் முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, போர்கள் நடத்தப்படும் விதத்தையே மாற்றி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
சரியான கண்காணிப்பு தேவை
செயற்கை நுண்ணறிவு (AI), தரவுகளை அதிவேகமாக ஆய்வு செய்யவும், எதிர்கால நிகழ்வுகளை கணிக்கவும், மற்றும் நெருக்கடி காலங்களில் தீர்வு காணவும் உதவுகிறது. இருப்பினும், கட்டுப்பாடற்ற குதிரை தன் வாயிலிருக்கும் கடிவாளத்தை இழுத்துக்கொண்டு ஓடுவது போல, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடாமல் தடுக்க சில வரைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். எனவே, விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்து, கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தாக்கத்தைப் புரிந்துகொண்டு, அதை மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாமல் நன்மையாக மாற்றுவது எப்படி என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தகின்றனர்.
எம்.கே. நாராயணன், உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார்.
Original article : The approaching AI surge, its global consequences -M K Narayanan