இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சமீபத்திய நம்பிக்கையில்லாத் தீர்மானம், சபாநாயகர் பதவியின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்புகள் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. இத்தகைய தீர்மானங்கள் கொண்டுவரப்படுவது அரிதான ஒன்று என்றாலும், அவற்றின் முக்கியத்துவம் என்பது சபாநாயகரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பு சார்ந்தது மட்டுமல்ல என்றும் மாறாக, நாடாளுமன்ற நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், சபாநாயகர் பதவி தொடர்பான பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் காலப்போக்கில் எவ்வாறு மாறி வருகின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகச் சபாநாயகர் பதவி விளங்குகிறது. மக்களவையின் தலைமை அலுவலராக, விவாதங்களை முறைப்படுத்துதல், நடைமுறை விதிகளை அமல்படுத்துதல், உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆளும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளின் குரலுக்கும் இடையே சமநிலையைப் பேணுதல் போன்ற பணிகளைச் சபாநாயகர் மேற்கொள்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நடுநிலையான அதிகார மையமாகச் செயல்பட வேண்டும். மரபுப்படி, அவர் நேர்மையுடனும் பாரபட்சமின்றியும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உறுப்பினர்களை அங்கீகரித்தல், சபை விதிகளை விளக்குதல், சபையில் ஒழுக்கத்தைப் பராமரித்தல் மற்றும் பண மசோதாக்களை (Money Bills) சான்றளித்தல் போன்ற பல முக்கியமான அதிகாரங்கள் சபாநாயகருக்கு உண்டு. இந்த அதிகாரங்கள் சட்டமன்ற முடிவுகளிலும் நாடாளுமன்ற விவாதங்களிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இத்தகைய செல்வாக்கு மிக்க பதவியில் இருப்பவரை, அரசியல் காரணங்களுக்காக எளிதில் நீக்கிவிட முடியாது என்பதை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு வலுவான பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கியுள்ளது.
பதவி நீக்க நடைமுறை
மக்களவைத் சபாநாயகரைப் பதவியிலிருந்து நீக்கும் நடைமுறை வேண்டுமென்றே மிகக் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 94(c)-ன்படி, சபாநாயகரை நீக்குவதற்கு மக்களவைக்கு அன்று வருகை புரிந்த மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் (அதாவது, அவையில் அன்று வருகை புரிந்த மட்டுமல்லாது ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்) ஆதரவாக வாக்களிக்க வேண்டும். சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும், நிலைத்தன்மையையும் பாதுகாப்பதே இந்த உயரிய நிபந்தனையின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த நடைமுறை, ஒரு உறுப்பினர் மக்களவையின் பொதுச் செயலாளரிடம் சபாநாயகர் நீக்கத்திற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வழங்குவதில் தொடங்குகிறது. இந்தத் தீர்மானம் சபையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாகக் குறைந்தது 14 நாட்கள் கால அவகாசம் (Notice) அளிக்கப்பட வேண்டும். தீர்மானம் அனுமதிக்கப்பட்ட பிறகு, சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவு அதற்குத் தேவைப்படுகிறது. இந்த முழு செயல்முறையும் மக்களவை விதிமுறைகள் (Rules of Procedure and Conduct of Business), குறிப்பாக விதிகள் 200 முதல் 203 வரை உள்ள விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது. இந்த விதிகள் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகளைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. விவாதத்தின் போது, சபாநாயகர் அவையின் ஒரு சாதாரண உறுப்பினராகப் பங்கேற்று தனது தரப்பு நியாயத்தைக் கூற வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அவர் தீர்மானத்தின் மீது ஆரம்பத்தில் வாக்களிக்க முடியும், ஆனால் வாக்கெடுப்பு சமநிலையில் முடியும் பட்சத்தில் (Tie), சபாநாயகருக்கே உரித்தான 'முடிவு செய்யும் வாக்கினை' (Casting vote) பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மிகவும் அரிதான நிகழ்வுகளாகவே இருந்துள்ளன. இதுவரை மூன்று முறை மட்டுமே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: 1954-ஆம் ஆண்டில் ஜி. வி. மாவலங்கார் மீதும், 1966-ஆம் ஆண்டில் ஹுக்கம் சிங் மீதும், 1987-ஆம் ஆண்டில் பல்ராம் ஜாக்கர் மீதும் இந்தத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்த மூன்று முயற்சிகளுமே தோல்வியடைந்தன. ஒரு சபாநாயகரை பதவியிலிருந்து நீக்குவது அரசியல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் எவ்வளவு கடினமானது என்பதை இந்த உதாரணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
பெரிய அளவிலான தாக்கம்
தற்போதைய இந்தத் தீர்மானம் சபாநாயகரை பதவியிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்காவிட்டாலும், இது ஒரு நிறுவன ரீதியிலான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சபாநாயகர் போன்ற தலைமை அதிகாரிகளின் அதிகாரம் என்பது சட்டமன்றத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையிலிருந்தே பெறப்படுகிறது என்பதை இது நினைவுபடுத்துகிறது. ஒரு சபாநாயகரின் நம்பகத்தன்மை என்பது அவர் எவ்வளவு நடுநிலையாகச் செயல்படுகிறார் என்கிற அவை உறுப்பினார்களின் பார்வையைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். அவர் ஒரு சார்புடையவராகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், நாடாளுமன்றச் செயல்பாடுகளின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குறைந்துவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
சபாநாயகரின் பதவிக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மிக உயர்ந்த பாதுகாப்பு, அவர் அன்றாட அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாவதைத் தடுக்கிறது. அதே வேளையில், அவர் தனது செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்பதை உறுதி செய்ய ஒரு ஜனநாயக வழிமுறையையும் வழங்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
சபாநாயகர் பதவியின் செயல்பாடுகளில் தற்போது பல சவால்கள் எழுந்துள்ளன. முதலாவதாக, அந்தப் பதவி அரசியல்மயமாக்கப்பட்டு வருவதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. குறிப்பாக, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வது அல்லது பண மசோதாக்களை (Money Bills) அங்கீகரிப்பது போன்ற விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருதலைப்பட்சமானவையாகக் கருதப்படுகின்றன. இரண்டாவதாக, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல்கள் நாடாளுமன்ற நடைமுறைகளில் முடக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவைத் தலைவரின் நடுநிலைமை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, அரசியல் கட்சிகளுக்கு இடையேயான நம்பிக்கை குறைந்து, ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகிறது. மூன்றாவதாக, சபாநாயகரின் நடுநிலையான செயல்பாட்டை உறுதி செய்து வந்த எழுதப்படாத விதிகளான 'நாடாளுமன்ற மரபுகள்' படிப்படியாக வலுவிழந்து வருகின்றன. அரசியல் போட்டி அதிகரித்து வருவதால், இந்த ஆரோக்கியமான மரபுகளுக்குப் பதிலாக தந்திரமான அரசியல் கணக்குகளே முன்னிலைப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும், ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தவும், சீர்திருத்தங்கள் மற்றும் நாடாளுமன்ற நெறிமுறைகளில் ஒரு புதிய அர்ப்பணிப்பு அவசியமாகிறது. இதற்கான முதல் படியாக, நிறுவன மரபுகளை வலுப்படுத்த வேண்டும் என்கின்றனர். சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் கட்சிப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்ற பாரம்பரியத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாக உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், நடைமுறைத் தீர்ப்புகளில் வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தபடுகிறது. விவாதங்களுக்கான கோரிக்கைகளை நிராகரிப்பது அல்லது சட்ட மசோதாக்களைச் சான்றளிப்பது போன்ற முக்கிய முடிவுகளுக்குத் தெளிவான விளக்கங்களை அளிப்பது, ஒருதலைப்பட்சமான செயல் என்ற குற்றச்சாட்டுகளைக் குறைக்க உதவும் என்கின்றனர். அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஆக்கபூர்வமான உரையாடலை ஊக்குவிப்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த முறையான ஆலோசனைகள், தேவையற்ற மோதல்களைக் குறைத்து சட்டமன்ற செயல்திறனை (Legislative productivity) மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, சபாநாயகரின் தன்னிச்சையான அதிகாரங்களுக்குத் தெளிவான சிறந்த வழிமுறைகளை வகுப்பது குழப்பங்களை நீக்க உதவும் என்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் நெகிழ்வுத்தன்மை தேவை என்றாலும், தெளிவான வழிகாட்டுதல்கள் விளக்கங்கள் குறித்த சர்ச்சைகளைக் குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.
அகமது ரசா, மௌலானா அபுல் கலாம் ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் (MANUU) பொது நிர்வாகத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
Original article : Reevaluating the office of the Speaker -Ahmed Raza