மேற்கு ஆசிய பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமும், அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் நிதிச்சுமை அல்லது இழப்புகளை இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (Oil Marketing Companies (OMCs)) ஏற்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், நாட்டின் சமையல் எரிவாயு (liquefied petroleum gas (LPG)) விநியோகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இறக்குமதியை மட்டுமே பெரிதும் நம்பியிருந்த இந்தத் துறைக்கு, முன்னரே அரசின் உதவி தேவைப்படும் சூழல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மட்டும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்து காணப்பட்டபோது, சமையல் எரிவாயுவை (LPG) குறைந்த விலைக்கு விற்றதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation (IOCL)), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharat Petroleum Corporation (BPCL)) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Hindustan Petroleum Corporation (HPCL)) ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு ₹30,000 கோடியை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு (Liquefied Petroleum Gas - LPG) விலையிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் பொருட்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக இந்தச் செலவை ஈடுகட்டவே அரசாங்கம் இந்த மானியத் தொகையை வழங்கியது. இருப்பினும், உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்னரே இந்த மானிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் தடங்கல்களையும், சர்வதேச சந்தையில் கூடுதல் விலை உயர்வையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய பிறகு, ஒரு வார காலத்திற்குள்ளேயே, அதாவது மார்ச் மாதம் 7-ஆம் தேதி, உள்நாட்டு சமையல் எரிவாயு (Liquefied Petroleum Gas (LPG) விலை சிலிண்டருக்கு ₹60 உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை ஒரு பேரேல் ஏறக்குறைய 120 டாலர் வரை உயர்ந்தது. மேலும், 2022-ஆம் ஆண்டில் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரேலுக்கு 100 டாலரைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் 9-ஆம் தேதி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பெட்ரோ கெமிக்கல் வளாகங்கள் உட்பட அனைத்து உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அந்த முழு உற்பத்தியையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் உற்பத்தியை மற்ற பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்த அனுமதி இல்லை என்பதோடு, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இந்த சமையல் எரிவாயுவை (LPG) உள்நாட்டு நுகர்வோருக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில், சமையல் எரிவாயு மானிய ஒதுக்கீடு ₹15,121 கோடியிலிருந்து (27% குறைக்கப்பட்டு) ₹11,085 கோடியாக அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப்பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2026-27-ஆம் நிதியாண்டிற்காக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) ₹30,443 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனக்குத் தேவையான சமையல் எரிவாயு (LPG) தேவையின் அளவில் சுமார் 40 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்வதாகவும் இதர தேவைகள் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் அதே பகுதிகளிலிருந்தே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency), தனது 2030-ஆம் ஆண்டிற்கான இந்திய எண்ணெய் சந்தை பற்றிய கண்ணோட்டம் குறித்த அறிக்கையில் (Indian Oil Market Outlook to 2030), தூய்மையான சமையல் எரிபொருள் திட்டங்களால் கடந்த பத்தாண்டுகளில் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியானது 2020–21-ஆம் நிதியாண்டில் 16.48 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2025–26-ஆம் நிதியாண்டில் 18 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தூய்மையான சமையல் எரிபொருளுக்கு மக்கள் அதிகளவில் மாறியுள்ளதால், சமையல் எரிவாயு (LPG) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (Petroleum Planning and Analysis Cell (PPAC)) தரவுகளின்படி, 2015-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில், பயன்பாட்டிலுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) நுகர்வோரின் எண்ணிக்கை 1,486 லட்சத்திலிருந்து 3,305 லட்சமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் 120%-க்கும் அதிகமான வளர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)) எனப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டபோது 62%-ஆக இருந்த எரிவாயு இணைப்பு வசதி, தற்போது ஏறக்குறைய 100% வீடுகளைச் சென்றடைந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியானது பெரும்பாலும் மேற்கு ஆசியாவிலுள்ள ஒரு சில நாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியில் கத்தார் சுமார் 34% பங்களிப்பைக் கொண்டிருந்தது. இதன் மூலம் அந்நாடு இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் வழங்குநராக உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஏறக்குறைய 26% பங்களிப்பையும், குவைத் 8.3% பங்களிப்பையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கு ஆசிய நாடுகளை இந்தியா சார்ந்திருப்பது நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியில் சுமார் 37% கத்தாரிலிருந்தும், 16% ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்தும், 11% சவூதி அரேபியாவிலிருந்தும் கிடைத்தன. ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ள ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz), உலகின் மிக முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும். இந்தியாவிற்கு இறக்குமதி பல சமையல் எரிவாயு (LPG) சரக்குகள் உட்பட, உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஒரு பெரும் பகுதி இந்த குறுகிய நீர்வழிப்பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டுள்ளதால், இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2024–25 ஆம் ஆண்டில், இந்தியா இதுவரை இல்லாத அளவாக 27 மில்லியன் மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (liquefied natural gas (LNG)) இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2011–12 நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 13.5 மில்லியன் மெட்ரிக் டன் அளவைவிட சுமார் இரண்டு மடங்கு அதிகம் என்கின்றனர். இந்தியாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) தேவையில் பாதிக்கும் மேல் கத்தாரில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது. இந்த திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முக்கியமாக உரத் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி மற்றும் இந்திய நகரங்களில் உள்ள வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான சமையலறைகளுக்கு எரிபொருளை வழங்கும் எரிவாயு குழாய்களில் பயன்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயுவைப் (LPG) போலவே, இதுவும் பெரும்பாலும் மேற்கு ஆசியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழலால் எரிபொருள் இறக்குமதி சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.