இந்தியாவில் அமைதியான மக்கள்தொகை புரட்சி விரிவடைந்து வருகிறது. -பார்கவ் பி.எஸ்., அர்ஜுன் ஜெயதேவ்

 நீண்ட காலமாக ‘உயர் பிறப்பு விகிதம் கொண்ட வளர்ந்து வரும் நாடு’ (high-fertility developing country) என்ற மாதிரியாகக் கருதப்பட்ட இந்தியா, ஒப்பீட்டளவில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட சமூகமாக மாறியுள்ளது.


20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் எதிர்காலம் பற்றி பேசும்போது முக்கிய கவலையாக மக்கள்தொகை அதிகரிப்பு இருந்தது. உணவு, உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகளை உருவாக்கும் பொருளாதாரத்தின் திறனை விட விரைவான கருவுறுதல் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. பால் மற்றும் ஆன் எர்லிச்சின் பிரபலமற்ற "மக்கள்தொகை வெடிப்பு" (“Population Bomb”) ஆய்வறிக்கை பல  ஆண்டுகளாக அரசு கொள்கைகளை வழிநடத்திய முக்கிய நூலாக இருந்தது.


கடந்த 25 ஆண்டுகளில், இந்தியா பிறப்பு விகிதத்தில் அதிகமாக மாற்றத்தை கண்டுள்ளது. தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வுகள் (National Family Health Surveys (NFHS)), 1990-களில் ஒரு பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் என்ற அளவில் இருந்த பிறப்பு விகிதம், தற்போது மாற்றீட்டு அளவாக (replacement level) குறைந்துள்ளது. இப்போது பல மாநிலங்களில் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் அல்லது அதற்கு குறைவாக பிறப்பு விகிதம் உள்ளது.



இந்த மாற்றத்தை விளக்கப்படம் தெளிவாக காட்டுகிறது. நீண்ட காலமாக ‘உயர் பிறப்பு விகிதம் கொண்ட வளர்ந்து வரும் நாடு’ எனக் கருதப்பட்ட இந்தியா, அமைதியாகவே ஒப்பீட்டளவில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட சமூகமாக மாறியுள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு-1 மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வு-2 காலகட்டத்தில், பல மாநிலங்களில் ஒரு பெண்ணுக்கு மூன்று முதல் ஐந்து குழந்தைகள் வரை பிறப்பு விகிதம் பதிவாகியது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில்  இந்த எண்ணிக்கை  அதிகமாக இருந்தது. தேசிய குடும்ப நல ஆய்வுகள்-3 மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வுகள்-4 காலகட்டத்தில், பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. தெளிவான மாற்றம் தேசிய குடும்ப நல ஆய்வு-5-ல் காணப்படுகிறது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பிறப்பு விகிதம் மாற்றீட்டு அளவான 2.1-க்கு கீழ் உள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையிலான பிறப்பு விகித வேறுபாடும் (replacement fertility) குறைந்துள்ளது. இது இந்தியாவின் பல பகுதிகளிலும் குறைந்த பிறப்பு விகிதம் ஒரு பொதுவான நிலையாக உருவாகி வருவதை காட்டுகிறது.


மாநிலங்களை மொத்த பிறப்பு விகிதம் (Total birth rate (TFR)) அடிப்படையில் மூன்று நிலைகளாக வகைப்படுத்தலாம். அவை குறைந்த, நடுத்தர மற்றும் அதிக பிறப்பு விகிதம் கொண்ட மாநிலங்களாகும். தேசிய குடும்ப நல ஆய்வு-1 மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வு-2 காலங்களில், தென் இந்திய மாநிலங்கள் பிற பகுதிகளான மத்திய, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை விட குறைந்த பிறப்பு விகிதத்துடன் காணப்பட்டன. ஆனால், தேசிய குடும்ப நல ஆய்வு-3 மற்ற பகுதிகளிலுள்ள மாநிலங்களும் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட பிரிவில் சேரத் தொடங்கின.


வடகிழக்கு மாநிலங்கள் (திரிபுரா தவிர), உத்தரபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை ஐந்து சுற்றுகளிலும் கருவுறுதலில் அதிக சரிவு ஏற்பட்டதை காட்டுகின்றன. தொடக்கத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டிருந்த மாநிலங்களில், கர்நாடகா, மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள்  அதிக சரிவைக் கண்டுள்ளன.


முக்கிய  மாற்றம்


இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக பெண்களின் கல்வி உயர்வு மற்றும் திருமணம் தாமதமாக நடைபெறுவது போன்றவை முக்கிய காரணியாக   அனைத்து ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். கல்வி உயரும்போது, பெண்களின் வேலை  வாய்ப்புகள் மற்றும் அதன் பயன்கள் அதிகரிக்கின்றன. இதனால் விரைவாக  குழந்தைகள் பெறுவது குறைகிறது. நல்ல வேலை வாய்ப்புகள் உள்ள இடங்களில் பிறப்பு விகிதம் வேகமாக குறையும். ஆனால், வேலை வாய்ப்புகள் நிலையானதாக இல்லாத இடங்களில் இந்த மாற்றம் மெதுவாக நடைபெறும்.


இரண்டாவது காரணி, இடம்பெயர்வு, நகரமயமாக்கல் மற்றும் ஊடக வெளிப்பாடு மூலம் புதிய குடும்ப அளவு விதிமுறைகளின் பரவலாக இருக்கலாம். பல ஆண்டுகளாக வந்த குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வும் இதற்கு காரணமாக இருக்கலாம். சிறிய குடும்பங்கள் சமூக தரநிலையாக மாறியவுடன், வருமான நிலைகள் அல்லது நிறுவன நிலைமைகள் பின்தங்கியிருந்தாலும், பிறப்பு விகிதம் வேகமாக குறையத் தொடங்குகிறது.


மூன்றாவது காரணி, பொது சுகாதாரத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களாகும். குழந்தைகளின்  உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரித்ததால், முன்பு அதிக மரண அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க குடும்பங்கள் அதிக குழந்தைகள் பெறும் பழக்கம் (precautionary fertility) குறைந்தது.  தடுப்பூசி திட்டங்கள், தாய்வழி சுகாதார சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து முறைகள் போன்றவை குழந்தைகள் அதிக வயதுடன்  உயிர்வாழ்வார்கள் என்ற நம்பிக்கையை அதிகரித்து, குடும்பங்களின் பிறப்பு தொடர்பான முடிவுகளை மாற்றியுள்ளன.


இருப்பினும், இந்த சரிவுக்கான அனைத்து காரணங்களும் நேர்மறையானதாக இருக்காது. குழந்தைகளை வளர்ப்பதற்கான அதிகரித்து வரும் செலவும் ஒரு காரணியாக இருக்கலாம். பள்ளிப்படிப்பு, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி ஆகியவை பெருகிய முறையில் பணமாக்கப்படுவதால், குழந்தைகள் வீட்டு உற்பத்தியில் பங்களிப்பாளர்களாக இருந்து தீவிர முதலீட்டு திட்டங்களாக மாறுகிறார்கள். ஒரு காலத்தில் முறைசாரா சமூக ஏற்பாடுகளை நம்பியிருந்த குடும்பங்கள் இப்போது மேல்நோக்கிய இயக்கத்திற்கு கல்வி மற்றும் திறன் உருவாக்கத்தில் கணிசமான செலவு தேவைப்படும் ஒரு உலகத்தை எதிர்கொள்கின்றன.


எண்ணற்ற விளைவுகள்


முதல் விளைவு, மக்கள்தொகை ஈவுத்தொகை (Demographic Dividend) ஆகும். வேலை செய்யும் வயதுடைய மக்களின் விகிதம் அதிகமாகவும், சார்ந்திருப்போர் (dependents) குறைவாகவும் இருக்கும் போது வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகிறது. ஆனால், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்துறை வளர்ச்சி மற்றும் அரசின் முதலீடுகள் அதிகரிக்காவிட்டால், இந்த வாய்ப்பு வீணாகும் அபாயம் உள்ளது.


இரண்டாவது விளைவு, பிறப்பு விகிதத்தின் அரசியல்-பொருளாதார தாக்கம் ஆகும். தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், அங்கு மக்கள் வயதான சமூகமாக விரைவாக மாறுகின்றனர்.  இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில்  உள் இடம்பெயர்வு (internal migration), நிதி பகிர்வு (fiscal transfers) மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றால் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும், அதிக பிறப்பு விகிதம் கொண்ட ஏழை பகுதிகளில் இருந்து இளம் தொழிலாளர்கள், குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட வயதான மாநிலங்களுக்கு இடம்பெயர்வது, இந்தியாவின் உள் பொருளாதாரத்தில் வரையறுக்கும் கட்டமைப்பு அம்சங்களில் ஒன்றாக மாறக்கூடும்.


பல  ஆண்டுகளாக, மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் வளர்ச்சித் திட்டமிடலில்  முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இன்று தேவையானது குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட சமூகத்திற்கான (low-fertility society) அமைப்புகளை உருவாக்குவது ஆகும். இதில் குழந்தை பராமரிப்பு சேவைகள், முதியோருக்கு ஆதரவான ஓய்வூதிய அமைப்புகள், நீடித்த நோய்களை கவனிக்கும் சுகாதார சேவைகள், மற்றும் தொடர்ந்து நடைபெறும் இடபெயர்வை ஏற்றுக்கொள்ளும் நகர அடிப்படை வசதிகள் ஆகியவை அடங்கும்.


எனவே, இந்தியாவின் மக்கள்தொகை கதை இனி கட்டுப்படுத்தப்படாத மக்கள்தொகை வளர்ச்சியைக் பற்றியாதாக இருக்காது. இப்போது முக்கிய கவலைகள் வேலைவாய்ப்பு, வயதான மக்கள் தொகை அதிகரிப்பு, இடபெயர்வு மற்றும் பராமரிப்பு அமைப்புகள்  பற்றி இருக்கும்.


பார்கவ் B.S., அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் இந்திய பொருளாதார ஆய்வு மையத்தில் சமூக கொள்கை ஆராய்ச்சியாளர் ஆவார். அர்ஜுன் ஜெயதேவ், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கிறார் மற்றும் இந்திய பொருளாதார ஆய்வு மையத்தின் இயக்குநராக உள்ளார்.


Original article :  The quiet demographic revolution unfolding in India -Bhargav B.S.,Arjun Jayadev

Share: